வாஸ்து ஒர் அறிமுகம்
முதன் முதலில் வாஸ்து பற்றி 'யஜுர் வேதத்தில்'தான் குறிப்பிடப்பட்டுள்ளது. கட்டிடங்களையும், வீடுகளையும் மற்றும் கோயில்களையும் எவ்வாறு வடிவமைப்பது என்று அதில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.

புராண காலத்தில் மாயா, விஸ்வகர்மா என்ற இரண்டு தலைமைக் கட்டிட வல்லுனர்கள் இருந்தனர். அவர்களின் புத்திசாலித்தனமான திட்ட வடிவமைப்பில்தான் அரண்மனைகளும், கோட்டைகளும் மற்றும் கோயில்களும் கட்டப்பட்டன.

மாயா இவற்றை ராட்சதர்களுக்காகக் கட்டினார். விஸ்வகர்மா மகாபாரதக் காலத்தில் வாழ்ந்தவர். அவர் பாண்டவர்களுக்காகவும், கெளரவர்களுக்காகவும் அற்புதமான கட்டிடங்களைக் கட்டிக் கொடுத்திருக்கிறார். துவாரகை, இந்திரப்பிரஸ்தம் போன்ற பழமையான நகரங்களை இவரே கட்டினார் என்பர்.

பண்டைய நூல்களில் இவர்களது கட்டிடக் கலையை அடிப்படையாகக் கொண்டு, பூமியும் கிரகங்களும் கட்டிட வடிவுடன் எவ்வாறு சம்பந்தமுடையவை என்று விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

ஆங்கீரஸர், ருபு, அஹபூபா, கஸ்யபர் போன்ற பெரிய முனிவர்கள் கட்டிடக் கலை பற்றி தெய்வீக இணைப்புத் தந்து நவீன உலகுக்குத் தந்திருக்கிறார்கள்.

வாஸ்துவில் இரண்டு பிரிவுகள் உள்ளன. ஒன்று சாதாரண மனிதர்கள் வசிப்பதற்கான வாழிடங்கள் அல்லது வீடுகள். இன்னொன்று தெய்வீகப் பயன்பாடுகளுக்காக ஆனவை.

நெடிய கோயில்கள், யக்ஞகானங்கள், யக்ஞக் குடில்கள், ரதங்கள், கோபுரங்கள் ஆகியவை தெய்வீக வாஸ்து ஆகம சாஸ்திரப் பிரிவில் அடங்கும்.

ஆனால் கட்டிடங்கள், கோட்டைகள், அரண்மனைகள் மற்றும் வீடுகள் ஆகியவை 'மனிதர்களுக்கான வாஸ்து' என்ற பிரிவில் அடங்கும்.

அது அரண்மனையோ, வீடோ, ரதமோ..... எதுவானாலும் கண்டிப்பாக வாஸ்து சாஸ்திரப்படிதான் கட்டியாக வேண்டும் என்று பண்டைக் காலங்களில் உறுதியுடன் இருந்தனர்.

மாயா என்பவர், ராவணனின் மாமனார். இவர் இலங்கையில் கோட்டைகளும் அரண்மனைகளும் கட்டினார். அழகிய வளைவுகளை அவர் பயன்படுத்திய அதே வகையில் இன்றும் நம் பாரதக் கோயில்களில் காணலாம். அன்றைய கோயில்களுக்கும் இன்றைய கோயில்களுக்கும் பலமான ஒற்றுமையையும் காணலாம். இத்தொழில்நுட்பங்களை, ஒரு நாணயத்தின் இருபுறங்களுக்கு ஒப்பிடலாம். கட்டிடக் கலை ஒருபுறம், வாஸ்து மறுபுறம். முன்னது உலகம் பார்ப்பதற்காக. பின்னது நமக்காக!

வாஸ்துவினால் வீட்டில் அழகு, அமைதி, நிம்மதி மற்றும் மகிழ்ச்சி அனைத்தும் ஒருங்கிணைவதால், எவ்வளவு சிரமங்களும் சிக்கல்களும் ஏற்பட்டாலும் வாஸ்து முறையைப் பின்பற்றுவதை அவசியமாகக் கருதுகிறார்கள்.

வீடுகட்ட ஆரம்பிக்குமுன், முதலில் மண்ணை நன்குப் பரிசோதனை செய்ய வேண்டும். அதன் வலுவையும், அழுத்தத்தையும் பார்க்க வேண்டும். சிவப்பு, கருப்பும் சிவப்பும் கலந்த தன்மை, மஞ்சள், சிறுகற்கள், கல்படுகை போன்றவை சாதாரணமாகக் காணப்படும் வகைகள்.

முதலில் 18-22 அங்குல அளவுள்ள ஒரு குழியைத் தோண்டிக்கொள்ளுங்கள். வெளியே எடுத்த மண்ணை மீண்டும் குழியிலேயே போடுங்கள். உள்ளே நிரப்பிய பிறகும் பத்தில் ஒரு பங்கு மண் மீதமிருந்தால் அது சிறந்த அழுத்தமான மண்.

இன்னொரு முறையும் உள்ளது. குழியை நீரால் நிரப்புங்கள். அடுத்தநாள் வந்து பார்க்கும்போது 30% நீர் குறைந்திருந்தால் அது நல்ல மண்.

தேர்ந்தெடுக்கக் கூடாத மனைகள் எவை?

தாழ்வான நிலம், மணல்பாங்கான தரை, கரிசல் மண் நிலம், சதுப்பு நிலம், தரைமட்டத்துக்கருகே தண்ணீர் மட்டம் இருத்தல், வகையற்ற வடிவ மனை, முக்கோண மனை, நீர் தேங்குமிடம், சுடுகாடு, கோணல்மாணல் மனை இவைகளெல்லாம் வீடு கட்டத் தோதான இடங்களில்லை.

நீளமும் அகலமும் 3 : 2 என்ற விகிதத்தில் இருந்தால் அது அருமையான மனையாகும்

திறந்தவெளி:

வீட்டுக்கு நான்கு புறமும் இடைவெளி விடுகிறோமல்லவா? கிழக்கு, வடக்கு, வடகிழக்கு என்று மூன்று புறமும் அதிக இடைவெளியும், மேற்கிலும் தெற்கிலும் குறைந்த இடைவெளியும் இருக்க வேண்டும். எந்த மூலையும் இணையாமல் இருக்கக்கூடாது. கட்டிடத்தின் நான்கு புறமும் திறந்தவெளி இருந்தாக வேண்டும்.

ஜன்னல்கள்:

இரண்டு சுவர்கள் இணையும் இடத்தில் ஜன்னல் வைக்கக்கூடாது என்று வாஸ்து சாஸ்திரம் சொல்கிறது. வீட்டின் நுழைவாயிலின் இரண்டு புறங்களிலும் இரண்டு ஜன்னல்கள் இருப்பது நலம்.

விஞ்ஞான முறையில் கதவுகள்:

வீட்டின் நாற்புறமும் கதவுகள் இருக்க வேண்டும். வாஸ்து சாஸ்திரத்தின் தாத்பர்யமே, வீட்டினைக் காற்றோட்டம் நிறைந்ததாக அமைத்து அதன் மூலம் மனிதர்களுக்கு பிராண வாயு அதிகம் கிடைக்க வேண்டும் என்பதே! ஒவ்வொரு மாநிலத்திலும் நடுதிசையில் கதவு வைப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.

தமிழ்நாட்டில் கிழக்கு அல்லது வடக்கு திசை பார்த்தவாறு சுவரில் வாசல் கதவு வைப்பது நலம்.

ஏற்ற மரங்கள்:

கதவுகள், ஜன்னல்கள் அனைத்திற்கும் ஒரே ரகத்திலான மரங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஜன்னல்கள் இரட்டைப்படையில் இருக்க வேண்டும். பதப்படுத்தாத, பாதி எரிந்த, ஏற்கெனவே பயன்படுத்திய, கரையான் அரித்த மரங்களை, ஆலமர மற்றும் புளியமரக் கட்டைகளை கதவுகளுக்கும் ஜன்னல்களுக்கும் பயன்படுத்தக் கூடாது.

மேஜை மற்றும் நாற்காலிகள் வைக்கும் முறை:

மிகக் கனமான சோபா, மேஜை மற்றும் நாற்காலிகளை மேற்கு அல்லது தெற்குச் சுவர்களை ஒட்டியே வைக்கவேண்டும். வடகிழக்கு மூலையை எப்போதும் காலியாகவே விடவேண்டும். கட்டில்களை மேற்கு அல்லது தெற்குச் சுவருக்கு இணையாகப் போடவேண்டும். பீரோ, வார்ட்ரோப் போன்றவற்றை மேற்கு அல்லது தெற்குச் சுவர்களை ஒட்டியே போடவேண்டும். இப்படிச் செய்தால் வடக்கு அல்லது கிழக்கு புறமாகத் திறப்பது வசதி.

சமையலறை:

சமையலறை மிகச் சரியாக தென்கிழக்குப் பகுதியில்தான் அமைய வேண்டும். கிழக்கு நோக்கிச் சமையல் செய்ய வேண்டும். வடகிழக்குப் பகுதியில் நீர்நிலை அமைய வேண்டும். போர்வெல் இருக்கலாம். சமையல் மேடை சிவப்பு அல்லது பிரவுன் நிறத்தில் இருக்கலாம்.

திசைகள்:

வரவேற்பறை, ஹால் மற்றும் கதவு : மேற்கு / வடக்கு / கிழக்கு / வடகிழக்கு.

குளியலறை : மேற்கு, தெற்கு.

சாப்பாட்டு அறை : வடமேற்கு, தென் மேற்கு

பணம், பெட்டகம் மற்றும் நகைகள் : வடக்கு

காரேஜ் : தென்மேற்கு

பூஜை அறை : வடகிழக்கு மூலை.

இயந்திரங்கள் மற்றும் கருவிகள் : தென்மேற்கு, மேற்கு, தெற்கு.

துணி பீரோ மற்றும் வார்ட்ரோப் : வடகிழக்கு மூலை.

வாஸ்து என்பது வீட்டில் ஆரோக்கியத்துடன் வாழ வழிவகை செய்யும் விஞ்ஞானம். மேற்கூறிய விஷயங்களை மனதில் கொள்வது நலம்.

© TamilOnline.com