இசை விழா களைகட்ட ஆரம்பிக்காத டிஸம்பரின் முன்பாதி. அழைத்த மரியாதைக்குப்போய் தலையைக்காட்டி வருவோம் என்று கடம் கார்த்திக்கின் "தகதிமி தகஜுணு" ஸி.டி. வெளியீட்டு விழாவிற்கு (முத்ரா சார்பில்) அரை மணி நேர பட்ஜெட்டுடன் நுழைந்த போது திரு ஏ.வி.எம்.சரவணன் பேச ஆரம்பித்திருந்தார். இரத்தினச் சுருக்கமாக அமைந்த அவரது உரை, நாட்டிய ஆசான் திரு.தனஞ்ஜயனுடைய சற்றே குறைத்திருக்கக்கூடிய சொற்பொழிவு, அசட்டுத்தனம் லேசாக தெளித்த யூகி சேதுவின் பேச்சு ஆகிய வகைகளுக்குப் பிறகு ஆரம்பித்த லய மழை அனைவரையும், நேர பட்ஜெட்டெல்லாம் நினைவிற்கே வராத வண்ணம் கட்டிப்போட்டது.
தீக்ஷ¢தர் இளையராஜா ரேஞ்ஜுக்கு சிம்·பனி போடுவது போல், ஸமஸ்க்ருதத்தில் லகுப்ராசங்களுடன் பாடல்கள் புனைந்து, அருமையாக இசையும் அமைத்து, பிரமாதமாக ஆர்க்கஸ்ட்ரேஷன் செய்து, அசத்தியிருக்கிறார் கடம் கார்த்திக்.
நாட்டையிலே, ஸ்ரீ சங்கர குரும் என்ற பாடல் பாலக்காடு ஸ்ரீராமின் கேரளத்து கலைஞர்களுக்கே உரித்தான base ஆனால் booming voice-ல் துவங்கியது, நிகழ்ச்சியின் ராஜபாட்டை. பின் ரதிபதிப்ரியாவில் அமைந்த PULSE (நாடி) என்று ஒரு பாடல், நம் நாடி நரம்புகளையெல்லாம் சிலிர்க்கவைத்தது.
எம்பார் கண்ணனின் வயலின், வெல்வெட்டால் தேனைக்கூட்டி செய்யப்பட்டிருக்கிறதோ?
அதனைத்தொடர்ந்து,சாருகேசியில், பராசக்தியின் பவனி.பாட்டை ஒட்டிய நாமாவளியில் இருந்த விறுவிறுப்பு, தேவியின் cosmic நடனத்தை மனக்கண் முன் கொண்டு வந்து ரசிகர்களை ஒருவித charged atmosphereக்கு எடுத்துச்சென்ற பிறகு, அமைதி தேவையல்லவா?
வந்தது TRANQUILITY - எனப்பெயரிடப்பட்ட,அடுத்த பாடல், ரிஷிகேஷில் ஓடும் அமைதிகங்கையைப்போல். ஜோக் ராகத்தில் சாந்த சங்கீத கான ரஸிகே மாம்பாஹி நித்ய நிரஞ்சனி என்று ஸ்வராக்ஷரமாகவே புனையப்பட்டு, கார்த்திக்கின் 'வாக்கேய' திறமையை பரிமளித்துக்காட்டிய பாடல்.
இப்படி ஒரு லய,கீத மழையை அன்று அனுபவித்ததில், சென்னைக்கு நிஜ மழை வராத சோகம் கூட, ஒரு மாலைப் பொழுதுக்காவது மறந்து போனது.
அன்று (நேரமின்மையால்?) வாசிக்காத, ஆனால், ஸி.டியில் இடம் பெற்ற MEDLEY என்ற ஒரு சங்கமப்பாடல், மொஸார்ட், தீக்ஷ¢தர், த்யாகராஜஸ்வாமி,பீதோவன்,தாகூர் (ஜயஹே முத்தாய்ப்பு was just grand) ஆகியோரது பிரபலமான படைப்புகளை ஒருங்கிணைத்த ஒரு உன்னதமான, பரவசமான படைப்பு..! சுவையான உணவிற்குப்பிறகு, சாப்பிட்ட ·ப்ரூட் சாலட் மாதிரி!
மிருதங்கத்தை மிக சௌக்கியமாக வாசித்த பூங்குளம் சுப்ரமணியம் (நிச்சயம் கவனிக்கப்படவேண்டிய இளைஞர்), குழல், கீ போர்டுகளை படு லாவகமாக கையாண்டு, பாடியும் பரவசப்படுத்திய ஸ்ரீராம், அனைத்து பிட்சுகளிலும், 'பிச்சு உதறிய' எம்பார் கண்ணன், தபேலாவால் கச்சேரியை 'பஹ¥த் சுந்தர்' ஆக்கிய சுந்தர், கஞ்ஜிராவில் கொஞ்சிய பாபநாசம் சேதுராமன் மற்றும் பலவித கருவிகளில் (உருமி, ஜுமக், நகரா, மணிகள், கோல் etc.) 'கலக்கிய' வேதா ஆகியோர், கார்த்திக்கின் டீமில் இருக்கும் மற்ற துடிப்பான இளைஞர்கள். இந்த குழு, மிகக் குறைந்த காலகட்டத்திலேயே, உலகப் புகழ் அடையப்போவது திண்ணம். வாழ்த்துக்கள்!
கார்த்திக் என்ற ஒரு அபார கலைஞன், ஒரு பக்கவாத்தியக்காரராக மட்டும் இருப்பதில் மட்டும், நல்ல வேளையாக திருப்தி அடைந்துவிடாமல், தனது குரு உலகப்புகழ் 'விக்கு விநாயகராம்' அடிச்சுவட்டில், மையமேடைக்கு (center stage) வந்திருக்கும் முதல் சீரிய(ஸ்) முயற்சி தான் இந்த ஸி.டி. வெளியீடு. அவருள் இருக்கும் ஒரு முழுமையான இசைக்கலைஞனை- பாரம்பரியம் மறக்காமல் ஆனால் தற்கால தலைமுறையினரும் விரும்பும் வகையில், கர்நாடக சங்கீதத்தை ஜீன்ஸ் ஜிப்பாவில் உலவச்செய்திருக்கும் இளைஞனை ஒரு standing ovation கொடுத்து வரவேற்போமே!
பி.எஸ். பிரபாகர் |