நான் எனது இப் பிறவியை இறைவனின் காலடியில் வீசியெறிவேன் 'இதைத் திருப்பி எடுத்துக்கொள்' என அலறிக் கொண்டு. அப்போது இறைவன் எனக்கு இன்னொரு பிறவியைத் தருவான். எனது இதயம் இப் பிறவியைப் போன்றே இருக்கும். ஆனால், நினைவுகள் போயிருக்கும். காட்டின் மணத்தை விடாத ஒரு வெண் பளிங்குப் பூனையாய் இருக்க மாட்டேன். சென்ற பிறவியில் கூட கொய்யா மரத்தில் தளிர்த்து இறங்கி வரும் ஒரு பச்சைக் கிளியாக மட்டுமே இருந்தேன்; அதற்கு முந்தைய பிறவியில் அருகம்புல்லில் வெட்டுக் கிளியாகவும். இனி நான் செர்ரி மரமாவேன். எனக்குக் காற்றோடு உரையாடும் இலைகள் உருவாகும், நீரோடு உரையாடும் வேர்களும் என் கண்கள் ஆகாயத்தை நோக்கி விரியும் என் காதுகள் பூமியை நோக்கிச் செவி சாய்க்கும் நான் கரியையும், கந்தகத்தையும் பிடுங்கி எடுப்பேன் நான் இரும்பையும், தங்கத்தையும் பிடுங்கி எடுப்பேன் பூக்களை விசியவாறு ஒரு குளிர் மாலைப் பொழுதின் சிவப்பு முழுவதையும் கொண்ட செர்ரிப் பழங்களைக் கனவு காண்பேன், மழையிலும் வெயிலிலும் அக் கனவுகளை உருட்டி உருட்டி எடுப்பேன் மர்மம் விட்டு விலகாத ஒரு குழந்தையின் அன்பும், ஆவலும் நிறைந்த வாயில் நான் கரைந்து விடுவேன் அதுவே முக்தி.
மலையாள மூலம்: சச்சிதானந்தன். மலையாளத்திலிருந்து தமிழில்: நிர்மால்யா. |