இது எனக்கு இரண்டாவது அமெரிக்கப்பயணம். ஒன்பது வருடங்களுக்கு முன் நான் வந்தபோது இருந்த சூழ்நிலையிலிருந்து இப்போது நிறைய மாற்றங்கள் இருப்பது தெரிந்தது. அமெரிக்கர்களுக்கு இந்தியகளிடம் இருந்த அந்நிய உணர்வு குறைந்து ஒரு சுமுகமான உறவுக்கான் அறிகுறிகள் தெரிகிறது. இதன் காரணம் அமெரிக்காவில் வளர்ந்துவரும் இந்தியர்களின் எண்ணிகையா அல்லது H1-B விசாவினால் ஏற்பட்ட பாதிப்பா - தெரியவில்லை. எதுவானாலும் நான் சொல்லவந்த செய்திக்கு வருவோம்.
என் நெஞ்சை நெருடுகிற விஷயம் குழந்தைகளும் - அவர்கள் எதிர்காலம் இவைகள்தான். எனக்கு இந்தியாவிலும், அமெரிக்காவிலும் பேரன், பேத்திகள் இருப்பதால், என்னால் இவர்கள் வளரும் சூழ்நிலைகளையும்,முறைகளையும், தெரிந்து கொண்டு, அவற்றில் உள்ள நிறை-குறைகளைப் பற்றி அலச முடிந்தது.
அமெரிக்காவில் உள்ள குழந்தைகளின் life-style, நடைமுறை வாழ்க்கை, நம்மைவிட வித்தியாசமானது, நிர்பந்தமானது. வெளித்தோற்றத்தில் அவர்களின் நடை, உடை, பேச்சு, பாவனைகள் - இவற்றைப் பார்ப்பவர்களுக்கு, ‘ஆஹா, இந்த குழந்தைகளுக்குத்தான், எவ்வளவு சுதந்திரம், வசதிகள்!’ என்று தோன்றும். ஆனால், அவற்றின் பின்புலமாக இருக்கும் பெற்றோர்களுக்கு ஏற்படும் ‘டென்ஷன், சிரமங்கள், நிறைய!
இங்குள்ள குழந்தைகளுக்கு, வெறும் படிப்பு மட்டும் போதாது. பாட்டு, நடனம், கராத்தே, டென்னிஸ், ஜிம்நாஸ்டிக்ஸ், ஏதாவது வாத்தியப் பயிற்சி (பியானோ, வயலின், வீணை, மிருதங்கம்) என்று, எதுவுமே விலக்கில்லை.எதிலாவது ஈடுபடுத்தியேயாக வேண்டும். இப்படி ஒரு கட்டாயம் இருதரப்புக்குமே அவசியமா என்று கேட்ட போது, அவர்களின் பதில் இதுதான். இந்த குழந்தைகள், சுதந்திரமாக வாசற்கதவை திறந்து கொண்டுபோய், நான்கு பேருடன் விளையாடவோ, பேசுவதோ சாத்தியமில்லை. பெற்றோர் துணையோ, அநுமதியோ இல்லாமல் ஒருவரை ஒருவர் பார்ப்பதோ சாத்தியமில்லை. பக்கத்தில் இருப்பவர் என்று சொல்லப்படுபவர், 4 அல்லது 5 மைல் தொலைவில் தான் இருப்பர். காரின் புழக்கமும், சாலை வசதிகளும் தான், இடைவெளியைக் குறைக்கின்றன. இந்த மாயத் தங்க கூண்டு பாதிப்பை இக்குழந்தைகள் உணராதபடி, இவர்களை ஈடுபடுத்துவதொடு, அடிக்கடி, ஒன்றுசேரும் விதமாக, ஏதாவது ‘get together’, என்று வழக்கில் சொல்லக் கூடிய, சந்திக்கும் நிகழ்ச்சிகளை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். ‘Sleep over’ என்பதும் இதன் ஒரு அங்கம். வார இறுதியில், இவர்களைக் கொண்டுவிடுவதும், அழைத்துப் போவதும், பெற்றோர்களின் பொறுப்புதான்.
அம்மாக்களின் பல வேலைகளில், ஓட்டுநர் (driver) வேலையும் ஒரு முக்கிய அம்சம். விடுமுறைகளில், நான்கு, ஐந்து குடும்பங்களாக, வெளியூர் செல்வதும்,நவராத்திரி,தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் ஒன்றாகக் கூடுவதும், நம் கலாச்சாரத்தை குழந்தைகளுக்கு நினைவூட்டுவதற்காகத்தான்.
இங்குள்ள பெற்றோர்களுக்கு தேவை, விழிப்புணர்ச்சி, பொறுமை, தங்கள் நேரத்தை நிர்வகிக்கும் திறமை போன்ற விஷயங்கள்தான்.
இவைகள் எல்லாமே, இவர்கள் அநுபவிக்கும்(?) வசதிகளுக்கு கொடுக்கும் விலையென்று சொல்லலாம்.
குழந்தைகள் மீது, இப்படியொரு திணிப்பு அவசியந்தான் என்பதற்கு இன்னொரு வலுவான காரணம் - இவர்கள் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு, ஒரு நல்ல பல்கலைக்கழகத்தில் சேருவதற்கு, இவ்விதத் திறமைகள் முக்கியமாகக் கணக்கிடப்படுவதால்தான்..
குழந்தைகள், விரும்பியோ, கட்டாயத்தின் காரணமாகவோ, பலகலைகளைக் கற்கவேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறார்கள்.
ஆக, பெற்றோர்கள், குழந்தைகள், இருதரப்பினருக்குமே, சூழ்நிலை நிர்பந்தங்களில்தான், வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது. இங்கேயே பிறந்து, வளர்ந்து, இந்த பழக்கவழக்கங்களில் ஊறிப்போன, இந்த குழந்தைகளால், வேறு சூழ்நிலைகளில் பொருந்தமுடியுமா என்பது கேள்விக்குறிதான். எப்படியிருப்பினும், இவர்களின் வாழ்க்கையும் ஒரு வினோதமானவகையில், நன்றாகத்தான் இருப்பதாகப்படுகிறது. அக்கரையிருந்து பார்த்தாலும், அக்கரைக்கே சென்று பார்த்தாலும், பசுமைதான். பழகிவிட்டவர்களுக்கு, புரிந்து கொண்டவர்களுக்கு, இதுவொரு காந்தக்கல்...! |