தமிழ் சினிமா மாமியார்கள் இரண்டு வகை. முதல் வகை மாமியார்கள், வழக்கமானவர்கள். அதாவது எல்லோருக்கும் அறிமுகமான, மருமகளைக் கொடுமை செய்யும் உத்தேசமுள்ளவர்கள். இந்த வகை மாமியார்- மருமகள் போராட்டம் குறித்து தினசரிகளிலும், வார- மாத இதழ்களிலும் பக்கம் பக்கமாக எழுதிக் கொண்டிருக்கிறார்கள். இந்த மாமியார்களுக்குச் சினிமாவிலும் ஒரு நிரந்தரத் தேவை உண்டு. ‘மதர் தெரசாவே மாமியாராக வந்தாலும் மருமகளிடம் சண்டை போடாமல் இருக்க முடியாது’ என சமீபத்திய படமொன்றில் வசனம் இடம் பெற்றபோது சரியான கைதட்டல்.
அடுத்த வகை மாமியார்கள்தான் வித்தியாசமானவர்கள். இவர்கள் மருமகனை வம்புக்கு இழுப்பவர்கள். அல்லது அடங்காப்பிடாரி மாமியாரை அடக்க ஒரு மருமகன், திட்டமிட்டு வீட்டுக்குள் நுழைவார். படம் முழுக்க ஒருவர் திட்டத்தை ஒருவர் முறியடித்துக் கொண்டிருப்பார்கள். தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமா முழுவதிலுமே இப்படி ஒரு சித்திரிப்புக்குத் தனி மவுசு உண்டு. இந்த இரண்டிலும் சேராத நொந்து போன மாமியார்கள் கொஞ்சம் உண்டு. கண்ணாம்பாள், பண்டரிபாய் போன்றவர்களை இத்தகைய வேடங்களில் கண்டிருக்கக் கூடும்.
இதே போல் மருமகனை வம்பிழுத்து வாங்கிக் கட்டிக் கொள்ளும் மாமியார் பாத்திரங்களுக்காகவே காலம்தோறும் மாமியார்கள் உருவாகி வருவது சுவாரசியமான ஆச்சர்யம். ‘பூவா தலையா?’- ‘பணமா பாசமா’ எஸ். வரலட்சுமி, ‘பட்டிக்காடா பட்டணமா’ சுகுமாரி துவங்கி ‘மாப்பிள்ளை’ ஸ்ரீவித்யா, ‘மாமன்மகள்’ ஜெயசித்ரா, ‘சகலகலா வல்லவன்’ புஷ்பலதா, ‘வான்மதி’ வடிவுக்கரசி வரை பல மாமியார்களைப் பட்டியலிடலாம். இவர்களிடம் மாட்டிக் கொண்டு மல்லுக்கு நிற்காத கதாநாயகர்களே இருக்க முடியாது.
சிவாஜி, ஜெமினி கணேசன், ஜெய்சங்கர், கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, அஜீத்குமார் போன்ற பெரிய நட்சத்திரங்களே தலைக்கு இரண்டு மாமியாரையாவது அடக்கியிருப்பார்கள். எம்.ஜி.ஆர். இந்த விஷயத்தில் பெரிய அளவில் சிக்கிக் கொள்ளாததற்கு இப்படியொரு காரணம் இருக்கலாம். தாய்க் குலத்தை மோசமாகச் சித்திரிப்பதன் மூலம், தான் ஏற்படுத்தி வைத்திருக்கும் இமேஜ் குலைந்துவிடக் கூடும் என்று நினைத்திருப்பார். அல்லது இயல்பாகவே மாமியார்களிடம் மல்லுகட்டும் கதைகளில் நடிக்கும் வாய்ப்பு கிட்டுவதற்கு முன் முதல்வராகி விட்டிருக்க வேண்டும். (சின்ன அளவில் மாமியாரிடம் மோதியிருக்கிறாரோ என்னவோ... கட்டுரையின் நோக்கம் எம்.ஜி.ஆரின் மாமியார்கள் பற்றியதல்லவே!) குறிப்பிட வேண்டிய அம்சம் ஒன்று உண்டென்றால், பெரும்பாலும் எம்.ஜி.ஆர். படங்களில் படம் நெடுக கதாநாயகி இவரைக் காதலித்துக் கொண்டிருப்பார். படம் நிறைவடையும் வேளையில் திருமணம் நிகழும். அதனால் கூட எம்.ஜி.ஆருக்கு மாமியாரை அடக்கியாளும் பாக்கியம் இல்லாமல் போயிருக்கலாம்.
மாமியார்களுக்கும் மருமகன்களுக்கும் இடையில் இத்தனை பெரிய விரோதம் வருவதற்கு என்ன காரணம் என்பது சினிமா கதாசிரியர்களுக்கே வெளிச்சம். சில வங்கி ஆண்டு விழாக்களின் போதுதான் இப்படியான மிரட்டும் மனைவிக்குப் பயந்து நடுங்கும் கணவன் கதாபாத்திரத்தை உருவாக்கி கிச்சு கிச்சு மூட்டுவார்கள். பெண்களை அவர்களின் இயல்புகளுக்கு மாறாகச் சித்திரிப்பதில் ஒருவகை நகைச்சுவை எதிர்பார்ப்பு ஏற்பட்டு விடுவது இதற்கு ஒரு காரணம் ‘பாட்ஷா’ படத்தில் நாடே அஞ்சும் அஞ்சாநெஞ்சனான ரஜினிகாந்தைப் பயந்தாங்கொள்ளியாக நாடகமாட விடுவதன் மூலம் ஏற்படும் விறுவிறுப்பான எதிர்பார்ப்புக்குச் சற்றும் குறைந்ததில்லை இது. இது திரைக்கதை உத்தியாகக் கருதப்பட்டால் அதனால் யாருக்கும் தொல்லை இல்லை என்று விட்டுவிடலாம்.
ஆனால் பெண்கள் நாளுக்கு நாள் அடாவடித்தனமாக மாறி வருகிறார்கள் என்பதைப் போலவும் அதை இன்றே களைந்தெறிய வேண்டியிருப்பது போலவும் ஒரு கருத்தோட்டத்தை ஏற்படுத்தி, அதை நம்ப வைத்துக் கொண்டும் இருப்பதில்தான் நாம் கொஞ்சம் பதற வேண்டியிருக்கிறது. துப்பாக்கியுடன் பாய்ந்து வரும் பத்து இருபது ரவுடிகளை ஒரே ஒரு கதாநாயகன் பந்தாடுவதைப் போல இதையும் உயர்வு நவிற்சியாக நினைத்து ரசித்துவிட்டுப் போக முடியாதே... வில்லன்களைக் கதாநாயகன் பந்தாடுவதும் வில்லன்களால் பந்தாடப்படுவதும் பத்து நிமிட அடிதடிக் காட்சி மட்டுமே. பெண்கள் ஆண்களின் அடிமைப்பிடியில் இருந்து மீண்டே ஆக வேண்டும் என்பதற்கு நூற்றாண்டு காலப் போராட்டப் பின்னணி உண்டு.
பெண்கள் அடக்கமாக இருக்க வேண்டும் என்பதுதான் முன்னணி நடிகர் ரஜினிகாந்தின் நிரந்தர பிரசாரமாக இருக்கிறது. இது ஜெயலலிதாவைத் தாக்குவதற்காகக் கையாளும் ஒருவகை பாணி. என்ன செய்வது இதனால் பாதிக்கப்படுவது ஒட்டுமொத்தத் தாய்க்குலமும்தான். மிகைப்படுத்துதல் என்ற போர்வையில் நடக்கும் அடிமைத்தனத்தின் அடையாளம் இது. சினிமாக்காரர்கள் இதைத் தெரியாமல் செய்வதாக இருந்தால், மக்கள் ரசிக்கிறார்கள் நாங்கள் படம் எடுக்கிறோம் என்று காரணம் கூறக்கூடும். பல விஷயங்களில் சினிமா இயக்குநர்களுக்குச் சமூகப் பார்வை இல்லாமல் போனது போலவே இதிலும் இப்படியான ஆபத்து தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதை மக்கள் ரசிக்கிறார்கள் என்பது அறிவுக் குருட்டுத்தனம். சில நேரங்களில் இத்தகைய படங்களுக்கு ‘பெண்கள் கூட்டம்’ அதிகமாக இருப்பதாகவும் விளம்பரங்கள் வருகின்றன. அதனாலேயே அந்தக் கருத்துகளை ஆதரிக்கிறார்கள் என்று பொருளல்ல. ‘ஆட்டுக்கார அலமேலு’ படம் அதிக நாள்கள் ஓடியதால் மக்கள் ஆடுகளை புத்திசாலிகளாக நம்பத் தொடங்கிவிட்டார்கள் என்பதைப் போலத்தான் இதுவும். நையாண்டித் தோரணங்களை மக்கள் ரசிப்பார்கள், பின்பற்ற மாட்டார்கள். எனவே, சினிமாக்காரர்களே மாமியார்கள் விஷயத்தில் இந்த மாமியார்கள் தினத்தில் இருந்தாவது அக்கறையாக இருங்கள்.
அக்டோபர் 23 ஆம் நாள் உலக மாமியார்கள் தினமாகக் கொண்டாடப் படுகிறது.
தமிழ்மகன் |