நடிப்பு : சத்யராஜ் (மூன்று வேடங்களில்), ரோஜா, மும்தாஜ், வடிவேலு, விவேக், கல்பனா, பொன்னம்பலம், பாண்டு, மதன்பாப், பயில்வான் ரங்கநாதன், மயில்சாமி, செளந்தர், எல்.ஐ.சி. நரசிம்மன், விசு.
ஒளிப்பதிவு : கண்ணன்
இசை : தேவா
இயக்கம் : பரமேஷ்வர்
சற்றும் எதிர்பார்க்க முடியாத இரட்டை வேடத்தில் தோன்றி ஏகப்பட்ட லூட்டி, குழப்பங்களுக்குக் காரணமாகிறார் சத்யராஜ். இறுதியாக மூன்றாவதாக இன்னொரு சத்யராஜை வைத்து பிரச்சனைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கிறார்கள்.
ஏகப்பத்தினி விரதனாக சத்யராஜ். அவருடைய மனைவி ரோஜாவுக்கு பிள்ளை பெற்றெடுக்க முடியாத சூழ்நிலை. வழியில் கிடைத்த ஆண் குழந்தையைத் தூக்கி வந்து வளர்க்கிறார். சிறுவனின் நடவடிக்கைகள் சத்யராஜை நினைவுபடுத்துகின்றன. ''உண்மையைச் சொல்லுங்க இது உங்க குழந்தையா?'' என்று சந்தேகக் கொக்கி போடுகிறார் ரோஜா. அவருடைய தொல்லை பொறுக்க முடியாமல் அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கிறார் தன் வளர்ப்பு மகனை. வளர்ந்து பெரியவனாகி இந்தியா திரும்பும் வளர்ப்பு மகன்,.... அட இன்னொரு சத்யராஜ். ரோஜாவின் சந்தேகம் எல்லைமீறி, விவாகரத்து வரை போகிறது. மேற்படி குழப்பங்கள் தீர (அல்லது வளர) எம்.ஜி.ஆர்., விசு, விவேக் போன்றவர்கள் திரையில் தோன்றுகிறார்கள்.
தேவையான குழப்பங்கள்- சரியான திரைக்கதையுடன் படம் எடுக்கிறோம் என்கிற திருப்தியில் சற்றே அவசர, அவசரமாகக் கதையைச் சொல்லத் துடித்திருக்கிறார்கள். ரோஜாவுக்குச் சித்திக் கொடுமை. அதனால் கோபமாக வீட்டை விட்டுக் கிளம்புகிறார். எதிர்பாராதவிதமாக சத்யராஜைச் சந்திக்கிறார். அவ்வளவுதான் ஜோடி சேர்ந்தாச்சு. அப்புறம் வடிவேலுவுக்கு ஒரு ஜோடியைக் கொண்டு வந்து போடு... அமெரிக்காவில் இருந்து திரும்பும் வளர்ப்பு மகனும் சத்யராஜ் போலவே இருக்கிறார்... வந்த உடனே ''நான் வளர்ப்பு மகன் என்றால் எங்க அம்மா யாரு? எங்க வெச்சிருக்கே? வெச்சிருக்கியா இல்ல கொன்னுட்டியா?'' என்கிறார். இவ்வளவு அவசரம் டூ மச்.
'அவ்வை சண்முகம்' வேடத்தில் ரோஜா, விசிடி திருடர்களை வெளுத்துக்கட்டும் எம்.ஜி.ஆர். என்று சுவாரஸ்யமாகக் கதையை நகர்த்தியிருக்கிறார்கள். கதை இப்படித்தான் நகரப் போகிறது என்கிற வழக்கமான யூகங்களைச் சில இடங்களில் பொய்யாக்கியிருப்பது இயக்குநரின் சாதனை. வளர்ப்பு மகன், வளர்ப்புச் சகோதரனாகிற கதைத் திருப்பம் எதிர்பார்க்காதது.
சத்யராஜ் மூன்று வேடங்களில் லூட்டி அடித்திருக்கிறார். தசரதனாக ஒரு சத்யராஜ், ஸ்ரீராமனாக ஒரு சத்யராஜ், கடைசியில் ஒரு சராசரி சத்யராஜ். தன் கணவன் ஏகபத்தினி விரதனாக இருக்க வேண்டும் என்ற ரோஜாவின் ஏக்கம், அதற்காக அவர் படும்பாடு எல்லாம் நகைச்சுவைக்குக் கையாண்டிருக்கிறார்கள். கே.எஸ். கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட நபர்களிடம் இப்படியொரு தீம் கிடைத்திருந்தால் இரண்டு மணி நேரம் கதறவிட்டிருப்பார்கள். எல்லாமே காமெடி ஆகிவிட்டது.
படம் முழுக்க காமெடி இருந்தாலும் வடிவேலு, விவேக் ஒரு கலக்கு கலக்கியிருக்கிறார்கள்.
வடிவேலு, விவேக் ஆகியோருக்கும் எம்.ஜி.ஆர். ரேஞ்சுக்குப் பாட்டெழுதியிருக்கிறார் வாலி. இசையில் நிபுணத்துவம் இல்லை. கிராபிக்ஸில் காட்டிய ஈடுபாடு ஒளிப்பதிவில் இல்லை. மேடை நாடகம் போன்ற சன்னமான பதிவு.
வேடிக்கையான படம்.
தமிழ்மகன் |