டிசம்பர் - 2 உலக அடிமை ஒழிப்பு நினைவு தினம்
அடிமைத்தனம் நிறைந்து போன உலகம் இது. இந்த மனிதர்களுக்கு யாரையாவது தங்களுக்குக் கீழ் வைத்திருக்க வேண்டும். அதிலும் நம் நாட்டில் எத்தனை ரீதியான பிரிவுகள். 'வேற்றுமையில் ஒற்றுமை' என்று சொல்லிக் கொண்டாலும் கூட, நாம் ஒற்றுமை என்று நினைத்துக் கொண்டிருந்தவைகளில் கூட இன்று அடித்துக் கொண்டிருக்க வேண்டிய நிலை. குறிப்பாக சாதி, இன மொழி, பொருளாதார, கலாச்சார ரீதியாக ஒடுக்கப்படும் மக்கள் 'பாரதத்தில்' தான் அதிகம்.
அடிமை ஒழிப்புக்கென்று 1949- ஆம் ஆண்டிலேயே ஐ.நா. சபை டிசம்பர் 2 ம் நாளை அறிவித்திருந்தாலும் இன்னும் இந்த உலகம் அழியும் வரையும் அந்நாள் நினைவுகூரப்படும், ஆனால் அடிமைத்தனம் மட்டும் ஒழியப் போவதில்லை. காரணம் ஜனநாயகம் பற்றி வாய் கிழியப் பேசும் மனிதர்கள் தெரிந்தே எத்தனை பேரை அடிமைப்படுத்துகின்றனர்.
இங்கு அருவெறுக்கத்தக்கவைகளில் தலையாய ஒன்றாக இருப்பது சாதிய வேறுபாடு. தாழ்த்தப்பட்ட மக்களாகப் பிரிக்கப்பட்டிருக்கும் தலித் மக்கள் எவ்வளவு கொடூரமான அடிமைத்தனத்துக்கு உள்ளாகிறார்கள் என்பதற்கு ஆதாரங்களாய் எத்தனையோ சாதிக் கலவரங்கள் அவ்வப்போது தோன்றி மறைகின்றன. 2 ரூபாய் கூலி அதிகம் கேட்டதற்காக 1969-ம் ஆண்டு 48 பேர் கீழவெண்மணி கிராமத்தில் ஆதிக்க சாதியினரால் குடிசையில் வைத்துப் பூட்டி எரித்துக் கொல்லப்பட்டதும், மாஞ்சோலைத் தோட்டத் தொழிலாளர்களின் கூலிப் போராட்டம் தாமிரபரணி ஆற்றில் 17 பேர் உயிரிழப்பில் முடிந்ததும், கொடைக்கானல் குண்டுப்பட்டியில் போலீசாரின் தாக்குதலுக்கு ஒரு கிராமமே சூறையாடப்பட்டதும், இன்னும் தென் மாவட்டக் கலவரங்களும், மேலவளவுப் படுகொலையும்... வரலாற்றின் முகத்தில் படிந்துபோன ஆறாத புண்களால் உயிர்த்துக் கொண்டிருக்கின்றன.
சுதந்திரமடைந்து இத்தனை ஆண்டுகள் ஆன நிலையிலும், இன்னும் பெரும்பகுதி மக்கள் மீது தீண்டாமை திணிக்கப்படுவது எவ்விதத்தில் நியாயம் என்று யோசிக்கவில்லை யாரும். ஆங்கிலேயர்களுக்கு அடிமைப்பட்டுக் கிடந்தபோது அதை விதி என்று ஏற்றுக்கொண்டு சும்மாயிருக்க முடிந்ததா? எல்லோரும் சேர்ந்து எதிர்த்ததால்தானே விடுதலை கிடைத்தது? அவ்வளவு பலம் படைத்த 'ஒற்றுமை'யில் ஒரு சிறு உழைப்பையேனும் சாதியை ஒழிப்பதற்குக் காட்டியிருந்தால் இன்று தொடரும் உரிமைப் போராட்டங்களில் பலதரப்பட்ட உயிர்களைக் காவு கொடுத்திருக்க மாட்டோம்.
உலகம் முழுவதும் அடிமைகளாக இருக்கும் ஒடுக்கப்பட்ட மக்கள் யாரும் மனிதர்களாக மதிக்கப்படுவதில்லை. இவையெல்லாம் மனித உரிமைகள் என்று பெரிய பட்டியல் போட்டு வைத்திருக்கிறோமே அதில் ஒன்றைக்கூட துளியும் அறிந்திராதவர்கள் இந்த அடிமைகள். நம் கருத்துக்கு மாற்றாக யாராவது சொல்லி விட்டாலே ரத்தக்கொதிப்பு வந்துவிடுகிறது நமக்கு. ஆனால், கருத்தைச் சொல்லவோ அல்லது சொல்லலாம் என்று தெரியாமலோ எத்தனை கோடி மக்கள் வாழ்கிறார்கள்? இவர்களெல்லாம் எதற்குப் பிறந்தார்கள்? இன்னும் எதற்காகத் தங்கள் அடிமை வம்சத்தைப் பெருக்கிக் கொள்கிறார்கள்? மனிதனுக்கு மட்டுமல்ல எல்லா உயிர்களுக்கும் வாழ்ந்தாக வேண்டும் என்ற கட்டாயம் இருக்கிறது.
தீண்டாமை ஒழிப்புச் சட்டங்கள் இயற்றப்பட்டு எவ்வளவு ஆண்டுகள் கடந்து போய்விட்டன. இன்றும் கிராமங்களில் இரட்டைத் தம்ளர் முறை. சட்டங்களும், மசோதாக்களும் உருவாக்கப்படுவது வெற்றுக் கண்துடைப்பு விளையாட்டாகவே போய்விட்டது. அடிமைத்தனத்துக்குப் பொருளாதாரமும் ஒரு காரணமே தவிர அதுவே காரணம் அல்ல. 'வறுமை' அடிமைகளின் மேல் விழுந்த இன்னொரு சாபக்கேடு. வறுமைதான் கொத்தடிமைகளாக மாறுவதற்கு அவர்களைச் சம்மதிக்க வைக்கிறது. எத்தனையோ பெண்கள் பாலியல் அடிமைகளாக இருக்க அனுமதிக்கிறது. எத்தனையோ குழந்தைகளைத் தங்கள் வயதுக்குச் சம்பந்தமே இல்லாத வேலைகளைச் செய்ய வைக்கிறது.
சமீபத்தில் கூட திண்டுக்கல் மாவட்டம் நீதிராஜன் என்ற 19 வயது இளைஞரின் வயிற்றிலிருந்து 44 வகையான இரும்புப் பொருள்களை மதுரை அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் எடுத்திருக்கிறார்கள்.
''மிக்ஸருக்கு மாவு தேய்க்கும் போது சரியா செய்யலேன்னா சுடுகரண்டியை அப்படியே கையிலே வச்சு சூடு போடுவாங்க. தினமும் அடி உதைதான். வீட்டை விட்டு வெளியே வர விட மாட்டாங்க. கொடுமை தாங்காமல்தான் இரும்புக் கம்பிகளை விழுங்கத் தொடங்கினேன்''. இப்படி மிக்ஸர் கம்பெனியில் வேலை பார்க்க ஆந்திராவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நீதிராஜன் சொல்லியிருக்கிறார்.
தப்பி வந்ததால் இந்தக் கொடுமை வெளியே தெரிந்தது. இல்லையென்றால், இதுபோல் எத்தனை இளைஞர்கள், குழந்தைகள், பெண்களை, முதியோர்களை அடிமைத்தனம் என்னும் மனித நேயம் மறந்த வெறி ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது என்பதற்குச் சரியான புள்ளி விவரம் கூற முடியாது.
ஒவ்வொரு மனிதனுக்கும் தனக்குக் கீழ் 'ஏய்' என்று அழைத்தவுடன் ஓடி வர ஆள் தேவைப்படுகிறது. தன்னை எதிர்த்து ஒரு வார்த்தை பேசாத, தான் நினைப்பதை எல்லாம் செய்து முடிக்க, கூலியை எதிர்பார்க்காத இன்னொரு மனிதன் தேவையாய் இருக்கிறான். மனித குலத்தின் மனோரீதியான சிக்கலாகவே இதை எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்பது ஆதிக்க வர்க்கத்தினரின் மனதில் பதிந்து போய்க் கிடக்கிறது.
அடிமைத்தனத்தை ஒழிக்க வழி காண வேண்டிய அரசு வாய் மூடி இருக்கிறது. சமூகத்தின் ஒரு பகுதியினர் கோடியில் புரள்கின்றனர். மற்றொரு பகுதியினர் எச்சில் இலை பொறுக்கும் அவலம்.
இரண்டுக்கும் இடையிலிருக்கும் பள்ளத்தில் அடிமைத்தனத்துக்குப் பலியாகும் உயிர்களின் பிணங்கள் குவிந்து கொண்டிருக்கின்றன. எல்லா பேதமும் மறைய வேண்டும். என்னுடைய உரிமையைப் போன்றதுதான் உன்னுடையதும், பொருளாதாரத்தைப் பகிர்ந்து கொள்வோம். நீயும் நல்லாயிரு, நானும் நல்லாயிருக்கிறேன் என்று எல்லாரும் நினைக்க வேண்டுமானால், உலகத்தை அழித்துவிட்டுத் திருத்தியெழுத வேண்டும். அதுவரை அடிவாங்குவதற்கும், பலியாவதற்கும் உலகின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் அடிமைகள் உற்பத்தியாகிக் கொண்டிருப்பார்கள்.
ஜெயராணி |