என்னவளே - சினிமா விமர்சனம்
நடிப்பு : மாதவன், புதுமுகம் ஸ்நேகா, மணிவண்ணன், சார்லி, வையாபுரி, புதுமுகம் வேணுமாதவ், ஆனந்த், அஸ்வினி, எஸ்.என். லட்சுமி, வேணு அரவிந்த், பேபி ஸ்ரீவித்யா, 'தலைவாசல்' விஜய்.

இசை : எஸ்.ஏ. ராஜ்குமார்

இயக்கம்: ஜெ. சுரேஷ்

மார்டனாக, செல்லத் துள்ளலாக இருக்கும் மாதவனை வைத்து இப்படியொரு கதையை யோசித்திருப்பது புதுமை.

வழக்கமாக முரளிக்காக நேர்ந்து விடப்பட்ட கேரக்டர். நன்றாகப் பாடும் திறமையுள்ள மாதவன், தன் இணைபிரியா மூன்று நண்பர்களுடன் இன்னிசைக் கச்சேரி நடத்தி வருகிறார். ஆச்சா... அவருக்கு ஒரு பெண் தொடர்ந்து உதவி செய்கிறார். நாயகனுக்கும் அவர் மீது ஒரு 'இது'. ஒவ்வொரு முறையும் சொல்ல முயன்று முரளி மாதிரியே தயங்குகிறார். இந்தக் குழப்பத்துக்கிடையே நாயகிக்கு வேறொரு இடத்தில் மாப்பிள்ளை பார்க்கும் அளவுக்கு நிலைமை போய், மணமேடை வரை வந்து விடுகிறது. கீழ் போர்ஷனில் கணவனுக்கு அடிமைப்பட்டு வாழ்ந்து வரும் ஒரு மாமி இவர்களின் தயக்கங்களைக் கவனித்துக் கொண்டே வருகிறார். கிளைமாக்ஸில் கணவனின் உருட்டல்- மிரட்டலையும் மீறி அவர் பொங்குகிறாரே ஒரு பொங்கு... அதன் பிறகு எல்லோரும் உண்மையைப் புரிந்து கொண்டு மாதவனும் புதுமுகம் ஸ்நேகாவும் ஒன்று சேர வழிவிட்டு, 'சுபம்' டைட்டிலை எதிர்பார்த்துப் புன்னகைக்கிறார்கள்.

இப்படியாக மாதவன் தன் இயல்புக்குச் சற்றும் சம்பந்தமில்லாத வித்தியாசமான வேடத்தில் நடித்திருக்கிறார். ஏழ்மையான வேடத்தில், கிறிஸ்துவ அநாதை இல்லத்தில் வளர்ந்தவராக நடிப்பது மாதவன் போன்றவருக்கு ஒரு சவால்தான். இஸ்திரி போடாத, மலிவான காட்டன் சட்டையை மாட்டிக் கொண்டதனால் மட்டும் சவாலில் ஜெயித்துவிட வாய்ப்பில்லையே. போதாதற்கு அவருடன் இடம் பெறும் சார்லி, வையாபுரி, வேணு அரவிந்த் போன்றவர்களும் தங்களின் ஊனங்களை வைத்து நகைச்சுவை செய்ய முயன்றிருப்பது கதாபாத்திரத்தைத் தயவு தாட்சண்யமின்றி கொலை செய்கிறது. கண் தெரியாதவரை கண் தெரிந்தவராகவும் சரியாகப் பேச முடியாதவரைச் சிறப்பாகப் பேசக் கூடியவராகவும் காது கேட்காதவரை நன்றாகக் காது கேட்கக்கூடியவராகவும் சொல்லியிருப்பதில் ஒருவித அசட்டுத்தனம் இருப்பதை ஏன் யாரும் உணரவில்லை என்று புரியவில்லை.

புதுமுகம் ஸ்நேகாவுக்கு நல்வரவு. பரிதாப உணர்வை வைத்தும் புதுமுகம் என்ற எதிர்பார்ப்பிலும் கொஞ்சம் தாக்குப்பிடிக்கிறார். ஏற்கெனவே திருமணமாகி விவாகரத்து ஆனவர் என்பது இடைவெளைக்கான அதிர்ச்சித் திருப்பம். வழக்கப்படி தன் கன்னித் தன்மைக்கு எந்தக் கேடும் ஏற்படாமல் விவாகரத்து செய்து கொள்வதாகச் சொல்லியிருக்கிறார்கள். மறுமணத்தைச் சமூகம் ஏற்றுக் கொண்டாலும் சினிமா ஏற்றுக் கொள்ளாதென்றே தோன்றுகிறது.

''ஒவ்வொரு பாடலிலும்'' என்ற பாடல் எஸ்.ஏ. ராஜ்குமார் பாணியில் படத்தில் திரும்பத் திரும்ப கையாளப்படுகிறது. வழக்கம் போன்ற ஒளிப்பதிவு உத்திகள்.

'பழைய' வசந்தம்.

தமிழ்மகன்

© TamilOnline.com