மதச்சார்பின்மை சனநாயகம் வேண்டும்
கீற்று : சுழி : 1

''பூர்வீகத்தில் தாங்கள் இந்துக்கள் என்ற கருத்தையும் பிற மதங்களின் கருத்துக்களுக்கு மதிப்பளிக்கும் தன்மையையும் முசுலீம்களும், கிறித்தவர்களும் ஏற்றுத் தேசிய நீரோட்டத்தில் இணைய வேண்டும்.

ஸ்ரீ ராமபிரான், ஸ்ரீ கிருஷ்ணபகவான் ஆகியோருடைய ரத்தம்தான் தங்களுடைய நரம்புகளில் ஓடிக் கொண்டிருக்கிறது என்பதை முசுலீம்கள் ஒப்புக்கொள்ள வேண்டும். அன்னியப் படையெடுப்பாளர்களான கஜினி முகமது, தைமுர்லாங், பாபர், ஒளரங்கசீப் அல்லது புனித தாமஸ் போன்ற மத போதகர்களைத் தங்களுடைய சகோதரர்கள் என்று சொந்தம் கொண்டாடக் கூடாது. முசுலீம்களின் முன்னோர்களில் ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் அல்ல. எனவே, முசுலீம்களின் முன்னோர்களில் பெரும்பாலோர் இந்தியர்கள்தான்.

இந்திய தேசியப் பொது நீரோட்டத்துக்கு வெளியே கிறித்தவ குருமார்கள் தமது விசுவாசத்தை வைத்திருக்கிறார்கள். அனைத்து மதங்களும் சமமானதல்ல. கத்தோலிக்கக் கிறித்தவர்களுக்கு வெளியே இரட்டிப்பு இருக்க முடியாது என்ற போப்பின் அறிக்கை கண்டனத்துக்குரியது. இது போன்ற கருத்துக்களில் நம்பிக்கை கொண்டுள்ள கிறித்தவ அமைப்புகளை இந்தியாவில் பணியாற்ற அனுமதிக்க முடியாது. மேற்கத்திய வல்லரசுகளின் படையணிகளில் ஒன்றுதான் தேவாலயம்.

எனவே, இந்தியக் கிறித்தவர்களும் கத்தோலிக்கத் தலைமையிடத்தின் ஏற்க முடியாத கருத்தை உதறித் தள்ளிவிட்டு அதனுடன் உள்ள உறவைத் துண்டித்துக் கொள்ள வேண்டும். இந்தியாவின் தேசியப் பாதுகாப்புக்காக இந்திய மயமாக்கப்பட்ட சுதேசி தேவாலயம் மிக மிக அவசியமாக உள்ளது. தேவாலயத்துக்கு வெளியேயும் கூட ரட்சிப்புக்கு வழியுண்டு என்பதைக் கிறித்தவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்.''

[- ஆக்ரா அக். 25, ராஷ்ட்ரீய சுயம் சேவக் சங்கத்தின் 77-ஆவது ஆண்டு விழாவில் மூன்று நாள்கள் நடந்த தேசியப் பாதுகாப்பு முகாமில் அதன் தலைவர் குப்பஹள்ஸி சீதாராமையா சுதர்சனின் நிறைவுரை]

கீற்று : சுழி : 2

''அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதைத் தவறு என்று கூற முடியாது. பாபர் மசூதி இடிக்கப்பட்ட முறைதான் தவறானது. ஆனால், கடந்த முப்பதாண்டு காலமாக இருந்து வந்த பிரச்சனை, மசூதி இடிக்கப்பட்டதும் அமைதியாகி விட்டது.

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அமைச்சர்கள் யாவரும் பதவி விலகத் தேவையில்லை.

பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினம் வெற்றி நாளாக விஸ்வ இந்து பரிஷத் கொண்டாடுவதும் துக்க நாளாக முசுலீம்கள் அனுசரிப்பதும் தவறானது. மசூதி இடிக்கப்பட்டது வருத்தமானதுதான். அதற்காக அதைத் தொடர்ந்து நினைவுபடுத்த வேண்டிய அவசியமில்லை.''

[27.11.2000 காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பத்திரிகையாளர்களுக்குக் கொடுத்த பேட்டியில்]

கடந்த ஐம்பது ஆண்டுகளில் இந்தியாவில் மதச்சார்பற்ற சனநாயகம் என்பது அவ்வப்போது தடுமாறினாலும் ஒருவாறு நிலை நிறுத்திக் கொண்டுள்ளது. ஆனால், இனி தொடர முடியுமா என்பதில், சமீபத்திய நிகழ்வுகள் சந்தேகத்தைப் பலமாக எழுப்பியுள்ளன. சமூக, அரசியல் கலாசாரத் தளங்களில் 'இந்து மத மீட்பு வாதம்' முன்னெப்போதுமில்லாத வகையில் பலமாக வேரூன்றி வருகிறது.

ஏனைய சிறுபான்மையின மதங்கள் மீதான தாக்குதல்கள் வெளிப்படையாகவே இடம் பெறத் தொடங்கிவிட்டன. நிறுவனமயப்பட்ட தாக்குதல்கள் அரசு அங்கீகாரத்துடன் முனைப்படைவதற்கான நிலைமைகள் கனிந்து வருகின்றன.

நவீன இந்தியா என்ற கருத்தோட்டத்தின் மையச்சரடாக மதச்சார்பின்மை என்னும் கருத்தோட்டம் வலுவாகவே உள்ளது. ஆனாலும், மதச்சார்பின்மை என்பது வெறும் சடங்கு சம்பிரதாயமான முழக்கமா? என்னும் நிலையும் தற்போது ஏற்பட்டுள்ளது.

பிரிட்டிஷாரிடமிருந்து இந்தியா பிளவுபடுத்தப்பட்டபோது பாகிஸ்தான் ஒரு இஸ்லாமியக் குடியரசாக இருக்கத் தீர்மானித்தது. அதே நேரத்தில் இந்தியா மதச்சார்பற்றதொரு நாடாக இருப்பதற்கான அரசியலமைப்புச் சட்டத்தை ஏற்றுக் கொண்டது. இது உண்மையிலேயே வேறுபட்ட தன்மையை நமக்கு உணர்த்தி நிற்கிறது. பாகிஸ்தான் அரசின் தலைவராக ஒரு முசுலீம்தான் இருக்க வேண்டுமென்ற நிபந்தனையை விதிக்கின்றது அதன் அரசியலமைப்புச் சட்டம். ஆனால், இந்தியாவில் அத்தகைய நிபந்தனைகள் எதுவும் விதிக்கப்படவில்லை, வலியுறுத்தப்படவில்லை. இந்துக்கள் அல்லாதோரும், முசுலீம்கள், சீக்கியர்கள், கிறித்தவர்கள் உள்ளிட்ட யாவரும் குடியரசுத் தலைவராக மட்டுமன்றி அரசின் இதரப் பொறுப்பு வாய்ந்த முக்கியமான பதவிகளிலும் கூட இருந்துள்ளனர்.

ஆக, இந்தியா என்பது பல்வேறு வகையான மத நம்பிக்கைகள், வேறுபட்ட மொழிக் குழுக்கள், மாறுபட்ட சமூகப் பழக்க வழக்கங்கள், பண்பாடுகள் ஆகியவற்றைக் கொண்டதாகும். இத்தகைய சிக்கல்தன்மை கொண்ட இந்தியக் கட்டமைப்பில் பல்வேறு வகைப்பட்ட தனித்தன்மைகள் அங்கீகரிக்கப்பட வேண்டிய நிலைமை உண்டு. இவ்வாறான கருத்தோட்டத்தில் நாம் 'மதச்சார்பின்மை' என்பதனை விரிந்த கண்ணோட்டத்தில் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது.

இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியோர் குறிப்பிட்ட இனம் அல்லது மத நம்பிக்கைக்குச் சாதகமாகப் பாரபட்சமானதொரு நிலையை அரசு எடுக்காது என்பதனை உறுதிப்படுத்தியுள்ளனர். இந்தியாவில் மற்றும் இந்தியர்களின் பலதரப்பட்ட தன்மையைக் கருத்தில் கொள்ளும்போது மதச்சார்பின்மைக்கு மாற்று எதுவுமே இல்லை. இதுகாறுமான மனித குல வரலாறும், அனுபவமும் இதனையே மதச்சார்பின்மைக்கு மாற்றாக முன் வைத்துள்ளது.

தற்போதைய பாபர் மசூதி, ராம ஜென்மபூமி சர்ச்சையின் பின்னணியில் இருப்பது நம்பிக்கை, அதிகாரம், அரசியல் ஆகிய பிரச்சனைகள்தான். ஒவ்வொருவரும் அவரவருக்கே உரிய நம்பிக்கைகளையும் கருத்துக்களையும் வைத்துக்கொள்ளும் உரிமை உண்டு. ஆனால், நம்பிக்கைகள் வரலாற்றின் ஆதாரத்தை மறைத்து வரலாற்றையே புரட்டிப் போடும் போக்கு உருவாகும் நிலையும், எதிர்காலத்தில் வகுப்புவாதச் சக்திகள் நமது வகுப்புவாத

அரசியல் நோக்கங்களுக்கு வரலாற்றுச் சான்றைப் பயன்படுத்துகின்றனர்.

தற்போது வரலாற்றுச் சான்றுகள் ராமஜென்மபூமி - பாபர் மசூதி பிரச்சனைக்குத் தீர்வாகவோ விவாதமாகவோ முன் வைக்கப்படவில்லை. இந்த சர்ச்சை வரலாற்றுப் பதிவுகளைப் பற்றிய விஷயமாக மட்டுமே அல்ல. மாறாக, இந்திய அரசியல் பரவலாக வகுப்புவாதமயமாகி வரும் போக்கிலிருந்து இந்த மோதல் உருவாகிறது.

கல்வி மற்றும் கலாச்சாரத் துறைகளில் 'இந்துத்துவம்' தனக்கான அங்கீகரிப்பை மறு உருவாக்கம் செய்யும் வகையில் வரலாற்றுச் சான்றாதாரங்களைக் கண்டுபிடிக்கும் வகையில் இந்திய வரலாற்று ஆராய்ச்சிக்குழு, இந்தியத் தத்துவ ஆராய்ச்சிக்குழு, இந்தியச் சமூக விஞ்¡ன ஆராய்ச்சிக் குழு போன்றவற்றை நமது கட்டுப்பாட்டின் கீழ்க் கொண்டு வருகின்றன. அத்துடன் தொடக்கப்பள்ளி முதல் உயர்கல்வி வரை இந்திய மயமாக்கப்பட வேண்டும் என்பதற்கான முயற்சிகளிலும் ஈடுபடுகின்றனர்.

இங்கே 'இந்திய மயமாக்கல்', 'இந்தியக் கலாச்சாரம்' என்பதான கருத்தோட்டம் மதச்சார்பு வகைப்பட்டதாகவே அர்த்தப்படுத்தப்படுகின்றன. எனவே, இது வலுப்பெற்றுள்ள மதச்சாப்பின்யை நொறுக்கும் வகையிலான போக்கு. 'இந்துமதம்' என்னும் ஒற்றைத் தன்மையின் கீழ் அனைத்தையும் உள்ளடக்கும் பார்வை. இந்து மதத்திற்குள்ளேயே உள்ள மாறுபட்ட தன்மைகளையும் அங்கீகரிக்காத நிலை. இவற்றினது கூட்டு மொத்த உச்ச வடிவம் - வளர்ச்சியே 'இந்துத்துவம்' எனும் ஆதிக்கச் சிந்தாந்தமாக வளர்ந்துள்ளது. ஏனைய மதப் பிரிவுகள் மீதான தனது ஆதிக்கத்தை, தாக்குதல்களைக் கட்டவிழ்த்து வருகிறது.

இந்தத் தாக்குதல்களின் உச்ச வெளிப்பாடுதான் 1992 டிசம்பர் 6-இல் 'பாபர் மசூதி' இடிப்பு. இதன் மூலம் மதச் சார்பின்மை சனநாயகத்திற்கு அபாயச்சங்கு ஊதப்பட்டுள்ளது. இந்து மதவாதிகளின் தீவிரத்தன்மை, பகிரங்கமாக வெளிப்பட்டுள்ளது. வெகுசனரீதியான கலாச்சாரஅணிதிரட்டல் சாத்தியமாக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவினை நீக்குவது, பொதுச் சிவில் சட்டம், ராமர் கோயில் கட்டுவது என்பன பா.ஜ.க. தலைவர்கள் கூறுவது போல இன்னும் கைவிடப்பட்டு விடவில்லை. மாறாக இவற்றுக்குப் போதுமான அளவு சாதகமான சூழல்கள், பெரும்பான்மையாகக் கிடைத்தவுடன் இவை மேலும் ஆதிக்கம் பெறக்கூடிய வாய்ப்புக்களே உள்ளன.

மதச்சார்பின்மைக்கான கடந்த கால நடவடிக்கைகளைப் பார்க்கும்பொழுது சுய பரிசீலனையுடன் கூடிய ஒரு முயற்சி தேவைப்படுகிறது. அத்துடன் குறுகிய நோக்கங்கள், நலன்களுக்கு அப்பால் சமூக, அரசியல், கலாச்சார, கருத்தியல் நலத்தில் மதச்சார்பின்மைக்கான குரல் ஓங்கி ஒலிக்கப்பட வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவிற்குள்ளேயே நிலவும் மாறுபாடான தன்மைகள் மற்றும் முரண்பாடுகள் ஆகியவற்றைக் கணக்கில் எடுத்துக் கொள்ளும்போது நாட்டின் ஒட்டுமொத்தமான அரசியலின் பன்முகத்தன்மையின் ஓர் அத்தியாவசியமான அங்கமாக மதச்சார்பின்மைக்கு மாற்று ஏதும் இல்லை.

மதச்சார்பற்ற அரசியல் நடவடிக்கையை உறுதி செய்வதற்கு அரசையும் மதத்தையும் பிரித்து வைப்பது இன்றியமையாத தேவையாகும். பல்வேறு மதங்களைக் கொண்ட ஒரு சமுதாயத்தில் மதச்சார்பின்மை என்பது மத அடையாளங்களைக் கடந்த சமுதாய உறவில் வேரூன்றியதாக இருக்க வேண்டும். மாறாக அவ்வாறு இல்லையெனில் அது ஒரு அரசியல் எதார்த்தமாக உருவெடுக்க முடியாது. அந்த மாதிரியான சமுதாய உறவு வரலாற்று ரீதியாக இந்தியாவில் வளரவில்லை.

மாறாகச் சமுதாய அமைப்புகளிலும், பரஸ்பர உறவுகளிலும் மத சமூகங்கள் ஒன்றையொன்று விலக்கியும் பிரிந்துமே நின்றன. இந்தப் பிரிவினைகள் தொடர்ந்து இருந்ததோடு மட்டுமல்லாமல் காலம் செல்லச் செல்ல அதிகரிக்கவும் செய்தன.

இந்தப் பிரிவினைகள் தற்போதைய நிலையில் அதிகரித்ததுடன் சகிப்புத்தன்மைக்கும் பலத்த சவால் ஏற்பட்டுள்ளது. இதனால் நடைமுறையில் 'மதச்சார்பின்மை என்பது ஓட்டுக் கட்சிகளுடன் கூட்டணிப் பேரங்கள் நடத்துவது என்பதற்கான துருப்புச் சீட்டாக மாறி விட்டது. மதச்சார்பின்மையின் அடிப்படைகளைக் குழி தோண்டிப் புதைப்பதோடு அதிகாரச் சுவைக்காக ஏங்கிக் கொண்டிருக்கும் நிலைமையே உள்ளது.

அடிப்படையில் மதச்சார்பின்மைக்கு ஒரு புதிய செயல் திட்டம் தேவைப்படுகிறது. மதங்களின் நல்லிணக்கம், மதங்களின் சக வாழ்வு போன்ற கருத்தாக்கங்கள் ஆழமாக வேர் விட்டுச் செல்ல வேண்டியுள்ளது. மத நல்லிணக்கம் என்பது கானல் நீராகவே உள்ளது.

நம்மிடையே எங்கும் விட்டுக் கொடுத்தலும், சகிப்புத் தன்மையும், நிதானமும், மதித்தலும் இழையோடும்போதுதான் மதச்சார்பின்மை தழைத்தோங்கி வளர முடியும். பல்வேறு மதங்களையும் நம்பிக்கைகளையும் (எவ்வித மதங்களையும் நம்பாத மக்களையும் உள்ளிட்ட) பொறுத்துக் கொள்ளக் கூடிய ஓர் இந்தியா, இந்தியர்கள் என்ற கருத்து வலுவாகப் பரவலாக எல்லோராலும் ஒப்புக்கொள்ளப்பட்டு ஒழுகும்பொழுதுதான் 'மதச்சார்பில்லாத ஓர் இந்தியா' கட்டிக் காக்கப்படும்.

நினைவுகொள்

மதம் மக்களின் மனங்களைப் பண்படுத்தவும், வாழ்க்கையை மேம்படுத்தவும் உருவானது என்பர். ஆனால், மதம் மதங்கொண்டு மக்களை அழிக்கும் ஆயுதமாகிக் கொலைத் தாண்டவம் நிகழ்த்துமானால் அத்தகைய மதம் மனித சமூகத்துக்குத் தீங்கு விளைவித்ததாகவே இருக்கும்.

மதம் என்பது ஒருவரின் தனிப்பட்ட விஷயம். அரசியலில் அதற்கு இடமில்லை. மாறாக ஒரு குறிப்பிட்ட மதம் அரசியலில் செல்வாக்குச் செலுத்தி மதங்கொண்டு இயங்குமானால் அந்த மதத்தின் பெயரால் வெறியும் இரத்தக்களரியும், வன்முறையும்தான் தழைத்தோங்கும். கடையில் அதுவே மிஞ்சும்.

எமக்குஎது வேண்டும்? நாம் எதை நோக்கிப் போகிறோம்?


தெ.மதுசூதனன்

© TamilOnline.com