மென்பொருள் பூங்காவுக்கு தமிழக அரசு மேலும் மானியம்
புத்தாண்டு தினமான ஜனவரி 1-ம் தேதியன்று இந்திய மென்பொருள் தொழில்நுட்பப் பூங்காத் திட்ட (எஸ்.டி.பி.ஐ.) அமைப்புக்கு, தமிழக அரசு மேலும் ரூ. 1.50 லட்சத்தை மானியமாக அளித்தது.

கிண்டியில் உள்ள டைடெல் பூங்காவிலும் திருநெல்வேலியில் அமைக்கப்படும் மற்றொரு தகவல் தொழில்நுட்பப் பூங்காவிலும் அதிவேகத் தொலைத்தொடர்பு லைன்களை அமைப்பதற்காக இந்த மானியத்தை தமிழக அரசு அளித்துள்ளது.

மதுரை மற்றும் திருச்சியில், அதிவேகத் தொலைத்தொடர்பு லைன்கள் கிடைக்கச் செய்வதற்கு வசதியாக, தரைவழி செயற்கைக்கோள் மையங்களை நிறுவுவதற்காக தலா ரூ. 2 கோடியை மானியம் மற்றும் வட்டியில்லாக் கடனுதவியாக எஸ்.டி.பி.ஐ-க்குத் தமிழக அரசு ஏற்கெனவே வழங்கியுள்ளது.

கப்பல் தொழிலுக்கான பிரத்யேக இணைய தளம்

கப்பல் போக்குவரத்து மற்றும் அயல்நாட்டு வர்த்தகச் செயல்பாடுகளுக்கான பிரத்யேக இணைய தளமான 'ஓசன்·பிரைட்இந்தியா.காம்' (), ஜனவரி 2-ம் தேதி அதன் செயல்பாட்டைத் தொடங்கியது. மத்தியத் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பிரமோத் மகாஜன் இதைத் தொடங்கிவைத்தார்.

விசாகப்பட்டினம் ஏற்றுமதிப் பகிர்வு மண்டலத்தில் இயங்கும் பீனிக்ஸ் சைபர்டெக் இந்தியா லிமிடெட் (பி.சி.எல்.) நிறுவனத்தின் துணை நிறுவனமான ஓசன் டிரேட் இன்·போடெக் பிரைவேட் லிமிடெட் இத் தளத்தைத் தொடங்கியுள்ளது.

இத் தளத்தின் சந்தாதாரராகச் சேருவோருக்கு, கப்பல் தொழில் சம்பந்தப்பட்ட சுற்றறிக்கைகளும் அரசுப் பிரசுரங்களும் மின்னஞ்சலில் (ஈ-மெயிலில்) அனுப்பிவைக்கப்படும் என்பது இத் தளத்தின் சிறப்பம்சம்.

கப்பல் தொழில் மற்றும் சர்வதேச வர்த்தகம் தொடர்பான தகவல்கள் மற்றும் சேவைகளை அளிப்பதற்கென பிரத்யேகமாகத் தொடங்கப்பட்டுள்ள உலகின் முதல் இணைய தளம் இதுதான் என்று பி.சி.எல். நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஜி.எஸ். முரளி கிருஷ்ணா பெருமையுடன் கூறுகிறார்.

ஏற்றுமதி-இறக்குமதி சம்பந்தப்பட்ட புள்ளிவிவரங்களுடன் ஆலோசனைகளையும் இத் தளம் அளிக்கிறது. சுங்க வரியைக் கணக்கிடும் முறை, இணையவழி வர்த்தகம், இந்தியத் தொழில் துறைத் தகவலேடுகள் (Industrial Directories), துறைமுகங்கள் மற்றும் கப்பல்களில் சரக்குகளை ஏற்றி இறக்குவது பற்றிய விவரங்கள் ஆகியன இத் தளத்தில் இடம் பெற்றுள்ளன.

இந்திய ஏற்றுமதி ஊக்குவிப்புக்கான இணைய தளம்

சர்வதேச வர்த்தக நிறுவனமன குளோபல் சோர்சஸ் லிமிடெட் நிறுவனம், இந்தியாசோர்சஸ்.காம் () எனும் இணைய தளத்தை புத்தாண்டு தினத்தன்று தொடங்கியுள்ளது.

இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் சிறந்த பொருள்கள் மற்றும் அவற்றின் விற்பனையாளர்கள் குறித்த விவரங்களை உலகம் முழுவதிலுமுள்ள இறக்குமதியாளர்களுக்கு எளிதில் கிடைக்கச் செய்வதற்காக இந்த இணைய தளம் தொடங்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட ஒரு நாட்டின் ஏற்றுமதித் தகவல்களுக்கென குளோபல் சோர்சஸ் நிறுவனம் தொடங்கும் 13-வது இணைய தளமிது.

இந்தியாசோர்சஸ்.காம் தளத்தில் இந்திய ஏற்றுமதியாளர்கள் பற்றிய தகவல்களை மட்டுமின்றி, தேவைப்படும் பிற நாடுகளைச் சேர்ந்த ஏற்றுமதியாளர்கள் குறித்த விவரங்களையும் அறியலாம். 150 நாடுகளைச் சேர்ந்த சுமார் 93,000 ஏற்றுமதியாளர்கள் குறித்த விவரங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. 27 தொழில் பிரிவுகளின்கீழ் அவ் விவரங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

இத் தளத்துக்குத் தேவையான விவரங்களைத் தர, அனைத்திந்திய உருக்குத் தொழிலதிபர்கள் சங்கம் மற்றும் இந்தியக் கைவினைப்பொருள் ஏற்றுமதி வளர்ச்சிக் குழுமம் ஆகியவையும் ஆதரவுக் கரம் நீட்டியுள்ளன.

உள்ளாட்சி அமைப்புகளைக் கணனிமயமாக்கும் ஹரியாணா

ஹரியாணா மாநிலத்தில் உள்ள 52 நகராட்சிகளும், உள்ளாட்சி அமைப்புகளுக்கான இயக்கமும் விரைவில் முழு அளவில் கணனிமயமாக்கப்படவுள்ளன. இத் தகவலை உள்ளாட்சி அமைப்புகள் துறை இணை அமைச்சர் சுபாஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

ரூ. 6.50 கோடி செலவில் இத் திட்டம் நிறைவேற்றப்படவுள்ளது. இதற்காக ஹட்கோ அமைப்பிடமிருந்து ஹரியாணா அரசு கடனுதவி பெறவுள்ளது.

இத் திட்டத்தின் மூலம் ஹரியாணாவின் அனைத்து நகராட்சிகளுமே தலைநகர் சண்டீகருடன் கணனித் தொடர்பு மூலம் இணைக்கப்படும்.

நகரக் கட்டுமானத் திட்டமிடல் குறித்த விவரங்கள், வீட்டு வரி, பிறப்பு - இறப்பு விவரப் பதிவு, கட்டடக் கட்டுமான அனுமதிக் கோரிக்கை, நகராட்சிகளின் சொத்து விவரம், தெரு விளக்குள் மற்றும் நகராட்சி ஊழியர்கள் என அனைத்து விவரங்களையும் கணனி 'மூஷிகத்தை' தட்டுவதன் மூலமே அறிந்துகொள்ள இத் திட்டம் வழிவகுக்கும்.

கெல்ட்ரான் ஐ.டி. பூங்காவுக்கு ஆசியாநெட் 'இணைப்பு'

கேரள மாநிலத் தலைநகர் திருவனந்தபுரம் அருகேயுள்ள கரகுளத்தில், 40,000 சதுர அடி பரப்பளவில் கெல்ட்ரான் தகவல் தொழில்நுட்பத் தொழில் பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது.

இங்கு தொடங்கப்படவுள்ள நிறுவனங்களுக்குத் தேவைப்படும் அதி உயர் தகவல் தொடர்பு இணைப்புக்காகக் கண்ணாடியிழைக் கேபிள் தொடர்பை (high bandwidth optic fibre connectivity) ஆசியாநெட் தொலைக்காட்சி ஒளிபரப்பு நிறுவனம் அளிக்கவுள்ளது. இதன்மூலம் இத் தொழில்நுட்பப் பூங்காவில் அமைக்கப்படவுள்ள நிறுவனங்கள், விநாடிக்கு 32 கிலோ பைட் (32 கேபிபிஎஸ்), 64 கிலோ பைட், 128 கிலோ பைட் மற்றும் அதையும்விட அதி வேகமான அலைவரிசைகளில் தகவல் தொடர்புகளைப் பெற முடியும்.

அத்துடன் தற்போது வழக்கத்தில் உள்ள பழைமையான 'டயல் அப்' இணைப்பு முறையைவிட ஆசியாநெட்டின் கேபிள் இணைப்பால், தகவல் பரிமாற்றத்துக்கு ஆகும் செலவில் 30 சதவிகிதம் மிச்சமாகும்.

'மார்ச்சுக்குள் அனைத்து உள்ளாட்சிகளிலும் இணையத் தொடர்பு'

நடப்பாண்டு (2001) மார்ச் மாதத்துக்குள் இந்தியாவில் உள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் இணையத் தொடர்பு வசதி ஏற்படுத்தப்படும் என்று மத்திய தகவல் தொடர்புத் துறை இணை அமைச்சர் தபன் சிக்தர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் உள்ள அனைத்து மண்டலத் தலைநகரங்களிலும் தொலைபேசி, மின்னஞ்சல் மற்றும் ஐ.எஸ்.டி.என். வசதி ஏற்படுத்தப்படும் என்று அவர் உறுதிபடக் கூறினார். ஒரிசா மாநிலம் புரியில், ஐ.எஸ்.டி.என். மையத்தை டிசம்பர் மாத இறுதியில் தொடங்கிவைத்தபோது அவர் இவ்வாறு கூறினார்.

''நாட்டில் மொத்தமுள்ள 6.70 லட்சம் கிராமங்களிலும் தொலைபேசி வசதி 2003-ம் ஆண்டு இறுதிக்குள் ஏற்படுத்தப்படும்; தொலைதூரக் கிராமங்களிலும் விரைவில் செல்லிடப்பேசி வசதி அறிமுகப்படுத்தப்படும்'' என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

சொன்னதைச் செய்யும் கணனி

மந்திர வார்த்தைகளைச் சொன்னதும் மூடிய குகையின் வாசல் திறப்பதை மாயாஜாலத் திரைப்படங்களில் பார்த்து மகிழ்ந்திருக்கலாம். மந்திரங்களைச் சொல்லி அஸ்திரங்கள் ஏவப்படுவதை புராண, இதிகாசக் கதைகளில் படித்து வியந்திருக்கலாம்.

அவையெல்லாம் கணனி யுகத்தில் வெறும் கட்டுக்கதைகள் என்று அலட்சியம் செய்கிறீர்களா? அதேபோன்ற 'மந்திர வித்தை' கணனியிலேயே சாத்தியமாகியிருக்கிறது. இது மாயாஜால பிரமை அல்ல, தொழில்நுட்ப வளர்ச்சியால் சாதிக்கப்பட்டுள்ள நிஜம்.

டாடா குழுமத்தைச் சேர்ந்த ஸ்பீச் அண்ட் சாப்ட்வேர் டெக்னாலஜீஸ் (இந்தியா) பிரைவேட் லிமிடெட் (எஸ்.எஸ்.டி.ஐ.எல்.) (http://sstil.com)என்ற சென்னை நிறுவனம் தயாரித்துள்ள மென்பொருளைப் பயன்படுத்தினால், உங்களது கணனி, உங்களது வார்த்தைகளுக்குக் கட்டுப்பட்டு, நீங்கள் சொன்னதைச் செய்யும். விரல்களால் விசைப்பலகையை இயக்க வேண்டிய அவசியமே இல்லை.

'இண்டியன் இங்கிலீஷ் வயா வாய்ஸ் எக்சிக்யூடிவ்' என்ற இந்த மென்பொருளைப் பயன்படுத்த உங்களது கணிப்பொறி, மைக்ரோசாப்ட் விண்டோஸ் 95, விண்டோஸ் 98 அல்லது விண்டோஸ் என்டி 4.0 ஆக இருக்க வேண்டும். அத்துடன் 'சவுண்ட் கார்டு' பொருத்தப்பட்டிருக்க வேண்டும்.

அறிக்கை தயாரிக்க வேண்டுமா, கதை எழுத வேண்டுமா, குறிப்பிட்ட கோப்புகளைப் பார்க்க வேண்டுமா - எதுவாக இருந்தாலும், மைக்ரோபோனில் உத்தரவிட்டால் போதும். உங்களது குரலை அறிந்து கட்டளையை உடனே நிறைவேற்றிவிடும். பேசுவதை கடகடவென அடித்துத் தள்ளிவிடும். அதில் திருத்தம் செய்ய வேண்டுமென்றால், குறிப்பிட்ட வார்த்தைக்குப் போகச் சொல்லி எளிதில் திருத்திக் கொள்ளலாம்.

இந்தியர்கள் பேசுகின்ற ஆங்கில உச்சரிப்பை புரிந்துகொள்ளும் வகையில் இந்த மென்பொருள் தயாரிக்கப்பட்டுள்ளது. சென்னை, டெல்லி, ரூபாய், லட்சம், கோடி போன்ற இந்தியாவுக்கே உரித்தான சொற்களைப் புரிந்துகொள்ளும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஐ.பி.எம். நிறுவனத்தின் கூட்டுடன் இது தயாரிக்கப்பட்டுள்ளது. இதனுடன், கணனியில் இணைத்துப் பேசுவதற்கான மைக்ரோபோனையும் எஸ்.எஸ்.டி.ஐ.எல். வழங்குகிறது. இதன் விலை சுமார் ரூ. 21,000.

தொகுப்பு: பத்மன்

© TamilOnline.com