பத்திரிகை ஆசிரியர்களுக்கு நிர்வாகம் முழுச் சுதந்திரம் அளிக்கிறதா?
உலகம் முழுவதும் நவம்பர் 16-ஆம் தேதி பத்திரிகையாளர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. ஜனநாயக நாட்டில் பத்திரிகையின் முக்கியத்துவம் நமக்குத் தெரிந்ததுதான். ஆனால் பத்திரிகைகள் சரியான முறையில் செயல்படுகிறதா? பரவி வரும் வியாபாரத் தன்மை பத்திரிகைத் துறையையும் ஆக்கிரமித்துள்ளதா? பத்திரிகைச் சுதந்திரமும், பத்திரிகை அறமும் எந்த அளவு கடைபிடிக்கப்படுகிறது? கலாச்சாரத்தையும், மொழியையும் பெருமளவில் பரப்ப வாய்ப்புள்ள பத்திரிகைகள், மொழியைக் கையாள்வதில் கொண்டுள்ள நிலை என்ன? -ணைய இதழ்களின் வருகையை எப்படி எதிர் நோக்குகிறார்கள் ? என்ற சந்தேகங்கள் வலுவாக உள்ளன. இந்தச் சந்தேகங்களை நிவர்த்தி செய்ய சில பத்திரிகை ஆசிரியர்களை அணுகிய போது, அவர்கள் கூறிய கருத்துக்கள் தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.
“உண்மையிலேயே பத்திரிகை சுதந்திரம் இந்தியாவில் இருக்கிறது. இது நல்ல அறிகுறி. எத்தனையோ நாடுகளுக்கு நான் போயுள்ளேன். குறிப்பாகக் கிழக்காசிய நாடுகளைப் பார்க்கும் போது இந்தியாவில் இருப்பது போலக் கருத்துச் சுதந்திரமும், பத்திரிகைச் சுதந்திரமும் வேறு எங்கும் கிடையாது.
பத்திரிகையின் போக்கு பொதுவாக ஆரோக்கியமாகத் தான் இருக்கிறது. பத்திரிகைகள் விமர்சன நோக்கோடு செயல்படுகின்றன. சென்ற ஆட்சியில் இத்தனை சுதந்திரமாகச் செயல்பட முடியவில்லை. ஆனால் இப்போது எந்த அச்சுறுத்தலும் இல்லை. எனக்கென்று தனியாக எந்த அரசியல் சார்பும் கிடையாது. பா.ஜ.க. ஆட்சி அமைக்கத் தகுதியற்றது என நாங்கள் முகப்புக் கட்டுரை கூட வெளியிட்டோம். ஆனால் நிர்வாகத்திற்கேற்ப சில பத்திரிகைகள் செயல்படுகின்றன என்பதும் உண்டு.
பத்திரிகைத் துறையில் உள்ள குறைபாடு என்று சொன்னால், அதில் தொழில் முறை அணுகுமுறையில்லை (professionalism). மொழி, கட்டமைப்பு, இலக்கணம், வடிவமைப்பு போன்றவற்றில் இன்னும் மாற்றம் ஏற்பட வேண்டும்.
மொழி என்று எடுத்துக் கொண்டால் தூய தமிழ் பயன்படுத்துவது பழமைவாதம். சமூக சேவைக்காக யாரும் பத்திரிகை நடத்துவது இல்லை. அதுவும் ஒரு வியாபாரம். எப்படி வாசகர்களைக் கவர்வது என்று தான் நினைக்கிறார்கள். ஆங்கிலச் சொற்களைச் சேர்ப்பதால் தமிழுக்குப் பெரிய தீங்கு எதுவும் வந்துவிடாது.
இணைய இதழ்களை மிகச் சிலருக்குத்தான் பயன்படுத்தக் கூடிய வாய்ப்புக் கிடைக்கிறது. வெளிநாட்டுக்கு மக்களுக்கு இணையம் நல்ல வரப் பிரசாதம். இணையத்தில் இடக் கட்டுப்பாடு கிடையாது. “ஆங்கிலப் பத்திரிகையின் போக்கும், தமிழ்ப் பத்திரிகையின் போக்கும் வேறுபாடுடையது. ஆங்கிலப் பத்திரிகைகளில் பொழுது போக்கு அம்சம் குறைவாக உள்ளது. மொழிவாரியான பத்திரிகைகளில் பொழுதுபோக்கு அம்சம் அதிகம்.
தொலைக்காட்சியில் கிடைக்கும் பொழுது போக்குத் தன்மையும் பத்திரிகை வாசிக்கையில் கிடைக்கும் பொழுது போக்குத் தன்மையும் வேறு வேறு. இதை உணராமல் பத்திரிகை, தொலைக்காட்சியுடன் போட்டி போடுவதால் தோற்றுப் போகிறது. தொலைக்காட்சி உடனுக்குடன் செய்திகளைத் தர முடியும். ஆனால் விரிவான, ஆழமான, அலசல்களை பத்திரிகைகள் மட்டும்தான் தர முடியும் என்பது பத்திரிகையின் பலம். இதைப் புரிந்து கொண்டு பத்திரிகைகள் செயல்பட வேண்டும்.
இந்தியாவைப் பொருத்த வரை பத்திரிகைச் சுதந்திரத்துக்குப் பெரிய ஆபத்து இல்லை. பத்திரிகைச் சுதந்திரத்தை வாசகர்கள் ஆதரிக்கிறார்களா என்பதையும் பார்க்க வேண்டும். சமூகத்தில் சிலர் கெளரவமாகத் தங்கள் பெயரை நிலைநாட்டியிருப்பார்கள். ஆங்கிலத்தில் “ஹோலி கவ்”(holy cow) என்று ஒரு வார்த்தை சொல்வார்கள். அவர்களைப் பற்றி நீங்கள் எளிதில் எதுவும் எழுதிவிட முடியாது. பத்திரிகைச் சுதந்திரம் முளையில் கட்டிய கயிறு போலத்தான். கயிற்றின் நீளம்தான் சுதந்திரம். நீளத்தை அதிகரிக்க முயற்சிகள் நடந்து கொண்டிருக்கும்.
மொழி எப்போதும் தேக்க நிலையில் இருப்பதில்லை. முதலில் தமிழுக்கு வரிவடிவமே இல்லை. காலப் போக்கில் சொல் மாறுகிறது. பயன்படுத்துகிற விதம் மாறுகிறது. முன்பு புலவர்கள் சிறு கூட்டமாக இருந்தார்கள். அவர்கள் பயன்படுத்தும் மொழி கொச்சை என்று சொல்லப்பட்டது. பெறுவாரியான விஷயமாக மாறும்போது அந்த நிலமை மாறிவிடுகிறது.
தொலைக்காட்சியும் புத்தகமும் கலப்பு மணம் செய்து பெற்ற குழந்தைதான் இணைய இதழ். இவை இரண்டின் வடிவமும் இணைய இதழில் கலந்திருக்கிறது. ஊடாட்டம் இணைய இதழில் சாத்தியம். எந்த அளவு அதை திறமையாகப் பயன்படுத்துகிறார்கள் என்பதைப் பொருத்து அதன் வெற்றி இருக்கிறது”.
அவுட்லுக் பத்திரிகை ஆசிரியர் பன்னீர் செல்வம்
“இந்திய அரசியல்வாதிகளைப் போலத்தான் இந்தியப் பத்திரிகைகளும். சுதந்திரப் போராட்ட காலகட்டத்தில் மரியாதைக்குரியவர்களாக இருந்தார்கள். அவசர கால நிலையில் அரசுக்கு எதிரான வாதங்களை எழுதி ஜெயப்பிரகாச நாராயணன் பத்திரிகைகளுக்கு மரியாதை சேர்த்தார். அவசர கால நிலை முடிந்த பிறகு பத்திரிகையாளன் முகமற்றவனாகி விடுகிறான்.
ஆனால் எண்பதுகளில் பத்திரிகையாளர்கள் பிரமுகர்களாக மாறுகிறார்கள். நேரடியாக அரசியலில் நுழைந்து சட்டமன்ற உறுப்பினராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருக்கிறார்கள். அருண் ஷோரி, ஆர்.கே.மிஷ்ரா, எஸ்.கே.துவா, கஞ்சன் குப்தா, சுதீந்திர துல்கர்னே, ராஜீவ் சுக்லா, துக்லக் ஆசிரியர் சோ , ஆகியோர்களை உதாரணமாகச் சொல்லலாம்.இவர்களெல்லாம் தேர்தலில் போட்டியிடாமல் வந்தவர்கள். பத்திரிகையாளர்கள் கண்ணாடி போல விஷயங்களைப் பிரதிபலிக்க வேண்டியவர்கள். ஆனால் அவர்களே கட்சிகளோடு இணைந்து விடுகிறார்கள்.
சமீபகாலமாகப் பத்திரிகையில் ஏற்பட்டிருக்கும் புதிய போக்கு பிரத்யேகப் படுத்தல். (specilization). விளையாட்டுச் செய்திகளுக்கு, பெண்களுக்கு, வியாபாரச் செய்திகளுக்கு எனத் தனி இதழ்களாகவோ, பத்திரிகையாகவோ வெளி வருகின்றன. குறிப்பிட்ட குழுக்களுக்கான செய்திகளுக்காகப் பத்திரிகைத் துறை செயல்படும்போது மற்ற செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. தனக்கிருக்கிற கவலைகளிலிருந்து பத்திரிகை விலகிக் கொள்கிறது. குதிரைக்குப் பட்டை கட்டுவது போன்ற விஷயத்திற்குப் பெயர்தான் பிரத்யேகப் படுத்தல். நீண்ட காலமாகப் பத்திரிகையிலிருந்த எங்களுக்குப் பிரத்யேகப்படுத்தல் பயத்தைத் தருகிறது.
நினைக்கிற பார்வையாளர்களுக்கு (target audience) வெளியே உள்ளவர்களைப் பற்றி பத்திரிகைகள் கவலை கொள்வதில்லை. உதாரணமாக இணைய இதழ்களைச் சொல்லலாம். ஏழை, எளிய மக்கள் மட்டுமில்லாமல் விளிம்பு நிலை வாழ்க்கை வாழ்பவர்களும் பத்திரிகையின் பார்வையிலிருந்து வெளியே போய் விடுகிறார்கள்.
பத்திரிகைச் சுதந்திரத்துக்கு அரசிடமிருந்து எந்த அச்சுறுத்தலும் இல்லை. பத்திரிகையாளர்களின் நேர்மையின்மை தான் மிகப் பெரிய அச்சுறுத்தல். பணம் வாங்குவது, தெரிந்தே பொய் சொல்வது, தெரிந்தே தவறானவர்களுக்கு வக்காலத்து வாங்குவது, தன்னுடைய அரசியல் கொள்கைகளுக்காகச் சீரழிந்த அரசியலுக்கு வக்காலத்து வாங்குவது போன்றவைதான் பத்திரிகைச் சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல்.
நிர்வாகத் துறையிலிருந்து பத்திரிகைச் சுதந்திரத்தைப் பார்க்கும் போது, விளம்பரத் துறைக்கும், ஆசிரியர் குழுவுக்கும் இடையில் நிலவி வந்த அறுதியிட்ட உறுதியான வேலி இப்போது உடைக்கப்பட்டு விட்டது. வேலி உடைபடுவதுதான் மிகப் பெரிய அச்சுறுத்தல்.
இவை தவிர அரசு மூலமாக வரும் அபாயம் மிக மிகக் குறைவு.
பத்திரிகைகளில் மொழி எளிமையாக இருக்க வேண்டும். தந்தி, நக்கீரன் போன்ற பத்திரிகைகளில் எளிய வாக்கிய அமைப்பு, சிறந்த சமூகப் பணி செய்கிறது. சாதாரண மக்கள் தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். இந்த இடத்தில் இலக்கிய அளவுகோளை வைப்பது வெறும் மேட்டுக்குடி அகங்காரமாகும். பல்வேறு பொருளாதாரத் தட்டுகளில் இந்திய மக்கள் வாழும் வரையில் பல்வேறு சொல்லாடல்கள் வெகு ஜன ஊடகங்களில் இருந்தே தீரும்.
டொமீன் குப்பத்து மீனவர்களின் மொழியை டொமீன் குப்பத்து மீனவர்கள் பயன்படுத்தும் போது அது எளிமையான மொழி. அதை இசை அரங்கத்தின் சபாநாயகர் பயன்படுத்தினால் அது கொச்சையான மொழி.
தமிழ் மொழிக்கு அதிகத் தீங்கு செய்தது ஆங்கில வழி பாடம் கற்பிக்கும் பள்ளிகளும், தமிழ்ச் சிறு பத்திரிகையும் என்று சொல்லலாம். பள்ளிகள் செய்த தீங்கு புறவயமான தீமை. அவற்றை எதிர் கொள்ள முடியும். களையக் கூட முடியும். ஆனால் சிறு பத்திரிகைகள் செய்தவை அகவயமான தீங்கு.
இணைய இதழ் வந்த போது அது ஜனநாயகத்தின் வெற்றி என்று தான் நினைத்தோம். ஆனால் அதுவும் வியாபாரமாகி விட்டது. ஆரம்பக் காலத்தில் பல்கலைக் கழக மாணவர்கள், மனித உரிமைக் கழக ஆர்வலர்கள் தான் இணைய இதழை நடத்தினார்கள். ஆனால் பத்திரிகைகளும் இப்போது இணைய இதழ் ஆரம்பித்துவிட்டன. நிறையத் தகவல்களும் மனிதனைச் செயலிழந்தவனாக்கி விடுகிறது. தற்போது இணையத் தளங்கள் பெரிய பணக்காரர்களுடையதாகி விட்டது. E-zine என்ற நிலையிலிருந்து portal (வியாபார அமைப்பாக) மாறி வருகிறது. முழு அளவில் மாற்றம் ஏற்பட்டால் இணையத் தளங்கள் என்னவாகும் என்ற கேள்வியுள்ளது”.
“தேடிப் பிடித்துப் படிக்க வேண்டும் என்ற விழிப்புணர்ச்சி மக்களிடம் வந்திருக்கிறது. செய்திகளுடைய பலத்தைத் தெரிந்து வைத்திருக்கிறார்கள். பொழுதுபோக்குப் பத்திரிகைகளின் வளர்ச்சி நின்று விட்டது. தீவிரமான பத்திரிகைகள் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகரித்துள்ளது. துறை சார்ந்த பத்திரிகைகள் வந்து கொண்டிருக்கின்றன.
இருபது வருஷத்துக்கு முன்னால் வாசகர்கள் எண்ணிக்கை குறைவு. படிப்பறிவுள்ளவர்கள் குறைவு. ‘தமிழில் கம்ப்யூட்டர்’ போன்ற இதழ்களைக் கொஞ்ச நாளுக்கு முன்னால் நினைத்தே பார்க்க முடியாது. கணனி துறையைப் பொருத்தவரை மக்களிடம் ஆர்வம் வந்துள்ளது.
சமுதாய எண்ணம் இல்லாமல் பத்திரிகையாளர்கள் வர மாட்டார்கள். இப்போது இணைய இதழ்கள் வந்துள்ளன. மனதில் உள்ளதைப் பதிவு செய்யும் வாய்ப்பைப் பத்திரிகையாளர்கள் அடைந்துள்ளார்கள்.
பத்திரிகைத் துறையில் நவீனத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் வாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும்.
பத்திரிகையில் மொழி புரியும்படி இருக்க வேண்டும். நல்ல தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தலாம். ஆங்கிலச் சொற்களை வலிந்து திணித்து எழுதுவதைத் தவிர்க்கலாம். ஆங்கிலச் சொற்களை நேரடியாக மொழிபெயர்த்து எழுதுவதை விட வட்டார மொழியில் அதற்கான சொற்களை எடுக்க முடியும்.
பொதுவாகப் பத்திரிகையாளர்கள் தங்களை மேம்படுத்திக் கொள்வதில்லை. ஆசிரியர் பதவி வந்ததும் படிப்பதை நிறுத்தி விடும் ஆசிரியர்களைப் போல.
எல்லாச் செய்திகளையும் சுவையாகக் கொடுக்க முடியும் . அதற்கான முயற்சி தேவை.
இன்று பத்திரிகையாளனுக்குச் சம்பளம் கூடியிருக்கிறது. வாய்ப்புகளும் அதிகரித்துள்ளது”.
“சுதந்திரப் போராட்ட காலத்திலும் சரி, அதன் பின்னரும் சரி வார, மாத இதழ்களின் விற்பனைக்கு அடிப்படையான பலம் பெண்களின் விருப்புதான். செய்திப் பத்திரிகைகள் விற்பனை ஆண்களின் விருப்பு வெறுப்புகளை அடிப்படையாகக் கொண்டவை.
இன்று பெண்கள் - ஆண்கள் என்ற வித்தியாசம் இல்லாமல் எல்லோரும் தொலைக்காட்சியில் மூழ்கிக் கிடக்கின்றார்கள். பெண்கள் முன்பு போல பத்திரிகைகளை வாங்கிப் படிப்பதில் ஆர்வம் காட்டாததால், மாத, வார இதழ்களின் விற்பனை சரிந்தபடியே இருக்கிறது. அவர்களும் முன்பு போல் செய்தித் தாள்கள், நாளிதழ்கள் வாங்க அவ்வளவாக விருப்பம் காட்டவில்லை. செய்திகளுக்கு இருந்த முக்கியத்துவம் குறைந்து போய், அந்த இடத்தை வதந்திகள் மெல்ல மெல்ல வளர்ச்சி பெற்று ஆக்கிரமித்துக் கொண்டுவிட்டன. அன்று நேரு என்ன சொன்னார்? பெரியார் சொன்னதற்கு ராஜாஜி என்ன பதில் சொல்கிறார். அண்ணா காங்கிரசாரின் குற்றச்சாட்டுகளுக்கு அளிக்கும் மதிப்பு என்ன என்று தெரிந்து கொள்வதில்தான் ஆண் வாசகர்கள் ஆர்வம் காட்டினார்கள்!
இன்று! அந்தத் தலைவர் எப்படி இவ்வளவு சொத்துச் சேர்த்தார்? இந்தத் தலைவருக்கு எப்படி இவ்வளவு பங்களாக்கள் வந்தன? ‘அவருக்கும் இவருக்கும் லடாய்’, ‘அந்தத் தலைவரும், இந்தத் தலைவரும் சண்டை போட, சட்டை கிழிந்தது’ - என்பன போன்ற அக்கப் போர்ச் சப்தங்களைத் தெரிந்து கொள்வதில்தான் பெரும்பாலான வாசகர்கள் போட்டி போடுகிறார்கள். அந்த மாதிரி விஷயங்களுக்குக் கண், காது, மூக்கு எல்லாம் வைத்து, பொட்டு வைத்து, பூ வைத்து அலங்காரம் செய்து நிஜம் போலவே வதந்திகளைச் சிருஷ்டிக்க எந்தப் பத்திரிகைக்குத் திறமை அதிகம் இருக்கிறதோ அந்தப் பத்திரிகைக்குத்தான் வாசகர்கள் ஆதரவு அதிகம் இருக்கிறது!
இந்த மனோபாவ மாறுதலை எல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், ‘அந்தக் காலம் போல இந்தக் காலம் இல்லை. எல்லாமே கெட்டுப் போச்சு’ என்று பொத்தாம் பொதுவாகக் குற்றச்சாட்டுகளை அள்ளி விடுவதில் என்ன நியாயம் இருக்கிறது?
‘மக்கள் எதை விரும்புகிறார்களோ அதைத்தான் நாங்களும் தர முடியும். எங்களை மட்டும் குறை சொல்லி என்ன பயன்?’
எது தரமானது? எது தரமற்றது என்பதற்கு - இந்தியாவில் என்ன அளவுகோல் இருக்கிறது?
உள்ளூர் தொலைக்காட்சியில் - ஒரு விளம்பரத்தில் ஆபாசம் இருக்கிறது என்றால் கூட தடுத்து நிறுத்தி விடுகிறார்கள். அப்புறம் அந்தக் குறிப்பிட்ட விளம்பரத்தைப் போட முடியாது. ஆனால் வெளிநாட்டினர் நடத்தும் டி.வி.யில் பெண்கள் மேலாடை இல்லாமல் வரும் காட்சிகள், அரைகுறை ஆடை அணிந்த பெண்கள் - பேஷன் ஷோ என்ற பெயரால் அணிவகுத்து வருகிறார்கள். மியூசிக் என்ற பேரால் ஆட்டம் போடுகிறார்கள். அதை யாராவது தடுக்கச் சொல்கிறார்களா? அதற்குத் தடை வருகிறதா? ‘தடுக்கப்படும், தடுக்கப்படும்’ என்ற அறிவிப்புத்தான் அரசுத் தரப்பிலிருந்து தொடர்ந்து வெளிவருமே தவிர, தடை வருவதற்கான அடையாளம் கூடத் தெரியாது!
பழம்பெரும் எழுத்தாளர் சாவி தமது பத்திரிகையில் நகைச்சுவைத் துணுக்கு அடிப்படையில் வெளியிட்ட அட்டைப் படத்துக்காக அவரை ஆபாசப் படம் வெளியிட்டதாகக் கைதே செய்தார்கள்.
பத்திரிகைகள்-சினிமாக்கள்-தொலைக்காட்சிகள் எதுவாக இருந்தாலும் அவை அந்தந்தக் காலத்து ரசிகர்களின் அல்லது வாசகர்களின் ரசனையைப் பிரதிபலிக்கும் வகையிலேயே இருக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகியிருக்கிறது. அதற்காக மக்கள் விரும்புகிறார்கள் என்ற போர்வையில், நல்லன அல்லாதவைகளை - சமூகத்துக்கு கேடு பயக்கும் விஷயங்களைப் பரப்ப முன் வருவதையும் யாரும் ஆதரிக்க மாட்டார்கள்.
சினிமாக்களில்-தொலைக்காட்சிகளில்-நல்லதும்-கெட்டதும் கலந்து இருப்பது போலவே பத்திரிகைகளிலும் நல்லதே அதிகமிருப்பினும் வியாபார நோக்கம் கருதி, சில கெட்டதுகளையும் சேர்க்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கிறார்கள் பத்திரிகை முதலாளிகள்.
தொலைக்காட்சிக்குப் பெரிய அளவில் விளம்பர வருமானம் இருக்கிறது. என்றாலும் அவர்களாலும் கூட முழுக்க முழுக்க நல்லதையே ஒளிபரப்புவோம் என்று துணிய முடியவில்லை. பத்திரிகைக்கு விளம்பர வருமானம் குறைவு. தொலைக்காட்சிகளோடு ஒப்பிட்டால் மிக மிகக் குறைவு. அவர்கள் மட்டும் முழுக்க முழுக்க நல்லதையே தரவேண்டும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்.
கடைசியாக ஒரு கேள்வி! சிறந்த சினிமாக்களுக்கு ஆண்டுதோறும் அரசு, விருதும் பரிசும் வழங்கிப் பாராட்டுகிறது. தனியார் நிறுவனங்களும், கலாச்சார அமைப்புகளும் பரிசுகள் தந்து பாராட்டுகின்றன.
சிறந்த சினிமாவுக்கு மட்டுமல்ல - சினிமா நடிகர்கள், நடிகைகள், கதாசிரியர்கள், கவிஞர்கள், இசையமைப்பாளர்கள் என்ற சினிமா சம்பந்தப்பட்ட எல்லாக் கலைஞர்களுக்கும் ஆண்டுதோறும் விருது வழங்கிப் பாராட்டுகிறார்கள்.
சிறந்த பத்திரிகைகள், சிறந்த ஆசிரியர்கள், சிறந்த நாவலாசிரியர்கள், சிறந்த சிறுகதை ஆசிரியர்கள், சிறந்த ஓவியர்கள், சிறந்த லே அவுட் ஆர்ட்டிஸ்டுகள் என்று பத்திரிகைகளுக்கும், பத்திரிகை சம்பந்தப்பட்ட கலைஞர்களுக்கும் விருது வழங்கி, பரிசு கொடுத்துப் பாராட்ட யாரும் முன் வருவதில்லையே, ஏன்?
பத்திரிகைகளின் தரம் இன்னும் உயர வேண்டும் என்று ஆசைப்படுகிறவர்கள் எல்லாம், மக்களுக்குச் செய்திகளை விரிவாகத் தந்து, கதை, கட்டுரை, கவிதை, ஓவியம் மூலம் விழிப்புணர்வை உண்டு பண்ணும் பத்திரிகைகளைத் தேர்ந்தெடுத்துப் பாராட்டுவதின் மூலம், தரம் உயர ஊக்கமும், ஒத்துழைப்பும் தரலாமே!”.
தொகுப்பும் - படங்களும் - கிருஷ்ணப்ரியா |