பிரியமானவளே - சினிமா விமர்சனம்
நடிப்பு : விஜய், சிம்ரன், ராதிகா செளத்ரி, விவேக், இந்து, ராம்ஜி
எஸ்.பி.பாலசுப்பிரமணியம், சங்கீதா டெல்லி கணேஷ், கசன்கான், ‘தலைவாசல்’விஜய்
இசை : எஸ்.ஏ.ராஜ்குமார்
இயக்கம் : செல்வபாரதி


அமெரிக்காவிலேயே படித்து, வளர்ந்து ஒரு வழியாகச் சென்னை திரும்புகிறார் விஜய். இந்தியப் பழக்க வழக்கங்கள் எல்லாமே அவருக்குப் புதுசாக இருக்கிறது. அப்பாவின் பிடிவாதத்துக்காகக் கல்யாணத்துக்குச் சம்மதிக்கிறார். ஒரே ஒரு நிபந்தனை. (பிறகு, கதை என்று ஒன்றைப் பின்னுவது எப்படியாம்?) ஒர் ஆண்டு ஒப்பந்தப்படி கணவன் - மனைவி இருவரும் சேர்ந்து வாழலாம், அவர்களுக்குள் ஒத்து வந்தால் திருமண பந்தம் தொடரும்...... இல்லையென்றால் பந்தத்தை முறித்துக் கொள்ளலாம் என்பது ஒப்பந்தம். குடும்பச் சூழ்நிலை காரணமாக இதற்குச் சம்மதிக்கிறார் சிம்ரன். ஒரு ஆண்டு நிறைவுக்குப் பிறகு இருவரும் நண்பர்களாகப் பிரிகிறார்கள். நிழலின் அருமை வெயிலில் தெரிகிறது விஜய்க்கு. மீண்டும் சேர்ந்து வாழலாம் என்று இறங்கி வருகிறார். ஆனால் இப்போது சிம்ரன் ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்.

எதற்கு ஏற்றுக் கொள்ள மறுக்கிறார் என்பது புதிர். அதே போல் இறுதியில் ஏதற்காக ஏற்றுக் கொள்கிறார் என்பதும் புதிரின் தொடர்ச்சி. இப்படியொரு சினிமாத்தனமான ஒப்பந்தம் போட்டதைக் கூட விட்டுவிடலாம். தவறை உணர்ந்து திரும்பிவரும் கணவனை எதற்காக உதாசீனப்படுத்த வேண்டும் என்பதற்கு விளக்கம் சொல்லியிருக்க வேண்டும். விஜய் பொய் சொல்லி ஏமாற்றியிருந்தால் அவருடைய நடவடிக்கைகள் நியாயமாக இருந்திருக்கும். அதை விட்டுவிட்டு பெண்கள் அனுசரித்துத்தான் போக வேண்டும் என்று பார்வையாளர்கள் எண்ணும் விதமாகத் திரைக்கதையைத் திசை திருப்பியிருப்பது வேதனை.

விவேக்கின் நகைச்சுவைக்கு நல்ல வரவேற்பு. அவருடைய கதாபாத்திரத்தை அவருடைய போக்குக்கு மாற்றிக் கொள்ளும் சந்தர்ப்பத்தை அவருக்கு வழங்க ஆரம்பித்திருப்பது ஆரோக்கியமான சூழல். விவேக்கும் கொடுக்கும் வாய்ப்பை நன்றாகப் பயன்படுத்திக் கொள்கிறார்.

விஜய்யின் நடிப்பில் தேர்ச்சி. வீட்டில் மந்திரம் ஜெபித்தபடி தண்ணீர் தெளித்தபடி செல்லும் புரோகிதரை “யார்ப்பா நீ... நீ பாட்டுக்குத் தனியா பேசிக்கிட்டுப் போறே?’’ என்பதில் இந்தியப் பழக்க வழக்கம் தெரியாத தன்மையும் நகைச்சுவையும். இரவு கணவன் வந்ததும்தான் சாப்பிடுவேன் என்று அமர்ந்திருக்கும் சிம்ரனைப் பார்த்து, ‘கணவன் வந்த பின்னாடி சாப்பிட்றதை விட பசி வந்த பின்னாடி சாப்பிட்றதுதான் நல்லது’ என்கிறார். இடைவேளை வரை வித்தியாசமான பாத்திரப் படைப்பு விஜய்க்கு. அதற்குப் பின் காதலுக்கு ஏங்கும் பழைய விஜய்.

சிம்ரன் தேர்ந்தெடுத்து நடிக்கிறாரா? சிம்ரனை இயக்குநர்கள் இப்படி தேர்ந்தெடுக்க ஆரம்பித்திருக்கிறார்களா? நான் கவர்ச்சிப் பதுமை மட்டுமில்லை என்று நிரூபிக்கிறார் பல இடங்களில்.

விஜய்க்குத் தந்தையாக எஸ்.பி.பாலசுப்பிரமணியம். அப்பாவைப் பார்த்து, “உனக்கு வயிறு புல்லா மூளைப்பா” என்பது போன்ற வசன புத்திசாலித்தனங்கள் படத்தில் ஏராளம். இந்து, சங்கீதா, ராம்ஜி ஆகியோர் சிம்ரனின் குடும்ப உறுப்பினர்கள். ‘தலைவாசல்’ விஜய், கசன்கான் நிர்வாகத் தில்லுமுல்லுகள் தமிழ் சினிமாவுக்குப் போரடிக்காதா?

இசை மைனஸ். அனுராதா போதுவால் பாடியிருக்கும் பாடல் இளையராஜாவின் ‘கோழிக்கூவுது’ படப் பாடலின் வடிகட்டிய ‘காப்பி’. சன்னமான ஒளிப்பதிவு உத்திதான். உறுத்தாமல் இருப்பதற்காகப் பாரட்டலாம்.

இடைவேளை வரை பிரியமானவளே... அதற்கப்புறம்.....?

தமிழ்மகன்

© TamilOnline.com