மறை ஞானமும் இறை ஞானமும்
மறை ஞானமென்பதும், இறை ஞானமென்பதும் வெவ்வேறானவையல்ல. முதலாவது வழியாகவும், இரண்டாவது அந்த வழி நம்மைக் கொண்டு சேர்க்கும் இடமாகவும் இருக்கிறது.

உலக மக்களை நெறிப்படுத்தவும், அவர்களை இறைப் பேரருளை இந்த பூமியிலேயே -- இந்த வாழ்க்கையிலேயே -- அனுபவிக்க வைக்கச் செயல்படும் சக்தியாகவும், சாதனையாகவும் அது விளங்கி வருகிறது.

அந்த மறை உலக மதங்கள் அனைத்திற்கும் ஒவ்வொரு வகையில் இறைவனால் வழங்கப்பட்டுள்ளது. அவைகளின் வடிவங்களில் வேறுபாடிருக்கலாம். ஒவ்வொரு வகையில் அவை மனித சமுதாயத்தை எட்டிய வழிகளில் வித்தியாசமிருக்கலாம். வார்த்தைகளில் அச்சமுதாயத்தின் - அல்லது மதத்தின் - வரலாற்றுத் தாக்கமிருக்கலாம். ஆனால் அவற்றின் அடிப்படையான நோக்கத்திலோ - அடைய விரும்பும் இலட்சியத்திலோ முரண்பாடுகளுமில்லை; மோதல்களும் இல்லை.

இதைப் புரிந்துகொண்டால், வம்புக்காக சிலர் செய்யும் மதச் சண்டைகள் யாவும் 'பிள்ளை விளையாட்டாக' நமக்குத் தோன்றும்.

இந்துக்களுக்கு 'நான்மறை' எனும் வேதங்கள்; கிறிஸ்தவர்களுக்கு திரு விவிலியம்; இஸ்லாமியர்களுக்கு திருக் குர் ஆன்; பெளத்தர்களுக்கு தம்மபதம்... இவ்விதமாகப் பல்வேறு நிலைகளில் அனைத்துச் சமுதாயத்தினருக்கும் 'வேத விழுப் பொருள்' பாரபட்சமின்றி வழங்கப்பட்டிருக்கிறது.

அந்த வகையில் கிறிஸ்தவர்களின் வேதமான 'திரு விவிலியம்' ஞானத்தைப் பற்றி என்ன கூறுகிறதென்று நாம் தெரிந்துகொள்ளலாமா?

விவிலியம்' என்ற பெருநூலில் 'சாலமனின் ஞான'மென்று ஒரு சிறு நூல் உள்ளது. அதுதான் ஞானத்தின் சகல கூறுகளையும் அணு அணுவாக அலசி ஆராய்கிறது.

ஞானம் என்பது என்ன?

"ஞானம் மனித நேயமுள்ள ஆவி. ('ஆவி' என்பது விவிலியத்தில் அருள் சக்தி எனும் பொருளில்தான் எல்லா இடங்களிலும் வழங்கப்படுகிறது.)

...வஞ்சனை நிறைந்த ஆன்மாவில் ஞானம் நுழைவதில்லை.

பாவத்திற்கு அடிமையான உடலில் ஞானம் குடி கொள்வதில்லை.

...ஞானம் ஒளி மிக்கது; மங்காதது. அதன்மீது அன்பு செலுத்துபவர்கள் அதனைக் கண்டடைவார்கள்.

தன்னை நாடுபவர்களுக்கு அது தன்னையே விரைந்து வெளிப்படுத்தும்.

வைகறை வேளையில் அதைத் தேடுவோர் தளர்ச்சியடைய மாட்டார்கள். ஏனெனில் தம் கதவருகிலேயே அது அமர்ந்திருப்பதை அவர்கள் காண்பார்கள்..."

சரி... இவ்விதமெல்லாம் கண்டடையப்படும் ஞானத்தின் வெளிப்பாடுகள் எப்படி இருக்கும்? மனிதர்களிடம் அது எவ்வகையில் செயல்படும்?

இந்தக் கேள்விக்கும் தீர்க்கதரிசி சாலமன் தெள்ளத் தெளியப் பதில் கூறுகிறார்...

"...ஞானம் (உலகின்) ஒரு கோடி முதல் மறு கோடி வரை ஆற்றலோடு செல்லுகிறது. ஞானமே கடவுளைப் பற்றிய மெய்யறிவுக்கும் புகுமுகம் செய்து வைக்கிறது.

ஞானம் - ஆற்றல் கொண்டது. அவ்வாற்றல் அறிவுடையது. தூய்மையானது. தனித்தன்மை வாய்ந்தது... ஞானம் என்றுமுள்ள ஒளியின் சுடர். கடவுள் செயல்திறனின் கறை படியாக் கண்ணாடி. அவருடைய நன்மையின் சாயல். அது ஒன்றே என்றாலும் எல்லாம் செய்யவல்லது. தான் மாறாமலேயே அது அனைத்தையும் மாற்றிப் புதுப்பிக்கிறது.

தலைமுறைதோறும் அது தூய ஆன்¨மாக்களில் நுழைகிறது. அவர்களைக் கடவுளின் மனிதர்களாகவும், தீர்க்கதரிசிகளாகவும் ஆக்குகிறது..."

இப்படியெல்லாம் சும்மா சொன்னால் போதுமா?

ஞானத்தினால் இத்தகைய வல்லமைகளை முழுமையாகப் பெற்று விளங்கிய பெருமகன்கள் உலகில் யாராவது உண்டா? அதற்கு விவிலியத்திலேயே ஆதாரம் காட்ட முடியுமா?

இப்படி ஒரு கேள்வியை யாராவது கேட்பதாக வைத்துக்கொள்ளுங்கள். அதற்கும் உரிய பதிலை அதே கிறிஸ்தவ வேதம் மிகவும் மவுனமாக உணர்த்துகிறது.

எப்படி...?

உண்மையில் அந்த ஒப்பற்ற இறை ஞானப் பேராற்றலால் அவ்விதம் ஞானிகளாகவும், தீர்க்கதரிசிகளாகவும் 'கடவுளின் மனிதர்'களாகவும் ஆனவர்கள் வரலாறு முழுவதும் இறைந்து கிடக்கிறார்கள். அவர்கள் அண்ணல் இயேசுவின் காலத்திற்கு முன்புமிருந்தார்கள். பின்புமிருந்தார்கள். விவிலியமே அதை விளக்கமாகச் சொல்லியிருக்கிறது.

ஆனால் அவர்களில் தலை சிறந்தவராக, முத்திரை பெற்றத் தெய்வீக மனிதராக விளங்கியவர் அண்ணல் இயேசு கிறிஸ்து. அதனால்தான் அவர் 'இறைமகன்' என்று சிறப்பிக்கப்பட்டார்.

அவரது அன்பு, அவரது தியாகம், அவரது மனித நேயம் இவையெல்லாம் கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளில் உலக வரலாற்றில் எத்தனையோ உன்னதமான தாக்கங்களை உருவாக்கியிருக்கிறது. அற்புதமான மனிதர்களைப் படைத்திருக்கிறது.

அதனால்தான் 'கிறிஸ்துவுக்கு முன்' என்றும் 'கிறிஸ்துவுக்குப் பின்' என்றும் காலத்தையே பிரித்துச் சொல்லுமளவுக்கு அவர் மகிமை பெற்றார்.

அதற்கு ஓர் உதாரணம் கூற வேண்டுமென்றால், நம் தேசத் தந்தை மகாத்மா காந்தியின் வரலாறே அதற்குச் சான்றாக அமைகிறது.

'சத்தியாக்கிரகம்', 'உண்ணாவிரதம்' போன்ற அறப்போர் உத்திகளைத் தாம் தீர்மானித்துக் கொண்டதற்கு, இயேசுவின் வாழ்வும், வாக்குமே பெருமளவு காரணங்களென்று அவர் கூறியுள்ளார்.

அவர் தம் 'சத்திய சோதனை' என்ற சுய சரிதை நூலில் "மலைப் பிரசங்கம் நேரடியாகவே என் உள்ளத்தைக் கவர்ந்துவிட்டது. அதைக் கீதையுடன் ஒப்பிட்டுப் பார்த்தேன். தீமைக்குப் பதிலாகத் தீமையைச் செய்யாதே என்று உங்களுக்குக் கூறுகிறேன். உன் வலது கன்னத்தில் யாராவது அறைந்தால் மற்றொரு கன்னத்தையும் திருப்பிக் காட்டு. எவனாவது உன் சட்டையை எடுத்துக் கொண்டானாயின் உன் போர்வையையும் அவனுக்குக் கொடு" என்பன போன்ற உபதேசங்கள் எனக்கு அளவு கடந்த ஆனந்தத்தை அளித்தன... "'கீதை', 'ஆசிய ஜோதி', 'மலைப் பிரசங்கம்' ஆகிய மூன்றும் ஒன்றே என்று கருத, என் இளம் மனம் முயன்றது" என்று பரவசம் கொள்ளும் அளவுக்கு இறைமகன் இயேசுவால் அவர் கவரப்பட்டிருக்கிறார்.

இயேசு இயல்பாகப் பெற்றிருந்த மறை ஞானமும் அதன் விளைவான இறை ஞானமும் மட்டும்தான் அவரை 'மகாத்மா'க்களே வணங்கும் அளவுக்கு மகிமை மிக்கவராக உயர்த்தியது.

"ஞானத்தின் மீதுள்ள ஆர்வம் ஒருவரை அரசுரிமைக்கு வழி நடத்துகிறது... எப்பொழுதும் ஞானத்தை மதியுங்கள். அப்போது என்றென்றும் ஆட்சி புரிவீர்கள்..." என்கிறது சாலமன் ஞானம்.

"ஞானத்தின்மீது அன்பு செலுத்துவது என்பது, அதன் சட்டங்களைக் கடைப்பிடிப்பது ஆகும். சட்டங்களைக் கடைப்பிடிப்பது அழியாமைக்கு உறுதி தரும். அழியாமை ஒருவரைக் கடவுளுக்கு அருகில் அழைத்துச் செல்லும்..." என்று உத்திரவாதம் தருகிறது அது.

நம் இறைவனை எளிதாக அடையும் வழி, இப்போது நமக்குத் தெரிந்துவிட்டதல்லவா?

மயூரன்

© TamilOnline.com