'வந்தே மாதரம்' பரத் பாலா
(வந்தே மாதரம் மற்றும், ஜனகன இசை வீடியோக்களின் மூலம், நாட்டின் தேசிய உணர்வை காஷ்மீர் முதல், கன்னியாகுமரி வரை தட்டி எழுப்பியிருக்கும், பரத் பாலா ப்ரொடக்ஷன்ஸ், நிறுவனர் பரத் பாலா (ப) சமீபத்தில், ஸான் ப்ரான்ஸ’ஸ்கோ நகருக்கு வந்திருந்தபோது, அவரை நேர்முகமாகப் பேட்டி காணும் வாய்ப்பு கிடைத்தது. எங்கள் ஆசிரியக்குழுவைச் சேர்ந்த, திருமதி. விஷால் ரமணி (வி) அவர்களின், ஆங்கில உரையாடலின் தொகுப்பை, தமிழாக்கம் செய்து, இங்கே அளித்துள்ளோம் - பதிப்பாசிரியர். )

வி: பரத், உங்களுக்கு அறிமுகம் தேவையில்லை. நீங்கள் உங்களுக்கென ஒரு பெரிய பெயரை, உங்கள் இசை வீடியோக்களின் மூலமும், திரைப்படங்களின் மூலமும், உருவாக்கிக் கொண்டுள்ளீர்கள்...

ப: ம்ம்.. அடிப்படையிலே, நான் உருவாக்குவதெல்லாம், ‘கருக்கள்’ தான். அப்படி உருவாகும் கருக்கள் எல்லாம், இசையும், திரைப்படமும், சம்பந்தப்பட்டவையாக இருக்கின்றன. என்னுடைய அடிப்படை பலம், திரைப்படங்களை உருவாக்குவதில்தான். அதுவும், விளம்பரத் திரைப்படங்கள். முதல் பத்துவருடங்களுக்கு, டி.வி. விளம்பரப் படங்களைத்தான் எடுத்துக் கொண்டிருந்தேன்.. அதுவும் 30 விநாடிப் படங்கள். அதற்குள் சொல்லியாக வேண்டும். பல விளம்பர நிறுவனங்களுக்காக எடுக்கப்பட்ட, இந்த 1/2 நிமிட படங்களின் மூலமாக, விற்கப்படும் பொருள்களின், ‘பிராண்ட்’-ஐப் பற்றி, ஒரு தாக்கத்தை அல்லது பாதிப்பை ஏற்படுத்தி விடவேண்டும். மனதில் பதியும் படி சொல்லியாக வேண்டும். இதனால், எதை உருவாக்கும் போதும், ஒரு மூலக்கரு வடிவிலேயே சிந்திப்பேன். ஒருவருக்கு, சிறந்த சிந்தனைகள் இருக்கலாம் அல்லது புது விஷயங்களைச் சிந்திக்கக் கூடிய ஆற்றல் இருக்கலாம். ஆனால், பெரிய அளவிலே மக்களைச் சென்று அடையவில்லையானால், அவை பெரிய சிந்தனைகள் ஆகாது.

வி: ஆக, இந்த புதுமையான, சிந்தனைகள் பரவலாக, மக்களைச் சென்றடைய என்ன செய்யவேண்டும்?

ப: இது பெரிய சவாலான விஷயம்தான். புதுமையான கருத்துக்களை சொல்லும் விதத்தில் மட்டுமல்ல, மக்களிடம் கொண்டு சேர்க்கும் முறையிலும், பிரம்மாண்டமாக சிந்தித்து செயல்பட வேண்டும். எங்களை, குறிப்பிட்ட டெலிவிஷன் சேனல்கள் மட்டும்தான், என்று ஒரு வட்டத்தில், நாங்கள் குறுக்கிக் கொள்வதில்லை. ‘சன்’, ‘ஸ்டார்’, ‘தூர்தர்ஷன்’, ‘ஏஷ’யாநெட்’ என்று, எதுவுமே எங்களுக்கு விலக்கில்லை. எவ்வகையிலாவது, பெருவாரியான மக்களைச் சென்றடைவதே எங்கள் நோக்கம்.

வி: மிகவும் சரியாகத்தான் படுகிறது. இப்படிச் செய்வதால் மட்டுமே நீங்கள், ஒரு முழு பாதிப்பை ஏற்படுத்த முடியும்..இல்லையா..?

ப: ஆமாம். இந்த ‘ஃபார்முலா’ எங்களுக்கு மிகவும் வெற்றிகரமாகத்தான் இருந்திருக்கிறது. தவிர, புதுமையான சிந்தனைகளைச் சொல்லும் போது, நேர்த்தியாக, கோர்வையாக சொல்லவேண்டும். இப்போது, இந்தியாவெங்கும், டி.வி. , ‘நெட்வொர்க்’, தூர்தர்ஷன், மற்றும், கேபிள் மூலமாக வெகு பரவலாக மக்களைச் சென்றடைந்து உள்ளது. இந்த அமைப்பின் முழு பரிணாமத்தையும் சரியாகப் புரிந்து கொண்டு, ‘ப்ரைம் நேரம்’ என்று சொல்லக்க்கூடிய நேரத்தில், மக்களிடம் உணர்வு பூர்வமாக சென்றடைய முடியுமானால், அதுவும், நிலையாக, எவ்வித மாற்றுக் குறைவும் இல்லாமல்... அதுவே பெரிய முயற்சிதான்...!

வி: சரி.. உங்களுக்கு, எப்போது, இதைத்தான் நான் விரும்புகிறேன், செய்யப்போகிறேன், என்கிற தீர்மானம் ஏற்பட்டது...?

ப: இதற்கான சொந்த காரணம் ஒன்றுண்டு.. பத்து வருட விளம்பரப் படத்தயாரிப்புகளுக்குப் பிறகு, 96-ல், அவற்றை நிறுத்திவிட்டேன். என்னுடைய தந்தை, ஒரு சுதந்திரப் போராட்ட வீரர். பெருந்தலைவர் K.காமராஜுக்கு, நெருக்கமானவர் கூட..

வி: ஆமாம்.. நான் கூட படித்தேன்...

ப: என் தந்தை ஒரு காந்தீயவாதி. அவர் நான் டாக்டருக்குப் படித்து, மக்களுக்குச் சேவை செய்யவேண்டும் என்று விரும்பினார். துரதிர்ஷ்டவசமாக, இட ஒதுக்கீடு காரணமாக, எனக்கு இடம் கிடைக்கவில்லை. அதுவும் ஒரு விதத்தில் நல்லதுக்குத்தான். 96-ம் வருடம், ஒரு நாள் என் தந்தை, “நாங்கள் எங்களுடைய இளமையில், நாட்டுக்காக, சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு சேவை செய்தோம். நீ என்ன செய்யப்போகிறாய்..?” என்று கேட்டார். தவிரவும், “நீ விளம்பரங்களில், பல புதுமைகளைச் உருவாக்குகிறாய். நாட்டுக்காக, ஏன், பெரிய அளவில் ஏதேனும் செய்யக்கூடாது..? கடந்த 50 வருடங்களில் தற்கால இளைஞர் சமுதாயம் தங்கள் கலாச்சாரம், பாரம்பரியம், கலை இவற்றோடு தொடர்பினை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வந்து, முழுமையாக இழந்துவிடக் கூடிய நிலையிலும், இழப்பை உணரக்கூடிய நிலையில் கூட இல்ல’மலும், இருக்கிறார்கள். உன்னால் அவர்களை ஊக்குவிக்கும் வகையிலே ஏதேனும் செய்யமுடியுமா..? இந்தியர்கள் என்கிற உணர்வை அவர்களுக்கு விற்கமுடியுமா..?” என்று கேட்டார். என்னுள் ஒரு பொறி தட்டியது.

வி: ஆக, உங்கள் உருவாக்கமெல்லாம், தற்கால இளைஞர் சமுதாயத்தைத் தட்டி எழுப்பமட்டும்தானா..?

ப: நிச்சயமாக!. ஆனால் அதையும் தவிர, பல்வேறு மக்களையும் சென்றடையும் படியாக, அவர்களுக்கு, ‘இந்தியன்’ என்கிற உணர்வைத் தூண்டும்படியாக சொல்லவேண்டும் என்கிற ஆசையும் உண்டு. இந்த மிகப்பெரிய எண்ணம் செயல் வடிவாக, பலரது ஊக்கமும், ஆக்கத்தில், இளைஞர்களது பங்கேற்பும் இருப்பதால், நிச்சயமாக MTV தலைமுறையை, இவை தன்னால், ஈர்த்துவிடுகின்றன.

வி: நீங்கள் நினைத்ததை சாதித்திருப்பதாக எண்ணுகிறீர்களா..? நீங்கள் சொல்ல நினைத்த செய்தி இளைய தலைமுறையை சென்றடைந்துள்ளதா..?

ப: நிச்சயமாக! நூறு சதவீதம்..! என்னுடைய முயற்சி, உணர்ச்சியையும், உத்வேகத்தையும், இளைய தலைமுறைக்கு அளித்துள்ளது, என்பதில் சந்தேகமில்லை. தவிர, ‘வந்தேமாதரம்’ என்று சொல்ல யாரும் கூச்சப்படுவதில்லை. நாட்டு வணக்கத்தைப் பாடும்போது, எழுந்து நின்று மரியாதை செலுத்துவதும், தன்னால் நடக்கிறது. இவை சுயமாக வந்திருக்கும் வெளிப்பாடுகள்; இருந்தாலும், என்னுடைய உருவாக்கங்கள், இவற்றுக்கு, தூண்டு கோலாக அமைந்துள்ளன என்பதில் சந்தேகமேயில்லை.

வி:அதாவது, இளையதலைமுறைக்கு, நாட்டின் பாரம்பரியத்தில், ஒர் ஆர்வமாவது ஏற்பட்டுள்ளது, தேசப்பற்று என்று சொல்லமுடியாவிட்டாலும், இல்லையா..?

ப: இன்றைக்கு,தேசப்பற்று என்பதை வேறுவிதமாகத்தான் சொல்லவேண்டியுள்ளது. சுதந்திரத்துக்கு முன், தேசப்பற்றானது, தேச விடுதலையைப் பற்றியதாய் இருந்தது. சுதந்திர இந்தியாவில் அது புது உத்வேகமாக, புதிய சக்தியாக, புதிய பார்வையாக, இளைய தலைமுறையை, எங்களால் சாதிக்கமுடியும் என்ற எழுச்சியைக் கொள்ளக்கூடிய உணர்வாகப் பரிணமித்துள்ளது. விழிப்புணர்வும், நம்பிக்கையும்தான் தேசப்பற்றின் வெளிப்பாடுகள். தேசப்பற்று என்பது, வெறும் உணர்வுடன் நின்றுவிடாமல், உத்வேக செயலாற்றமாக, நாட்டுக்காக, புதியவிஷயங்களைத் தரக்கூடிய, கடுமையான சவால்களை சந்திக்கக்கூடிய வகையில் இருக்கவேண்டும்! நான் சொல்லவருவது என்னவென்றால்.. ‘சந்தர்ப்பங்கள் ஏராளம்..! - நம் இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ளும் வகையில்தான், தேசப்பற்றின் வெளிப்பாடு இருக்கிறது..

வி: உங்களைப்பற்றி படிக்கும் போது, நீங்கள் செய்யும் ஒவ்வொரு ‘ப்ராஜக்டிலும்’ காந்தீயத்தின் வெளிப்பாடு - அதாவது, அஹ’ம்சை,சத்தியாகிரகம்போன்றவற்றிர்க்கு, முக்கியத்துவம் தரப்படுவதாகப் தெரிகிறது. வன்முறைகள் மலிந்து கிடக்கும் இந்நாட்களில், உங்கள் முயற்சிகள் எவ்வித வித்தியாசத்தை சாதித்திருக்கின்றன..?

ப: அடிப்படையில், நான் வளர்ந்தது, காந்தீயம் ஊறியிருக்கும் வீட்டுச்சூழலில். அதனால், அந்த தாக்கம் கட்டாயம் என்னிடத்தில் இருக்கத்தான் செய்யும். அதற்காக, நான் ‘காதி, கதர்’ உடுத்திய வெளிப்பூச்சு காந்தியனாகவும் இல்லை. நான் ‘சமாதானம்’ பற்றி எடுத்துக்கொண்டிருக்கும் ‘டாக்குமெண்டரி’ கூட எனக்குள் இருக்கும், காந்தியத்தின் மேலுள்ள அபிமானத்தினால்தான்.

வி: ‘சமாதான குருக்கள்’ (Gurus of Peace) என்னும் டாக்குமெண்டரியா..?

ப: ஆம்.. 20ம் நூற்றாண்டுக்கு, இந்தியா அளித்த முக்கியமான மனிதர், ‘மஹாத்மா காந்தி’ முக்கிய கோட்பாடு ‘அஹ’ம்சை’; முக்கிய ஆயுதம் ‘சத்தியாக்கிரகம்’. ஆனால் துரதிர்ஷ்டவசமாக, இவை மறக்கப்பட்டு, காந்தி புகைப்படமாகத் தொங்குவதோடு சரி..! ரிச்சர்ட் அட்டன்பரோ, பென்கிங்ஸ்லி அடையாளம் காட்டித்தான், நம் இளையத்தலைமுறையினர் காந்தியை தெரிந்து கொண்டுள்ளனர். என்னுடைய முயற்சி என்னவென்றால், காந்தியக்கோட்பாடுகளை விளம்பர யுக்திகள் மூலமாகப் பரப்புவதுதான். உலகப்புகழ் பெற்ற ‘ஆப்பிள் கம்ப்யூட்டர்’ நிறுவனமானது, நியூயார்க், மன்ஹாட்டனில், காந்தியின் படத்தை பெரிய விளம்பரப்பலகையாக வைத்து, அதன் கீழே, ‘வித்தியாசமாக சிந்தியுங்கள்’ (Think Different!) என்று எழுதி வைத்துள்ளனர். இதைப்போல, விளம்பரயுக்திகள் மூலமாக, காந்தியத்தின் உணர்ச்சியை மீண்டும் கொண்டு வரமுடியுமானால், மக்கள் மத்தியிலே அது செல்லுமானால், அதைத்தான் நான் செய்ய விரும்புகிறேன். இப்போது கூட இரண்டு நாட்களில், காந்தியைப்பற்றி ‘manofthecenturey.com’ என்னும், ஒரு இணைய தளத்தை உருவாக்கியுள்ளோம்.

வி: ஆமாம்..மிகவும்உணர்ச்சிபூர்வமாக வடிவமைக்கப்பட்டுள்ளது...!

ப: காந்தியைப்பற்றி, பல்வேறு இணையத்தளங்கள் இருந்தாலும், எங்களது இணையத்தளத்தின் மூலமாக, காந்தீய உணர்வை மிகவும் சிறப்பான முறையிலே கொண்டுவரமுடியுமென்கிற நம்பிக்கை உண்டு. ஏனெனில், இந்தியாவின், மிகச்சிறந்த நூலகங்களுக்கும், செய்தி தொகுப்பு நிறுவனங்களுக்கும், மிகவும் எளிதாக நுழைவு உரிமை எங்களுக்குக் கிடைக்கிறது.. புத்தகங்களோ, சிடி-ராம்களோ எத்துணைப் பேரை இலகுவாக சென்றடைகின்றன? இத்தகைய இணைய தளத்தின் மூலம், அவற்றை தாக்கம் ஏற்படுத்தும் முறையில் அமைப்பதன் மூலம், காந்தியைப் பற்றியும், அவரது வாழ்க்கைப் பயணத்தையும், அவர் வாழ்நாள் முழுவதும், எவற்றுக்காக பாடுபட்டாரோ, அவற்றை, மனதில் தங்கும் விதத்திலே மக்களுக்குக் கொண்டு செல்ல முடியும்.

வி: இது, எனக்கு, ‘O’ God Book II -ஐ நினைவு படுத்துகிறது. அதில் சொல்லப்படுவது, ‘கடவுளைச் சிந்தி’...

ப: ஆமாம், ஆமாம்.. (உற்சாகத்துடன்)

வி: வித்தியாசமாக சிந்தி!, வித்தியாசமாக செயல்படு!, உன்னுடைய வாழ்க்கையை, வித்தியாசமான முறையில், மக்களுக்கு, பயனுறும் வகையில் நடத்து..!

ப: ஆமாம்..! (மீண்டும், கொப்பளிக்கும் உற்சாகத்துடன்)

வி: உங்கள் இசை வெளியீடுகளில் பழைய தலைமுறை D.K. பட்டம்மாள் முதல், புதிய தலைமுறை மைக்கேல் ஜாக்சன் வரை ஈடுபடுத்தியுள்ளீர்கள்... இதனுடைய நோக்கம் பிரம்மாண்டம் மட்டுமா..?

ப: ஏற்கனவே சொன்னமாதிரி, எனக்கு ஒரு சரியான சிந்தனைப் பொறிதான் முக்கியம். யாரை வைத்து என்பதல்ல. கர்நாடக, இந்துஸ்தானி இசை கலவைகள் மூலமாக, தேசியகீதத்தை ஒவ்வொரு இந்தியனுள்ளும், உயிர் பெற்று வரச்செய்ய முடியுமானால்... அதுதான் எங்களுடைய நோக்கம். A.R.ரஹ்மான் அவர்கள் எனது சிறந்த நண்பர். நான், என் மனைவி கணிகா, மற்றும் ரஹ்மான், மூவரும் சேர்ந்து, எப்படி, இந்த பாரம்பரியம் மிக்க தேசிய கீதத்துக்கு புதிய பொலிவையும், உயிரோட்டத்தையும் கொடுப்பது என்று சிந்தித்தோம்.. விளைவு.. எங்கள் முயற்சி..! இது அடுத்த 10-20 வருடங்களுக்காவது, இத்தேசிய உணர்சியைத் தாங்கிச் செல்லும் அல்லவா..?

வி: தேசியகீதம் ப்ராஜக்ட் செய்யும் போது, உங்களுடைய ஒலி/ஒளிப் பதிவு அனுபவத்தைப்பற்றி.. மிகவும் உற்சாகமானதாக இருந்திருக்க வேண்டும்..!

ப: நிச்சயமாக! ஓர் உற்சாகமான அனுபவம்தான்! கூடவே இறுக்கமான நேரக் கட்டுப்பாட்டுக்குள்ளும் வேலை செய்யவேண்டியிருந்தது. ஒரு 20 நாட்களில் எல்லாக் கலைஞர்களையும் (ஜகஜித் சிங், ஹரிப்ரஸாத் சௌராஸ்யா, அம்ஜத்அலிகான் ஸாஹ’ப், சுதா ரகுநாதன், உன்னி கிருஷ்ணன், ஹரிஹரன்) ஒன்று சேர்த்ததே பெரிய சாதனைதான். இரண்டு தலைமுறைக் கலைஞர்கள், கிராமியம், மற்றும் சுத்தமான சாஸ்த்ரிய இசை, இந்துஸ்தானி- கர்நாடக இசையென்று, வித்தியாசமான ஒலிக்கலவை... அதே சமயத்தில் ஒருங்கிணைந்த ஒலிக்கலவையாக அளிக்க முயன்றிருக்கிறோம்.

வி: இறுதி வடிவமும், அதை அளித்திருக்கும் (பேக்கேஜ்) முறையும் மிகவும் நேர்த்தி..!

ப: இந்த ஆல்பத்தில், ரவீந்த்ரநாத் தாகூர் பாடிய அசல் பாடலையும் சேர்த்துள்ளோம். தவிர வடிவமைப்பில், 50-பக்க புத்தகத்தை வெளியிட்டு, அதில், தேசிய கீதம் பிறந்த வரலாறு, நமது அரசியல் சாசனம், நமது குடியரசு உருவான விதம், இவற்றைப் பற்றியெல்லாம், மிகவும் சுவையாகச் சொல்லியிருக்கிறோம்.. இம்முயற்சிக்கு பெரிய அங்கீகாரம் என்னவென்றால், நம் குடியரசுத்தலைவர் மூலமாக, அவரது மாளிகையிலேயே வெளியிடப்பட்டதுதான்.

வி: சரி, பரத்.. உங்களுடைய, அமெரிக்கப் பயணத்தின் நோக்கமென்ன..? இது தங்களுடைய அடுத்த ‘ப்ராஜக்ட்’ சம்பந்தமாகவா..?

ப:ஆமாம்.. இந்தியாவை பற்றிய, முதல் IMAX படம் செய்யவிருக்கிறோம். முதன் முதலாக, இந்தியர் மட்டுமல்லாது, அமெரிக்கப் பொது மக்களையும் பரவலாகச் சென்று அடையக்கூடிய வகையிலே இதைச் செய்யவிருக்கிறோம். வாஷ’ங்டனில் உள்ள ‘ஸ்மித்ஸோனியன்’ காட்சியகத்திலிருந்து, ஸான் ஹோஸே ‘டெக் ம்யூஸ’யம்’ வரை நாடெங்கும் உள்ள IMAX அரங்கங்களில், இந்தியாவைப் பற்றிய படம் வரும் போது, அமெரிக்கக் குழந்தைகளும், பெரியவர்களும் பார்க்கக்கூடிய வாய்ப்பு உண்டல்லவா..? இந்தியர்களுக்கு, அமெரிக்க தொழில்நுட்ப துறையிலே அங்கீகாரம் பரவலாகக் கிடைத்துள்ளது. இந்திய தொழில் நுட்ப வல்லுநர்கள், வெற்றிகரமான தொழிலதிபர்களாகவும் உருவாகியுள்ளனர். இவை எந்த அளவுக்கு, சாதாரண அமெரிக்க குடிமக்களுக்கு, இந்தியாவைப்பற்றி அறிந்து கொள்ள உதவியுள்ளன..? நிறைய அமெரிக்கர்களுக்கு, இந்தியா உலக வரைபடத்தில், எங்கிருக்கிறது என்றுகூட தெரியவில்லையே..! ஏன்..? நாம் அவர்களின் கவனத்தை ஈர்க்கக்கூடிய விதத்திலே சென்றடையவில்லை..! நம்மைப் பற்றி, நம் பாரம்பரியத்தைப் பற்றி, நம் குழந்தைகளுக்கும் சரியாகச் சொல்லவில்லை. அயலார்க்கும் சொல்லவில்லை. அதைத்தான் நாங்கள் சாதிக்க விழைகிறோம்.

வி: உங்களுடைய மற்ற ‘ப்ராஜக்ட்ஸ்’ பற்றிச் சொல்லுங்களேன்..?

ப:நாங்கள் 90 விநாடிப் படங்களாக, 250 படங்கள் செய்திருக்கிறோம். இந்தியாவின் பல மாகாணங்களைப் பற்றி, காந்தி வசித்த சபர்மதி ஆஸ்ரமத்தைப் பற்றி, காந்தி, இனவெறி வெள்ளையரால் புகைவண்டியிலிருந்து தள்ளப் பட்ட நிலையத்தை என்று, இவ்வாறு, பல இந்திய நிகழ்வுகளைப் படங்களாகத் தொகுத்திருக்கிறோம். தனியாக, தமிழ் நாட்டைப் பற்றி கூட பெரிய அளவில் சிந்தித்து வைத்துள்ளோம்.

வி: பரத், இப்போது எல்லோருக்கும் தெரிந்த, பிரபல நபராக இருக்கிறீர்கள். இந்த வளர்ச்சி உங்கள் சொந்த வாழ்க்கையில் எவ்வித மாற்றங்களைக் கொண்டுவந்திருக்கிறது..? உங்களது இந்த பயணம், முன்னமே திட்டமிட்டதா..? தெளிவானதா..? அல்லது, தற்செயலான நிகழ்வா..?

ப: நிச்சயமாக, திட்டமிடப்பட்ட, தெளிவான பயணம்தான். இதற்காகவே, என்னுடைய 10 வருட சேமிப்பையெல்லாம், இதிலேயே செலவழித்தேன். ஏனென்றால், பெரியதாக, புதுமையாகச் செய்யவேண்டும் என்கிற தீர்மானம். சாதாரணமாக, திரைப்படங்களையும், விளம்பரங்களையும், தயாரித்துக் கொண்டும், புகழடைந்திருக்கலாம். அங்கீகாரம் பெற்றிருக்கலாம். ஆனால், இப்படித்தான் செய்யவேண்டும் என்பதற்கான காரணம் என்ன..?

வி: தேசப்பற்றா..?

ப: அதுவும் கூட.. அதற்குமேல், இந்தியாவை சரியான முறையில் வெளிப்படுத்தவேண்டும், அடையாளம் காட்டவேண்டும் என்னும் ஆர்வம். அதேசமயம், வர்த்தகரீதியாகவும், சரிபட்டு வரவேண்டும். மறுபடியும் சொல்லுகிறேன்.. புதிய முயற்சிகள்.. பெரிய அளவில் மக்களிடம் சேர்க்கும் எண்ணம்.. இவைதான் எங்களைச் செலுத்துபவை..! எங்களுக்கென்று, ஒரு தீர்மானிக்கப்பட்ட படிவம் கிடையாது.. எது எங்களுக்கு, ஏதுவாகிறதோ, அதுவே படிவமாகிறது...

வி: இவையெல்லாம், உங்களின் தனி சாதனையா, அல்லது பின்னணியில்...

ப: அர்ப்பணித்துக்கொண்ட குழு ஒன்று இயங்குகிறது.. அதில் உள்ள ஒவ்வொருவருக்கும், குழுவின் உயரிய நோக்குகளில் 100 சதவிகிதம் ஈடுபாடும், அர்பணிப்பும் உண்டு..!

(இவ் உரையாடல், சற்று திசைமாறி, US டி.வி. சேனல்களின் மூலம், பரத்பாலாவின் படங்களை அமெரிக்கர்களின் பார்வைக்குக் கொண்டு செல்வதைப் பற்றியும், பாஷ்யம் என்பவர், சென்னையில், பிரிட்டிஷ் ஆட்சிகாலத்தில், செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் தேசியக் கொடியேற்றியதைப் பற்றியும் பேசப்படுகிறது.. குறிப்பாக, பாஷ்யத்துடனான சந்திப்பை, பாலா விவரிக்கும் போது, மெய்சிலிர்ப்புடன் பேசுகிறார். பேச்சு பாலாவின் பிற ‘ப்ராஜக்ட்’களுக்கு தாவுகிறது..)

வி: நீங்கள், ‘மைக்கேல் ஜாக்சனுடன்’ செய்த ப்ராஜக்ட் பற்றி, சிறிது விவரமாகக் கூறுங்களேன்.

ப: ஆம், அவருடன், ஒரு ஸமஸ்க்ருதப் பாடலை, ஐ.நா. சபையின் குழந்தைகள் நிதி நிகழ்ச்சிக்காக செய்தோம். பாடல், ‘ஏகம் ஸத்யம்’ (ஒன்றே உண்மை) என்று ஆரம்பிக்கும் பாடல். ஸமஸ்க்ருதத்தில் பாடிய பிறகு, மைக்கேல் ஜாக்ஸன், அப்பாடலின், ஆங்கில மொழி பெயர்ப்பை பாடுவார். மிகவும் சக்தி வாய்ந்த பாடல். பாடிய விதமும் அப்படியே! 65,000 பேர்கள் கொண்ட, ம்யூனிக் மாநகர அரங்கிலே, நிகழ்ச்சியின் கடைசி பாடலாய் பாடப்பட்டு, பெருத்த கரவொலியை பெற்றது. எங்களைப் பொறுத்தவரையில், அந்நிய மண்ணில் இந்தியாவைப் பற்றிய பிரமாண்டமான அறிமுகம் செய்ய உதவிய நிகழ்ச்சி..! இப்பாடல், இன்னும், இந்தியாவில் வெளியிடப்படவில்லை. விரைவில், வெளியிட இருக்கிறோம்.

(மறுபடியும், உரையாடல், அவருடைய தாஜ் மஹால் படத் தயாரிப்பைப்பற்றி சுற்றிவிட்டு, அவருடைய துணவியைப் பற்றி திரும்புகிறது..)

வி: உங்கள் மனைவி கணிகா, என்ன விதத்தில் உங்கள் தயாரிப்பில் உதவியாக இருக்கிறார்கள்..?

ப: கணிகா, எங்கள் தயாரிப்புகளின், இணை இயக்குநர் மற்றும் மிகவும் சிறந்த ‘எடிட்டர்’.

வி: நீங்கள், ஒரு பிரபலமான நபர்; வெற்றிகரமான நபர்; நினைத்ததை முடிப்பவர்; சாதிப்பவர்.. நீங்கள் உங்கள் வெற்றிப்பயணத்தைத் தொடரவேண்டும்....

ப: இல்லை, நான் என்னைப் பற்றி அப்படியெல்லாம் நினைத்துக் கொள்வதில்லை. என்னுடைய பயணம் வெற்றிகளைக் கொடுத்தாலும், எனது முக்கியமான சக்தியாக நினைப்பது, நம்பிக்கைதான்.. என்னில் மட்டுமல்ல.. நம் நாட்டின்மீதும்... நாங்கள் தொடரும் இப் பயணத்தில் நாங்கள் சந்திக்கும் ஆச்சரியமான மனிதர்கள், விஷயங்கள், இவையெல்லாம், எங்களுக்கு பெருத்த நிறைவைத் தந்துள்ளன.

வி: இறுதியாக ஒரு கேள்வி. உங்களின் படைப்புகள், எவ்வகையில், குழந்தைகளை அடைந்துள்ளன..? அடைந்துள்ளனவா..?

ப: கட்டாயமாக! எனக்குத் தெரிந்த நண்பர்களின் குழந்தைகள், மற்றும் எப்போதோ சந்திக்கும் குழந்தைகள், தேசிய கீதத்தைப் பாடும்போதும், தேசத்தைப் பற்றி விழிப்புணர்வோடு இருப்பதைக் காணும் போது, நான் ஓரளவுக்கு, அவர்களை சென்றடைந்திருப்பதாக உணர்ந்திருக்கிறேன்.

வி: நன்றி பரத் பாலா.. உங்களின் எண்ணங்களையும், படைப்புகளையும் என்னோடும், எங்கள் வாசகர்களோடும், பகிர்ந்து கொண்டதற்கு, மனமார்ந்த நன்றி. உங்கள் முயற்சிகள் மென்மேலும் வளர, வெற்றிபெற எங்கள் வாழ்த்துக்கள்...!

© TamilOnline.com