அமெரிக்கத் தேர்தல் அமர்க்களத் தேர்தல்! - (பகுதி 1)
அன்று செவ்வாய்க் கிழமை, தேதி: நவம்பர் 7, 2000.

அன்று இரவு தொலைக்காட்சி செய்தி நிகழ்ச்சிகளைப் பார்க்க ஆரம்பித்தேன். வேலையிலிருந்து கிளம்பும் போது தேர்தல் எப்படி முடியும் என்று எனக்கு தெரிந்து விட்டதாகத்தான் நினைத்துக் கொண்டு கிளம்பியிருந்தேன். கோர் அட்டகாசமாக நியூயார்க், கலிபோஃர்னியா, ப்ஃளாரிடா, மூன்றையுமே வென்று விட்டதாகத்தான் அறிவிப்புகள் வந்து விட்டன. அப்படியென்றால், நிச்சயமாக, கோர்தான் புதிய ஜனாதிபதியாக முடியும் என்பது என் கணிப்பு. ஆனால், நடந்ததோ வேறு. எல்லா கணிப்புகளுமே அவசர முடிவு என்பது தெளிவாயிற்று. நான் இதை எழுதும் போது கூட இன்னும் தேர்தல் முடிவு தெரிந்த பாடில்லை!

அமெரிக்கர்கள் இந்த நிலைமையை கனவில் கூட நினைத்ததில்லை. ஏன், எந்த கதைகளிலோ திரைப் படங்களோ கூட இந்த மாதிரி சம்பவங்கள் ஒரு அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் நடக்கும் என்று கற்பனையும் செய்ததில்லை. அப்பப்பா, என்னென்ன கூத்துகள் நடந்துவிட்டன?!

நினைத்தவுடனேயே எதுவும் நடந்துவிட வேண்டும், நடந்தவுடனேயே யாவும் தெரிந்துவிட வேண்டும் என்று இருக்கும் சமுதாயம் அமெரிக்க சமுதாயம். அப்படி இருக்கும் இடத்தில் கிட்ட தட்ட இரண்டு வாரங்களாகியும் முடிவு தெரியாதது எத்தனை ஆச்சரியம்! அதை விட ஆச்சரியம் என்பது தேர்தலில் நடந்து விட்டதாகக் கூறப் படும் ஊழல் சங்கதிகள்!

எண்ணப் படாத வோட்டுகள் படலம் என்ன, திடீரென கிடைத்த வோட்டுப் பெட்டிகள் படலம் என்ன, வோட்டுகள் தீர்ந்து விட்டது என்று மக்களைத் திருப்பி அனுப்பிய படலம் என்ன, புரியாத புதிர் போன்ற வோட்டு žட்டு படலம் என்ன, வோட்டுகளை திரும்ப எண்ண வேண்டும் என கோர்ட்டுகளின் படிகளை ஏறி இறங்கிய படலங்கள் என்ன?! என்ன, என்ன, என்ன?! கே.பி. சுந்தராம்பாளின், திருவிளையாடல் பாட்டு மாதிரியாகி விட்டது!

தேர்தல் நடக்கும் முன்பே யார் வெற்றி பெறுவார் என தெரிந்து விட வேண்டிய நாட்டில், இந்த திருவிளையாடல் நடக்க என்ன காரணமாக இருக்கும் என்று யோசித்தேன். கற்பனை சிறகு விரித்து பறக்கலாயிற்று. ஒரு எண்ணம் உதித்தது. அட, இப்படியும் நடந்திருக்கலாமோ?! மேற்கொண்டு படியுங்கள்:

தேதி: செப்டம்பர் 7, 2000.

கட்சி எதுவென்று சொல்வதற்கில்லை. அவரவர் அனுமானத்துக்கேற்ப வைத்துக் கொள்ளலாம்.

ஜனாதிபதி வேட்பாளர்கள் நியமனம் ஆகி விட்டன. கருத்து வேட்புக்கள் (opinion polls) எப்போதையும் விட மிக நெருக்கமான தேர்தல் என்று காட்டுகின்றன. நிலைமை சாதகமாக இல்லை. என்ன செய்யலாம் என்று, வேட்பாளரின் நெருங்கிய குழாம் கை பிசைய வேண்டிய நெருக்கடி நிலை வந்து விட்டது. மிகவும் எரிச்சலுடன் ஒருவரை ஒருவர் பார்த்து உறுமவும் ஆரம்பித்தனர்.

வேட்பாளர் அவரது கட்சி தலைவரை அழைத்து ஒரு அதட்டல் போட்டார். “ஏனய்யா, என்ன செய்யப் போகிறீர்? நாம் ஜெயிக்க வேண்டிய இடம் எல்லாம் நல்லாத்தான் இருக்கு, ஆனா இந்த ப்ஃளாரிடா மட்டும் உதைக்குதே?! உடனே நீங்க அதைப் பத்தி ஏதாவது செஞ்சாகணும். போய் செஞ்சுட்டு வந்து வெற்றி நமதேன்னு சொல்ல முடியற வரைக்கும் இந்த பக்கம் தலையக் காட்டக் கூடாது, ஆமா, சொல்லிட்டேன்!”

கட்சி தலைவர், பேருக்குத் தான் தலைவர். உண்மையில் அவர் பிழைப்பு, வேட்பாளர் ஜெயித்தால்தான். நடுங்கிப் போனார். அலுவலகத்துக்குச் சென்று தலையில் கை வைத்து சோர்ந்து உட்கார்ந்து விட்டார்.

அங்கே உள்ளவர்கள் எல்லாரும் கச முச என்று பலவிதமாக பேசிக் கொண்டனர். கடைசியில் தலைவர் வெளியில் வந்து நடந்ததைச் சொன்னார். ஒருவருக்கும் என்ன செய்வது என்ற எண்ணமும் உதிக்கவில்லை. தலைவர் உள்ளே சென்று மீண்டும் தொப்பென்று உட்கார்ந்து விட்டார்.

“டக், டக், டக். உள்ளே வரலாமா?” - நடுக்கத்துடன் மெல்லிய குரல் ஒன்று கேட்டது. தலைவர் நிமிர்ந்து பார்த்து முறைத்தார். “சரி, நான் அப்புறம் வரேன்!”, என்று போகத் திரும்பிய கட்சித் தொண்டனை தடுத்து நிறுத்தியது தலைவரின் குரல். “யார் நீ? என்ன வேண்டும்?”

“என் பெயர் ராம் பல்ராம். நான் இங்க புதுசு. ரெண்டு நாளாத்தான் உதவி செஞ்சுகிட்டிருக்கேன்.” அறிமுகம் செய்து கொண்டான் ராம். தலைவரின் குரலிருந்த கடுமை அகன்றது. அந்தக் கவலையிலும் ஒரு புன்னகை மலர்ந்தது! “ராம், ரொம்ப சந்தோஷம். உன்ன மாதிரி இள ரத்தம் பாஞ்சாத்தான் கட்சிக்கு நல்லது. சரி, இப்ப என்ன வேணும்? žக்கிரம் சொல்லு, நான் ப்ளாரிடா கவலைய கவனிக்கணும்.”

“அது, வந்து ...”, தயங்கினான் ராம். “பரவாயில்லை, சொல்லு” ஊக்குவித்தார் தலைவர். ராம் அவசரமாக கதவை மூடினான். தலைவர் சிறிது பயந்துதான் போனார். தன் மேசைக்குள் ஒரு துப்பாக்கி இருப்பது நினைவுக்கு வந்து நிம்மதி அடந்தார்.

“நான் சொல்ல வந்ததே ப்ஃளாரிடா பத்திதான். எனக்கு ஒரு idea இருக்கு, ஆனா, அதைப் பத்தி எல்லாரும் இருக்கறப்போ சொல்லப் பிடிக்கலை. அதான் இப்போ வந்தேன்” என்றான் ராம்.

தலைவர் சட்டென்று விழித்துக் கொண்டார். இருண்ட குகைக்குள் ஒரு ஒளிக் கதிர் வருகிறதே?! ஆனாலும் அவருக்கு நம்பிக்கை வரவில்லை. அத்தனை அரசியலில் பழம் தின்று கொட்டை போட்டவர்களுக்கே ஒன்றும் தோன்றாத போது இந்த சிறுவனுக்கு என்ன அபாரமான யோசனை தோன்றி விடப் போகிறது? அதுவும், அவன் பேசும் விதத்தைப் பார்த்தால் இன்னும் அயல் நாட்டு வாடை அடிக்கிறதே, நம் ஊர் விவகாரம் நன்றாகப் புரியுமோ என்னவோ?

தலைவரின் மனத்தில் ஊர்வலமிட்ட இந்த மாதிரி எண்ணங்களைக் குறுக்கிட்டு உடைத்தான் ராம். “இந்தியாவில் என் குடும்பம் மிகவும் அரசியலில் ஊறியது. நான் சிறு வயது முதலே தேர்தல் வேலையும் கட்சி தொண்டும் செஞ்சு வளர்ந்தவன். இப்போ நீங்க படற கஷ்டம் எனக்கு நல்லாப் புரியுது. காரியத்தை எப்பிடி முடிச்சு கஷ்டத்தை எப்பிடி அழிக்கணும்னு எனக்கு தெரியும்.” நடுக்கத்துடன் வந்தவன் தைரியத்துடன் அவசரமாக பேசினான்.

தலைவர் அசந்து போனார். நிஜமாகவே இவனால் முடியுமா? நம்ப முடிய வில்லை. ஆனால், அந்த ஆற்றில் முழுக இருக்கும் ததிங்கிணத்தோம் நிலையில், கையில் கிடைப்பது கல்லோ புல்லோ பிடித்துக் கொண்டு கரை சேர்ந்தால் சரிதானே?! “சரி, சொல். ஆனால் அதற்கு ஏன் கதவை மூட வேண்டும், நாம் மற்றவர்களையும் கூப்பிட்டு கலந்து பேசலாமே” என்றார்.

“பேசலாம், ஆனால், முதலில் நான் உங்களிடத்தில் சொல்லி விடுகிறேன். உங்களுக்கு சம்மதம் ஆனால், அவர்களை கூப்பிடலாம்” என்றான் ராம். தலைவர் தலையை ஆட்டி, கையால், மேலே பேசுமாறு சைகை செய்தார். ராம் தன் குரலைத் தாழ்த்திக் கொண்டு பேச ஆரம்பித்தான். அவன் பேச, பேச, தலவரின் முகம் வெளுத்தது. உடல் நடுங்க ஆரம்பித்தது. சிறிது நேரத்துக்கு பிறகு, அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. “போதும், போதும் நிறுத்து” என்றார். “ராம், இந்த மாதிரியெல்லாம் உங்க ஊரில் செய்யலாம், இங்கே செய்ய முடியாது. இங்க தேர்தல், அமைதியாக, ஒரு வரைமுறைக்குள்தான் நடக்க முடியும். அந்த சட்ட திட்டத்துக்குள் எதாவது செய்ய முடியுமானால் செய்யலாம். அவ்வளவுதான்.”

ராம் சற்றே நேரந்தான் யோசித்தான். சட்டென்று அவன் முகத்தில் ஒரு விபரீத ஒளி பிறந்தது! “சரி, ஒரு வரைமுறையையும் மீறாமலேயே முடிக்க முடியும்னு நினைக்கறேன். ஆனால், நிறைய பணம் ஆகுமே பரவாயில்லையா?” என கேட்டான். தலைவர் புன்னகையுடன், “பணம் என்ன கொட்டி கிடக்கிறது. ப்ஃளாரிடாவை, பைக்குள் போட்டுக் கொள்ள முடியும்னு உத்தரவாதம் கிடக்கும்னா, தண்ணி போல செலவழிக்க தயார்! எப்பிடின்னு சொல்லு, எனக்கு ஆகும்னு தோணினா, ஆரம்பிக்கலாம்!”

ராமின் முகத்தில் விரிந்த புன்னகை பெருமையுடன் படர்ந்தது. “நான் இந்தியாவுக்கு ஒரு phone call போடலாமா?” தலைவர் தயங்கினார். ராம் உடனே புரிந்து கொண்டான். “ஆமாம், என் தப்புத்தான். நான் இன்னும் பத்து நிமிஷத்தில் வந்து விடுகிறேன்!” ஓடினான் அவன் வீட்டுக்கு. பறந்தது ஒரு phone call பீஹார் மாநிலத் தலைநகர் பாட்னாவுக்கு! ராம் கட்சி தலையகத்துக்கு திரும்ப கொஞ்ச நேரம் ஆயிற்று. தலைவருக்கு இருப்பு கொள்ளவில்லை. யார் உள்ளே தலை நீட்டினாலும் கடித்து துப்பிக் கொண்டிருந்தார்! கடைசியில் ராம் திரும்ப வந்ததும் உயிர் வந்தது அவருக்கு. “என்ன ஆச்சு ராம்? ஏன் இவ்வளவு நேரம்?” என்று கேட்டார் அவசரமாக.

ராம் முகத்தில் இருந்த ஆனந்தக் களை அவரை ஆசுவாசப் படித்தியது! ராம் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்த திட்டத்தை விவரிக்க ஆரம்பித்தான். அதை சொல்லி முடிக்க ஆனது ஐந்தே நிமிடங்கள் தான். ஆனால் அந்த திட்டத்தின் அம்சங்கள் சித்ததை சிதற வைக்கும் அளவுக்கு பிரமாதமாக இருந்தன! தலைவரால் சிறிது நேரம் பேசக் கூட முடியவில்லை! வாயைத் திறந்து மூடிக் கொண்டிருந்தார். சற்று நேரம் கழித்து நாற்காலியிலிருந்துக் குதித்தெழுந்தார்! “பிரமாதம், ராம், பிரமாதம்! எவ்வளவு எளிமையான திட்டம், ஆனால் எத்தனைப் பெரிய விளைவுகள்?! நிச்சயமாக இதை நாம் செய்து விட முடியும்!”

ராம் பெருமையிலும், மகிழ்ச்சியாலும் சிறிது நெளிந்து கொண்டான். “இதெல்லாம், நானே கண்டு கொண்டேன்னு சொல்ல முடியாது. ஊரில எங்க குடும்பம், கட்சிக் காரங்களையெல்லாம் கேட்டுத் தெரிஞ்சுகிட்டதுதான். வரைமுறை மீறாம தேர்தலை வளைக்கணும்கிறது அவங்களுக்கு ரொம்ப வினோதமாத்தான் இருந்தது. அவங்களுக்கு விளக்கி சொல்லி, அவங்க கஷ்டப் பட்டு இந்த மாதிரி நுணுக்கமெல்லாம் கண்டு பிடிக்க வேண்டியிருந்தது. கடைசியில், அவங்க கட்சித் தலைவரையே பிடிச்சுக் கேட்க வேண்டியதாப் போச்சு. அவரால் தான் இத்தனை நெளிவு சுளிவெல்லாம் போட முடியும்!”

தலைவர் மேசையைச் சுற்றி வந்தார். ராமின் கையைப் பிடித்து பலம்..மாகக் குலுக்கி, முதுகில் ஜோராக ஒரு ஷொட்டு விட்டார். “வெற்றி நமதே! ராம், வெற்றி நமதே! இந்த உதவியை நானும் மறக்க மாட்டேன், வேட்பாளரும் மறக்க மாட்டார்! சரி இங்க வா, எவ்வளவு பணம் வேணும்னு சொல்லு, குடுக்கறேன், எடுத்துகிட்டு போ! ஆனா ஒண்ணு, நீ மாட்டிக் கிட்டா, நீ யாருன்னே எங்க யாருக்கும் தெரியாது, சொல்லிட்டேன். என்ன புரியுதா, நான் சொல்றது?!” ராம் புரிகிறதென்று தலையாட்டினான்.

தலைவர் கொடுத்த பணப் பெட்டியை வாங்கிக் கொண்டு ப்ஃளாரிடா சென்ற ராம், பம்பராமாகச் சுழன்றான். நிச்சயம்மாக அவன் முயற்சிகளுக்கு பயன் கிடைத்தது! இன்னும் அங்கேயே இருந்து இன்னும் தேர்தலை வளைக்க முயன்று கொண்டிருப்பதாகத்தான் கேள்வி!

ஏதோ விளையாட்டுக்கு இந்த மாதிரி எழுதியிருக்கிறேனே ஒழிய, உண்மையில் எனக்கு, அமெரிக்க ஜனநாயகத்தின் மேலும், இந்திய ஜனநாயகத்தின் மேலும் மிக்க மதிப்பும் நம்பிக்கையும் தான் நிறைந்திருக்கின்றன - இன்னும்!

எவ்வளவோ நாடுகளில், ஜனநாயகமே இல்லை. அமெரிக்கா, இந்தியா இரண்டு நாடுகளையும் சுற்றிலும் உலகில் பல இடங்களில் சர்வாதிகாரத்துவமும், குண்டர்களின் ராஜ்யமும் தாண்டவம் ஆடும் நாடுகள் பல உண்டு. தேர்தலே நடக்க விடாமல் செய்பவர்கள் உண்டு. நடந்த தேர்தலை ஒப்புக் கொள்ளாமல் ராணுவத்தை அனுப்பி அரசைக் கவிழ்த்து கைப்பற்றும் நாடுகளும் உண்டு. ஆனால், அமெரிக்காவில், இந்தியாவிலும் கூட, தேர்தல் சிறிது அப்படி இப்படியானாலும் கூட, இறுதியில், மக்களின் விருப்பமும், சட்டத்தின் நிர்ணயமும்தான் வெல்கின்றன. இந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலும், அப்படியே ஒரு எல்லோரும் ஒப்புக் கொள்ளுமாறு ஒரு முடிவைச் சேரும் என்பது உறுதி. பல வளைவுகள் இருக்கலாம், கொஞ்ச காலம் கடக்கலாம். ஆனால் இறுதியில் ஒரு வேட்பாளர் மக்களின் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்று கூறி விலகிக் கொள்வ’ர். மற்றவர், அவரைப் பாராட்டி விட்டு பதவி ஏற்பார். அரசாங்கம் நொண்டினாலும், முன்னே சென்று கொண்டிருக்கும்.

இரண்டு நாடுகளுக்கும் வித்தியாசமே இல்லை என்று நான் சொல்ல வரவில்லை. தேர்தல் கச முசா பெரிய அளவில் என்பது அமெரிக்கவில்மூக்கில் விரல் வைக்கும் அளவுக்கு பெரிய விஷயம். இந்தியாவில் அது சர்வ சாதாரணம் என்பது எல்லாருக்கும் தெரிந்ததே. ஆனாலும், சேஷன் ஆரம்பித்த தேர்தல் ஒழுக்கம், இன்னும் தொடர்கிறது. அங்கும் இங்கும் சில வன்முறைகளும், கேள்விக்குரிய நிகழ்ச்சிகளும் நடப்பினும், உலகத்திலேயே மிகப் பெரிய ஜனநாயகமான பாரதத்தின் குடியரசுப் பெருமை, தலை நிமிர்ந்துதான் நிற்கிறது.

அமெரிக்கா இருநூறு ஆண்டுகளுக்கு மேற்பட்ட ஜனநாயகப் பாரம்பரியம் படைத்தது. உலகின் ஐஸ்வர்யத்தில் ஒரு பெரும் பங்கு கொண்டது. இங்கு ஜனநாயகத்துக்கும், தேர்தலுக்கும், நீதிமன்றங்களுக்கும், சட்ட வரை முறைக்கும் உள்ள மதிப்பை விட, இந்தியா சிறிது பின்தங்கியுள்ளது என்பது பற்றி கவலை வேண்டியதில்லை. இந்தியாவும் மக்களின் கல்வியிலும், பொருளாதார நிலையிலும், பெரும் முன்ன்னேற்றங்கள் நடத்திக் கொண்டுதான் இருக்கிறது. இந்த இருபத்தோராம் நூற்றாண்டு பாதி தாண்டுவதற்குள் பாரதம் ஒரு பொருளாதார வல்லரசாகத் திகழ நல்ல வாய்ப்பிருக்கிறது. அந்த நிலைக்கு முன்ன்னேறினால், இந்தியா ஜனநாயகப் பண்பாட்டிலும் முன் சென்று பள பளக்கும் என்பது என் கருத்து.

பலர் இந்தியாவைப் பற்றி பல காரணங்களுக்காக இளக்காரமாக பேசுவதுண்டு. இதில் வருத்தத்துக்குரியது என்ன என்றால், அதில் முக்கால் வாசிப் பேர் இந்தியர்தான்! இந்த அமெரிக்க தேர்தல், அமர்க்களத் தேர்தல், அந்த இளக்காரத்தைச் சிறிது குறைக்கும் என்னும் ஒரு உள்ளாசை எனக்கு உண்டு. ஆனால் மற்றவர்கள் குறைந்து நாம் உயர்வதனால் எனக்கு நிச்சயமாக திருப்தி உண்டாக முடியாது. இந்தத் தேர்தலைக் கண்டு, கருத்து வேறுபாடுகளை எப்படி பேச்சு மூலமும், நீதிமுறை மூலமும் வன்முறையின்றி நிவர்த்திக்க முடியும் என்று, இந்திய மக்களும், அரசியல்வாதிகளும் சிறிதேனும் கற்றுக் கொண்டால் அதுவே எனக்கு அபார மகிழ்ச்சியைக் கொடுக்கும், மனத்தை மலர்விக்கும்!

வாழ்க பாரதம், வளர்க நம் குடியரசு!

கதிரவன் எழில்மன்னன்

© TamilOnline.com