மனசு - சினிமா விமர்சனம்
நடிப்பு : சக்தி, சஞ்சீவ் குமார், விஜயகுமார், செந்தில், சந்தோஷ், ஓவியா, ஜெயசித்ரா, கோவை சரளா, ஜீவா, மௌனிகா.

இசை : தேவா

ஒளிப்பதிவு, இயக்கம்: அப்துல்ரஹ்மான்

காலம் தப்பிப் பெய்த மழை இரண்டு விதத்தில் இடைஞ்சல் செய்யும். பயிருக்கும் பயன் படாததோடு விளைச்சலையும் பாதிக்கும். 'மனசு'க்கும் இது பொருந்தும்.

பார்க்காமலே காதல், பார்த்தும் பார்க்காமல் காதல் என்று இயக்குநர்கள் கடந்த சில ஆண்டுகளாகவே 'கதை' பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் மனசு தயாரானது ஏறத்தாழ ஏழாண்டுகளுக்கு முன். இப்போது தூசு தட்டப்பட்ட பழைய மனசாக வெளியாகியிருக்கிறது.

காதலிக்காத இருவரைத் தொடர்ந்து சந்தேகிப்பதன் மூலமாகவே அவர்களைக் காதலர்களாக்குகிறது சூழ்நிலை. இறுதியில் குடும்பத்தினரும் இருவரின் பரிசுத்தமான அன்பை உணர்ந்து சேர்த்து வைக்க முடிவெடுக்கிறார்கள். இந்த நிலையில் இருவருக்குமான பழைய எதிரி குறுக்கிடுகிறான். அவனிடமிருந்து தப்பித்தார்களா என்பது கிளைமாக்ஸ்.

ஏழாண்டு இடைவெளியில் கதையில் கருப்பொருளில் இத்தகைய காதல்கதைகள் மலிந்து போனது மனசை’ சங்கடப்படுத்தும் விஷயம்.

புதுமுகங்கள் சக்தி, சஞ்சீவ்குமார், ஓவியா ஆகியோரிடம் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்ற உத்வேகம் தெரிகிறது. இப்போது எல்லோரும் வேறு வேலை பார்க்கத் தொடங்கியிருப்பார்களோ என்று தோன்றுகிறது.

விஜயகுமார் வெளிநாட்டில் வேலைபார்க்கிறார். அவருடைய மனைவி ஜெயசித்ரா. இவர்களின் ஒரே மகள் ஓவியா. மகளைக் கண்டிப்புடன் வளர்க்க வேண்டிய பொறுப்பை உணர்ந்து, கறாராக நடந்து கொள்கிறார். மகள் எதேச்சையாக ஜன்னலில் பார்க்கும் இரண்டு மூன்று முறை மகளின் வகுப்புத் தோழன் தெரு வழியே நடந்து போகிறான். நட்புடன் இருவரும் கையசைத்துக் கொள்கிறார்கள். இதனால் ஏற்படும் வீண் சந்தேகம் மகள் மீதான கண்டிப்பை இறுக்குகிறது.

கடைக்குப் போகும் மகளை நம்பாமல் கூடவே கிளம்பி வருகிறார் ஜெயசித்ரா. ஆனால் அங்கும் கதாநாயகன் எதேச்சையாக வரும்போது, பார்வையாளர்களை ஒருவித சுவாரஸ்யம் பற்றிக் கொள்கிறது. கதையின் முடிவைச் சுபமாக முடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

இசை, ஒளிப்பதிவு பாராட்டும்படி உள்ளது.

மனசு சரியில்லாதவர்கள் மனசுக்கு ஆறுதலாக இருக்கும்.

தமிழ்மகன்

© TamilOnline.com