கார்த்திகை தீபங்கள் ஒளிர்கின்றன
புகைப்படங்கள் - ஆப்ரகாம்

நமது நாட்டிலுள்ள இந்துக்கள் அனைவருக்கும் மிக முக்கியமான பண்டிகை 'கார்த்திகை தீபம்' ஆகும். கார்த்திகை தீபம் என்பது விளக்குகளை ஏற்றி வழிபாடு நடத்தும் ஒரு முக்கியமான பண்டிகையாகும். அனைத்துச் சமயத்தினரும் அன்றாட வாழ்வில் விளக்கேற்றும் பணியினைத் தமது ஒரு முக்கியக் கடமையாகக் கருதுவது மட்டுமல்லாமல், நாம் கருதும் 'நல்ல தினம்', 'நல்ல நிகழ்ச்சிகள்', 'விழாக்கள்', 'பண்டிகை தினங்கள்' ஆகிய அனைத்தும் துவங்குவதற்கு முன்பு விளக்கேற்றும் பணியினை முதலில் செய்வதுதான் தொன்றுதொட்டு இன்று வரையில் நாம் கடைப்பிடிக்கும் வழக்கமாகும். விளக்கு ஏற்றுவதினால் இருள் நீங்கி, ஒளி பெறுவது மட்டுமின்றி, தீயவைகள் அனைத்தும் அகன்று மனிதருடைய வாழ்வு ஒளிமயமாகும் என்பதும் விளக்குகள் ஏற்றுவதின் முக்கியத் தத்துவம் ஆகும்.

தமிழ்நாட்டில் உள்ள விளக்குகளில் அன்ன விளக்கு மிகவும் புகழ் பெற்றதும் பழமை வாய்ந்ததுமாகும். அதாவது, அன்னப் பறவையானது பாலில் உள்ள தண்ணீரையும், பாலையும் தனித்தனியாகப் பிரிக்கும் சக்தியை உடையதால், விளக்கின் மேல் பகுதியில் அன்னப்பறைவை அமைந்த பித்தளை விளக்குகளை வீட்டிலுள்ள பெண்கள் ஏற்றுவதினால், அன்றாட வாழ்க்கையில் நல்லவை கெட்டவைகளைப் பாகுபடுத்தி அறியும் சக்தியைப் பெறுகிறார்கள் என்பது நம்பிக்கையாகும். 'கார்த்திகை தீபம்' பண்டிகையினை நமது நாட்டின் அனைத்துப் பகுதிகளில் வாழும் இந்துக்கள் மட்டுமல்லாமல், வெளி நாடுகளில் வசிக்கும் இந்தியர்களும் சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர்.

பூம்புகார், 'விநாயகர் சதுர்த்தி', 'நவராத்திரிக் கொலு' போன்ற பண்டிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, கண்காட்சியினை நடத்துவதைப் போலவே 'கார்த்திகை தீபம்' திருவிழாவினையும் இவ்வாண்டு பொதுமக்களுடன் இணைந்து ஒரு புதிய விதத்தில் சிறப்பாகக் கொண்டாடுவதற்காகத் தனது உற்பத்தி நிலையங்களில் எண்ணற்ற வடிவங்களில் பல அளவுகளில் பித்தளை விளக்குகளைத் தயார் செய்துள்ளது. 500-க்கும் மேற்பட்ட விதவிதமான பித்தளை விளக்குகளில், அகல் விளக்கு, அன்னப் பட்சி விளக்கு, மகாலட்சுமி விளக்கு, கணேச விளக்கு, கருமாரி விளக்கு, தொங்கு விளக்கு, வாசமாலை, தூண்டா விளக்கு, இரத தீபம், கிளை விளக்கு போன்ற பல விளக்குகளைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

கார்த்திகை தீபப் பண்டிகையினை முன்னிட்டுச் சென்னை வாடிக்கையாளர்கள் வசதிக்காகப் பூம்புகார், 'தீபத் திருவிழா' என்ற கண்காட்சியினை சென்னை-2, அண்ணாசாலை பெரியார் சிலை அருகில் உள்ள அரசினர் தோட்டம் ராஜாஜி ஹாலில், தமிழ்நாடு அரசு வணிக வரித்துறையின் அரசுச் செயலர் திருமதி.சூசன் மேத்யூ, அவர்கள் 23.11.00 காலை 10.00 மணிக்குத் துவக்கி வைத்தார். இக் கண்காட்சியில் வாங்கும் அனைத்து வகை விளக்குகளுக்கும் 10 சதவீதச் சிறப்புத் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

மிகக் குறைந்த விலையில் ரூ.4/- முதல் (பித்தளைத் தகடு அகல்) அதிகப்படியாக ரூ.1,54,000/- (8 கிளை விளக்கு) வரையில் 500 விதமான முப்பது இலட்சம் ரூபாய் மதிப்புள்ள பித்தளை விளக்குகள் இந்தக் கண்காட்சியில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டுக்கான புதிய வரவாகக் கண்கவரும் விதத்தில், மூன்று நவக்கிரக தீபமும் எட்டுக் கிளை விளக்கும் இடம் பெற்றுள்ளது.

தீப விளக்குகள் கண்காட்சிகள் மற்றும் விற்பனை 23.11.2000 முதல் 9.12.2000 வரையிலும் காலை 10.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை நடைபெறும்.

இந்த விளக்குகள் கண்காட்சி பற்றி பூம்புகார் நிறுவனம், "தமிழ்நாட்டில் பல பாகங்களிலும் பயன்பாட்டிலிருக்கும் பல வகையான பாரம்பரிய விளக்குகளை ஒரே நேரத்தில் எங்களது கண்காட்சியில் காண்பது காண்பதற்கரிய காட்சியாகும். கண்காட்சியில் உள்ள அனைத்து விளக்குகளும் உயரிய சுத்த பித்தளை உலோகத்தினால் நேர்த்தியான அலங்கார வேலைப்பாடுகளுடன் தமிழ்நாட்டில் உள்ள சிறந்த கைவினைஞர்களால் உருவாக்கப்பட்டவையாகும். எனினும், இந்தக் கைவினைஞர்கள் வாழ்க்கைத் தரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளதால், இந்த விளக்குகள் கண்காட்சி அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வழிவகை செய்யும்.

ஆகையால், கலையார்வம் மிக்க சென்னை நகர மக்களுக்குப் பூம்புகார் நிறுவனத்தின் வேண்டுகோள். இக் கண்காட்சியிலுள்ள விளக்குகளை நீங்கள் வாங்கி, உங்கள் இல்லங்களில் விளக்கேற்றினால் உங்கள் இல்லம் ஒளி வீசிப் பிரகாசிப்பது மட்டுமல்லாது, பின்தங்கிய நிலையில் உள்ள கைவினைஞர்களின் வாழ்க்கையிலும் ஒளி பிறக்க பெரிதும் உதவுவதாக இருக்கும்" என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறது.

திருக்கார்த்திகை தீபத் திருநாள் நெருங்கும் இந்த நேரத்தில் விளக்குகளை வீடுகளில் ஏற்றி ஒளி வெள்ளம் எங்கும் பெருக பரவச் செய்வோம்.

© TamilOnline.com