ஜன்னல் மனிதர்கள்
கதவுகளுக்குப் பின்னேயே
உறைந்து கிடக்கின்றன...
அழைப்பின் குரல்கள்.
மெல்லத் தவழ்ந்து
மேலேற முயன்று,
மீண்டும் சரிகிறது...
கரப்பான் பூச்சி.
உயிர் சுமந்து
நொடிகளால் உலகளக்கிறது...
சுவர்க்கடிகாரம்.
தனிமையின்
இருள் குழைத்து
கான்கிரீட் மனதில்
ஓவியம் தீட்டுவாய்.
இரத்தம் பார்த்திடக்
கொசு அடிப்பாய்.
காற்றைத் தழுவிட
மின்விசிறி போடுவாய்.

பொழுது கழிய
புத்தகம் படிப்பாய்.
அந்நிய மனித
வாசம் அறியாய்.
தொலைக்காட்சிப்பெட்டியின்
அலைவரிசைக்குள்
உன் சிறகுகள் அடைபட்டு.
விரிந்த வானம்,
பரந்த உலகு...
நீ மட்டுமேன்
ஜன்னல் மனிதனாய்...!?

மு. முருகேஷ்

© TamilOnline.com