ரமலான் நோன்பும் நீரிழிவு நோயும்
ரமலான் நோன்புக் காலம் வந்து விட்டது. கடுமையாகத் தங்களை வருத்திக் கொண்டு ஆன்டவனை மனத்தில் நினைத்து அவர்கள் நோற்கும் நோன்பு மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது. இந்த நோன்பினை ஏராளமான இசுலாமியச் சகோதரர்களும், சகோதரிகளும் சூரியன் உதிக்கும் முன்பே உணவருந்தியும், சூரியன் மறைந்த பின்பே மீண்டும் உணவருந்தியும், மற்றபடி நாள் முழுக்க 12 மணி நேரத்திற்கும் மேலாக ஒன்றும் உட்கொள்ளாமல், தண்ணீர் கூட அருந்தாமல் ரமலான் நோன்பு கடைபிடிப்பார்கள். இவர்களில் சர்க்கரை நோயாளிகளும் இருக்கக்கூடும். நீரிழிவு நோயால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளவர்கள், குழந்தைகள், முதியவர்கள் இந்த நோன்பைத் தவிர்ப்பது நல்லது.

இசுலாமியச் சகோதரர்களில் சர்க்கரை நோயுள்ளவர்கள் நோன்பிருக்கும் நாள்களில் கவனத்தில் கொள்ள வேண்டிய மருத்துவ எச்சரிக்கைக் குறிப்புகள் சில இங்கு அளிக்கப்படுகின்றன.

கவனமாக இருத்தல் மீதான குறிப்புகள்:

ரமலான் நோன்பின் போது தண்ணீர்அருந்தாமல், பனிரெண்டு மணி நேரத்திற்கு மேல் இருப்பதால் உடலில் நீர்ச்சத்து குறைந்து விட அதிக வாய்ப்புள்ளது. எனவே, உண்ணாநோன்பு தொடங்கும் முன்பு போதுமான அளவு தண்ணீர் அருந்த வேண்டும்.

உணவில் தாதுச்சத்துக்கள் , வைட்டமின்கள் இருக்குமாறு சமச்சீரான உணவாக உட்கொள்ள வேண்டும்.

நோன்பு நாள்களில் உடலை வருத்திக் கொண்டு செய்யும் உடற்பயிற்சிகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். இத்தகைய உடற்பயிற்சியால், உடலில் புரதச்சத்து இழப்பும், நீர்ச்சத்துக் குறைதலும் நேரும்.

ரமலான் நோன்பிருக்கும் சர்க்கரை நோயாளிகள் நோன்பு நாள்களில், பரிந்துரைக்கப்பட்ட அளவை விட இருபது சதவீதம் கலோரி குறைவாகவே உண்ண வேண்டும். இதனால் உடலின் ஒட்டுமொத்த சக்திச் செயல்பாடு கூடும்.

நோன்பு முடித்ததும், முன்னிரவு பசி பொறுக்காத நிலையில் எக்கச்சக்கமாக அள்ளி உண்ணக் கூடாது. இப்படிச் செய்வதால் சர்க்கரையின் அளவு திடீரென உடலில் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

நோன்பின் துவக்கம், நிறைவு இரு வேளையிலும் உணவுக்கு முன்பும், உண்டு இரண்டு மணி நேரம் கழித்தும் ரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவைக் கண்காணிக்க வேண்டும். சர்க்கரை நோயாளிகள் நோன்பு இருக்கும்போது, கவனமாக இல்லாவிடில் வாதம், மாரடைப்பு, ஆறாப்புண், ரத்த அழுத்த உயர்வு போன்ற சிக்கல்கள் நேரலாம்.

மாத்திரைகளில் மாற்றம்:

ரமலான் நோன்பு நாள்களில், சர்க்கரை நோயுள்ள இசுலாமியச் சகோதரர்கள் சர்க்கரை மாத்திரை விஷயத்திலும் கவனமாக இருக்க வேண்டும். நோன்பு முடித்து முன்னிரவு உணவு உண்ட பின் சரியாகவும், இரண்டு மணி நேரம் கழித்து எடுக்கப்படும் சர்க்கரையின் அளவு மட்டுமே கூடுதலாகவும் இருந்தால், உடனடியாகச் செயல்படும் (short acting drugs) மாத்திரைகளைக் கண்டிப்பாக மருத்துவரின் பரிந்துரை பெற்றே உட்கொள்ளலாம். ரெபாகிளினைடு (Repaglinide) மற்றும் 'அகார்போஸ்' (Acarbose) என்பன உகந்த மாத்திரைகள். இதில் 'அகார்போஸ்' அதிகமும் 'வாயு' வைக் கிளப்பிவிடும் என்பதால், தொழுகையின் போது இது தொந்தரவாக இருக்கும் என்பது ஒரு விரும்பத்தகாத விளைவு. எனவே, 'ரெபாகிளினைடு' என்பது பொருத்தமான மாத்திரை. உண்ணா நோன்பின்போது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு சரியாக இருந்து, உண்ட பின் இரண்டு மணி நேரத்திற்குப் பின் (Post prandial) மட்டுமே கூடியிருப்பவருக்குத்தான் மேற்கண்ட மாத்திரை. நோன்பின் போதும், பின்பு உண்ட பின் இரண்டு மணிநேரம் பின்பு எடுக்கப்படும் சர்க்கரையின் அளவிலும், கூடுதலாக இருந்தால் 'கிளிபென் கிளாமைடு' (Glibenclamide) எனும் குறைந்த நேரத்திலே செயலாற்றிவிடும் மாத்திரையை உட்கொள்ளலாம். கூடவே 'கிளிமிபெரைடு' (Glimeperide) எனும் நீண்ட நேரச் செயலாற்றல் கொண்ட மாத்திரையையும் எடுத்துக் கொள்ளலாம். இவை தாழ்நிலை சர்க்கரையை (hypolycemia) உண்டாக்கும் என்பதால் கட்டாயம் மருத்துவரின் கண்காணிப்பிலேயே இவற்றை உட்கொள்ள வேண்டும்.

இன்சுலின்:

இன்சுலின் ஊசி போட்டுக் கொள்ளும் சர்க்கரை நோயாளிகளுக்கு, ரமலான் நோன்பின்போது சிக்கல் சற்றே கூடுதல். 'தாழ்நிலை சர்க்கரை' (hypoglycemia) யாக ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாகக் குறைந்து விடுவதால் பாதிப்பு ஏற்படும். உணவு உட்கொள்ளாமல் இருப்பதால் இப்படி ஆகிறது. இவர்கள் உடனடி குறுகிய நேரச் செயல்பாட்டினைத் தருகிற 'லிஸ்புரோ' (Lispro) 'இன்சுலின்' வகை ஊசியைப் போட்டுக் கொள்ளலாம்.

சுருங்கக் கூறின், நீரிழிவு நோயுள்ளவர்கள் நோன்பிருக்கும் நாள்களில் அதிகம் நீர் அருந்துதல் (நோன்புக்கு முன் நேரமும், பின் நேரமும்), உடற்பயிற்சிகளைக் குறைத்தல், நோன்பற்ற சமயம் குறைவாக உண்ணல், சர்க்கரை அளவைக் கண்காணித்து மருந்துகளில் மாற்றம் என கவனம் பேணுதல் நல்லது.

என். விஸ்வநாத்

© TamilOnline.com