இட ஒதுக்கீடு என்பது சலுகையல்ல
அம்பேத்கர் பெரிய அறிஞர். இந்தியாவுக்கு அரசியல் சட்டம் வகுத்தளித்த மேதை. முதன்முதலில் வெளிநாடு சென்று டாக்டர் பட்டம் பெற்ற பேரறிஞர். கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருந்தபொழுது புக்கர் வாஷிங்டனின் கருத்துக்களால் கவரப்பட்டுத் தனது வாழ்நாளைத் தாழ்த்தப்பட்டவர்களின் முன்னேற்றத்துக்காக அர்ப்பணித்துக் கொண்ட அண்ணல். தனது பார்ப்பன ஆசிரியரின் பெயரைத் தன் பெயராக வைத்துக் கொண்ட நன்றி மறவாப் பெருந்தகையர். இப்போதெல்லாம் இப்படி அம்பேத்கரைக் கெளரவப்படுத்தி அறிமுகம் செய்யும் போக்கு பரவலாக உள்ளது.
இன்னொருபுறம் தலித் மக்களின் கலங்கரை விளக்காகக் கருதுவதும் அந்த விளக்கின் ஒளியில் தங்கள் நடவடிக்கைகளை அமைத்துக் கொள்ளும் போக்கும் சில மட்டங்களில் உண்டு. அத்துடன் அம்பேத்கரை ஒரு மீட்பராக, தெய்வாம்சம் பொருந்தியவராக நிறுத்தப்படும் போக்கும் உண்டு.
எவ்வாறாயினும் அம்பேத்கர் குறித்த அக்கறை அவரது சிந்தனை வழியில் இயக்கமாக அணிதிரளும் போக்கு அவரது நூல்கள் கட்டுரைகள் யாவும் அம்பேத்கர் நூற்றாண்டை ஒட்டித் தமிழ்ச் சூழலில் அதிகம் கவனிப்புப் பெற்றது. இதுவரையான தமிழர்களின் செயற்பாட்டில் புதிய திசை திருப்பங்களை ஏற்படுத்தியது.
இந்திய விடுதலைக்குப் பின் சமூக அரசியல், கருத்தியல் சக்திகளால் உருவாக்கப்பட்ட டாக்டர் அம்பேத்கரின் படிமம் தமிழ்ச் சூழலில் தற்போது இல்லை. மாறாகத் தலித் மக்களுடைய குரலாக, தலித் சிந்தனையாளராக, கலக அரசியலாளராக எனப் பன்முக அடையாளப்படுத்தலின் புதிய பரிமாணமாக, மறு கண்டுபிடிப்பாகவே அம்பேத்கர் உள்ளார்.
இந் நிலையில் அம்பேத்கரிடம் இருந்த பல்வேறு தன்மைகளையும் செயல்பாடுகளையும், அவரது கொள்கைச் செயற்பாட்டில் ஏற்பட்ட சிதைவுகளையும், இவற்றுக்கான பின்புலங்களையும் சக்திகளையும் எனப் பன்முகப்பட்ட ரீதியில் புரிந்துகொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
அம்பேத்கரை வெறும் மீட்பராக, தெய்வமாக மட்டும் நோக்காமல் அவரது கருத்து நிலைத் தொடர்ச்சியின் இன்றைய பொருத்தப்பாடு என்ற பின்புலத்தில் வைத்துப் புரிந்து கொள்ள வேண்டும். சம காலச் சமூக அரசியல், கருத்தியல் வரலாற்றினை அம்பேத்கர் வழியே புரிந்துகொள்வதுடன் மேலும் அவரது கருத்தியலை வளர்த்துச் செல்ல வேண்டும்.
இந்த அடிப்படையில் அம்பேத்கரின் சமூகக் கலகக் குரலின் பிரதான அம்சங்களாகச் சிலவற்றை நாம் அடையாளப்படுத்த முடியும். இட ஒதுக்கீட்டின் மூலம் அரசு வேலைகளிலும், அதிகாரங்களிலும் பங்கு கோருதலும் அதன் மூலமாகத் தாழ்த்தப்பட்டவர்களின் விடுதலையை ஓரளவு சாத்தியப்படுத்தலும்.
இந்துமத எதிர்ப்பு பொருளியல் சிந்தனை தாராள சனநாயகத்தில் ஈடுபாடும் பயிற்சியும் சீர்திருத்தவாத முற்போக்குச் சிந்தனை ஆன்மிக ஈடுபாடு மக்கள் நலனுக்கான செயற்பாடு
அம்பேத்கரின் பன்முக ஆளுமைகள் அவரது காலத்தின் பார்வையிலும் பணிகளிலும் தலித் மக்களின் விடுதலைக்கான சிந்தனைச் செயல்பாட்டுத் தளத்தை வலிமையாக்கி உள்ளது.
அம்பேத்கர் வலியுறுத்திய 'இடஒதுக்கீடு' தொடர்பாக மட்டும் தற்போது நாம் கவனத்தைக் குவித்துக் கொள்வோம்.
''இந்தியர்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட அரசு வேலை வாய்ப்பு முழுவதும் சூழ்நிலை காரணங்களால் பார்ப்பனர்களுக்கும் அவர்களுடன் தொடர்புடைய சாதிகளினருக்கும் உரிய சொத்தாகி விட்டது. இது ஆபத்தானது. பார்ப்பனரல்லாத மக்கள், ஒடுக்கப்பட்ட மக்கள் மற்றும் இசுலாமியர்கள் அனைவருக்கும் 'இந்தியா' என்ற அங்கீகாரம் அளிக்கப்படாமல் இந்த வாய்ப்புகளில் இருந்து விலக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பொதுப் பணிகளில் தங்களுக்குரிய பங்கைப் பெறுவதற்கெனத் தீவிரப் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
இப் போராட்டத்தை எதிர்ப்பதற்கான அடிப்படைக் காரணம் பொதுப்பணிகளில் அரசுக்குத் தேவைப்படுவது திறமை மட்டுமே. சாதிகளையும், குலங்களையும் கருத்தில் கொள்ளத் தேவையில்லை என்பதுதான். கல்வித் திறமையே, திறமையின் அடிப்படையாகக் கொண்டு பொதுப்பணிகளுக்குப் போட்டித் தேர்வு நடத்த வேண்டும் என்கின்றனர். கல்வி பெறுவதற்கான அடிப்படைச் சூழ்நிலை இங்கு இல்லை என்பது தெளிவாக உள்ள நிலையில், பிற்படுத்தப்பட்ட சாதிகள் அரசுப் பணிகளுக்குத் தேர்வுப் போட்டிகள் மூலமே செல்ல வேண்டும் என்பது அவர்களை ஏமாற்றுவதாகும்'' இவ்வாறு அம்பேத்கர் தெளிவாகக் குறிப்பிடுகிறார்.
இதனாலேயே கல்வியைப் பரப்புவது, அரசுப் பணிகளில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு அதிகப் பிரதிநிதித்துவம் பெற்றுத் தருவது, கிராமப் புறங்களிலுள்ள தாழ்த்தப்பட்டவர்களின் வாழ்நிலையை முன்னேற்றுவது ஆகியவற்றை வாழ்க்கையின் மூன்று குறிக்கோள்களாகக் கொண்டு செயற்பட்டுள்ளார். இதன் விளைவாக மத்திய அரசுப் பணிகளில் முதன் முதலாக 1943-இல் தாழ்த்தப்பட்டவர்களுக்கு 8.33 சதவீதம் இட ஒதுக்கீடு செய்யப்பட்டது. பின்னால் 1947-இல் இது 12.5 சவீதமாக உயர்த்தப்பட்டது.
நாடாளுமன்ற அமைப்பிலும் குடியாட்சி மதிப்பீடுகளிலும் அசையாத நம்பிக்கை கொண்டு செயற்பட்டவர் அம்பேத்கர். இதனாலேயே அரசுப் பணிகளில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு அதிகப் பிரதிநிதித்துவம் பெற முடிந்தது. இதனால் இந்துப் பெரும்பான்மையினருக்கு எதிரான தாழ்த்தப்பட்டவர்களின் உரிமைகளைப் பாதுகாக்க உதவும் என நம்பினார்.
1947-இல் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில் ''இந்திய மக்கள் தொகையில் 30 சதவீதம் தாழ்த்தப்பட்ட மலைவாழ் மக்கள் உள்ளனர். இம் மக்களுக்கான வாய்ப்புகள் விகிதாசாரப்படி அளிக்கப்படா விட்டால், எஞ்சியுள்ள 70 சதவீத மக்கள் முழுமையாக முன்னேறினாலும் ஒட்டு மொத்த இந்தியாவின் முன்னேற்றம் 50 சதவீதத்தைத் தாண்டாது. எனவே, ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றம், இட ஒதுக்கீட்டின் மூலம் உறுதி செய்யப்பட வேண்டும். இதுவே, ஒட்டுமொத்த இந்தியாவின் உயர்வுக்கு வழி வகுக்கும் எனக் குறிப்பிட்டார்.
சமூகத்தில் தீண்டாமை ஒழியும் வரை இடஒதுக்கீடு இருக்க வேண்டும் என்றார். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நன்மை செய்வதற்காகவே அரசியல் சட்ட அவையில் தான் பங்கு கொண்டதாகவும் குறிப்பிடுகிறார்.
ஆனால், அன்று முதல் இன்றுவரை தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அவர்களின் விகிதாசாரப்படி இடஒதுக்கீடு கிடைக்கவில்லை. ஏறத்தாழ 17 ஆயிரம் இடங்கள் இன்றளவும் நிரப்பப்படாமலே உள்ளது. தமிழகத்தில் ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்கும் மேலாக மாறி மாறி திராவிடக் கட்சிகளின் ஆட்சிதான் நடைபெறுகிறது. திராவிட இயக்கத்தின் முதன்மையான கொள்கையில் ஒன்று இட ஒதுக்கீடு. ஆனால், அவர்கள் அதைச் சரிவர இன்றுவரை நடைமுறைப்படுத்தவில்லை.
ஆலய நுழைவு போன்றவற்றையெல்லாம் விட கல்வி மற்றும் சமூகத் தரத்தில் முன்னேற்றம் பெறச் செய்வதே தாழ்த்தப்பட்டவர்களை உயர்த்துவதற்கான சிறந்த வழி என்றும் கருதினார் அம்பேத்கர். சட்டமன்றங்கள் மற்றும் நாடாளுமன்றத்தில் அதிக அளவில் பங்கு பெறுவதும் இதற்குத் துணைபுரியும் என அவர் நம்பினார். பாராளுமன்றத் தொகுதிகள் என்பன அவரது முயற்சியின் விளைவே.
இன்றுள்ளது போல் வெறும் ஒதுக்கப்பட்ட தொகுதிகளும், பிற சாதியினருடன் இணைந்து வாக்களிக்கும் உரிமையும் மட்டும் அவர் கேட்கவில்லை. மாறாக சிறப்பு வாக்காளர் தொகுதி. இதன் மூலம் தாழ்த்தப்பட்டவர்கள் இரு வாக்குரிமைகளைப் பெறுவர். பிற சாதியினருடன் இணைந்து ஒரு வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கும் உரிமை ஒன்று. தாழ்த்தப்பட்டவர்கள் மட்டுமே வேட்பாளராக நிற்கும் தொகுதிக்கான வாக்குரிமை மற்றது.
தாழ்த்தப்பட்டவர்களின் வாக்குகளை மட்டுமே நம்பி நின்று வெற்றி பெறும் ஒரு தாழ்த்தப்பட்ட வேட்பாளருக்கு எந்த வகையிலும் ஆதிக்கச் சாதியினரை நம்பியிருக்கும் அவசியம் இருக்காது. மாறாக இரு சாராரும் வாக்களிக்கும் தொகுதியாக இருந்தால் ஆதிக்கச் சாதியினரின் 'நம்பிக்கைக்குகந்த' தாழ்த்தப்பட்டவரே வெற்றி பெற முடியும். அம்பேத்கரின் முயற்சியின் விளைவாகவே அன்றைய ஆங்கிலேய அரசு இத்தகைய உரிமைகளை வகுப்புப் பிரதிநிதித்துவத் தீர்ப்பு (ஆகஸ்டு 1932) மூலம் தாழ்த்தப்பட்டோருக்கும் இதரச் சிறுபான்மையினருக்கும் அளிக்க நேர்ந்தது.
காந்தி, இசுலாமியருக்கும் சீக்கியர்களுக்கும் இத்தகைய உரிமைகள் வழங்கப்படுவதை ஏற்றுக் கொண்டார். ஆனால், தாழ்த்தப்பட்டவர்களுக்குச் சிறப்புத் தொகுதிகள் வழங்குவதை ஏற்றுக் கொள்ளவில்லை. எனவே காந்தி எரவாடா சிறையில் இருந்தபடியே சாகும்வரை உண்ணாவிரதத்தை மேற்கொண்டார். இதனால் சிறப்பு வாக்காளர் கோரிக்கையைக் கைவிடும்படி சகல தரப்புகளிலிருந்தும் அம்பேத்கருக்கு அழுத்தம் கொடுக்கப்படலாயிற்று.
காந்தியின் உண்ணாவிரதத்தை 'அரசியல் ஸ்டண்ட்' என அம்பேத்கர் எள்ளி நகையாடினார். அன்றைய உயர்சாதிகளின் பத்திரிகைகள் அம்பேத்கரைத் துரோகி எனச் சாடின. அன்றுள்ள நெருக்கடி அரசியல் சூழலில் சிறப்பு வாக்காளர் தொகுதி என்ற கோரிக்கையை விட்டுக் கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. இதற்குப் பதிலாக இன்றுள்ள வடிவிலான ஒதுக்கப்பட்ட தொகுதி என்கிற நிலைமை பூனா ஒப்பந்தத்தின் மூலம் (செப்.24,1932) ஏற்றுக்கொள்ள வேண்டியதாயிற்று.
''என் முன்னால் இரண்டு வெவ்வேறான பணிகள் கடமைகள் பிரச்சனைகள் இருந்தன. மனிதத் தன்மையுடன் - மனிதப் பண்புடன் மரணத்திலிருந்து காந்தியைக் காப்பாற்றும் கடமை ஒரு புறம். பிரதமர், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்க முன் வந்துள்ள அரசியல் உரிமைகளை - அவர்களுக்குக் காப்பாற்றித் தரும் கடமை மற்றொருபுறம்.
இந் நிலைமையில் மனித நேயத்தின் கட்டளையை அறைகூவலை ஏற்க முன் வந்தேன். திரு. காந்தி மன நிறைவு அடையும் வகையில் வகுப்புத் தீர்வு மாற்றப்படுவதற்கு இணங்கினேன். இவ்வாறு உருவான உடன்பாடே பூனா ஒப்பந்தம் என்பதாகும்.''
மீண்டும் தாழ்த்தப்பட்டோர் கூட்டமைப்பு, சிறப்பு வாக்காளர் கோரிக்கையை முன் வைத்தது (செப். 23, 1944). ஆறு கோடி தாழ்த்தப்பட்ட மக்களின் வாக்குரிமையைப் பறித்த பூனா ஒப்பந்தம் ஒழிய வேண்டும் என்கிற குரலை இறுதி வரை அம்பேத்கர் ஒலித்து வந்தார். சிறப்பு வாக்காளர் தொகுதி என்ற கோரிக்கை இன்றுவரை கைகூடவில்லை. மண்டல்குழு அறிக்கைக்கான எதிர்ப்புக் குரலோடு தாழ்த்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டையும் ரத்து செய்ய வேண்டுமென்ற குரல்களும் ஆங்காங்கு வன்மையாக ஒலித்ததை நாம் மறந்து விடக் கூடாது.
அம்பேத்கார் மறைந்து இத்தனை ஆண்டுகளாகியும் தாழ்த்தப்பட்ட மக்களை மேம்படுத்த இதுவரை ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் - கட்சிகள் உருப்படியாக எதுவும் செய்யவில்லை என்பது தெள்ளத் தெளிவாகிறது. இத்தனை ஆண்டுகள் கழிந்த பின்னும் தாழ்த்தப்பட்ட மக்களில் கல்வியறிவு பெற்றவர்கள் 22 சதவீதத்தினர் தான். இந்த மக்களில் 50 சதவீதத்தினர் கூலி விவசாயிகள். நாட்டிலுள்ள கொத்தடிமைகளில் இந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வெறும் 4% மட்டுமே உள்ளனர். நாட்டில் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்களின் எண்ணிக்கை 30% ஆக இருக்க, தாழ்த்தப்பட்டோரது மக்கள் தொகையில் இது 50% ஆக இருக்கிறது. இதுவே தற்போதைய நடைமுறை.
ஆக, தாழ்த்தப்பட்ட மக்களின் அடிப்படை வாழ்வியல் உரிமைகளை நிலைநிறுத்தும் வகையில் இட ஒதுக்கீடு பயனுள்ளதாகவே இருக்கும். இந்திய அரசியல் சட்டம் கூட இட ஒதுக்கீட்டை முழுமையாக அங்கீகரிக்கிறது. இருப்பினும் இட ஒதுக்கீடு சரிவர நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. காலம் காலமாக வாய்ப்பு வசதிகள் பெற்று அதிகாரத்தில் இருந்து வரும் ஆதிக்கச் சாதியினர் தங்களின் அதிகாரத்தை வாய்ப்புகள் வசதிகள் மறுக்கப்பட்ட மக்களுக்கு அளிக்க மறுக்கின்றனர்.
ஆனாலும், தீண்டாமையும் சாதிக் கொடுமைகளும் இருக்கும் வரை இட ஒதுக்கீடும் இருந்தாக வேண்டும் என்கிற அம்பேத்கரின் சிந்தனை இன்றும் நினைவு கூரப்பட வேண்டும்.
"அமைச்சரவைக்குள் நடைபெறும் அதிகார அரசியலிலோ நிரப்பப்படாமல் உள்ள துறைகளைப் பறிப்பதற்கு நடைபெறுகின்ற போட்டிகளிலோ - நான் ஒருபோதும் பங்கு கொண்டதில்லை. நான் தொண்டு செய்வதில், அதிலும் அமைச்சரவையின் தலைமையை ஏற்றுள்ள பிரதமர், எனக்கு ஏற்ற அளவு எனக் கருதி அளித்த பதவியில் - பணி செய்வதிலேயே நம்பிக்கை கொண்டுள்ளேன். எனக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்பதை நான் புரிந்துகொள்ளவில்லை என்றால், நான் மனிதனே இல்லை.
இந்த அரசின் மீது எனக்கு அதிருப்தி ஏற்படுத்திய மற்றொரு செய்தியை இப்பொழுது குறிப்பிடுகின்றேன். அது பிற்படுத்தப்பட்ட மற்றும் தீண்டத்தகாத மக்களை இவ்வரசு நடத்தும் முறையாகும். அரசியல் சட்டத்தில், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எவ்விதப் பாதுகாப்பும் அளிக்கப்படவில்லை என்பதற்காக நான் பெரிதும் வருந்துகின்றேன். இப் பணியை, குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்ட குழு அளிக்கின்ற பரிந்துரைகளின் அடிப்படையில் அரசு மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக விடப்பட்டதாகும். அரசியல் நிர்ணயச் சட்டம் நிறைவேற்றி ஓராண்டுக்கு மேலாகி விட்டது. இதற்கென குழு அமைப்பது குறித்து அரசு இதுவரை நினைத்துக் கூடப் பார்க்கவில்லை.
தீண்டத்தகாத மக்களின் பாதுகாப்புக்கு அரசியல் சட்டத்தில் செய்யப்பட்டுள்ள சில ஏற்பாடுகள், எனக்கு நிறைவளிப்பதாக இல்லை. இருப்பினும் அரசு அவற்றைச் செயல்படுத்துவதில் கண்டிப்பைக் காட்டும் என்கிற நம்பிக்கையிலும் - அவை பயன்படும் என்கிற எண்ணத்திலும் அவற்றை நான் எற்றுக் கொண்டேன். ஆனால், தீண்டத் தகாத மக்களின் இன்றைய நிலை என்ன? நான் பார்த்தவரையில் முன்பிருந்த நிலையே நீடிக்கின்றது. பழைமை வாய்ந்த அதே கொடுங்கோன்மை, பழமையான ஒடுக்குமுறை, பழமையான பாகுபாடுகள் முன்பும் இருந்தன. இப்பொழுதும் இருக்கின்றன.''
இவ்வாறு தனது அமைச்சர் பதவியிலிருந்து விலகிய போது (11.10.1951) வெளியிட்ட அறிக்கையில் அம்பேத்கர் குறிப்பிடுகிறார். இந்தக் கசப்பான அனுபவம் இன்றும் தொடர்கிறது. இதனையே குடியரசுத் தலைவர் கே.ஆர். நாராயணன் தனது குடியரசு தின உரையில், ''இந்தியச் சமுதாயத் தளத்தில் ஒரு வகையான எதிர்ப்புரட்சி இன்று நடந்து கொண்டிருக்கிறது. தலித்துகளுக்குக் கொடுக்கப்படுகின்ற சில சலுகைகள் அவர்களுக்குத் தானமாகக் கொடுக்கப்படுவதில்லை. மாறாக அது அவர்களது உரிமை என்னும் சமுதாய நீதியைக் காக்கும் ஒரு செயல்பாடாகவே உள்ளது என்பதை நாம் மறந்து விடுகிறோம்'' என்றார்.
ஆக, அம்பேத்கர் அன்றே வலியுறுத்திய தனித்துவச் சிந்தனை, குடியரசுத் தலைவர் உரையிலும் வெளிப்பட்டுள்ளது. ''இந்தியாவில் தீண்டத் தகாத மக்களின் நிலையினைப் போன்று உலகில் வேறு எங்கேனும் ஒர் இனத்தின் நிலை இருக்குமா?'' என்று அம்பேத்கார் அன்று கேட்டதையே இன்றும் நாம் கேட்க வேண்டியுள்ளது.
தெ.மதுசூதனன் |