இலங்கைவாழ் தமிழ் பேசும் மக்களின் அரசியல் பிரச்சனைகள் முனைப்புப் பெற்றுள்ள காலம் நீண்டதாகவே உள்ளது. இன்றுவரை பிரச்சனைகள் தீர்க்கப்படுவதற்கான அறிகுறிகள், சமிக்ஞைகள் நம்பிக்கை கொடுக்கும் விதத்தில் அமைவதாக இல்லை. சந்திரிகா அரசு தமிழ் பேசும் மக்களுக்கு நிரந்தரமான சமாதானம் கிடைக்கும் வகையிலான சாத்தியமான சூழல்களைக் கொண்டு வருவதாகத் தெரியவில்லை.
ஆனாலும், இலங்கை வட கிழக்கு மாகாணத்தில் தமிழ் பேசும் மக்கள் மிக மோசமான ராணுவ நெருக்கடிக்குள் வைக்கப்பட்டுள்ளனர்.போரை நடத்தியபடிதான் சமாதானம் பேசலாம் என்ற அணுகுமுறையை அரசு கடைப்பிடித்து வருகிறது. இதுவரை வடகிழக்கு வாழ் மக்கள் மீது விதிக்கப்பட்டிருக்கும் உணவு, மருந்துத் தடைகளை நீக்க இதுவரை எந்த முயற்சியையும் அரசு மேற்கொள்வதாகத் தெரியவில்லை. ஆனால், புலிகளை எப்படியும் அடக்கியே தீருவோம் என்ற ராணுவ வாதம் மேலோங்கியே உள்ளது.
சந்திரிகா தலைமையிலான அரசு, தமிழ் மக்களின் அரசியல் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும் வகையிலான சாதகமான அணுகுமுறைகளில் ஈடுபடுவது போன்ற ஓர் தோரணையைச் சர்வதேசச் சமூகத்துக்குக் காட்டி வருவதையும் தனது பிரதானமான குறிக்கோளாகக் கொண்டு வருகின்றது.
போர் பற்றியும், சமாதானம் பற்றியும், இனப் பிரச்சனையைத் தீர்ப்பது பற்றியும் இலங்கை அரசியல் வரலாற்றில் இதுவரை பெற்ற அனுபவப் பாடங்களில் இருந்து புதிய பார்வையை வந்தடைந்ததற்கான அறிகுறிகள் எதுவுமே இல்லாமல் அரசு நிகழ்ச்சி நிரல்களை உருவாக்கிச் செயல்பட்டு வருகிறது. ஒரு தெளிவான பார்வை, திடமான அணுகுமுறை எதனையும் மருந்துக்குக் கூட வைத்திருப்பதாகத் தெரியவில்லை.
புலிகளுடன் பேசத் தயார் என ஒரு குரலும், புலிகளைப் பூண்டோடு அழிப்போம் என இன்னொரு குரலும் புலிகள் சரணடையும் வரை போர் ஓயாது என மற்றொரு குரலுமாக சனாதிபதி, பிரதமர், ராணுவத் தளபதி ஆகியோர் ஒன்றுக்கொன்று முரண்பட்ட குரல்களில் பேசி வருகின்றனர்.
சர்வதேசச் சமூகத்தின் ஆதரவுக் கரத்தைப் பற்றிப் பிடிக்க சந்திரிகாவும், கதிர்காமரும் கடும் முயற்சியை மேற்கொள்ள, பிரதமரோ ஒவ்வொரு நாளும் முரண்பட்ட கருத்துக்களையே வெளிப்படுத்தி வருகின்றார். ராணுவத்தினரையும், இனவாதிகளையும் திருப்திப்படுத்தும் வகையில் பிரதமரின் பேச்சுகள் அமைந்து வருவது வேடிக்கையாக உள்ளது.
பிரதமர் ரட்ணசிறீ விக்கிரம நாயக்க கடந்த காலத் தேர்தல் பிரச்சாரங்களில் முழுவதும் சமூக அநீதிகளையும் போரின் வெற்றியையும் வலியுறுத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.1994-இல் புலிகளுடன் பேச்சு வார்த்தை நடந்தபோது எடுத்த தீர்மானம் தவறு என்றும், இதன் மூலம் பொதுசன ஐக்கிய முன்னணி ஒரு பாடத்தைக் கற்றுக் கொண்டது என்றும் நாடு முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டார். புலிகள் இயக்கத்தைப் போர்ச் செயல்பாடுகள் மூலம் அழித்தொழிக்கும் நடவடிக்கையை மேற்கொள்வதே நாம் உடனடியாக மேற்கொள்ள வேண்டிய பணி என்று தொடர்ந்து போருக்கு ஆதரவாகவே செயல்பட்டும் வந்தவர்.
இலங்கைப் படையினருக்கு உதவியாகப் புதிய துணைப்படை அணியை உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாகப் பிரதமர் 17.12.2000 அன்று ஒரு பள்ளிக்கூட நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது குறிப்பிட்டுள்ளார். துணைப் படையினருக்கு உரிய பயிற்சி வழங்கப்பட்டு விடுதலைப் புலிகளுடன் போரிட்டு வரும் படையினருக்கு உதவியாகக் களத்தில் இறக்கப்படுவர் என்றும் தெரிவித்துள்ளார். இன்னும் மூன்று ஆண்டுகளில் விடுதலைப் புலிகள் ஒழிக்கப்பட்டு விடுவர் எனவும் சூளுரைத்துள்ளார்.
ஒருபுறம் சமாதானத்துக்கான முயற்சிகள் எனவும் மறுபுறம் அரசு பெரிய போரை நோக்கிய நகர்வுக்கான ஆயத்தங்களில் ஈடுபடுவதாகவும் தெரிகிறது. அந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாகவே துணைப்படை உருவாக்கம். அரசு சமாதான வழி மூலம் இனப் பிரச்சனையைத் தீர்க்க விருப்பம் கொண்டுள்ளதாக உலகுக்கு நாடகமாடிக் கொண்டு இராணுவ வழி மூலம் பிரச்சனையைத் தீர்க்க நாட்டம் கொண்டிருப்பதாகவே தெரிகிறது. பிரதமர் ரட்ணசிறீ இராணுவ வாதத்தையே வலியுறுத்திச் செல்கின்றார்.
இந் நிலையில் சந்திரிகா ஆட்சியில் உள்ளவர்களிடம் மத்தியில் ஒருமித்த கருத்து இல்லை. இதனாலேயே இலங்கை அரசு போரை நடத்தியபடி சமாதானம் பேசலாம் என்ற அணுகுமுறையைக் கடைப்பிடிக்கின்றது.
இலங்கையில் மீண்டும் ஒரு முறை நம்பிக்கையின் ஒளிக்கீற்றாக நார்வேயின் பேச்சு வார்த்தை முயற்சி வன்னி வரை சென்றிருப்பதை நல்ல சகுனமாகவே கருதலாம்.
விடுதலைப்புலித் தலைவர் பிரபாகரனுடன் நார்வே அரசின் சிறப்புத்தூதர் எரிக் சோல்ஹெய்ம், புலிகளின் வன்னித் தலைமையகம் சென்று பேச்சு வார்த்தை நடத்திவிட்டு வந்த நிகழ்ச்சி வட கிழக்கு மக்களிடம் மட்டுமல்ல நாடு பூராவும் உள்ள அனைத்து மக்களிடையேயும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேசச் சமூகமும் இந்த நிகழ்ச்சியை உன்னிப்பாகக் கவனித்து ஆதரவு தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சரின் இலங்கை விஷயம் மீண்டும் மூன்றாம் தரப்பு ஊக்குவிப்புடனான சமாதானப் பேச்சு வார்த்தை என்ற விஷயம் மேலும் முனைப்புப் பெற்றுள்ளமை கவனிப்புக்குரியது.
ஆக, இலங்கை அரசும் புலிகளும் பேச்சு வார்த்தையில் ஈடுபட வேண்டுமென்ற சர்வதேசச் சமூகத்தின் நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்பது தெள்ளத் தெளிவாகிறது. நார்வே, பிரிட்டிஷ் போன்ற நாடுகளின் உதவியுடன் இலங்கைப் பிரச்சனையில் புதிய திருப்பம் ஏற்படுவதற்கான சூழல்கள் உருவாகியுள்ளன. இதுவரை இலங்கை இனப் பிரச்சனையில் பிரதான பாத்திரம் வகித்தது இந்தியாதான்..
தற்போதுதான் இந்தியாவின் பக்கத்து நாடுகளில் குறிப்பாக இலங்கையில் ஒரு மேற்கு நாட்டின் தலையீடு, சமாதான முயற்சி போன்றவை முதன்முதலாக நடைபெறுகின்றன.இதுவரை, இலங்கை விவகாரத்தில் இந்தியாவே முக்கிய பாத்திரம் வகித்து வந்துள்ளது குறிப்பிடித் தக்கது.
பிரபாகரனின் மாவீரர் உரையும், பேச்சு வார்த்தைக்கான சமிக்ஞைகளைக் கோடிட்டுக் காட்டியுள்ளது. 'புலிகளுக்கும் அரசுக்கும் இடையில் பேச்சு வார்த்தை நடக்கவுள்ளது' 'லண்டனில் பேச்சு வார்த்தை நடைபெறும்' என்பது போன்ற ஊகங்கள் ஊடகங்கள் மூலமாக வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
பேச்சு வார்த்தை வெற்றி பெறுகிறதோ இல்லையோ, அது நடக்கப்போகிறது என்று கேட்பதே மக்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து எத்தனை நாளைக்குத்தான் கெடுபிடி வாழ்க்கையை வாழ்வது? அகதி முகாம்களில் வாழ்வது? சொந்த வீட்டை விட்டு வேறு நபர்களிடம் அடைக்கலம் புகுவது? என்பது போன்ற இன்னோரன்ன வாழ்க்கை நிர்ப்பந்தங்களுக்கு ஓர் முடிவு கிடைக்காதோ என ஏங்குவது மனித இயல்பு. இவ்வாறான நம்பிக்கைக்கும் எதிர்பார்ப்புக்கும் படிப்படியாக மக்கள் உந்தப்படுவதைத் தவிர்க்க முடியாது.
முந்தைய பேச்சு வார்த்தைகள் முறிந்து கசப்பு, துன்பம், விரக்தி இவை யாவும் தொடர் கதையானது.
ஆகவே, இலங்கை அரசும் புலிகளும் பேச்சு வார்த்தை என்பதை ஓர் தொடக்கமாகக் கருதி நல்லதொரு முடிவை அடைவதற்கான ஒரு மார்க்கமாகக் கருதிச் செயல்படுவது வரலாற்றுத் தேவை. ஆனால், இரு தரப்பு மத்தியிலும் 'சுமுகமான சூழல்' உருவாக்கப்பட எந்தளவுக்குப் பரஸ்பர நம்பிக்கை கொண்டு செயல்படுகின்றனர் என்பது சந்தேகமாகவே உள்ளது.
ஆணிமுத்தர் |