பெரிய பேய்
கோவில்பட்டியில் உள்ள என் உறவினர் ஒருவர் வீட்டுக் கல்யாணத்திற்குப் போயிருந்தேன். காலை எட்டரை மணிக்கு முகூர்த்தம். கல்யாணத்திற்குச் சங்கரன் கோயிலிலிருந்து ராமலிங்கம் பிள்ளையும் வந்திருந்தார். பந்தலில் நூறு ஆண்களுக்கு நடுவே தாமும் ஓர் ஆணாக உட்கார்ந்திருந்த ராமலிங்கம் பிள்ளையைப் பார்த்தேனோ இல்லையோ, அவருடைய மனைவி கோமதி அம்மாள் எங்கேயிருக்கிறாள் என்று என் கண்கள் தேட ஆரம்பித்து விட்டன. பெண்கள் கூட்டத்தைத் திரும்பிப் பார்த்தேன். அத்தனை பேருக்கும் நடுவே உட்கார்ந்து, வைத்த கண் வாங்காமல் பெண்களையே பார்த்துக் கொண்டிருப்பது எப்படி? அதனால் பக்கப்பார்வை, குனிந்த பார்வை, பார்க்காமலே பார்த்துவிடும் சாதுரியப் பார்வை இப்படிப் பலவிதமான பார்வைகளாலும் துருவிப் பார்த்தேன். அப்படியெல்லாம் பார்த்துங்கூட, கோமதி அம்மாளின் தரிசனம் கிடைக்கவில்லை. 'அந்தா இந்தா' என்று அரை மணி நேரத்திற்கு மேல் ஆகிவிட்டது.

மண மேடையில் ஒன்றன்பின் ஒன்றாக எத்தனையோ சடங்குகள் நடந்து கொண்டிருந்தன. எனக்கு அங்கே பார்வை விழுந்தாலும், கவனம் விழவில்லை. கல்யாணப் பெண்ணைக் கூட நான் சரிவரப் பார்க்கவில்லை என்றால், ராமலிங்கம் பிள்ளை தம்பதிகளைப் பற்றிய கவனம் என் உள்ளத்தில் எவ்வளவு பிரதானமாக இடம் பெற்றிருந்தது என்பதை யாரும் ஊகித்துக் கொள்ளலாம்.

ராமலிங்கம் பிள்ளை எனக்குப் புது உறவு. என் தம்பிக்குப் பெண் கொடுத்தவருடைய அண்ணன் மகன். தம்பி கல்யாணத்திலிருந்து இந்த இரண்டு வருஷமாக நாங்கள் உறவினர்கள் ஆகியிருக்கிறோம். பரஸ்பரம் 'அத்தான்' என்று அழைத்துக் கொள்வோம்; தமாஷ் பண்ணிக் கொள்வோம். சுமார் ஆறு மாதங்களுக்கு முன் முதன் முதலில் நான் அவர் வீட்டுக்கு விஜயம் செய்தேன். அங்கே என் கடைசி விஜயமும் அதுதான் என்று சொல்லிக் கொள்வதுடன், அப்படியே இருக்க வேண்டும் என்றும் கடவுளைப் பிரார்த்தித்துக் கொண்டிருக்கிறேன். சங்கரன் கோயிலுக்கு வியாபார சம்பந்தமாய்ப் போன நான், இரவு அங்கே தங்க நேர்ந்தது. ராமலிங்கம் பிள்ளை வீட்டைத் தேடிப் போனேன். தம்பதிகளும் என்னை அன்போடு வரவேற்று உபசரித்தனர்.

இரவில் அவர்கள் வீட்டில் தங்கினேன். அப்போது நடந்த நிகழ்ச்சிகள் இப்போது கல்யாண வீட்டில் உட்கார்ந்திருந்த எனக்குத் திடீரென்று ஞாபகம் வரத் தொடங்கின. எடுத்த எடுப்பிலேயே எனக்குச் சிரிப்பு வந்தது. சிரித்துச் சமாளிக்கக்கூடிய அற்ப சொற்பமான சிரிப்பல்ல அது. ஊரே கேட்கும்படி 'கெக்கெக் கெக்கே' என்று வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரித்தாக வேண்டும். தரையில் புரண்டு ஒரு இருபது கஜமாவது புரள வேண்டும். இப்படி அரை மணி நேரம் விடாமல் சிரித்தால்தான் அந்தச் சிரிப்பு ஒருவாறு அடங்கும். அப்பேர்ப்பட்ட பயங்கரச் சிரிப்பு வந்து விடவே, என் முழு பலத்தையும் பிரயோகித்து அடக்கிப் பார்த்தேன். விசிறி மடிப்பு அங்கவஸ்திரத்தை வாயில் திணித்து, திணித்ததைக் கையால் மூடி மறைத்துக் கொண்டு, முகத்தை முகட்டை நோக்கித் திருப்பினேன். அப்படிச் செய்தும் என்னால் சமாளிக்க முடியவில்லை. 'ஏண்டா கூட்டத்தில் ஓர் ஓரமாக உட்காராமல் நடுவில் வந்து உட்கார்ந்தோம்?' என்று ஆகிவிட்டது.

தப்பி ஓடுவதற்கு வழி பார்த்துக் கொண்டிருந்த சமயத்தில், பக்கத்திலிருந்த ஓர் ஆசாமி 'எவன் எப்படிப் போனால் என்ன?' என்று இராமல், என்னைப் பார்த்து, ''என்ன அண்ணாச்சி! மேலே என்னத்தைப் பார்த்துக்கிட்டு இருக்கிறீக? உம்?'' என்று கேட்டார்.

பேசுவதற்கு வாயைத் திறந்தால், பேச்சை முந்திக் கொண்டு சிரிப்பு வெடித்து விடும் என்பது நிச்சயம். அதனால் ஒரு பதிலும் சொல்லாமல், மேலேயே பார்த்துக் கொண்டிருந்தேன். அவரோ ஒரு கேள்வியோடு விடுகிறவராகயில்லை. ''அண்ணாச்சி! அண்ணாச்சியோவ்!'' என்று சுரண்டினார் அந்த விடாக்கண்டர். நான் பார்த்தேன். இனி ஒரு செகண்டு தாமதித்தாலும் ஆபத்து. நம்மை முழுப் பைத்தியம் என்று சொல்லி, கல்யாண வீட்டில் அத்தனை பேரும் சேர்ந்து நம்மை மூளைக் கோளாறு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி விடுவார்கள் என்று பயந்து, கொஞ்சமும் யோசிக்காமல் சட்டென்று எழுந்தேன். 'விறுவிறு' என்று வெளியேறினேன். எத்தனை பேர் பார்த்தார்களோ! எத்தனை பேரை மிதித்துக் கொண்டு வெளியேறி வந்தேனோ!

பந்தலை விட்டு ஓட்டமும் நடையுமாகப் போய், ஒரு சந்தில் தலைமறைவாக நின்று கொண்டு, வாய்விட்டுச் சிரித்தேன். நல்ல வேளையாக அங்கே யாரும் எந்த அவசரக் காரியத்தை முன்னிட்டும் வரவில்லை. சிரித்து முடிந்தது. இன்னும் பாக்கி சாக்கியாகக் கொஞ்ச நஞ்சம் சிரிப்புக்கூட உள்ளே தங்கியிருக்கக்கூடாது என்று பலவந்தமாகச் சிரிப்பை வெளியே வரவழைத்துக் கொண்டு சிரித்தேன். அப்புறமும் பந்தலுக்குத் திரும்ப எனக்குத் தைரியமில்லை. அப்படியே நடந்து ஒரு வெற்றிலை பாக்குக் கடைக்குப் போய், ஒரு சோடா வாங்கிக் குடித்தேன். அங்கே ஒரு பெஞ்சு கிடந்தது. அதில் உட்கார்ந்து கடையில் தொங்கிய தினசரிப் பத்திரிகைகளின் போஸ்டர்களைத் திரும்பத் திரும்பப் பார்த்துக் கொண்டிருந்தேன். ராமலிங்கம் பிள்ளை-கோமதியம்மாள் தம்பதிகளைப் பற்றிய நினைவு கூர் மழுங்கிய பிறகுதான் அங்கிருந்து கல்யாண வீட்டுக்குத் திரும்பினேன்.

அதற்குள் முகூர்த்தச் சடங்குகள் முக்கால்வாசி முடிந்து விட்டன. பந்தலின் ஒரு மூலையில் போய் நின்றேன். முகூர்த்தம் முடிந்த பிறகு நான் ராமலிங்கம் பிள்ளை அருகில் சென்று, ''அத்தான்! எப்போ வந்தாப்லே? செளக்கியம்தானே?'' என்று §க்ஷமம் விசாரித்தேன். உடனே, சிரித்தும் விட்டேன்!

நான் சிரித்ததைப் பார்த்துக் காரணம் புரியாமல் அவர் பயந்து விட்டார். அவர் பயந்தது எனக்கு இன்னும் கொஞ்சம் அதிகமாகச் சிரிப்பு மூட்டியது. அவர் பயப்படப் பயப்பட நான் சிரிக்கவும், நான் சிரிக்கச் சிரிக்க அவர் பயப்படவுமாக இருந்தது நிலைமை.

''அத்தான், ஏன் சிரிக்கிறீக?'' என்று கேட்டார் ராமலிங்கம் பிள்ளை.

''ஒண்ணுமில்லே அத்தான். அன்னைக்கி ஒங்க வீட்டிலே நடந்தது யாவுகத்துக்கு வந்துட்டது; வேறொண்ணுமில்லே!''

''போங்க அத்தான், ஒங்களுக்கு எல்லாம் வேடிக்கைதான்'' என்று அவர் கோபத்தைச் சிறிது காட்டிக் கொண்டார்.

இருவரும் வெளியே வந்தோம். பிறகு ஒன்றாகவே உட்கார்ந்து சாப்பிட்டோம். ஒன்றாகவே வெற்றிலை பாக்கு போட்டுக் கொண்டோம். ஏறக்குறைய நாள் முழுவதுமே அவரும் நானும் இணை பிரியவில்லை. திடீர் திடீரென்று எனக்குச் சிறிய சிரிப்போ, பெரிய சிரிப்போ வந்தாலும் அவர் அவ்வளவாகக் கோபித்துக் கொள்ளவில்லை.

இரவு ஒன்பது மணிக்குப் பட்டணப் பிரவேசம். நானும் ராமலிங்கம் பிள்ளையும் ஒன்றாகவே ஊர்வலத்தில் நடந்து வந்தோம். கடைத் தெருவின் ஒரு பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, ஒரு மரத்தைப் பார்த்தேன். உடனே ராமலிங்கம் பிள்ளையோடு கொஞ்சம் விளையாட வேண்டும் என்று எனக்கு ஆசை உண்டாகிவிட்டது.

''அத்தான்! போன மாசம் பேப்பர்லே, 'கோவில்பட்டி கடைத்தெருவில் பிணம் தொங்கியது. மரத்திலே சுருக்கிட்டுத் தற்கொலை'ன்னு ஒரு சமாசாரம் வந்ததை நீங்களும் பார்த்திருப்பிகளே: அந்த மரம் இதுதான். பயல் நாக்குத் தள்ளி முழித்த கண் முழித்த வாக்கிலே செத்துத் தொங்கினதை நான் கண்ணாலே பார்த்தேன்'' என்றேன்.

அவ்வளவுதான் மரத்தைப் பார்த்துக் கொண்டிருந்த ராமலிங்கம் பிள்ளை, ''என்னது?'' என்று கேட்டுக்கொண்டே உடனடியாகத் தலையைக் கீழே போட்டார். குனிந்த வாக்கிலேயே, ''என்ன அத்தான், இதையெல்லாம் ஒங்களை யாரு கேட்டா?'' என்று என்னைக் கோபித்துக் கொண்டார். ''விறு விறுன்னு வாங்க. அந்தப் பக்கம் போயிருவோம்' என்று என்னைக் கையைப் பிடித்துத் 'தரதர' என்று இழுத்துக் கொண்டு போனார். அது அந்தக் காலத்து வாத்தியார்கள், பள்ளிக்கூடத்துக்கு வர மறுக்கும் பையன்களை இழுத்துக் கொண்டு போனது போலிருந்தது. உடும்புப் பிடியாகப் பிடித்திழுத்துக் கொண்டு போனார். ஒரு அரை பர்லாங் தூரம் போன பிறகுதான் கையை விட்டார்.

''அத்தான்! இன்னும் பத்து நாளைக்குக் கைக்கு விளக்கெண்ணெய் போடணும் போலிருக்கே! இப்பிடியா பிடிக்கிறது?'' என்று சொன்னேன்.

அவர் என்னை ஏறிட்டுப் பார்த்தார்.

''அத்தான், நீங்க ஏன் மொதல்லயே சொல்லல்லே?'' என்று கேட்டார்.

''எதை?''

''அந்த மரத்தைப் பத்தின சங்கதியைத்தான்.''

''இப்போ என்ன, பேயா அடிச்சிட்டது? நீங்க என்ன அத்தான் இப்பிடிப் பயப்படுறீக? ஆயிரம் பேர் நடந்து வர்றாக; பத்துப் பதினைஞ்சு லைட் வேறே எரியுது, பட்டப்பகல் மாதிரி! என்ன அத்தான் பயம்!''

''ஹ¥ம்! அவுகளுக்கு அதுதான் அந்த மரம்னு தெரியாது. தெரிஞ்சிருந்தாவில்லே இருக்கு கதை!''

''தெரிஞ்சிருந்தா? ஒங்களைப் போலத் தப்புனோம், பொளைச்சோம்னு ஓடுவாங்கன்னு நெனைச்சிகளோ? சும்மா கெடங்க அத்தான். கேட்டா ஊர் சிரிக்கப் போகுது!''

ராமலிங்கம் பிள்ளைக்கு நான் சொன்னது ஒரு சமாதானமாகுமா? இல்லை, தைரியம்தான் ஆகுமா?

அவர் பயம் இருக்க இருக்க அதிகமாகிக் கொண்டு வந்தது. அந்த மரத்தடியில் தாம் பயந்தது மோசமான பின் விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்று நினைத்து ஒரேயடியாக அவர் பீதிக்குள்ளாகிவிட்டார். எங்காவது விபூதி வாங்கிப் பூசிக் கொள்ள வேண்டும் என்று துடித்தார். என்னையும் அங்கே நிற்க விடவில்லை. நேரே கல்யாண வீட்டை நோக்கி இழுத்துக் கொண்டு சென்றார். அவரைத் தொடர்ந்து, பிடிபட்ட கைதி மாதிரி நான் போய்க் கொண்டிருந்தேன். உண்மையைச் சொல்லி அவருடைய பயத்தைப் போக்கி விட நினைத்து, ''அத்தான், நான் சும்மா விளையாட்டுக்குச் சொன்னேன்! அது அந்த மரமில்லை; வேற மரம்'' என்றேன்.

நான் இப்படிச் சொன்னது பெரிய வம்பாகப் போய் விட்டது. 'பிள்ளையார் பிடிக்கக் குரங்காய் முடிந்த' கதைதான். ராமலிங்கம் பிள்ளை இன்னும் அதிகமாகத் தலையைக் குனிந்து கொண்டு ''வேற மரமா? அது எங்கேயிருக்கு?'' என்று கேட்டார். என் கையையும் பிடித்துக் கொண்டார். ஒவ்வொரு மரத்தின் அடிப்பாகத்தையும் பார்க்கும்போதெல்லாம் ''இந்த மரமா?'', ''இந்த மரமா?'' என்று வீடு வரையிலும் கேட்டுக் கொண்டே வந்தார். வீட்டுக்கு வந்துதான் என் கையை விட்டார்.

கல்யாண வீட்டில் நேரே தம் மனைவியைத் தேடிப் போனார். அவளைப் பார்த்த மாத்திரத்தில், ''சாவிக் கொத்து எங்கே? எங்கே வச்சிருக்கே? கொண்டா இப்பிடி, உம்... சீக்கிரம்!'' என்று விரட்டினார்.

மனைவி நடுங்கி விட்டாள். ''என்ன? என்ன? எங்கே போனீக?'' என்று கேட்டுக் கொண்டே சாவிக்கொத்தைக் கொடுத்தாள்.

இரும்புச் சாவிக்கொத்தை இறுகப் பிடித்துக் கொண்டு என்னோடு வந்து திண்ணையில் உட்கார்ந்தார் அவர். இரும்பு, பேயை நெருங்க விடாதாமே!

''அத்தான், சாவி பத்திரம்! பிடிக்கிற பிடியிலே சாவி நசுங்கித் தகடாயிறாம!''

''சும்மா கேலிதானா? நீங்களும் பயந்திருந்தாத் தெரியும்'' என்றார் ராமலிங்கம் பிள்ளை.

அப்போது விளக்கு வெளிச்சத்தில் அவரைக் கவனித்துப் பார்த்தேன். முகத்தில் இருள் படர்ந்திருந்தது. விழிகள் இரண்டும் வட்டமாகிக் கரு விழிகள் நடு மையத்தில் வந்து நின்றன. சுற்றிலும் வெள்ளை விழிகளில் அசாதாரணமான ஒரு வெளுப்பு. உடம்பெல்லாம் வியர்வை. கை நடுக்கத்தில் சாவிகள் சல சலத்துக் கொண்டிருந்தன.

ஆசாமி ஒரேயடியாகப் பயந்துவிட்டார் என்பதைத் தெரிந்து கொண்டேன். அவர் முகத்தைப் பார்க்கப் பார்க்க எனக்குப் பயமாகயிருந்தது. 'இனி கேலி செய்தால் மனுஷன் புலம்பத் தொடங்கி விடுவான்; இல்லையென்றால் இருதயத் துடிப்பு நின்று விடும்' என்று நான் பயந்தேன். அதனால் வேடிக்கைப் பேச்சை உடனே நிறுத்திவிட்டேன்.

பட்டணப் பிரவேசம் திரும்பி வரும்போது மணி பன்னிரண்டு ஆகிவிட்டது. எல்லோரும் படுத்துறங்கும் போது மணி ஒன்று. நானும் ராமலிங்கம் பிள்ளையும் படுத்திருந்த திண்ணையில் வேறு யார் யாரோ, நெருக்கியடித்துக் கொண்டு படுத்திருந்தார்கள். என் கால்மாட்டில் திண்ணைக்குக் கீழே வைக்கப்பட்டிருந்த பெட்ரோமாக்ஸ் விளக்கு 'கஸ்ஸ்ஸ்ஸ்' என்று ஒலி எழுப்பிக் கொண்டிருந்தது. யார் யார் தூங்கினார்களோ எனக்குத் தெரியாது. ராமலிங்கம் பிள்ளையின் கண்கள் மூடியிருந்தன. தூங்கினாரோ, தூங்கவில்லையோ? எனக்கு விளக்கு வெளிச்சத்தில் தூங்க முடியவில்லை. கண்களை மூடினாலும் ரத்தப் படலம் போல் வெளிச்சம் தெரிந்தது.

ராமலிங்கம் பிள்ளையைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டே படுத்திருந்தேன். 'ஒரு மனிதன் இப்படியும் பயப்படுவானா?' என்று அங்கலாய்த்தேன். அப்போதுதான் நான் எவ்வளவு பெரிய வீரன் என்பது ஞாபகத்திற்கு வந்தது. கிணற்றில் மிதக்கும் பிரேதம், சுடுகாட்டில் எரியும் பிணம், நடுக்காட்டு ஐயன் கோயில், பேய் பிடித்துத் தலை விரித்தாடும் கிராமத்துப் பெண்கள், இரவு நேரத்தில் தனி வழியில் நடக்கும்போது ஊளையிடும் நரிகள்... இப்படி எத்தனையோ நான் பார்த்திருக்கிறேன். ஐந்தாறு வருஷங்களுக்கு முன் ஒரு இரவு பத்து மணி வண்டியில் போய் காட்டு ஸ்டேஷனில் இறங்கி, கும்மிருட்டில் என் கிராமத்தை நோக்கி ஒற்றையடிப் பாதையில் நான் தனியாக நடந்து கொண்டிருந்தபோது, எதிரே தலைவிரி கோலமாகப் பிறந்த மேனியில் கன்னங்கரேல் என்று நடந்து வந்த ஒரு பைத்தியக்காரியைப் பார்த்துக் கூடப் பயப்படாமல் வந்தவன் நான்.....!

என் மனோ தைரியத்தை நினைத்துப் பெருமைப்பட்டுக் கொண்ட பின், ஆறு மாதங்களுக்கு முன் சங்கரன் கோவிலில் நான் ராமலிங்கம் பிள்ளை வீட்டில் தங்கியிருந்தபோது இரவில் நடந்த நாடகத்தை மீண்டும் நினைத்துப் பார்த்தேன்.

இரவு ஒன்பது மணியிருக்கும். சாப்பிட்டு விட்டு நானும் ராமலிங்கம் பிள்ளையும் மொட்டை மாடிக்குப் போய்க் கட்டிலைப் போட்டு உட்கார்ந்து கொண்டு பேசிக் கொண்டிருந்தோம். தெருவில் மின்சார விளக்குகள எரிந்து கொண்டிருந்தன. வீட்டுக்கு மேற்கே ஒரு வேப்ப மரம். அந்த மரத்தின் நிழல் பக்கத்து வீட்டு மாடியறையின் வெள்ளைச் சுவரில் விழுந்து அசைந்து கொண்டிருந்தது, பேசிக் கொண்டேயிருந்த ராமலிங்கம் பிள்ளை, திடீரென்று வீடே கிடுகிடுக்க, ''அத்தான்!'' என்று ஒரு பயங்கரக் கூப்பாடு போட்டார்.

நான் பதறிப்போய், ''என்ன? என்ன?'' என்று கேட்டேன்.

''அந்தா, அங்கே சொவத்திலே பாருங்க அத்தான்'' என்று ஓலமிட்டு விட்டு இரண்டு கண்களையும் உள்ளங்கையால் பொத்திக் கொண்டார்.

''எந்தச் சொவத்திலே அத்தான்?''

குனிந்த வாக்கிலே கையைத் தூக்கிப் பக்கத்து வீட்டு மாடிச் சுவரைக் காட்டினார்.

''சொவர் இருக்கு. அங்கே என்ன?''

''நல்லாப் பாருங்க. வாயைத் தொறந்த வாக்கிலே.....!'' மேற்கொண்டு அவரால் பேச முடியவில்லை.

நான் கவனித்துப் பார்த்தேன். சுவரில் நிழல்தான் தெரிந்தது. தெருவிலிருக்கும் வேப்ப மரத்தின் நிழல், நிழலின் ஒரு பகுதி, பிரம்மாண்டமான மூக்குள்ள ஒருவன் வாயை 'ஆ' என்று திறந்து வைத்துக் கொண்டிருப்பது போல் காட்சியளித்தது. வேப்ப மரத்தையும் திரும்பிப் பார்த்தேன்.

''அத்தான்! அது மரத்து நிழல்தான் அத்தான்'' என்று சொன்னேன்.

''அது எனக்குத் தெரியாமலா இருக்கு?''

''அப்புறம் என்ன?''

''மரத்து நிழல் என்பதற்காகப் பயப்படாமலிருக்க முடியுமா!''

நான் என்ன சொல்லியும் பிரயோஜனப்படவில்லை. தம்மைக் கீழே அழைத்துக் கொண்டு போகும்படி கேட்டுக் கொண்டார். நானும் கைத்தாங்கலாய்ப் பிடித்துக் கொண்டு ஆளைக் கீழே கொண்டு வந்து சேர்த்தேன்.

''கோமதி'' என்று மனைவியை அழைத்தார். தமக்கு உடனே விபூதி பூசச் சொன்னார். அவளும் வேகமாக விபூதியைப் பூசிவிட்டு, அங்கிருந்து ஓடி, முக்கால் அடி நீளமுள்ள ஒரு பெரிய இரும்புச் சாவியை எடுத்துக் கொண்டு வந்து அவர் கையில் திணித்தாள். அப்பொழுதும் அவர் கண்களைத் திறக்கவில்லை. இந்தப் பைத்தியக்காரத்தனத்தைப் பார்த்து எனக்குக் கோபம்தான் வந்தது. நடந்த கதையைக் கோமதியம்மாளிடம் சொன்னேன். ராமலிங்கம் பிள்ளையோ ''சொல்ல வேண்டாம், சொல்ல வேண்டாம்'' என்று என்னைப் பத்துப் பதினைந்து தடவை தடுத்து விட்டார். ஆனால் நான் அவருடைய தடையை மீறிக் கதையைச் சொல்லிவிட்டேன். சொல்லி முடித்தேனோ இல்லையோ, கோமதியம்மாள் ஒரு மாதிரி விழித்துப் பார்த்தாள். ''முருகா! முருகா!'' என்று சொல்லிக் கொண்டே ஓடிப்போய் ஓர் இரும்புக் கரண்டியை எடுத்துத் தன் கையில் வைத்துக் கொண்டாள்.

அன்றிரவு நான் ராமலிங்கம் பிள்ளைக்குத் துணையாகப் பக்கத்திலேயே படுத்தேன். எவ்வளவு நேரமாயிற்றோ தெரியாது. இருந்தாற்போல் இருந்து அபாயச் சங்கு அலறுவது போல் ஒரு சத்தம் கேட்டது. எனக்கு உதறல் எடுத்துவிட்டது. என்ன, ஏது என்று புரியாமல் விளக்கை ஏற்றச் சொன்னேன். ராமலிங்கம் பிள்ளையோ வாயையும் திறக்கவில்லை; கண்ணையும் திறக்கவில்லை. அரிக்கன் விளக்கு எங்கேயிருக்கிறது என்று எனக்கு எப்படித் தெரியும்?

''அத்தான்! அத்தான்!'' என்று பலமாகக் கத்தினேன். கத்திய மாத்திரத்தில் சங்கொலி நின்றுவிட்டது. கோமதியம்மாளும் ''யாரு?'' என்று கேட்டாள்.

''நான்தான், என்ன சத்தம்?''

''சத்தமா?'' என்று அம்மாள் பதில் கேள்வி போட்டாள்.

அப்போதுதான் ராமலிங்கம் பிள்ளை வாயைத் திறந்து, ''அவதான் பொலம்பினா அத்தான், அப்படித்தான் பொலம்புவா. நீங்க பயப்படாதீங்க!'' என்று விஷயத்தை விளக்கி எனக்கு அபயம் அளித்தார்.

மறுநாள் காலையில் தம்பதிகளின் பயந்தாங்கொள்ளித்தனத்தை நான் எவ்வளவோ கடிந்து கொண்டேன். என்ன சொல்லியும் அவர்கள் பயத்தைக் கைவிடத் தயாராகயில்லை. மறுநாள் இரவும் துணைக்கு அங்கேயே என்னைத் தங்கச் சொன்னார்கள். நானும் ஒப்புக்கொண்டேன்.

அந்தச் சம்பவம்தான் இன்று காலையில் மணப் பந்தலில் எனக்கு ஞாபகத்துக்கு வந்துவிட்டது. உடனே பந்தலை விட்டு வெளியே ஓடினேன். சந்தில் போய் நின்று கொண்டு சிரித்தேன். ஆனால் இப்பொழுது, விளக்கு வெளிச்சத்தில் படுத்துக் கொண்டிருந்த இந்தச் சமயத்தில், ஏனோ எனக்குச் சிரிப்பு வரவேயில்லை. இது மர்மமாகவுமிருந்தது. பயப்பட வேண்டிய விஷயமாகவும் இருந்தது. சிறிது நேரத்தில் தூக்கத்திலேயே பற்களை ''நறநற''வென்று கடித்தார். அவரது முகத் தோற்றத்தில் ஏற்பட்டிருந்த விகாரம் என்னை அப்படியே உலுக்கிவிட்டது. வர்ணிக்க முடியாத கோரம்! பாதி திறந்திருந்த ஒரு கண்ணின் வெள்ளை விழி வெளியே பிதுங்கிக் கொண்டிருந்தது. பேய்க்குப் பயந்த அந்த ஆசாமி எனக்குப் பெரிய பேயாக ஆகிவிட்டார்! மனக் கலவரத்தை உதறுவதற்காகத் திரும்பிப் படுத்தேன். அப்புறம் எப்படியோ அயர்ந்து தூங்கிவிட்டேன் போலிருக்கிறது...

தூக்கத்திலே என்னென்னவோ பயங்கரக் கனவுகள். எங்கெங்கோ பார்த்த பிரேதங்கள், இருட்டுப் பாதையில் நடந்து வந்த பைத்தியக்காரி, சங்கரன்கோயில் வேப்ப மரத்தின் நிழல், பற்களைக் கடிக்கும்போது ராமலிங்கம் பிள்ளை காட்டிய முக பாவம்... பயத்தினால் தூக்கத்திலேயே பெருங் கூப்பாடு போட்டு விட்டேன். நான் கண் விழித்துப் பார்த்தபோது...

''என்ன? ஏன் இப்படி ஐயோ ஐயோன்னு கூப்பாடு போட்டீங்க?'' என்று பத்துப் பன்னிரண்டு பேர் என்னைச் சூழ்ந்து கொண்டு ஏக காலத்தில் கேட்டார்கள். அவர்களுக்குப் பின்னால் கல்யாணக்கூட்டம் முழுவதுமே நின்று கொண்டிருந்தது, ஆணும் பெண்ணுமாக.

அத்தனை பேரிலும் இரண்டே இரண்டு ஆத்மாக்களை மட்டும் காணவில்லை. ஒருவர், ராமலிங்கம் பிள்ளை. அவர் வேண்டுமென்றே வெள்ளை விழி உட்பட இரண்டு கண்களையும் இறுக மூடிக்கொண்டு படுத்துக் கிடப்பதைப் பார்த்தேன், மற்றொரு ஆத்மா, அவருடைய தர்மபத்தினி. அவள் எங்கே பதுங்கிக் கிடந்தாளோ?

எனக்குப் பூரண விழிப்பு ஏற்பட்ட பிறகு பக்கத்து அறையிலிருந்து திடீரென்று ஒரு ஒலி கிளம்பியது. பின்பு சங்கரன்கோயிலில் கேட்ட அதே அபாயச் சங்கொலி! அவ்வளவுதான். கூட்டம் முழுவதும் என்னை விட்டுவிட்டு அந்தப் பக்கம் திரும்பிவிட்டது. என் நாடகம் ஒருவாறு முடிந்து விட்டதால் கோமதியம்மாளின் நாடகத்தைப் பார்க்கப் போய் விட்டார்கள்!

கண்களை மூடிக்கொண்டு கிடக்கும் ராமலிங்கம் பிள்ளையைப் பார்த்து ''அத்தான்!'' என்று கூப்பிட்டேன்.

அவர் கண்களைத் திறக்காமலே, ''பயப்படாதீங்க அத்தான். அவ அப்படித்தான் பொலம்புவா!'' என்றார். ஒரு நிமிஷம் மெளனமாக இருந்தார். அப்புறம் லேசாகச் சிரித்துக் கொண்டே, ''நீங்க என்ன இப்படிப் பயப்படுறீக? மனசிலே தைரியம் வேண்டாம்? நல்லாப் பயந்தீக போங்க!'' என்று மிக மிக எகத்தாளமாகச் சொல்லிவிட்டு என் கையையும் தற்காப்புக்காகப் பிடித்துக் கொண்டார்!

கு. அழகிரிசாமி

© TamilOnline.com