அன்பு வாசகர்களே,
நன்றி.. நன்றி.. நன்றி...! தென்றல் முதல் இதழுக்கு, நீங்கள் அளித்திருக்கும் மிகப் பெரிய வரவேற்புக்கும், அமோக ஆதரவுக்கும், அங்கீகாரத்துக்கும், மீண்டும் நன்றி..!
மற்ற விஷயங்களைப் பற்றி பேசுவதற்கு முன்னால், தென்றல் மாத இதழின் சார்பில், உங்கள் எல்லோருக்கும், எங்களது, 'புத்தாண்டு வாழ்த்துக்கள்'.. தொடங்கும், நிஜ 'மில்லின்னிய' வருடத்தில், 'தென்றல்' உங்கள் வாழ்வை வருடட்டும்..!
தெவிட்டாத தேனென இன்பம் பெருகட்டும்..! உங்கள் கனவுகள் நிஜங்களாகி, வாழ்வு வளமாகட்டும்..!
பல நண்பர்களிடமிருந்து, தென்றல், புயலாக போல ஒரு பெரிய தாக்கத்தை (impact) உண்டாக்கியிருப்பதைக் கேள்வி படும் பொழுது, இந்த முதல் முயற்சி, முழு வெற்றியாகும் என்பதில் சந்தேகமே இல்லை..
உங்கள் கருத்துகளையும், யோசனைகளையும்,கற்பனைப் படைப்புகளையும் நாங்கள் கட்டாயம் வரவேற்கிறோம். உங்களில் பலர், இந்த மாத இதழ், மிகவும் செந்தமிழில் உள்ளதாகவும், படிப்பதற்கு, சற்றே கடினமாக இருப்பதாகவும், கருத்து தெரிவித்திருக்கிறீர்கள். இத் தமிழனின் ஆர்வத்தை என்ன சொல்ல..? முடிந்த வரைக்கும், எல்லாத்தரப்பு வாசகர்களையும், அடைவதற்காக முயற்சி செய்கிறோம்..
இது உங்களுக்காகப் படைக்கப்படும் இதழ். நம்மையெல்லாம், ஓரினத்தைச் சேர்ந்தவர்கள், தமிழ் மொழியால் பிணைக்கப் பட்டவர்கள் என்று அடையாளம் காட்டக்கூடிய, கலாச்சார வெளிப்பாடு...! முழுவதுமாக, 'மசாலாச்' செய்திகளைத் தொகுத்து, ஓர் அவியலைப் படைத்துவிட முடியும்..
ஆனால், நம் தனிப்பெருமையை, நாம் பேசும் மொழியின் அருமையினை, அதில் உள்ள கவிதைச் செல்வங்களைக், கருத்துக் குவியல்களை, நீங்கள் அறிந்து கொள்ளவேண்டும்; உங்கள் நண்பர்கள், மற்றும், குழந்தைகளோடு பகிர்ந்து கொள்ளவேண்டும், என்னும் ஆர்வமே, என்னைச் சற்று, உங்கள் ஆர்வத்தை உரசிப்பார்க்கத் தூண்டியது...!
அதே சமயத்தில், உங்களைத் திரும்பிப் பார்க்காமல் ஓடச் செய்யும் எண்ணமும் இல்லை..! விருந்து என்று ஒன்றைப் படைக்கும் போது, மருந்தையும் சேர்த்தே தருவோம்.. அதுவும், தேனில் குழைத்துதான்...!
அடுத்த இதழிலிருந்து, வாசகர் 'கேள்வி பதிலை' ஆரம்பிக்கும் எண்ணம் உள்ளது..! உங்கள் கேள்விகளுக்கு, 'தெய்வ மச்சான்' பதில் அளிப்பார்!
சென்ற இதழ் வெளியீட்டின் போது, ஓர் அவசரகதியில் செயலாற்ற வேண்டியிருந்ததால்,ஆங்காங்கே, எழுத்துப் பிழைகள் நேர்ந்து விட்டதற்கு, வருந்துகிறோம்..
மீண்டும், உங்களின் ஆதரவுக்கு, எங்கள் ஆசிரியக்குழு, மற்றும், வெளியீட்டாளர் சார்பில் நன்றி..!
அடுத்த இதழில் உங்களைச் சந்திக்கும் வரை...
அஷோக் சுப்பிரமணியம், கலிபோ·ர்னியா, ஜனவரி 2001. |