ஏன்டி இவளே, அன்னம்', உனக்கு 20 வயசு ஆன உடனே, எவ்வளவு பறந்து கட்டிண்டு ஜாதகமெல்லாம் பாக்க ஆரம்பிச்சுட்டோம் தெரியுமா..? நீ என்னடான்னா, சித்தகூட அசஞ்சு குடுக்காம, குத்துக்கல்லாட்டம் உக்காந்துண்டு இருக்கியே... நன்னாவா இருக்கு..? நானா இருந்தா எவ்வளவு ஜாதகம் பாத்திருப்பேன்..? எத்தன உறவுக்கார மனுஷாகிட்ட கேட்டிருப்பேன்.!
பூரணிக்கு, பரிபூர்ணமா, கார்திகையோட 24 வயசு பூர்த்தியாயிடுத்து..! நீ அவ கல்யாணத்தப் பத்தி, யோசனைகூட பண்றாப்பல தெரியல்லையே..! எப்படி இவ்வளவு மெத்தனமா இருக்க நீ..? - என்னுடைய அம்மா, தன்னுடைய நித்திய கடமையை மிகவும் சிரத்தையாக பண்ணிக்கொண்டிருந்தாள். என்னுடைய அம்மாவுக்கு பிடித்த, கடைக்குட்டி நான் எங்கள் வீட்டில்.. அதனாலேயே, அம்மாவுக்கு, என் விஷயங்களில் அதிக அக்கறை.., கவலையெல்லாம்..!
என் அம்மாவின், இந்த தினப்படி பாட்டு, என் குழந்தைகள் படிப்பதற்கும், என்னவருக்கும், எங்கள் 'டேஷண்ட்' நாய் குட்டிகளுக்கும், அத்தியாவசியமான ஒன்று.
வீட்டில் உள்ள ரெ·ரிஜிரேட்டர், ஏர்-கண்டிஷனர், இவைகளில், மந்தர ஸ்தாயி ஒத்து மாதிரி, இந்த அம்மாவின், கல்யாண பாட்டும், எங்கள் கலி·போர்னியா வாழ்கையின், அத்தியாவசியமான ஸ்ருதி சேர்க்கைதான்...!
என் மகள் பூரணி, பேருக்கேத்த மாதிரி எல்லாவிதத்திலும், ஒரு முழுமையான பெண். நல்ல அழகுடன், நல்ல படிப்பும் சேர்ந்து, தகுதியுள்ள வரன்களெல்லோரையும், ஏக்கப் பார்வை பார்க்கவைத்து, பெருமூச்சு விட வைத்துக்கொண்டிருந்தாள்.
அவள் பெயர், திரிந்து, சுருங்கி, 'பூரண்' ஆகி, (நல்லவேளை.. பூரான் ஆகவில்லை!), பின்னர் 'பொன்னி'யாகி' (ஆங்கில உச்சரிப்பிலே இருக்கவேண்டும்), ஒருவழியாக 'போனி'' (குதிரைக்குட்டி) என்ற அளவில் திரிபு நின்றிருக்கிறது.
இந்த பாட்டியின், விடாக்கண்ட நச்சரிப்பையெல்லாம் கொஞ்சம்கூட காதில் போட்டுக் கொள்ளாமல், பூரணியும், குதிரைக்குட்டி மாதிரி, சுதந்திரமாக துள்ளி குதித்துக் வளைய வந்து கொண்டிருந்தாள்.
அவளது, இந்தப் போக்கு, சாதாரணமாக, இவற்றையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளாத, எனக்கும், என்னவருக்குமே சற்று கவலை அளித்தது..!
என் பையனைப் பற்றியும் கொஞ்சம் சொல்லித்தான் ஆகவேண்டும். 'சஞ்சய்' என்னும் பெயர், பலவித உச்சரிப்பு சிதைவுகளுக்கு, ஆளாகி, ஒருவழியாக, தற்சமயம், 'சன்னி'-யில் நிற்கிறது. இதோ, அவனைப் பற்றிப் பேசும்போதே...அவன் தோட்டத்தில் உட்கார்ந்து கொண்டிருக்கும் அழகைப் பாருங்களேன்...
தன்னுடைய பச்சைக்குத்திய (tattooed) முதுகை சூரிய வெளிச்சத்தில், வறுத்துக் கொண்டிருந்தான்.. சும்மா சொல்லக்கூடாது.. பெண்களைக் கடைக்கண் பார்வையிலேயே, பெருமூச்சு விடச் செய்யக்கூடிய நல்ல பர்சனாலிட்டிதான்..
அவனுடைய முடி, பலவித சாயங்களைப் பூசிக்கொண்டு, பலவிதமான உயரங்களில் கூம்புகளைக் கொண்டு, முள்ளம் பன்றி முதுகு மாதிரி இருந்தது... கொஞ்சம் கௌரவமாகச் சொல்லவேணுமானால், பல ஸான்பிரான்ஸிஸ்கோவின், பேங்க் ஆ·ப் அமெரிக்கா கட்டங்களை விதவிதமான உயரங்களில்,நெருக்கமாகக் கட்டியதுபோல இருந்தது..!
என்னுடைய அம்மாவுக்கு, அவன் மிகவும் செல்லம். ஆகையால், அவளுடைய கண்ணுக்கு, அவன் எப்போதும், ராஜா குட்டிதான்..!
தவிர... 'என்ன இருந்தாலும், பையன்களைப் பத்திக் கவலை படவேணாம்டி' என்பது அம்மாவின் திருவாக்கு.... பொல்லாத கிழவி..!
இதோ, என் அம்மா, வாசலில் போட்டிருக்கும் பார்க் பென்ச்சில் உட்கார்ந்து கொண்டு தன்னுடைய செல்லப் பேரனுக்கு, 'ஸ்வெட்டர்' பின்னிக்கொண்டிருக்கிறாள்..! எங்களுடைய, நாய்க்குட்டிகள், ரஸ்டியும், டஸ்டியும்.. (ஆஹா.. என்ன அற்புதமான பெயர்கள்... துரு, தூசி.. என் பெண்ணுக்கு, அவார்ட்தான் தரவேணும்..!) அம்மாவின் காலடியில் உட்கார்ந்து கொண்டு, அவளுடைய கருணைமிகுந்த கொஞ்சலுக்காக தவமிருக்கின்றன.
அம்மாவின், ஒவ்வொரு வாக்கியமும், மிகுந்த ஆணித்தரமான, ஆண்டாண்டுகாலமாக ஊறிப்போன நம்பிக்கைகளிலிருந்து வந்தவை..!
'சே! என்ன கேவலம்..! எவ்வளவு அவமானம்..! கல்யாணம், குடும்பங்கறது எல்லாம் கிள்ளுக்கீரையான்னா போச்சு எல்லாருக்கும்..! எத்தன பேரு இப்பல்லாம் டிவோர்ஸ் பண்றா? எங்க நாள்ளல்லாம்..பொண்களுக்கு, அடக்கம், பொறுமையெல்லாம் சொல்லி குடுத்து, இதோ.. இவன்தான்டி, உன்னோட ஆத்துக்காரன்னு சொல்லிட்டா.. ஜன்மத்துக்கும், அவா சொல்றத கேட்டுண்டு, அவாகிட்டயே எல்லாம் கத்துண்டு, சந்தோஷமா இருந்தோம்.. எங்களுக்கென்ன ஆஸ்திக்கு கொறைவா.. ஆசைக்குத்தான் கொறைவா..! நன்னா உங்களையெல்லாம் பெத்துண்டு, வளர்த்து, ஆளாக்கி, படிக்கவச்சு, ஒழுங்கா கல்யாணம் கொடுக்கலியான்னா..?
'அம்மா... காலம் ரொம்ப 'சேன்ஞ்' ஆயிடுத்தும்மா..! இப்போ எல்லா பெண்களும், வேலைக்குப் போறா..! நிறைய பேர்களை 'மீட்' பண்றா..! நான் என் அம்மாவின் அங்கலாய்ப்புக்கு, எதிர் வாதம் செய்ய ஆரம்பித்தை, அவள் காதிலேயே போட்டுக் கொள்ளவில்லை..! என்னுடைய சங்கடத்தைப் பார்த்து, விஷமச் சிரிப்பு சிரித்துக்கொண்டிருக்கிறாள் என் பெண்ணரசி..!
என்னுடைய மனதளவில், நான் மிகவும் தெளிவாகத்தான் இருக்கிறேன்..! என்னுடைய குழந்தைகள் மேல், என்னுடைய எண்ணங்களை நான் 'இம்போஸ்' (impose) செய்வதாக இல்லை..! ஒரு உயர்வான சமுதாயம் உருவாக, 'ஸிந்தஸிஸ்' (synthesis) - அதாவது, சமூகத்தில் மற்றவர்களோடு, சேர்க்கை கட்டாயம் தேவை..
என் குழந்தைகள், ஒரு 'ஜேக்' அல்லது 'ஜேன்-ஐ' மணந்து கொண்டாலும் பரவாயில்லை..! நான் ஒரு, 'ப்ராக்டிகல்' அம்மாவாகத்தான் இருக்க விரும்புகிறேன்.. நினைவு தெரிந்த நாளிலிருந்து, இந்த குழந்தைகள் வளர்ந்த சூழ்நிலையே வேறு.. பழகிய மனிதர்களும் இந்த ஊர் மனிதர்கள்தான் பெரும்பாலும்..!
என்னைப் பொறுத்தவரையில், ஒரே, குலம், கோத்திரம், ஜாதின்னு, பார்த்து, கல்யாணம் பண்ணிவைப்பதெல்லாம், எப்படி அடுத்தவருடைய பழக்க வழக்கங்கள், மொழி, உணவு பழக்கங்கள் எல்லாம், தம்முடைய பழக்க வழக்கங்களோடு ஒத்துப் போகுமோ என்னும் கவலையினால், அச்சத்தினால்தான்.
மதம் விட்டுக் கல்யாணங்களில், முக்கியமான பிரச்சினை என்னவென்றால், பின்னால் பிறக்கப்போகும் குழந்தைகளுக்கு, எந்த மத நம்பிக்கையை வளர்ப்பது போன்றவைதான்.
புறச்சின்னங்கள், வழிபாட்டு முறைகள் வேறுபட்டு இருக்கலாம். ஆனால், எந்த அளவுக்கு, நம் செயல்களின் மூலம், கடவுளுக்கு அருகில் இருக்கிறோம், மற்றும், எந்த அளவுக்கு, நல்ல மனிதரை அடையாளம் காட்டக்கூடிய குணங்களை வளர்த்துக் கொண்டிருக்கிறோம் என்பவையல்லவா முக்கியம்..?
நம் சரித்திரத்திலேயே, அலெக்ஸான்டரின் காலம்முதல், அவுரங்கசீப் காலம் வரை, எத்தனை நாட்டவர், நம்மண்ணை, தங்கள் சொந்த இடமாக்கிக் கொண்டு, இந்த மண்ணின், மக்களையே மணந்து, நாளடைவில், இந்தியர்களாகவே மாறிவிட்டிருக்கின்றனர்...? எதுவுமே காலப்போக்கில், ஒத்துக் கொள்ளக் கூடியதாகிவிடும், மனமிருந்தால்..!
மேற்கத்திய கலாச்சாரம், பல்வேறு நாடுகளின், நாட்டவரின் கலாச்சாரங்களின், பழக்க வழக்கங்களின் கலவைதான்..! நம்மில் பலரும், இந் நாடுதரும், பலவிதமான வாய்ப்புகளையும், வாழ்க்கைச் சலுகைகளையும், விரும்பி வந்து, இவ்வாழ்க்கையை ஏற்றுக் கொண்டுள்ளோம்..!
இவ்வாழ்க்கையின், கஷ்ட, நஷ்டங்களையும், நன்மை, தீமைகளையும், ஒரே விதமாக எடுத்துக் கொள்ளும் பக்குவத்தை நாம்தான் வளர்த்துக் கொள்ளவேண்டும் என்று நினைக்கிறேன்.
சமீபத்தில், நான் இந்தியாவுக்கு செல்லும் போது, உடன் பயணித்த ஓர் அமெரிக்க இளைஞனின் கண்களில் இருந்த உற்சாகத்தையும், ஆர்வத்தையும் பார்த்தேன். இது அவ்விளஞனின், முதல் இந்தியப் பயணம்..! வழி நெடுக, பக்தியிலிருந்து, பாலிடிக்ஸ் வரை, பலவித விஷயங்களை அலசித் தள்ளினோம்..!
அந்த அமெரிக்க இளைஞனின் கண்கள் பனித்து, இமயத்தைப் பற்றியும், மதுரை, திருவண்ணாமலை போன்ற திருத்தலங்களைப் பற்றி பேசும் போது கண்களில் மின்னிய ஆர்வத்தை கண்டபோது, அதே இளைஞன் சைவ சித்தாந்தத்தை, அக்குவேறாக, ஆணிவேறாக அலசி, நாயன்மார்களின் பக்தி இயக்கம், திருமூலரின் திருமந்திரம் என்று, மேற்கோள் காட்டி பேசுவதைக் கேட்டபோது, நான் ஒர் அயல் நாட்டவள் நிலையில் இருப்பதை உணர்ந்தேன்..!
உணர்வால், அவ்விளைஞன் இந்தியனாக இருப்பதைத்தான் பார்த்தேன்..!
நான், என்னுடைய இந்தியாவை மிகவும் நேசிக்கிறேன். ஆனால், இந்தியாவை நினைத்த மாத்திரத்தில் என் கண்கள் பனிக்கவில்லை..! இந்திய மண்ணில் சராசரி, மனிதனான எனக்கு எவ்வளவு வசதிக்குறைவுகள் என்பதைத்தான் என் மனப் சிந்திக்கிறதே தவிர, மற்றவற்றைப் பற்றி கொஞ்சமும், கவலையில்லை..!
எனக்கு, ஒரு நிமிடம் தோன்றியது, அந்த இளைஞனை, கொஞ்சம் தண்ணீர், மற்றும், குளியல், கழிப்பிட வசதிகளைப் பற்றி, எச்சரிக்கை செய்யவேண்டுமென்று.. ஆனால், இந்த இளைஞன், மேலோட்டமாக நாம் பார்க்கும், குற்றம் சொல்லும், விஷயங்களுக்கு அப்பால் உள்ள விஷயங்களில் ஆர்வம் உள்ளவன்...
என்னுடைய குழந்தைகளை, நான் கட்டுப்படுத்தப் போவதில்லை. அவர்களுக்கு, தேவையான படிப்பு இருக்கிறது.. சிந்திக்கும் ஆற்றலும் உள்ளது..! நல்லது, கெட்டது தெரிந்து, சரியான முடிவுகளை எடுக்கக்கூடிய திறமையும் இருக்கிறது...!
என் குழந்தை ஓர் இந்தியனைப் திருமணம் செய்து கொள்வதானால், கொஞ்சமாவது, இந்தியாவில் பிடிப்பு இருக்கும் இளைஞனை மணக்கவேண்டுமென்று, விரும்புகிறேன்..
அவள் வேறு ஒரு நாட்டவரையோ, அல்லது, இனத்தவரையோ மணப்பது என்று தீர்மானித்து விட்டால், நான் வழிப்பயணத்தில் சந்தித்த இளைஞனைப் போலிருக்க வேண்டுமென்று, விரும்புகிறேன்.
என்னைப் பொறுத்த வரை, என் குழந்தைகள், நல்ல மருமகனையோ, மருமகளயோ கொண்டுவந்தால், அதுமட்டுமே போதுமானது...!
என் குழந்தைகளுக்கு, போலியாக இருக்கக் கற்றுக் கொடுக்கவில்லை, நினைத்ததை சுதந்திரமாகப் பேசுவதற்கும், சுயமாக சிந்திப்பதற்கும் சொல்லிக் கொடுத்துள்ளேன்..!
அவர்கள் சுதந்திரமாக, தங்கள் வாழ்க்கையை நன்றாக நடத்துவார்கள். |