என் பேரனுக்காக...... பிரசாந்த்
சென்னை ஆன்லைன் 'Chat' நிகழ்ச்சிக்காக நம் அலுவலகத்துக்கு வந்திருந்தார் பிரசாந்த். Chat-ல் அவர் காட்டிய ஆர்வம், வாசகர்களுக்குப் பதில் அளித்த வேகம்... இதெல்லாம் அவருடைய கம்ப்யூட்டர் பரிச்சயத்துக்குக் கட்டியம் கூறின.

ஒரு மணி நேரம் Chat செய்வதற்கு ஒப்புக் கொண்டிருந்த அவர், உற்சாகமாக இரண்டு மணிநேரம் நம் வாசகர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்தார்.

இடையிடையே நம்முடைய கேள்விகளுக்கும் கலகலப்பாகப் பதில் அளித்தார். அதிலிருந்து...

நீங்கள் எங்களுடைய Chennai online Site-ஐ பார்க்கிறதுண்டா?

இல்லை. ஏன்னா நான் சென்னையிலேயே பிறந்து வளர்ந்ததினால இயற்கையா சென்னையைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டுமென்கிற ஆர்வம் இல்லாமப் போயிருக்கலாம். ஆனா அடுத்த முறை கண்டிப்பா உங்க Site-ஐ பார்ப்பேன்.

வேற என்னென்ன இணையத் தளங்களை விரும்பிப் பார்க்குறீங்க?

குறிப்பா சொல்லனும்னா Travels.com, Travel city.com... அப்புறம் சினிமா பத்திச் சொல்லனும்னா movie.com, film.com, film paylink.com இதெல்லாம் சொல்லலாம். இந்த site-களெல்லாம் ஒட்டுமொத்தச் சினிமா உலகத்தைப் பற்றிய தகவல்களைத் தருகின்றவை. இப்ப சமீபத்திய அர்னால்ட் நடித்த 'சிக்ஸ்த் டே'ன்னு ஒரு படம் வந்திருக்கு. அனேகமாக அதை நாளைக்குப் பார்த்திருவேன்னு நினைக்கிறேன்.

உங்களுக்குன்னு தனியா web site ஏதாவது உருவாக்கியிருக்கீங்களா?

நான் எதையும் உருவாக்கல. ஆனால் என்னோட ரசிகர்கள் நிறையப் பேர் உருவாக்கியிருக்காங்க. சமீபத்தில் ஜப்பானிலிருக்கிற பெண் ஒருவர் என்னோட படங்கள் எல்லாவற்றையும் பற்றி ஒரு சைட் உருவாக்கியிருக்காங்க. அவங்க பேரு மிக்கி. படையப்பாவுக்குப் பிறகு அங்க 'ஜீன்ஸ்' கலக்கிட்டிருக்கு. அவங்களுக்கு நான் நன்றி சொல்லி அனுப்பின மெயிலைக் கூட பிரசுரிச்சிருக்காங்க.

இப்ப நீங்க நடிச்சிக்கிட்டிருக்கிற படங்களப் பத்திக் கொஞ்சம் சொல்லுங்க?

'விரும்புகிறேன்'. இந்தப் படத்தை நான் ரொம்ப எதிர்பார்க்கிறேன். படம் வரும்போது நீங்களும் விரும்புவீங்கன்னு நினைக்கிறேன். மணிரத்னம் சாரோட அஸிஸ்டென்ட் சுசி.கணேசன் இயக்குகிறார். கே.வி. ஆனந்தோட கேமரா படத்துக்குப் ப்ளஸ் பாயிண்ட்.

மணிரத்னம் அஸிஸ்டென்டுன்னு சொல்றீங்க. ஆனா கிராமத்து சப்ஜெக்ட் மாதிரித் தெரியுதே? ஸ்டில்ஸெல்லாம் பாத்துத்தான் கேட்கிறோம்?

போட்டோக்களைப் பார்த்து எப்படிச் சொல்ல முடியும்? படத்துல பாத்துட்டுச் சொல்லுங்க. இப்ப எடுத்தவரைக்கும் ரஷ் போட்டும் பார்த்தேன். ரொம்ப நல்லா வந்திருக்கு. அப்புறம் CTV யோட தயாரிப்பில் உருவாகிற 'மஜ்னு' படம். இதுவரை தமிழில் வந்திருக்கிற காதல் கதைகளில் இந்தக் கதை ரொம்ப வித்தியாசமான கதை. இதுல ஜோதிகா எனக்கு ஜோடியா நடிக்கிறாங்க. படத்துல என்னோட அப்பா அம்மா நான் இந்த மூவருக்கும் ஜோதிகாவுக்கும் இடையிலுள்ள பிரச்சனைதான் கதை.

அடுத்து 'என்ன விலை அழகே' மஜ்னுவில் 3 பேர்னா இதில் முப்பது பேர். ஒரு கும்பலே இருக்கு. கூட்டுக் குடும்பம். குடும்பத்தில இருக்கிற அத்தனை உறுப்பினரும் காதலை ஏத்துக்கறாங்க. 'ஹம் ஆப்கே கோன் ஹைம்' படம் மாதிரி ரொம்ப ஜாலியான படம். அடுத்து 'உள்ளம் துள்ளுதே'.

வெளிநாடுகளில் அதிகமாக நிகழ்ச்சிகள் நடத்துறீங்களே அது பணத்துக்கா? பெயருக்கா?

கண்டிப்பாகப் பணத்துக்காகக் கிடையாது. அங்கிருந்து நிறைய ரசிகர்கள் நிறையப் பரிசுப் பொருள்களெல்லாம் அனுப்புறாங்க. எனக்கும் வெளிநாடுகளில் இருக்கிற என்னோட ரசிகர்களைப் பார்க்கணும்னு ஆசை இருக்கு. ஒவ்வொருத்தரையும் தனித்தனியா பார்க்க முடியாது. ஒரே நேரத்துல ஒரே இடத்தில பார்க்கிற மாதிரியான ஏற்பாடுதான் அது. பணம் என்று பார்த்தால் ஒன்றும் கிடைக்காது. கூட வருகிற நடிக நடிகைகளை முதல் தர ஹோட்டல்களில் தங்க வைக்கிறதிலிருந்து விமானத்தில் பர்ஸ்ட் கிளாஸ் டிக்கெட் எடுத்துத் தருவது வரை ஏகப்பட்ட செலவுகளைக் கழித்துவிட்டுப் பார்த்தால் ஒன்றுமே மிஞ்சாது. எல்லாம் ஆத்ம திருப்தி. எதையாவது செஞ்சாகணும்கிற திருப்திக்காகத்தான். இன்னும் இருபது வருசம் கழிச்சு என்னுடைய பேரன் வந்து என்ன செஞ்சேன்னு கேட்டான்னா....

இன்னும் இருபது வருசம் கழிச்சு பேரன் இருப்பான்னு சொல்றீங்க. அப்ப இப்ப கல்யாணம் ஆகியிருக்கணுமே. அதப்பத்தி......?

(சிரிக்கிறார்). என்னைப் பெத்ததிலிருந்து வளர்த்துப் படிக்க வைச்சுப் பெரியவனாக்கியது வரை எல்லாம் எங்கப்பா அம்மாதான். கல்யாணத்தப் பத்தியும் அவங்களே முடிவு செய்வாங்க. அவ்வளவுதான். இருபது வருஷத்தில பேரன் இருப்பான்னு ஒரு பேச்சுக்குச் சொன்னேன். ..... பிடிச்சுட்டீங்களே!!

தமிழ்மகன்

© TamilOnline.com