தலைமுறை தலைமுறையாய் லட்சுமி
'முதல்வன்' படத்துவக்க விழாவில், ரஜினி வெளிப்படையாக இப்படி அறிவித்தார்:

"ஷங்கர் இந்தப் படத்தை மெதுவா ரிலீஸ் பண்ணனும். இவர் படத்தோட 'படையப்பா' போட்டி போட்டு ஜெயிக்க முடியாது."

'படையப்பா' வெற்றிவிழாவிலும் ரஜினியின் இந்தக் கருத்தில் மாற்றமில்லை. "அடுத்தப் படம் என்னன்னு நிறைய பேர் கேக்கறாங்க. கதை கிடைக்கணுமே. 'படையப்பா' மாதிரி ஏதாவது கதை கிடைச்சாக்கூட ஆரம்பிச்சுடலாம்" என்றார்.

ரஜினிக்கு இப்போதைய சவால், அடுத்த படத்துக்கான கதை. படையப்பாவுக்குப் பிறகு சொந்த முயற்சியில் ஒரு கதையை உருவாக்கினார், தன் ஆந்திரத்து நண்பர் மோகன்பாபு கதாநாயகனாக நடிக்கும் படத்துக்காக. 'ராயல சீம ராமண்ண செளத்ரி'. தெலுங்கில் அது வெற்றி பெற்றால், அதைத் தமிழில் தன்னுடைய நடிப்பில் தயாரிக்கலாம் என்பது ரஜினியின் திட்டம். யாருடைய துரதிருஷ்டமோ ராமண்ண செளத்ரி படுதோல்வி. ஒருவேளை நம்முடைய அதிர்ஷ்டமாகக்கூட இருக்கலாம். இல்லையென்றால் இந்நேரம் படத்தைத் தமிழில் தயாரிக்க ஆரம்பித்திருப்பார். மனித உழைப்புக்கும் இறை நம்பிக்கைக்கும் இடையில் நடக்கும் யுத்தம்தான் ராயல சீம ராமண்ண செளத்ரியின் கதை. இதைப் பார்க்க நேராமல் இருப்பது ரஜினி ரசிகர்களுக்கும்கூட நல்லது என்று பேசிக் கொள்கிறார்கள்.

ரஜினிக்கான கதை என்பது சில சம்பிரதாயங்களுக்கு உட்பட்டதாகிவிட்டது. கொஞ்சம் நகைச்சுவை, பெண்கள் எப்படியெல்லாம் அடக்கமாக இருக்கவேண்டும் என்ற அறிவுரை, அரசியலுக்கு வரப்போவதாகப் பூச்சாண்டி, கொஞ்சம் ஆன்மீக நகாசு வேலைகள், ஒரு சவால் பாட்டு, ஒரு தத்துவப்பாட்டு, ஒரு காதல் பாட்டு, ஒரு கொள்கைப்பாட்டு... கடந்த ஐந்து ஆண்டு காலமாக ரஜினி தன் படங்களுக்காகக் கட்டிக் காத்துவரும் பார்முலா இது. அந்தப் பொறியில் அவரே சிக்கிக்கொண்டு விட்டார். வேறு எந்த மாதிரி கதை எடுத்தால் நாம் ஜெயிக்கமுடியும் என்ற தடுமாற்றம் நிறையவே இருக்கிறது அவருக்கு.

இதே வேளையில் இவருடைய காலகட்டத்திலேயே இவருடன் போட்டி போட்டுக் கொண்டிருக்கும் கமல்ஹாசனிடம் இந்த இமேஜ் சிக்கல் இல்லை. 'குருதிப்புனல்', 'மகளிர் மட்டும்', 'தேவர் மகன்', 'குணா', 'அபூர்வ சகோதரர்கள்', 'ஹேராம்', 'தெனாலி', 'மருதநாயகம்', ஆளவந்தான்... என்ற அவருடைய கதைகளில் ஒருவித சுதந்திரமும், முயற்சியும் தெரிகிறது.

ரஜினியும் இப்படி இருந்தவர்தான். 'முள்ளும் மலரும்', 'தப்புத்தாளங்கள்', 'ஆறிலிருந்து அறுபதுவரை', 'எங்கேயோ கேட்ட குரல்', 'ராகவேந்திரா', 'புதுக்கவிதை', 'அவள் அப்படித்தான்', 'இளமை ஊஞ்சலாடுகிறது'... போன்ற பல படங்கள் அவர் பிரபலமாக இருந்தபோதே வெளியாகி அவருடைய இன்னொரு பரிமாணத்தைக் காட்டின.

சொல்லப்போனால் அவரைத் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்த 'அபூர்வ ராகங்கள்', 'மூன்று முடிச்சு', 'அவர்கள்', 'பதினாறு வயதினிலே'... போன்ற படங்களே அவருடைய வித்தியாசமான கேரக்டர்களுக்காகவே பேசப்பட்டன. ரஜினியை இயக்குநர்கள் கையாண்ட படங்கள் எல்லாமே அவரின் நடிப்புத் திறமையை நிரூபிக்கும் களமாக இருந்தன. இதற்கிடையே அவர் ஒரு ஆக்ஷன் ஹீரோவாகவும் உயர்ந்தபோதிலும் தங்கையின் கற்புக்காக கயவர்களை எதிர்ப்பது போலவும், கடமை தவறாத காவல் அதிகாரியான தன் தந்தையின் சாவுக்குக் காரணமான சதிகாரர்களை நீதிக்கு முன்னால் கொண்டுவந்து நிறுத்துவது போலவும்தான் இருந்தார்.

இதை யாரும் ரஜினியின் பார்முலா என்று சொல்லமாட்டார்கள். ஏனென்றால் இது உலகு தழுவிய ஆக்ஷன் படங்களின் பார்முலா.

மன்னன்', 'அண்ணாமலை' என்று ரஜினி திசைமாறியது எப்போது?

ரஜினியும், ஜெயலலிதாவும் போயஸ்கார்டனில் ஒரே பகுதியில் வசிக்க நேர்ந்ததுதான் இத்தகைய கதைகளின் ரிஷிமூலமாகிப் போனது. ஒரே உரையில் இரண்டு வாள்கள் இருக்கமுடியாது என்பது போல ஒரே தெருவில் இரண்டு பிரபலங்கள் வசிக்கமுடியாது என்ற புதிய இலக்கணத்தை வகுத்தது. அதிலும் ஒரு பிரபலம் ஆணாகவும், இன்னொரு பிரபலம் அரசியல் சார்புடைய பெண்ணாகவும் இருக்க நேர்ந்தது சுவாரஸ்யமான கற்பனைகளுக்கு இடமளித்தது. ஆகவே, ரஜினியின் திரைப்படங்கள் தேர்தலோடு சம்பந்தப்பட்ட படங்களாகவும், பெண்களுக்கு அடக்க உணர்வை போதிக்கும் படங்களாகவும் மாறிப்போயின. எல்லாவற்றையும்விட இத்தகைய படங்கள் ரஜினியின் சம்பளத்தைப் பத்து கோடி ரூபாய்க்கு மேல் உயர்த்தின. இப்போது அதிலிருந்து இறங்கவிடாமல் அவரைச் சங்கடப்படுத்திக் கொண்டிருக்கின்றன.

ரஜினியின் படங்கள் டைரக்டர்களின் கையில் இருந்து நழுவி, நழுவி கடைசியில் ரஜினியின் கையிலேயே சிக்கிக்கொண்டுவிட்டது.

இந்தப் படத்துக்கு 'அண்ணாமலை' என்று பெயரிடுங்கள், 'அருணாச்சலம்' என்ற பெயருக்கு ஒரு கதை தயாரியுங்கள் என்று இயக்குநர்களைப் பணித்தார். தமிழ் மக்களின் பெயராக எப்போதுமே இருந்திராத 'படையப்பா' என்ற பெயரில் ஒரு கதையை உருவாக்கச் சொன்னதுதான் உச்சகட்டம். "தயானந்த சரஸ்வதிகிட்ட இந்தத் தலைப்பைச் சொன்னேன். பிரமாதமாக இருப்பதாகச் சொல்லிவிட்டார்" என்று அறிவித்தார்.

ஆன்மீக முலாம், 'அரசியல் சாயம்' இதையெல்லாம் மீறி, சாதாரண 'முள்ளும் மலரும்' படத்தின் 'காளி' போல அவரால் இப்போதும் தோன்றமுடியும். கமர்ஷியல் நோக்கமில்லாமல் 'ராகவேந்திரர்' வேடத்தை அவரே விரும்பி ஏற்று நடித்ததுபோல அவரால் துணிச்சலாகச் செயல்பட முடியும். அவருக்கு இருக்கிற ரசிக வட்டம் அவருடைய பரீட்சார்த்தங்களையும் எதிர்கொள்ள காத்திருக்கிறது. "ரசிகர்கள் தயார்... ரஜினி தயாரா?"

தமிழ்மகன்

© TamilOnline.com