சதுரங்க விளையாட்டில் உலக சாம்பியன் பட்டம் வென்று மகத்தான சாதனை படைத்துள்ளார் இந்திய வீரர் விஸ்வநாதன் ஆனந்த் (31 வயது). உலக சாம்பியன் பட்டம் வெல்லும் முதல் ஆசிய வீரர் ஆனந்த் என்பது குறிப்பிடத்தக்கது.
டெஹ்ரானில், ஸ்பெயின் வீரர் அலெக்ஸி ஷிரோவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், முதல் ஆட்டத்தை சமன் செய்த ஆனந்த், அடுத்த 3 ஆட்டங்களிலும் வென்று 3.5-0.5 என்ற புள்ளிக் கணக்கில் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்(24.12.2000). ஆறு ஆட்டங்கள் அடங்கிய இறுதிப் போட்டி 4 ஆட்டங்களிலேயே முடிவுக்கு வந்துவிட்டது. சதுரங்க வரலாற்றில் மிக விரைவாக முடிவுற்ற உலக சாம்பியன் பட்ட இறுதிப் போட்டி இதுதான்.
உலக சாம்பியன் பட்ட இறுதிப் போட்டியில் தொடர்ச்சியாக 3 ஆட்டங்களில் வெற்றி பெற்றதன் மூலம், 116 ஆண்டுகளுக்கு முன்னதாக உலகின் முதல் சதுரங்க சாம்பியன் வில்லியம் ஸ்டெயினிட்ஸ் செய்த சாதனையை ஆனந்த் சமன் செய்தார்.
சாதனைச் சரித்திரம் படைத்துள்ள விஸ்வநாதன் ஆனந்துக்குப் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.
சென்னையில் 11.12.1969ல் பிறந்த ஆனந்த், ஆறு வயதிலேயே சதுரங்கம் ஆடத் தொடங்கிவிட்டார். அவரது அம்மா சுசீலாதான் குரு என்பது குறிப்பிடத்தக்கது. ஆனந்தின் தந்தை விஸ்வநாதன் பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் பணிபுரிந்த போது அங்கு நடைபெற்ற பல்வேறு சதுரங்கப் போட்டிகளில் ஆனந்த் கலந்துகொண்டு வெற்றிகளைக் குவித்தார்.
1987ஆம் ஆண்டு உலக ஜூனியர் சாம்பியன் பட்டத்தை ஆனந்த்(17 வயது) கைப்பற்றிய போது, சதுரங்க உலகின் பார்வை ஆனந்த் மீது முழுமையாகத் திரும்பியது. ஜூனியர் உலக சாம்பியன் பட்டம் வென்ற முதல் ஆசியர் என்ற பெருமையும் ஆனந்தையே சேரும்.
தொடர்ச்சியாகப் பல வெற்றிகள். 1989ஆம் ஆண்டு கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்று, இந்தியாவின் முதல் கிராண்ட் மாஸ்டர்(19 வயது) என்ற பெருமையையும் தட்டிச் சென்றார். மிக வேகமான நகர்த்துதல்களுக்குப் புகழ் பெற்ற ஆனந்த், கணனியுடனான போட்டியிலும் ஆச்சரியப்படத்தக்க வெற்றிகளைக் குவித்துள்ளார்.
உலக சாம்பியன் பட்டத்துக்கான இறுதிப் போட்டியில் விளையாட 1995 (நியூயார்க், ரஷ்ய வீரர் கேரி காஸ்பரோவுக்கு எதிராக) மற்றும் 1998ம்(ஸ்விட்சர்லாந்து, ரஷ்ய வீரர் அனடோலி கார்போவுக்கெதிராக) ஆண்டுகளில் தகுதி பெற்ற ஆனந்த், அந்த இரண்டு வாய்ப்புகளையுமே நழுவவிட்டார்.
1997 மற்றும் 1998ஆம் ஆண்டுகளில் சதுரங்க உலகின் உயரிய விருதான ஆஸ்கார் விருது விஸ்வநாதன் ஆனந்துக்கு வழங்கப்பட்டது. அர்ஜுனா விருது, ராஜீவ் கேல்ரத்னா விருது மற்றும் பத்மஸ்ரீ(1988) விருதும் ஆனந்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
சதுரங்க உலகின் சாம்பியனாக விஸ்வநாதன் ஆனந்த் சாதனை படைத்திருக்கும் இவ் வேளையில், அவர் மேலும் பல வெற்றிகளைக் குவித்து உலகத் தரவரிசையிலும் முதலிடம் பிடிக்க வாழ்த்துவோம்.
இதுவரை சதுரங்க விளையாட்டில் உலக சாம்பியன் பட்டம் வென்றுள்ள வீரர்கள்:
1. வில்லியம் ஸ்டெயினிட்ஸ். 2. இ. லஸ்கெர். 3. ஜே.ஆர். கேபபிளேன்கா. 4. ஏ.அலெக்ஷைன். 5. எம்.இயூவ். 6. எம்.போட்வின்னிக். 7. வி.ஸ்மிஸ்லாவ். 8. எம்.டால். 9. டி.பெட்ரோஸியன். 10. பி.ஸ்பாஸ்கி. 11. ஆர்.ஜே.பிஷர். 12. அனடோலி கார்போவ். 13. கேரி காஸ்பரோவ். 14. ஏ.காலிப்மேன். 15. வி.கிராம்னிக். 16. விஸ்வநாதன் ஆனந்த்.
பா.சங்கர். |