கண்ணம்மா - சாய்ராம் படங்கள் : கண்ணம்மா
சித்தர்கள் யோகாவை விஞ்ஞானப்பூர்வமாகவே அணுகியிருக்கிறார்கள். உண்மையைப் புரிந்து கொள்ளாமல் வேறு வேறு விதமாய் அர்த்தப்படுத்திக் கொள்கிறவர்கள் எப்பொழுதும் இருக்கிறார்கள். அவர்களை எப்போதும் காப்பாற்ற இயலாது
உங்களை சுற்றியுள்ள உலகத்தை நீங்கள் உணரும்பட்சத்தில் (நான் இங்கு உலகம் என்று சொல்வது மனிதர்களை) நீங்கள் குரல்கள், எண்ணங்கள், உணர்ச்சிகள் என்று ஒரு இரைச்சலைத்தான் உணர்வீர்கள். இவையெல்லாம் பல்வேறுப்பட்ட நிலைகளிலிருக்கும் குழப்பங்களின் வெளிப்பாடகவே இருக்கும்... உலகத்தில் பலர் தங்களுக்கு உண்மையாக என்ன வேண்டுமென்பதை அறியாமலே வாழ்கிறார்கள். அவர்களுக்கு என்ன வேண்டுமென்பதை அறிந்திருந்தாலும் அதை அடைவதற்கான மனவுறுதியோ, வாழ்வை நடத்திச் செல்வதற்கான தொலைநோக்குப் பார்வையையோ இழந்திருக்கிறார்கள். எதை எளிதாக அடைந்துவிட முடியுமோ அதை நோக்கியே நகர்கிறார்கள்.
- ஜக்கி வாசுதேவ் உரையிலிருந்து...
சமூகம் பற்பல மாற்றங்களுக்கு உள்ளாகிப் பெருகி வந்தாலும், அறிவியல் ரீதியான கண்டுப்பிடிப்புகள் பெருகி வந்தாலும் வாழ்க்கை இன்னும் மனம் சம்பந்தப்பட்டே இருக்கிறது. சமூகத்திலோ பொருளாதாரத்திலோ எந்நிலையில் இருந்தாலும் மனதினுள் அமைதி நிறைந்தபாடில்லை. பல தப்பித்தல் (escapism) செய்கைகளினுள் மனிதன் நுழைந்ததற்கு முழு முதற்காரணம் மனஅமைதி குலைந்ததே. மனஅமைதியை நாடும் பற்பல மனித முயசிகளில் ‘யோகா’ முதன்மையாகக் கருதப்பட்டு வருகிறது.
சத்குரு ஜக்கி வாசுதேவ் பரிந்துரைக்கும் யோகா, மதத்திலிருந்து விலகியது. ஆதலால், மேலும் எளிமையாய் அடையக்கூடியதாய் இருக்கிறது. கோவையிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் வெள்ளியங்கிரி அடிவாரத்தில் 14 ஏக்கர் நிலப்பரப்பில் ‘ஈஸா’ யோகா மையத்தை உருவாக்கித் தனது தியான வழிமுறைகளைப் பரப்பி வருகிறார் ஜக்கி வாசுதேவ். யோகா என்றாலே ஏதோ மிகவும் கடினமான சமாச்சாரம் என்று நினைப்பவர்கள் ஈஸா யோகா மையத்தினர் விளையாட்டைப் போல சொல்லித்தரும் யோகாவைப் பயின்றால், பிறகு அது பற்றி பயம் கொள்ள மாட்டர்கள். ‘சகஜ ஸ்த்தி யோகா’ அதாவது சாதாரணமாக உடலை கஷ்டப்படுத்திக் கொள்ளாமல் செய்யும் முறை. இந்த முறையிலேயே யோகாவை நல்ல பயிற்சி பெற்ற ஆசிரியர்களைக் கொண்டு கற்பிக்கிறார்கள். அவரைச் சந்தித்து உரையாடியபோது அவர் கூறிய சில தகவல்களும், அவரது கருத்துகளும் வித்தியாசமாகயிருந்தன.
”ஒவ்வொருவரும் ஒவ்வொரு கண்ணோட்டத்தோடு வாழ்க்கையை அர்த்தப்படுத்திக் கொள்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் தனிதனி உலகம் இருக்கிறதா? அப்படியானால், நமது புலன்களிலிருந்து விடுபட்டு உண்மையான உலகத்தைத் தரிசிக்க உதவுவதே யோகா” என்று சிரித்துக் கொண்டே தனக்கேயுரிய காந்தக்குரலால் சொல்கிறார் ஜக்கி வாசுதேவ்.
பொதுவாக நம்மிடையே யோகாவை மதத்துடன் சம்பந்தப்படுத்தி, மத ரீதியாய்ப் பார்க்கும் தன்மைதான் நிலவுகிறது. குறிப்பாக யோகா பயில்வதை இந்து மத சடங்கு சாத்திரம் போலவே நினைக்கிறார்களே? என்று கேட்டபோது, “விஞ்ஞானப்பூர்வமாக யோகாவை அணுகுபவர்கள் இந்தத் தவறைச் செய்ய மாட்டார்கள். சித்தர்கள் யோகாவை விஞ்ஞானப்பூர்வமாகவே அணுகியிருக்கிறார்கள். உண்மையைப் புரிந்து கொள்ளாமல் வேறு வேறுவிதமாய் அர்த்தப்படுத்திக் கொள்கிறவர்கள் எப்பொழுதும் இருக்கிறார்கள். அவர்களை எப்போதும் காப்பாற்ற இயலாது” என்கிறார்.
மனிதனின் உள் உணர்ச்சிக்காகத் தொடங்கப்பட்ட மதங்கள் காலப்போக்கில் வேறுவிதமாய் புரிந்து கொள்ளப்பட்டதைப் போலத்தான் இதுவும்.
ஈஸா யோகா மையம் மதுரை, பாளையங்கோட்டை, சேலம், திருச்சி நகரங்களில் உள்ள மத்திய சிறைச்சாலைகளில் யோகா வகுப்புகள் நடத்திக்கொண்டிருக்கிறது. கைதிகளும் மனிதர்கள்தானே. ஏதோ ஒரு வித மிருக வெறிக்கு ஆட்பட்டு கொலை, கொள்ளை, களவு போன்ற செயல்களில் ஈடுபட்டு விடுகிறார்கள். பின்னர், தண்டனை பெற்று கைதிகளாக சிறைதண்டனையை அனுபவிக்கும்போது, தங்கள் அவசர செய்கையினால் சகஜமான வாழ்க்கையை இழந்து தனிமையில் தவிப்பதைப் பற்றி மனம் நொந்து போகிறார்கள்.
”ரொம்ப.... நம்ப முடியாதளவு மாற்றங்கள் சிறையினுள் யோகா வகுப்புகளினால் ஏற்பட்டுள்ளன. கைதிகள், சிறை அதிகாரிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆகிய மூன்று தரப்பினர் உதவியினாலேயே இது கைகூடியது. கைதிகள் விடுதலை அடைந்த பின்னர் அவர்களுக்கு உதவுவதற்கும் ஈஸா யோகா மையம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
சிறைத்துறை மேலும் மாறுவதற்கு அரசாங்கம் முனைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பல பேர் இத் தொண்டினைச் செய்வதற்கு ஆர்வலர்களாச் சேர்கிறார்கள். கைதி ஏதோ ஒரு காரணத்திற்காகத் தவறு செய்திருப்பதால் அவரை முற்றிலும் நிராகரித்து விடுவது என்பதும் தவறுதான்.
தியானலிங்கத்¨தை நிறுவ, வெவ்வேறு சக்திச் சக்கரங்களை பூட்டுவதில் தன்னைத்தானே அதிகமாய் வருத்திக் கொண்டு அதனை எப்படியும் நிறுவி விடுவது என்பதில் முனைப்பாகயிருக்கிறார் ஜக்கி வாசுதேவ்.
தியான வகுப்புகளில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் பொருளாதார வசதிமிக்கவர்களாகவே இருக்கிறார்களே, மற்றொரு சாராரையும் எப்பொழுது அது முழுமையாகச் சென்றடையப் போகிறது?
”உடனடியாய் அவர்களுக்குத் தான் பயன் சென்றடைகிறது. அவர்கள் இதனைப் பரப்புவதில் உதவிகரமாய் இருப்பார்கள். எல்லோருக்கும் பயன் சென்றடைய வேண்டுமென்பதே எங்கள் நோக்கம். மேல்நிலையிலிருந்து வரும் உதவிகளைக் கொண்டே மற்றவர்களுக்கு உதவி செய்கிறோம். நூற்றில் ஒருவர் முழுமையாகப் பயனடைந்தால் கூட நான் சந்தோஷப்படுவேன்” என்கிறார் வாசுதேவ்.
கண்ணம்மா - சாய்ராம் படங்கள் : கண்ணம்மா |