பதினாறாம் நூற்றாண்டில் விஜய நகர சாம்ராஜ்யம் சோழ மண்டலம் முழுவதும் விரிந்து, பரவி இருந்த காலத்தில் தஞ்சையை தலைநகராகக் கொண்டு அரசாட்சி செய்த செவ்வப்ப நாயக்கர், அச்சுதப்ப நாயக்கர், ரகுநாத நாயக்கர் என்ற மூன்று தெலுங்கு - கன்னட மன்னர்கள் முறையே அறநெறி தவறாமல் ஆட்சி புரிந்து வந்தனர். அவர்களின் ஆட்சிக்கு உறுதுணையாக இருந்து, வழிகாட்டி பல அரிய தர்ம ஸ்தாபனங்களை நிறுவி அழியாப் புகழுடன் விளங்கிய மாமந்திரியே மகான் ஸ்ரீ கோவிந்த தீட்சிதர் ஆவார்.
இவர் சிறந்த நிர்வாகியாக இருந்ததுடன் வேதங்களில் விதிக்கப்பட்டுள்ள ‘அக்னிஹோத்ரம்’ முதல் ‘ஸர்வதோமுகம்’ வரை சகல யாகங்களையும் தானே அனுஷ்டித்து நிகரற்ற தவச்சீலராக விளங்கி வந்தார். இவரும் மன்னர் ரகுநாத நாயக்கரும் ஒரே சிம்மாசனத்தில் வீற்றிருந்து செங்கோல் செலுத்தியதாக வரலாற்று ஆவணங்கள் கூறுகின்றன.
1542 ஆம் ஆன்டில் கும்பகோணத்தில் புனிதமான காவிரியாற்றங்கரையில் சோம யாகம் போன்ற பல யாகங்களை நடத்தி, பின்னர் அதே யாக பூமியில் ரிக், யஜூர், ஸாம வேதங்கள், ஆறு அங்கங்கள் மீமாம் ஸா, வேதாந்தம் போன்ற சாத்திரங்கள், சங்கீதம், நாட்டியம் போன்ற கலைகள், தமிழ் போன்ற மொழிகளை போதிக்க குருகுல முறையில் ஸ்ரீ ராஜா வேத காவ்ய பாடசாலையைத் துவக்கினார். அங்கு வன்னி மற்றும் அரசமரங்களையும் நட்டு வைத்தார். அவை இன்னும் காட்சியில் உள்ளன.
அந்தப் புகழ்பெற்ற வேதபாட சாலை தொடர்ந்து 500 ஆண்டுகளாக இன்று வரை இடைவிடாது வேத சேவை செய்து வருகிறது. பல மஹநீயர்கள் இந்தப் பாடசாலையில் அத்யாபகர்களாக விளங்கியுள்ளனர். பல மகா பண்டிதர்கள் இந்தப் பாடசாலையில் பயின்றுள்ளனர். சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீ முத்துசுவாமி தீட்சிதரும் இந்த பாடசாலையின் மாணவராவார். மேலும் திருக்குடந்தை ஸ்ரீமத் ஆண்டவன் சுவாமிகளும் இந்தப் பாட சாலையில் கல்வி பயின்று பின் ஆசிரியராகவும் இருந்துள்ளார். அது போல் காஞ்சிப் பெரியவர் அவர்களும் இந்தப் பாடசாலையை நிறுவிய மகா புருஷரின் பரம்பரையைச் சேர்ந்தவர்களே. இந்தப் பாட சாலையில் ஆரம்பம் முதல் ஸ்மார்த்த, வைஷ்ணவ, மாத்வ பேதமில்லாமல் ஆசிரியர்களும், மாணவர்களும் பங்கு கொண்டு வந்துள்ளனர்.
இப்பொழுது இப் பாட சாலையில் ஏழு வயதுக்கு மேற்பட்ட பத்து வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் 150 பேர் கல்வி பயில்கின்றனர். பத்து ஆசிரியர்கள் இங்கு பணிபுரிகின்றனர். மன்னர்கள் காலத்தில் தொடங்கப்பட்டு செல்வச் செழிப்புடன் இருந்த பாடசாலை, இன்று சற்று வறுமையில் காணப்படுகின்றது. எனினும் அதிகாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை மாணவர்கள் சுறுசுறுப்பாக வேதங்களையும், மந்திரங்களையும் உச்சரிப்பதும், பாடுவதும் கேட்பதற்கு இனிமையாகவும், பார்ப்பவர்களுக்கு 500 ஆண்டுகளுக்கு முந்தைய சூழலை நினைவு படுத்தும் விதமாகவும் உள்ளது.
எழுத்தும் படங்களும் - காந்திராஜன் |