'பவளக்கொடி' வழங்கிய கோணங்கியின் 'பாழி' மீதான விமர்சனச் சூழல்
பாழி

கோணங்கியின் ‘பாழி’ நாவல் குறித்த விமர்சனச் சுழல் குறித்த நிகழ்வுக்கு அழைக்கப்பட்டிருக்கிறேன். இந்த நாவல் குறித்து விமர்சனமாக ஏதும் கூறப் போவதில்லை. ஏனென்றால் நான் அடிப்படையில் இலக்கிய விமர்சகன் இல்லை. கோணங்கியின் ‘பாழி’ குறித்து, அந்த நாவல் எனக்குள் ஏற்படுத்திய அனுபவங்கள் குறித்து, மனப்பதிவுகள் குறித்து, நான் உணர்ந்ததைக் கூறுகிறேன். அதற்கு முன்பாக இரண்டு, மூன்று ‘Prelude’ கள்.

இந்த அமர்வும், இங்கு கூடியிருக்கிறவர்களும் இயல்பான சூழ்நிலையைத் தருகிறார்கள். வட்டமான, சமதரையில் அனைவரும் சமமாக அமர்ந்திருக்கிறோம். இது கொஞ்சம் இலகுவாக இருக்கிறது. இந்தச் சூழலில் கொஞ்சம் மனம் திறந்து பேச ஆசைப்படுகிறேன்.

கடந்த 12, 13 ஆண்டுகளாக ஒரு பத்திரிகையாளனாக நான் அறியப்பட்டிருக்கிறேன். இந்தக் காலகட்டத்தில் எனக்கு சிறு பத்திரிகைச்சூழலில் எந்தப் பங்கும் இல்லை. சிறு பத்திரிகையாளர்கள் பலரை எனக்கு நன்றாகத் தெரியும். அவ்வளவுதான். இந்தக் காலகட்டத்தில் நிகழ்ந்த எந்தப் ‘போக்குகளோடும் எனக்குத் தொடர்பு அதிகம் இருந்ததில்லை. எந்தப் புதிய இசங்களும் எனக்குத் தெரியாது. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாகச் சிறு பத்திரிகைகளைப் பார்க்க நேர்ந்திருக்கிறது. இது துரதிர்ஷ்டமாகக் கூட இருக்கலாம். அதற்கு முன்பு பல ஆண்டுகள் தனித்துதான் இருந்தேன்.

இந்தக் காலகட்டத்தில் தொழில் நிமித்தமாக சதா படித்துக்கொண்டேயிருந்தேனே தவிர, இலக்கியங்களைப் படிக்கவில்லை. என்னைச் சுற்றி எல்லாமும் தகவல்களாக இருந்தன. ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான, கோடிக்கணக்கான தகவல்களின் சுழல். எழுத்துக்களாக, படங்களாக, நகரும் காட்சிகளாக, பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், கம்ப்யூட்டர் மானிட்டர்கள் எங்கும் வார்த்தைகள். எல்லாமும் 50 வார்த்தைகள், 100 வார்த்தைகள், 200, 300, 600, 700 என வார்த்தைகளின் சுருக்குகளாகவே இருந்தன. கடந்த காலம், நிகழ் காலம் எல்லாம் வார்த்தைகள் கொண்ட தகவல்கள். சூழலின் துன்பம், துயரம், துக்கம், வெற்றி, தோல்வி, வறுமை, வறட்சி, சாதனை எல்லாமே வார்த்தைகள்.

ஒரு வாசகனுக்கான கற்பனைவெளி என்பதே அடைக்கப்பட்டிருந்தது. எனவே எழுத்து, வாசிப்பு போன்றவை சலிப்பூட்டுவதாக ஆகிவிட்டது. இன்றைக்கு எந்த விவரணைகளுமே படைப்பில் அவசியமில்லாமல் ஆகிவிட்டது. நமது கற்பனை என்பதே இரட்டைப் பரிமாண நகரும் காட்சிகளாக, திரைப்படத் தொலைக்காட்சி காட்சிகளாக ஆகிவிட்டது. இன்றைக்கு, ஒரு இரண்டு வயதுக் குழந்தையிடம் கூட ‘தானிய வயல்’ என்றால் எப்படியிருக்கும் என விளக்க வேண்டியதில்லை. தொட்டிலில் கிடக்கும் ஆறு மாதக் குழந்தைப் பருவம் முதல் தொலைக்காட்சி பரிச்சயமாகிவிட்டது. அதற்குக் கரிசல் வயல், தீரவாசத்து வயல், ரஷ்ய வயல், அமெரிக்க வயல், ஆப்பிரிக்க வயல் எனக் காட்சிகளாக இரட்டைப் பரிமாணத்தில் பதிந்துவிட்டது. படைப்பின் மூல ஊற்றான வாசகனின் கற்பனை வெளிக்கு இடமே இல்லை. எனவே, ஏன் வாசிக்க வேண்டும்? வாசித்தாலும் அது, திரும்பத் திரும்ப வரும் விவரணைகளால் சலிப்பூட்டுவதாகத்தான் இருக்கிறது.

இதனால்தான் ஒரு படைப்பின் மொழி பற்றிய சிந்தனை எழுகிறது. இது என்னை செயலற்றவனாக ஆக்க, கோணங்கியை மொழி பற்றிய ஒரு Idiom ஆக மீடியமாக ஆக்கும் தேடலில் ஈடுபடுத்தியிருக்கலாம். படைப்பில் மொழி எனும் கருவி பற்றிய சிந்தனைகள் உருவாகியிருக்கலாம் என நினைக்கிறேன்.

கோணங்கியின் முந்தைய எழுத்து பற்றிய என் கணிப்பு வேறு மாதிரியாக இருந்தது. ‘மதினிமார்கள் கதை’ அதைத் தொடர்ந்து ‘கொல்லனின் ஆறு பெண் மக்கள்’, ‘பொம்மைகள் உடைபடும் நகரம்’, இடையே ‘கல்குதிரை’ இதழ்கள், ‘பட்டுப்பூச்சிகள் உறங்கும் மூன்றாம் சாமம்’, இன்னும் தாஸ்தயேவ்ஸ்கி, தற்கால உலகச் சிறுகதைகள், மார்க்வெஸ் என்று ‘கல்குதிரை’ சிறப்பிதழ்கள், ‘உப்புக் கத்தியில் மறையும் சிறுத்தை’ எனத் தொடர்ந்து இயங்கி வந்துள்ளார். இவற்றுக்குள் பல மாறுதல்கள் இருக்கின்றன. சில கதைகள் பிடித்திருந்தன. பல பிடிக்கவில்லை. அதனால், எழுத்து தொடர்பான தொடர்ந்த ஈடுபாட்டிலும், தேடலிலும் இருக்கிறார் என உணர முடிந்தது.

கற்பனை உள்ளவர்களில் இரண்டு வகை. ஒன்று சோம்பேறி வகை. மற்றொன்று செயல்படுபவர். நான் முதல் வகை. இதற்கு எனது கற்பனையைப் பயன்படுத்திக் கொள்கிறேன்.

கோணங்கி செயல்படுபவர். இதுதான் அவஸ்தை. அவரால் ஒரு கதையை அப்படியே மீண்டும் காப்பி செய்ய முடியாது. அவரது ‘பாழி’, ‘மதினிமார்கள் கதை’, ‘கருப்பு ரயில்’ போன்ற கதைகளின் ஒவ்வொரு பிரதியிலும் புதிய படிமங்களைக் கொண்டதை நான் அறிவேன்.

அவர் சித்திரமாக எழுதுபவர். இது அவரது கற்பனையின் விளைவு. இதற்கு ஒரு ‘மொழி’ அதாவது ஒரு கருவி தேவையாயிருந்தது. இதற்காகத் தொடர்ந்து கடுமையாகச் செயல்பட்டார். இது இடையில் கொஞ்சம் விலகலைக் கூட அவருக்கு ஏற்படுத்தியது. இது எனக்கு விருப்பமில்லாமையையும், விமர்சனத்தையும் கூட உருவாக்கியது. அந்தப் பயணம் ‘பாழி’யில் முடிந்து, கோணங்கிக்கான ஒரு கருவியை உருவாக்கித் தந்துள்ளது எனலாம்.

புரிந்தது, புரியாதது பற்றிக் கொஞ்சம் சுவாரசியம். தஞ்சைப் பெரிய கோயில் கல்வெட்டுகளை ஒரு யுவதிக்குழு கோயிலில் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தது. ‘‘இங்க பாருடி எல்லாம் சமஸ்கிருதத்தில் எழுதியிருக்குது. முன் பக்கத்திலயும் சமஸ்கிருதக் கல்வெட்டுகள் இருந்துச்சு’’ என ஒரு யுவதி சொல்ல, மற்றவர்கள் ஆச்சர்யப்பட்டார்கள். இது எனக்குப் பீதியை ஏற்படுத்தியது வேறு விஷயம்.

அந்த யுவதிகளுக்கு அது சமஸ்கிருதமாகப் புரிந்திருக்கிறது. அதனால் பிரச்சனை ஏற்படவில்லை. தாம் நினைக்கிறபடியே புரிந்து கொள்வது சுலபம். ஆனால், தமிழ்மொழி வரலாறு பற்றி அறிந்து கொள்ளத் தோன்றவில்லை. தமிழ்நாட்டில், அவர்களது Ignorance வேலையை எளிதாக்குகிறது. இது எனக்குப் புரியவில்லை.

மொழியை ஒரு கருவியாகப் பயன்படுத்திச் சித்திரம் வரைவதில் இந்தச் சிக்கல் ஏற்படுகிறது. சலிப்பூட்டுகிற வாக்கிய முடிவுகள் எதையும் சொல்வதில்லை.

‘பாழி’ கதையை சாண்டில்யன் பாணி நாவலாக எழுதியிருக்க முடியும். வரலாற்று நாவல் எனப் பெயரிடலாம். கண் குத்தியிருக்க ஆயிரம் பக்கங்கள் ஆனாலும் நொடியில் பறந்துவிடும். அதற்குப் பதில் வரலாற்றுப் புள்ளி விவரங்கள் அடங்கிய சில புத்தகங்கள் பிரயோசனமாக இருக்கலாம். இது ஒரு படைப்பாளிக்குச் சித்திரவதை. பின் அதைப் பார்த்து, சிலர் வேறு வேறு பெயர்களில் பிரதி எடுத்து வெளியிடலாம். இது அந்தப் படைப்பாளிக்கு மரணத்தை ஏற்படுத்துகிறது. ஒரு தலையணை நாவலின் கடைசிப் பக்கம், முந்தைய பல நூறு பக்கங்களைக் காற்று அடித்துப் போகச் செய்கிறது.

சமீபத்தில் ஒரு நவீன தலையணை நாவலைப் படித்தபோது இந்த அனுபவம் தான் ஏற்பட்டது. கட்சித் தலைவர் வில்லன். உன்னத எழுத்தாளன் கதாநாயகன். கடைசியில் கதாநாயகன் அநாதையாக்கப்பட்டு, மடிகிறான். இந்த முடிவு நடுவில் ஏதாவது ஒரு பக்கத்தில் ஒளித்து வைக்கப்பட்டிருக்கவும் வாய்ப்பு உண்டு.

நாவலில் கதை என்பது பிரதானமாக இருப்பதும் அவசியமில்லை. இப்படி இரண்டு பிரச்சனைகள். ஒன்று, இந்த ஊடக உலகில் அனைத்தும் தகவல் மயமான வார்த்தைகளுக்கு எதிரான எழுத்து. இரண்டு, போலிகளின் ஈவு இரக்கமற்ற தாக்குதல்களால் ஏற்படும் மரணத்திற்கு எதிர்ப்பு.

இது கோணங்கிக்கு ஒரு சித்திர எழுத்தைக் கொடுத்திருக்கிறது என நான் அபிப்பிராயப்படுகிறேன். ஒரு வாக்கியத்துக்குள், அதன் முழுமையையும் தொட்டு விடத் துடிக்கும் சூழல், திருகல், முறுகல் வாக்கியங்களாகியிருக்கிறது. சங்கப் பாடல்கள், தொல்காப்பியச் செய்யுள்கள், நிகண்டுகள் வாசிப்பது போல. ஒரு சொல் பல அர்த்தங்கள். ஒரு அர்த்தம் பல சொற்கள் எனப் படிமங்களால் பின்னப்பட்ட எழுத்து. தமிழின் தொல் எழுத்து வாசிப்பு தன் அனுபவத்தினூடாக இதனை அடைய முடிகிறது.

‘பாழி’ எனக்கு வாசிக்கச் சுலபமாக இருக்கிறது. இது கடந்த 20 வருடங்களாக இயங்கி வரும் கோணங்கியின் படைப்பு உலகின் அடிப்படையான ‘பேதைமை’ மீது எனக்குத் தொடர்ந்து அதன் ஸ்பரிசம் அனுபவமாகியிருப்பதால் இருக்கலாம். அல்லது நான் தென் மாவட்டத்தைச் சேர்ந்தவனாததால் இருக்கலாம்.

6, 7 மாவட்டங்கள் உள்ளடங்கிய தென் முனை தொடர்ந்து 700, 800 ஆண்டுகளாக யுத்தக்காடாகவே இருந்தது. தொடர்ந்த படையெடுப்புகள், தொடர்ந்து ஊடுருவல்கள். எத்தனை முறை கோட்டைகள் இடிபட்டுள்ளன.

படை வீரனாக, முத்துச் சிலாப அடிமைகளாக, அடிமைச் சுதந்தரம் பெற்ற குடிகளாக, பல்லக்குத் தூக்கிகளாக, ஆயுத ஆசாரிகளாக, தொடர்ந்து பதுங்கி வாழ்பவர்களாக, கொள்ளையடித்துப் பிழைப்பு நடத்துபவர்களாக, தொடர்ந்து வேறு, வேறு இனங்களிடம் நொந்து போனவர்களாக இருக்கிறார்கள். எதிர் இனத்துக்கு ஊழியம் செய்யும் சேவகனாகவும், எதிரிக்கு எதிரான எதிர் இன எஜமான்களுக்கும் சேவகம் செய்திருக்கிறார்கள் எனது மூதாதையர்கள். கப்பல் அடிமைகளாக, கடல் கொள்ளையர்களின் கூலிகளாக, வெளிச்செல்வங்களைத் தனது தேசத்தில் சுமந்து செல்பவர்களாக, காடே இல்லாத கரிசல் தரிசில் ஓடி ஒளிபவர்களாக மீண்டும் மீண்டும் கோட்டைகள் எழுப்புபவர்களாக, பெண்களைக் காப்பவர்களாக, மானபங்கப்படுத்துபவர்களாக, அடுத்த நிலை மீது முற்றுகையிடுபவர்களாகக் கழிகிறது வரலாறு.

இப்படி, ‘பாழி’ யின் ஊடே என் வரலாற்றை நான் எழுதிச் செல்ல அதிலுள்ள கற்பனைவெளி -டம் தருகிறது.

பூகோளம் மற்றும் காலம் என இரு குறுக்குவெட்டு, நேர் உயர் பரிமாணங்கள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. பாழி, தானியாள், முது தாசி, கெங்கம்மாள் என காலமாகவும், நிலைகளாகவும் பாழி. சிறிய எல்லைக்குள் நான்கு திணைகளைக் கொண்டது எமது பிரதேசம். நெய்தல், பாலை, மருதம், குறிஞ்சி என நான்கு நிலைகளுக்குச் சொந்தம் கொண்டாடுபவன் நான். இது எங்கும் இல்லாதது. எனவே பாழி திணை கடந்து, காலம் கடந்து ஒருமையாக ஒளிர்கிறாள்.

தொண்டை மண்டலம் வரை வியாபித்துள்ள எனது மூதாதையர்கள் பாழியினூடாக வருகிறார்கள். பூம்புகாரும், தரங்கம்பாடியும், திருவிடை மருதூரும் எனது நெய்தல் நிலத்திலிருந்து காலத்துள் முன்னோக்கிச் செல்லும் ஆதி கதைகளாக வருகிறது. வெள்ளையர்கள், போர்ச்சுகீசியர்கள், டச்சுக்காரர்கள், அராபியர்கள், கிரேக்கர்கள், சமணர்கள், சைவர்கள், இன்ன பிற என திணை மாறி திணை மாறி விளையாட்டுக் காட்டிய கதைகளை எனக்கு விருப்பமான முறையில் நாவலுக்குள் வாசித்துச் செல்ல முடிகிறது.

இன்று அபிரதேசவாதியாகியிருக்கும் எனக்கு நினைவுப் பயணம்.

கோணங்கியும் பிரதேசவாதியாகி இருப்பாரோ, அவரது பெண்கள் எப்படியிருக்கிறார்கள், அவர் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் உண்மையா எனக் கொஞ்சம் நெருங்கிப் பார்க்கும்போது, தமிழ் நாவல்களில் அடங்கிய ஒருமையும், ஒரு இடத்திலும் பெண் மீதான பழி பாவம் படாததும் உணர முடிந்தது.

நாவலை சுவையோடு வாசிக்க முடிந்தது. பல அடையாளங்கள், குறியீடுகள் மூலம் தொடரும் படிமங்கள் இதனை நாவலாக்கியிருக்கின்றது. இது ‘நாவல்’ தான். (ஏன் இந்தக் கேள்வி?)

தொடர்ந்து இந்த நாவலுக்கான உழைப்பினூடே ஐந்து ஆண்டுகளாக நாவலின் பல பிரதேசங்களுக்குப் பயணம் செய்திருக்கிறார். வடக்கே விதர்பா வரை போய் வந்திருக்கிறார்.

அவர் காண விரும்பிய தொல்நகரங்கள் அவருக்கு, இன்னும் அப்படியே காட்சியளித்திருக்கிறது. கோகோ கோலாவும், மாடர்ன் ரொட்டியும் சர்வ மயமாகியிருக்கும் இந்தச் சமயத்தில், இதன் ஹோர்டிங் மறைப்புகளுக்கு ஊடே பழைய காலத்தைக் கண்டுபிடித்துப் பார்த்து வந்திருக்கிறார். இதன் செரிமானம் ‘பாழி’ யில் தெரிகிறது.

இந்த உழைப்பு பெரும் அபாயத்தைக் கொடுக்கக் கூடும். கூடிய சீக்கிரத்தில் அவரது பாணிகளைக் கண்டுபிடித்து விடக் கூடும். கோணங்கி ஸ்டைல் என ஜெராக்ஸ் நகல் எழுத்துகள் ‘பாழி’ யை மூடி விடக் கூடும். உப பாழிகள் உற்பத்தி செய்யப்படலாம். சிறு பத்திரிகைகள் கோணங்கி அல்லாத கோணங்கி எழுத்துகளுக்குப் பிரதான இடம் தரலாம்.

இதை ஏன் கூறுகிறேன் என்றால் கோணங்கியின் எழுத்து என் எழுத்தல்ல.

இந்த நாவலில் ஆங்காங்கே சில பகுதிகள் கூறியது கூறலாக இருக்கிறது. எழுத எழுதத் தனியாக முழுமையடைந்து வரும் ஒரு படைப்பில், முதல் பிரதியே பல முறை எழுத வைக்கிறபோது, அதைக் கவனிக்காமல் விட்டிருக்கக் கூடும். எனவே, ‘பாழி’ க்கு இன்னொரு Edition இருப்பதாக நினைக்கிறேன்.

(‘பவளக்கொடி’ வழங்கிய கோணங்கியின் ‘பாழி’ மீதான விமர்சனச்சூல் நிகழ்வில் பேசிய பேச்சு, கொஞ்சம், கொஞ்சம் மாற்றங்களுடன்)

அப்பணசாமி

© TamilOnline.com