திருவண்ணாமலை - சுவாரஸ்யமான தகவல்கள்
கார்த்திகை உற்சவம் மிக விமரிசையாக நடைபெற்றது. வெளியூர் ஜனங்கள் முப்பதாயிரமென்று ரயில்வே கணக்கால் தெரிகிறது. இவ்வாண்டிலும் அவ்வளவுக்குக் குறையாதென்றே கூறலாம். கால்நடையாக வந்திருக்கிற ஜனங்கள் முப்பதாயிரத்துக்கு மேலிருக்கும். நாட்டுக்கோட்டை ஆண் பெண் மக்கள் சுமார் ஆயிரம் பேருக்கு மேலிருக்கலாம்.

பக்தியுள்ள போலீஸ் அதிகாரிகள்

முனிசிபாலிடியாரால் கூடிய வரை ஊர் பாதுகாக்கப்படுகிறது. ஆங்காங்கே முக்கியமாகக் கூட்டம் நெருக்கும் இடங்களில் போலீசார் நின்று செளகரியம் செய்து வருகின்றனர். போலீஸ் அதிகாரிகள் தெய்வ பக்தியுடையவராகவும், நேர்மையாகவும், சாந்தமாகவும் நடந்து கொள்வதாலும் கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்கு வசதியேற்பட்டிருக்கிறது.

ரயில் வசதி மிகவும் குறைவு. கழிபட்ட வண்டிகளில் கணக்கற்ற ஜனங்களை ஏற்றிக் கொண்டு வந்து தள்ளினர். விழுப்புரத்திலிருந்தும் காட்பாடியிலிருந்தும் விடப்படும் வண்டிகளின் நிலைமை எழுதுந்தரத்தன்று. ஜனங்கள் எப்படியாவது திருவண்ணாமலையை அடைந்தாற் போதுமென்ற ஒரே எண்ணத்தோடு வருவதால் அக்கஷ்டங்களை எண்ணவில்லை.

உற்சவம் நான்காம் மண்டகப்படி முதல் மிக்க விமரிசையாக இருந்தது. 14-ந் தேதி தீபதரிசனம் மிகச் சிறப்பாகவிருந்தது. தமிழ்மறை பாராயணம் இனிமையாக நடைபெற்றது. திருநெல்வேலி சுந்தர ஓதுவா மூர்த்திகளும் பிறரும் வந்திருந்தனர். மதுரைத் திருப்புகழ் கோஷ்டியாரும், திருவருட்பா கோஷ்டியாரும் வந்திருந்தனர். பஜனைக் கோஷ்டிகள் பல. சுமார் பதினைந்துக்கு மேற்பட்ட கோஷ்டிகள் சுவாமிக்குப் பின்வருவது குறிப்பிடத்தக்கதாகும். காலை விழாவில் வருபவர் இரவில் வருவதில்லை. இரவில் வருபவர் காலை விழாவில் ஓய்வெடுத்துக் கொள்கின்றனர். எல்லாக் கோஷ்டிகளிலும் கேட்பவர்கட்குக் குறைவில்லை.

உணவும் மடங்களும்

"சோறு மணக்கும் மடங்களெலாம்" என்று முற்காலப் பெரியார் ஒருவர் கூறிய தமிழ்வாக்கு ஈண்டு கண்கூடாகும். மடங்கள் தோறும் சோறிடப்படுகிறது. இங்கு வருகிற எந்த ஜாதியாருக்கும் உபசாரத்தோடு சாப்பாடு கொடுக்கப்படுகிறது. பிராமண குலத்தவரில் ஆண் பெண் ஆகிய இருபாலாருக்கும் கோட்டையூர் மெ.க. வகையாரின் சத்திரத்தில் இரவு பகல் எந்த நேரத்திலும் அறுசுவையுண்டியளிக்கப் பெறுகிறது. சாதுக்களுக்குக் காரைக்குடி சா.நா.சா. வகையாரின் சாதுக்கள் மடத்தில் நல்ல உண்டி உதவப் பெறுகின்றது. நகரத்தாருக்குப் பல இடங்களில் சுவையுணவு நல்கப்படுகிறது. கோவிலூர் மடத்தைச் சார்ந்த ஈசானிய மடத்திலும் பிற்பல இடங்களிலும் சாப்பாடு நடைபெறுகிறது. நகரத்தாருக்கு நடைபெறும் விருந்துகளில் ராவ்பகதூர் ஸ்ரீமான் பெ.க.அ. சித. ஜாகையில் நடைபெறும் விருந்தே முக்கியமானதாகும். நகரத்தாரின் மடமாகிய ஓயா மடத்தில் ஏழாந் திருவிழா முதல் மகேசுவர பூஜை நடைபெறுகின்றது. ஜாதி சமய பேதமின்றி வந்தவர்கட்கெல்லாம் உணவளிக்கப்படுகிறது. நகரத்தாரின் பேருதவி பெற்று நடைபெறும் அறுபத்து மூவர் மடம், பவளக் குன்று மடம் முதலிய இடங்களிலும் உணவளிக்கப்படுகின்றது.

சமயப் பிரசாரங்கள்

இந்தத் திருவிழாவே ஜனக் கூட்டத்திலும் மற்ற வசதிகளிலும் தென்னாட்டிலே நடைபெறும் பிற உற்சவங்களை விடச் சிறப்புடையதாக இருப்பதால், கிறிஸ்தவர்கள் மிகக் குறிப்பாக இருக்கிறார்களென்று தெரிகிறது. இவ்வூரிலேயே டேனிஷ் மிஷன் சர்ச் இருக்கிறது. அதைச் சார்ந்த உபதேசியார்களும் இருந்து வருகின்றனர். இத் திருவிழாவுக்கென்றே பலவகைப்பட்ட ஆயிரக்கணக்கான பிரசுரங்களும் அச்சிட்டுப் பரப்புகின்றனர். வீதி தோறும் வாத்தியப் பெட்டிகளுடன் கிறிஸ்தவ மத போதகர்களைக் காணலாம். காரைக்குடி ஹிந்து மதாபிமான சங்கத்தின் பிரசாரகர் நெ.சி. விசுவநாத சாஸ்திரிகளும் கடையநல்லூர் ஹரிஹர சிவமும் ஆங்காங்கே உபந்யாசங்கள் புரிந்தனர். மேற்படி சங்கத்துப் பிரசுரங்களும், காரைச் சிவனடியார் திருக்கூட்டத்து ஜீவகாருண்யப் பிரசுரங்களும் வழங்கப்பட்டன.

இங்கு வசதியாகயிருந்து உபந்யாசம் நடக்கத்தக்க இடம் சத்திவிலாச சன்மார்க்க சபைக் கட்டிடமேயாகும். இதில்பல உபந்யாசங்கள் தினந்தோறும் நடைபெறுவதுண்டு. பன்னிரண்டாம் தேதி காலையில் சுந்தரமூர்த்தி ஓதுவார் தலைமையில் சுவாமி அற்புதாநந்தாவும், சுவாமி மயில் சுந்தரமும், காவேரிப்பாக்கம் கோவிந்தராஜ முதலியாரும், ராமலிங்க சுவாமிகளின் பிரபாவத்தைப் பற்றி உபந்யாசங்கள் புரிந்தனர். மறுநாள் காலை காவிய கண்ட கணபதி சாஸ்திரிகள் தலைமையில் மதுரை திருப்புகழ் சாமி ஐயர் திருப்புகழைப் பற்றியும், சொ. முருகப்ப செட்டியார் 'தமிழ் நாட்டின் நிலை' என்பது பற்றியும் பேசினர். பதினான்காம் தேதி பிற்பகல் கோட்டையூர் கிரீச பாகவதரவர்களால் 'வல்லாள மகாராஜா சரித்திரம்' கதா ரூபமாக நடத்திக் காட்டப்பட்டது.

முந்திய ஆண்டுகளைக் காட்டிலும் இவ்வாண்டு விசேஷமாகச் செய்யப் பெற்றவைகளுள் முதலாவதாக குறிப்பிடத் தகுந்தது கோவிலினுள் மின்சார விளக்குகள் போடப் பெற்றிருப்பதேயாகும். இதனை கோட்டையூர் அ.க. வகையார் தங்கள் செலவில் (ரூபா அறுபத்தைந்தாயிரம்) அமைத்திருக்கிறார்கள். தீபதரிசன சமயத்தில் இவ்விளக்குகள் ஏற்றப்பட்ட போது ஆனந்தமாக இருந்தது.

மாட்டுச் சந்தை

இப்பகுதியில் கார்த்திகை விழாவையொட்டி நடைபெறும் மாட்டுச் சந்தையே பெரிதாகத் தெரிகிறது. மலையில் பிராகாரத்தில் இரண்டாவது மைலில் இச்சந்தை கூட்டப்படுகிறது. இவ்வருஷத்தில் ரூபா 5000 முனிசிபாலிடியாரால் குத்தகை விடப்பட்டிருக்கிறது. மாடு ஒன்றுக்கு ரூபா ஒன்று வசூலிக்கப்பட்டதில் ரூபா 7000 வசூலாகியிருப்பதாகத் தெரிகிறது. அருமையான மாடுகள் வந்திருந்தன. எந்த மாதிரியான மாடும் இங்கு வாங்கலாம். சுமார் 1500 ரூபா விலையுள்ள ஜோடிகளும் வந்திருந்தன. இதைத் தவிர குதிரைகளும் எருமைகளும் வந்திருந்தன. ஆனால் குதிரைகள் கழிபட்டனவேயாகும். மயில் குஞ்சுகளும் மயில்களும் ஏராளமாக விற்கப்பட்டன.

கிரி வலம்

இங்கு வந்த பதினாயிரக்கணக்கான ஜனங்களும் மலையில் ஏற்றப்படும் தீப தரிசனத்தையே முக்கியமாகக் கருதுகின்றனர். எனினும் யாவரும் அருணகிரியைப் பிரதக்ஷ¢ணம் செய்வதிலும் பேரூக்கம் கொள்கின்றனர். இப்பிராகாரம் சுமார் எட்டு மைல் தூரமிருக்கிறது. இந்த வழி முற்றும் ஒழுங்கான ரோடு போடப்பட்டிருந்தாலும் மழை பெய்தால் சேறுபடுகின்றது. கற்பாறையாகவுள்ள சிலவிடங்கள் தவிர மற்ற இடங்கள் யாவும் மழையாலும் ஜனங்களின் அளவு கடந்த போக்குவரத்தாலும் குழம்பாகி உழவு செய்யப்பட்ட நீர் நிறைந்த வயல் போலக் காணப்படுகின்றது.

பிராகார வீதியில் இருபுறங்களிலும் ஏழை ஜனங்கள் உட்கார்ந்திருக்கின்றனர். அவயவப் பழுதுள்ள மக்கள் பலரைச் சர்வ சாதாரணமாகக் காணலாம். கையற்றதும் காலற்றதும் விழியிலாததும் மூக்கில்லாததுமான பல பிறவிகளைக் காண்பது இங்கு தான் எளிது. இறைவன் படைப்பிலுள்ள குறைபாடுகளைக் காண்பதற்குத் திருவண்ணாமலையின் பிரதக்ஷ¢ணமே தகுந்த இடமெனத் தோன்றுதல் கூடும்.

கற்றாழை இலைகளைப் பரப்பி அதன்மேல் கண்மூடிப் படுத்திருக்கிற சாமியார்களும், ஆட்கள் நெருங்கி வருகிற சந்தர்ப்பங்களில் கண்மூடி மெளனியாக வீற்றிருக்கும் ஞானிகளும், ஒரு காலில் நின்று தவம் புரிபவரும், தல புராணத்தைக் கையில் வைத்துக் கொண்டு அங்குமிங்கும் அலைந்த பார்வையுடன் காசு கொடுப்பார் யாரென்ற கருத்துடன் படித்துக் கொண்டிருக்கும் சாதுக்களும், யோக தண்டங்களுடனும் நீண்ட கைவிரல் நகங்களுடனும் ஜபமணியுருட்டுவோரும் அங்கே மலிவாக இருக்கின்றனர். சில ஏழைப் பெண் மக்கள் தங்கள் பிள்ளைகளைப் படுக்கச் செய்து அதன் முகத்திலும் உடலிலும் எண்ணெயில் நனைக்கப்பட்ட காகிதங்களை ஒட்டி அதன் மேல் சிற்சில இடங்களில் குங்குமத்தையும் தடவி சலம் பிடித்த புண்ணுள்ள தேகமெனக் காண்போர் நினைக்குமாறு செய்திருப்பதையும் ஆங்காங்கே காணலாம்.

வலம் வரும் பாதை

இந்தப் பிராகாரத்தில் பலவிதமான குளங்களும், குட்டைகளும் மண்டபங்களும் இருக்கின்றன. சில சிறு கோவில்களுமுண்டு. விநாயகர் ஆலயங்களும் எந்தை முருகன் திருக்கோயில்களும் காணப்படுகின்றன. சிற்சில இடங்களில் நந்தி மட்டும் இருப்பதையும் காணலாம்.

வழியில் ஓரிடத்தில் கற்கள் குவிக்கப்பட்டிருக்கின்றன. அங்கு ஒருவன் இருந்து, 'அடுப்புக் கூட்டுங்கள், பிள்ளை பிறக்கும்' என்று கூறுகிறான். வருகிறவரில் பெரும்பாலாரும் மூன்று கற்களையெடுத்து அடுப்புப் போல வைத்து அதன்மேல் மற்றொரு கல்லை வைத்து விட்டு காலணா வரி கொடுத்து அப்பாற் செல்கின்றனர். இந்த வேடிக்கைகளின் முதற் பகுதியைச் சுமார் நாலரை மைல் தூரம் வரை கண்டு களித்த பின்னர் அணியண்ணாமலை கோவில் வருகின்றது.

தினை மா

அணியண்ணாமலைக் கோவில் மிக அழகாக இருக்கின்றது. இவ்வழகிய திருக்கோவிலின் கோபுரம் தெரிகிற இடம் முதல் கடைகளும் கடைத் தெருவும் தோன்றுகின்றன. தேங்காய் பழம் முதலிய ஆராதனைப் பொருள்களை வழங்கும் கடைகளே பெரும்பாலனவாகும். ஆனால் நாட்டுப்புறத்து ஜனங்கள் தினையை இடித்துத் தெள்ளிய மாவைப் பெட்டி பெட்டியாக வைத்து விற்கிற காட்சியானது கானவர் குலக் கொடியான வள்ளி நாயகியாரை நினைப்பூட்டுகிறது. தெள்ளிய தினை மாவும் வெள்ளிய அரிசி மாவும் அணியண்ணாமலைக் கோவில் வாயில் வரை விற்கப்படுகின்றன.

அத்தினைமாவைக் கண்டவுடன் மாவிளக்கு வைக்கும் நினைப்பு யாரையும் விடாது. தினைமா, சர்க்கரை, தேங்காய், நெய், தாமரை நூல் திரி ஆகிய யாவும் அந்த இடத்திலேயே கிடைக்கின்றன. இவற்றை யாவும் வாங்கி ஒரு இலையில் வெகு எளிதாக மாவிளக்கு வைக்கிறார்கள்.

பின்னரும் முன் குறிப்பிட்டிருக்கிற எளிய ஜனங்களை வழியின் இருமருங்கினுங் காணலாம். வழி நடக்கும் ஜனங்கள் தேங்காய், பழம், காசு, பொரி அவல் கடலை முதலியவற்றை ஏழை ஜனங்கட்கு வழங்கிக் கொண்டே செல்கின்றனர். வசந்த உற்சவ காலத்திலும் கார்த்திகையின் மறுநாளும் சுவாமி கிரிப் பிரதக்ஷ¢ணம் வரும் போது தங்குவதற்காக ஒரு பெரிய மண்டபமிருக்கிறது. ஆனால் வேறு மண்டபங்கள் விசேஷமாக இப்பகுதியில் இல்லை.

எம வாதைக் கதவு

ஊரை நெருங்கி வருகிறபோது வேடிக்கையான நிகழ்ச்சிக்கு ஒரு இடமிருக்கிறது. அதுதான் 'எமவாதைக் கதவு'. இது வெள்ளைக் கற்களால் பழைய காலத்தில் கட்டப்பட்டது. இதற்கு வெளியில் ஒரு சிறு நந்தியிருக்கிறது. இதற்கு நேரே ஒரு கோவில் இருந்திருக்க வேண்டுமென்று தோன்றுகிறது. கோவிலுக்கு முன்னாலுள்ள நந்தியின் முகம் தெரியும் பொருட்டு துவாரம் விட்டுக் கட்டப்பட்டிருக்கிற ஒரு மிகச் சிறிய மண்டபமே இப்போது எமவாதைக் கதவாகிவிட்டது. கொஞ்சம் முன் பின்னாக ஒரு அடி அகலமுள்ளதான அந்த வழியில் மனிதர் நுழைய முயல்வது வேடிக்கையாகவே இருக்கிறது. இந்த வழியானது நாலைந்தடி நீளமிருப்பதால் கை கால்களின் உதவியின்றியே உடலால் நகர வேண்டியிருக்கிறது. விசேஷமாக ஆண் மக்களே நுழைகின்றனர். பெண் மக்கள் அவ்வளவாக நுழையவில்லை.

ஜனக் கூட்டத்தினிடையே பெண் மக்கள் நுழைய முடியாது. இந்த எம வாதையில் நுழைவோர் காலணா வரி செலுத்த வேண்டும். இதனைத் தேவஸ்தானத்தார் பதினாறு ரூபா குத்தகைக்கு விட்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பெரிய மலையைச் சுற்றி நாற்புறத்திலும் சிறுசிறு மலைகள் பல காணப்படுகின்றன. காடும், வெளியான நிலப்பரப்பும், பசுமை நிறம் பொருந்திய குன்றுகளும், கண்ணுக்கு விருந்து செய்கின்றன. பெரிய மலையின் அடிப்பாகத்தில் செழுமை பொருந்திய செடிகளும் சிறு மரங்களும் அடர்ந்து பச்சிலை நிறைந்து விளங்குந்தோற்றம் இன்பம் பயக்கின்றது.

பாதையில் இருமருங்கிலும் மரங்கள் வரிசையாக வளர்க்கப் பெற்றிருப்பதாலும், அதனிடையே ஆற்றில் பெருகி ஒரு வழிப்பட்டுச் செல்கிற நீரின் ஒழுங்கைப் போல் ஜனங்கள் நிறைந்து செல்வதாலும் காண்போர் உள்ளம் களிப்புறுகின்றது.

நெய்க் குடங்கள்

மலையில் ஏற்றப்படும் தீபத்திற்கு தேவஸ்தானத்திலிருந்து நெய் சிறிதே அனுப்பப்படுகிறது. ஆனால் ஒவ்வொரு தரும ஸ்தாபனங்களிலிருந்தும் நெய்க் குடங்கள் அனுப்பப்படுகின்றன. பிரார்த்தனை செய்து கொள்பவர் அனுப்பும் குடங்களே எண்ண முடியாதனவாகும். தீபத்தன்று காலை முதல் மாலை வரையும் நெய்க் குடங்கள் சென்ற வண்ணமாக இருக்கின்றன. இக்குடங்கள் யாவும் மலையில் வாசஞ் செய்கின்ற வேடர்களே கொண்டு செல்கின்றனர். மலையின் உச்சியில் இருக்கிற செப்புக் கொப்பராவில் இந்நெய் கொட்டப்பட்டு தீபம் போடப்படுகிறது. கீழிலிருந்து நெய்க் குடங்களை அனுப்புபவர்கள் சூடத்தினை வாங்கிப் பொடியாக்கி நெய்க் குடத்தினுள் கொட்டி நன்றாகக் கலந்து விடுகின்றனர். விளக்கேற்றுவதற்காகத் துணி வாங்கி அதனைத் துண்டு துண்டாகக் கிழித்து அதனையும் நெய்க் குடத்தினுள் போட்டு விடுகின்றனர். நெய்யாவது துணியாவது திருட்டுப் போகாதிருப்பதற்காகவே இப்படிச் செய்யப்படுகிறது.

தொகுப்பு : ஸ்ரீவேணுகோபாலன்

© TamilOnline.com