டிச.06 உலகத் தொண்டர் தினம்
கொடிய யுத்தங்களாலும் அதனினும் கொடிய நோயினாலும் பாதிக்கப்பட்ட மக்களைக் காப்பதற்காக 1864-ஆம் ஆண்டு ஜெனிவாவில் செஞ்சிலுவைச் சங்கம் தொடங்கப்பட்டது.
இன்று பரவலாக எல்லா நாடுகளிலும் செஞ்சிலுவைச் சங்கத்தின் செயல்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறன.
இரண்டு உலக மகா போர்களினால் மனித சமுதாயம் அதுவரை சந்திக்காத அத்தனை இன்னலுக்கும்,கொடூரங்களுக்கும் உள்ளாக்கப்பட்டது. உறவுகள் துண்டாடப்பட்ட நிலையில் மோசமான எதிர்விளைவுகளை மேற்கொண்டனர். போர்ச்சூழலுடன் சம்பந்தப்படாத பல லட்சக்கணக்கான பொதுமக்கள் தங்கள் வாழ்க்கையினைத் துறந்து மனம் மற்றும் உடல் சார்ந்த சிக்கல்களுக்கு ஆளாயினர். இத்தகைய மனிதர்களைப் பாதுகாத்து உதவி செய்வதற்காகவே முறைப்படுத்தப்பட்ட சேவை உள்ளம் கொண்ட தொண்டர் அமைப்புகள் உருவாக்கப்பட்டன.
போர்க்காலங்களில் உடல், மனச் சிக்கல்களால் நெருக்கடிக்குள் அகப்பட்டுக் கொண்ட மக்களைப் பாதுகாத்து உதவி செய்யத் துடிப்பும், ஆர்வமும் கொண்டவர்களால் மக்கள் தொண்டர் சேவை அமைப்பு தொடங்கப்பட்டது.
போர்க் காலங்களில் மட்டுமல்லாது இயற்கைச் சீற்றங்களினால் வீடிழந்தோருக்கு உணவு வழங்கி அவர்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லும் பணியினையும் தொண்டர்கள் மேற்கொள்கின்றனர். காலரா போன்ற தொற்று நோய்கள் பரவும் சமயங்களில் உடனடி நிவாரணங்களை மக்களுக்கு அளிக்கின்றனர். இது மட்டுமல்லாது அவசரக் காலங்களில் உதவுவதற்காக ரத்த வங்கிகளையும் தொடங்கி அதன் மூலமும் மக்களுக்கு உதவி வருகின்றனர்.
இரண்டு நாடுகளுக்கிடையே சண்டை மூண்டு போர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது இரு நாடுகளுக்கும் இடையே தொண்டர்கள் பொதுப்படையாக நடுநிலையாளர்களாகக் கருதப்படுகின்றனர். போரில் பாதிக்கப்பட்ட வீரர்களுக்கு அவர் எந்த நாட்டைச் சேர்ந்தவராயினும் அவர்களின் காயங்களுக்கு மருந்திட்டுப் பாதுகாக்கும் உரிமை தொண்டர்களுக்கு உண்டு. தொண்டர்கள் சேவை செய்து கொண்டிருக்கும் இடங்களில் போர் நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடாது என்பது ஐக்கிய நாடுகள் சபையின் நிபந்தனை.
சமூகத்தில் தன்னை இணைத்துக் கொண்டு தன்னை மேம்படுத்திக் கொள்ளவும் ,சமூகத்தைப் புரிந்து கொள்வதற்கான பயிற்சிக் களமாகக் கல்விச்சாலைகளில் மாணவ, மாணவியர்களுக்கான சாரணர் இயக்கம் உலகளவில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
சாதி, மத வேற்றுமை கடந்து சகோதர மனப்பான்மையுடன் சமூகத்தை அணுகுவதற்கான நல்ல பண்பாட்டினை மாணவர்களுக்குக் கற்றுத் தருகிறது சாரணர் இயக்கம். சாரணர் இயக்கத்தை இங்கிலாந்தைச் சேர்ந்த பேடன் பவல் என்பவர் 1904-ஆம் ஆண்டு தொடங்கி வைத்தார். 1914- ஆம் ஆண்டு முதல் உலகப் போரில் சாரணர் இயக்கத்தினர் சேவை செய்து வந்தனர். வயது வந்தோர்க்கான கல்வி, சாலை விதிமுறைகளை மேற்கொள்ளுதல், விழா நடைபெறும் காலங்களில் கூட்டத்தினைக் கட்டுப்படுத்துதல், மரங்களை நடுதல் போன்ற பணியினைச் சாரணர் இயக்கத்தினர் செய்து வருகின்றனர்.
இன்றைய காலகட்டங்களில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் சேர்ந்து தொண்டர்கள் மக்களுக்குப் பல்வேறு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துகின்றனர். மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு உதவுதல், எய்ட்ஸ் பிரச்சாரங்களில் ஈடுபடுதல்,தெருவோரச் சிறுவர்களைப் பாதுகாத்தல் போன்ற சமூக நடவடிக்கைகளில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர்.
ஒரு அரசியல் கட்சி அமைப்பில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் உறுப்பினர்கள் கட்சித் தொண்டர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். ஒவ்வொரு கட்சி அமைப்பிலும் தொண்டர் படை ஒன்று செயல்பட்டு வருகிறது. இவர்கள் என்ன நோக்கத்திற்காகத் தொண்டர்கள்
என்று அழைக்கப்பட்டார்களோ, அழைக்கப்படுகிறார்களோ தெரியவில்லை. ஆனால், இவர்களில் பெரும்பாலானோரின் சேவை என்பது, தான் சார்ந்துள்ள கட்சித் தலைவர்களின் நாமத்தைச் சொல்லி வாழ்த்துவதாகத் தான் இருக்கிறது. தேர்தல் காலங்களில் கூட்டம் சேர்ப்பதற்காகத் தொண்டர்கள் தேவைப்படுகின்றனர். இவர்கள் தேர்தல் காலங்களில் ஓட்டு வாங்குவதற்காக அலைவதைப் போன்று, தாங்கள் சார்ந்துள்ள கட்சி ஆட்சிக்கு வரும்போது மக்களோடு தொடர்பு கொண்ட இந்தக் கட்சித் தொண்டர்கள் மக்கள் பிரச்சனையை அரசுக்குக் கொண்டு செல்லலாம்.
ஆனால், தொண்டுள்ளமும் எந்தப் பிரதிபலனையும் எதிர்பாராமல் பிறருக்கு இவர்கள் தொண்டாற்றுகிறார்களா என்றால், பதில் வருத்தம்தான் மிஞ்சும்.
பிரச்சனைகள் அதிகரித்துக் கொண்டு போகும் இன்றைய உலகுக்குத் தொண்டுள்ளம் கொண்ட மனிதர்களின் சேவை மிகப் பெரிய தேவையாக இருப்பதுடன், அவசியம் மிக்கதாகவும் உள்ளது. ஒவ்வொரு மனிதரும் ஒரு அமைப்போடு சேர்ந்துதான் பணியாற்ற வேண்டும் என்ற அவசியமில்லை. தன்னால் முடிந்த அளவுக்குச் சிறிய அளவில் தன்னைச் சுற்றியுள்ள மனிதர்களுக்கு உண்மையான தொண்டுள்ளத்துடன் உதவி செய்தாலே போதுமானது.
த.சந்திரா |