மர்ம தேசம்
108 நாட்கள் வனவாசத்துக்குப் பிறகு, கன்னட நடிகர், டாக்டர் ராஜ்குமார், சந்தனக்கடத்தல் வீரப்பனால் விடுவிக்கப்பட்ட செய்தி உங்களில் பலருக்கும் தெரிந்திருக்கும்.

இந்த கடத்தல் நாடகமும், அதைத் தொடர்ந்த, போராட்டங்களும், தூதுப் பயணங்களும், கர்நாடக, தமிழ்நாடு அரசுகளின் உயர்நீதிமன்றத்துடனான, மன்றாடல்களும், தவணை முறையில் பிணைக்கதிகள், தப்பிவந்ததும், விடுவிக்கப்பட்டதும், ஒரு மெகா žரியலைப் போல், ஜவ்வு மாதிரி இழுத்துக் கொண்டு போனாலும், இறுதியாக ‘சுபம்’ போட்டதில் எல்லோருக்கும், நிம்மதிப் பெருமூச்சு..!

இந்த நாடகத்தின் சூத்திரத்தாரியான(நமக்கெல்லாம் தெரிந்த அளவில்) ‘வீரப்பனை’,இதற்காகவே, ‘வீரப்பர்’ என்று அழைக்கலாம். ஊடே, எத்தனை வதந்திகள்..! எத்தனை அரசியல் ஆதாய முயற்சிகள்..!. பாருக்குள்ளே நல்ல நாடான நம் பாரத நாடு ஒன்றுதான், இத்தனை ஜனரஞ்சகமான, நாடகத்தை வெற்றிகரமாக அரங்கேற்றியிருக்க முடியும். இருந்தாலும், இதை வேதனையான வெட்கக்கேடு என்பதா அல்லது, காலச்சுழலின் போக்கில் அரங்கேறிய, மற்றுமொரு மினி பாரதம் என்று கொள்வதா..?

நமக்கெல்லாம், பரிச்சயமாகி, வெற்றிகரமாக, பல ஸ“ஸன்களாக் ஓடிக் கொண்டிருக்கும், X-Files மர்மங்களின் முடிச்சுகள் கூட அவிழ்கப்பட்டுவிடலாம்.FBIயின் ஆழ்ரகசியங்கள் கூட காலப்போக்கில் வெளிவரலாம். ஆனால், நமது பிறந்த மண்ணில், அரசியல் பின்னணியுடன் நடக்கும் நிகழ்ச்சிகளின் மர்மங்கள், மிகவும் பத்திரமாக பாதுகாக்கப்பட்டு, மக்களை இருட்டிலேயே வைத்துள்ளன.

இவற்றையெல்லாம், தட்டிக்கேட்கக்கூடிய நிலையில் உள்ள, பத்திரிக்கைகளோ, சமூக அமைப்புகளோ, சொத்தையான குற்றச்சாட்டுகளையும், சொதப்பலான (புதுயுகத் தமிழ்!)கேள்விகளையுந்தான் அடுக்குகிறார்களே/கேட்கிறார்களே தவிர, பொட்டில் அடிக்கிறார் போல கேள்விகளைக் கேட்பதும் இல்லை, நன்கு ஆய்ந்து, சந்தேகத்திற்கு அப்பாற் பட்ட வகையில் குற்றங்களைச் சாட்டுவதும் இல்லை. உண்மைகளை மக்களுக்கு எடுத்துச் சொல்வதுமில்லை.

நமது ஜனநாயகம், சவநாயகமாகத்தான் போய்க் கொண்டிருக்கிறது.நம் மக்களோ TV மெகா žரியல்களிலும், நமது கலாச்சாரத்தையும், சமுதாயத்தையும் உள்ளது உள்ளபடியே பிரதிபலிக்கும் (ஹ’ஹ’..!) சினிமா கும்பல் நடனங்களிலும், TVயில் திணிக்கப்படும் சமுதாய ஒட்டு மொத்த மூளைச் சலவைகளிலும், தங்களை இழந்திருக்கிறார்களே தவிர, நாட்டின் நடப்புகளில் சிறிதும், ஆர்வம் காட்டுவதுமில்லை, அதன் விளைவுகளைப் பற்றி சிந்திப்பதுமில்லை.

ஆகமொத்தம், எல்லாமே, எல்லோருக்கும் தமாஷ்தான்.. இன்றைய சூடான செய்திகள், நாளை மறக்கப்படவேண்டியவை..

மிகவும் சாதாரணமாக, காட்டுக்குள் போய்விட்டு வரும் பத்திரிக்கை நிருபர்கள் மற்றும், நாட்டிலே தடை செய்யப்பட்ட இயக்கத்தை பகிரங்கமாக ஆதரிக்கும் அரசியல்வாதிகள், மெத்தனமும், மேம்போக்கான முயற்சிகளும் எங்கள் திட்டமிட்ட நகர்வுகள் என்று செயல் படும் அரசு இயந்திரங்கள், கைகட்டப்பட்டு, ஒரங்கட்டப் பட்ட, காவல் அதிகாரிகள், கோடிக்கணக்கில் கை மாறியதாக குற்றம் சாட்டும் எதிர்கட்சிகள், ஒருபுறம்.

தமிழ் மற்றும், தமிழர் உரிமைக்காக போராடுவதற்காகத்தான் இக்கடத்தல் உத்தி என்பதான வீரப்பன்(ர்) தரப்பு அறிக்கைகள், அரசாங்கத் தூதராக முதலில் இருந்தே அங்கீகரிக்கப்பட்ட ‘நக்கீரன் கோபால்’மற்றும் வீரப்பனின் விருப்பத்திற்கிணங்கித் தூதுவராகச் சென்ற நெடுமாறன் இவர்களுக்கிடையிலான பனிப்பூசல்கள், சக்தியின் வடிவம், டாக்டர் பானுவின் தந்திரத்தால் தப்பித்தேன் என்ற, ராஜ்குமாரின் அறிக்கை, தமிழினத்தலைவர் நெடுமாறனின் முயற்சியாலேயே விடுவிக்கப்பட்டேன் என்று அவரே அடித்த அந்தர் பல்டி, டாக்டர் பானு, டாக்டரே அல்ல, ‘கிரானைட் வியாபாரி’ என்னும் பெட்டிச் செய்தி என்பதாக வரும் குழப்படி செய்திச் சிதறல்கள் மறுபுறம்.

இது என்ன தர்ம தேசமா? அல்லது மர்ம தேசமா? ஏன் இத்தனை ஏமாற்று வித்தைகள்? கண்கட்டி விளையாட்டுக்கள்? மாயமான் ஒளிவு மறைவுகள்..?

எது எப்படியாயினும், சம்பந்தப்பட்ட அனைவருக்கும், பாரதியிலிருந்து சில வரிகள்.

“பாரத நாடு பழம் பெரும் நாடு..
நீர் அதன் புதல்வர் இந் நினைவகற்றாதீர்..!

- இது எல்லோருக்கும் பொருந்தும்..!

தாய்த்திரு நாட்டை தருகண் மிலேச்சர், பேய்த்தகைக் கொண்டோர், பெருமையும், வண்மையும், ஞானமும் அறியா நகைபுரி பகைவர்..

- ஆம், நம் நாட்டையும், நாட்டுமக்களின் நம்பிக்கையையும் குலைப்பவர்கள், எல்லோரும், பகைவர்கள்தான்!)

வானகம் அடக்க வந்திடும் அரக்கர் போல்
இந்நாள் படை கொணர்ந்து இன்னல் செய்கின்றார்..
மற்றிதைப் பொறுத்து வாழ்வதோ வாழ்க்கை?

- இந்நாளையப் படைகள், மக்களை ஏமாற்றும் புரட்டுப் பேச்சுகளும், அரசியல் வெளிவேஷங்களும், இவை விளைவித்திருக்கின்ற, அவலங்களும் தான்!

வெற்றிகொள் புலையர் தாள் வீழ்ந்து கொல் வாழ்வீர்?
மொக்குள்தாம் தோன்றி முடிவது போல
மக்களாய்ப் பிறந்தோர் மடிவது திண்ணம்..!
படைமுகந் திறந்து, பதம்பெற விரும்பா
கடைபடு மாக்களென் கண்முன் நில்லாதீர்..!

சத்திரபதி சிவாஜி, தன் படைவீரர்களுக்குச் சொன்னதாக எழுதப்பட்ட மேற்கண்ட வீரவரிகள் நம் மக்களின் சித்தத்திலே ஊறி,சிந்திக்கவைக்க வேண்டிய வரிகள். பல்லாயிரக்கணக்கான மைல்கள் தொலைவிலே இருந்துகொண்டு புலம்புவதினால் என்ன பயன் என்று, நினைக்கவேண்டாம்.இணய யுகத்திலே எதுவும் சாத்தியம்தான். Charity begins at home, என்று சொல்வதுண்டு. உங்கள் ஒவ்வொருவரது இந்திய இணைப்பும், சக்தி வாய்ந்தது. தேசத்தின் தலையெழுத்தை மாற்றும் திறன் வாய்ந்தது. மர்ம தேசத்தை, தர்ம தேசமாக்கும் ஆற்றல் வாய்ந்தது.

உங்கள் முயற்சி திருவினையாக்கும்.. மீண்டும், வாய்மையே வெல்லும், அரசாங்க முத்திரையில் மட்டுமல்ல..! உண்மையாகவே.

விதுரன்

© TamilOnline.com