வழக்கம் போல் கத்திக் கதறி சங்கு ஊதி அடம் பிடிக்காமல் அமைதியாய் விளையாடும் மகளிடம் கேட்டார் தந்தை : ‘’என்னம்மா செய்யுறே?’’ ‘’வெளாடுறேம்பா’’ எச்சிலோடு புன்னகையும் ஒழுகிப் போயிருந்தது. ‘’என்ன வெளையாட்டு?’’ ‘’கடவுள் வெளயாட்டு’’ தூசு படிந்த விழிகளோடு விம்மும் அவள் குரல். ஆச்சர்யம் தலை தூக்கியது பச்சைப் பாம்பாய். ‘’என்ன கடவுள்?’’ ‘’அம்மாக் கடவுள்’’ முன்பே பதிவு செய்ததைப் போல் ஒவ்வொன்றாய்த் தேர்ந்த சொல்லில் பேசினாள் சிறுமி. ‘’புரியலியே,’’ ‘’யேங்கூட வெளாண்டக் கடவுள தூக்கிக் கெடாசிட்டேன்.’’
‘’ஏம்மா?’’ ‘’வெளையாட கூட்டிக்கிட்ட அம்மாவ ஏன் அனுப்புல... அதான்...’’ குழந்தை யிடமிருந்து வெளிவந்த காங்கல் உக்கிரமாய்த் தாக்க உறைபனி உருகி உப்புப் பரல்களாய்க் கசிந்தன. அவள் வீசியெறிந்த கடவுள் தொங்கி கிழிந்து குடல் சரிந்து வீதியில் கிடந்தார் நாதியற்று.
பாப்லோ அறிவுக்குயில் |