கதம்ப சாதம்
காய்கறிகள் மற்றும் கீரையைக் கலந்து கதம்ப சாதம் தயாரிக்கலாம். அதற்குப் பக்கபலமாக டாங்கர் பச்சடி. பெயரைக் கேட்டதும் என்னவோ ஏதோ என்று பயந்து விடாதீர்கள். வெள்ளை உளுந்தம் பருப்புப் பொடியில் தயாரிப்பதுதான் இந்தப் பச்சடி. என்ன செய்முறையையை ஆரம்பிக்கலாமா?

தேவையான பொருட்கள்

அரிசி - 250 கிராம்
வெண்டைக்காய் - 2
பீன்ஸ் - 5
அவரைக்காய் - 5
பஜ்ஜி மிளகாய் - 2
அரைக்கீரை - 1 கோப்பை
பச்சைமிளகாய் - 5
கொத்தமல்லித்தழை - 1 கோப்பை
கத்தரிக்காய் - 2
சின்ன வெங்காயம் - 10 கிராம்
கறிவேப்பிலை - சிறிதளவு
மஞ்சள்பொடி - 1/4 டீஸ்பூன்
ஊற வைத்த கொண்டைக்கடலை - 10 கிராம்
கடுகு - சிறிதளவு
உளுத்தம் பருப்பு - 1டீஸ்பூன்
முந்திரிபருப்பு - 10 கிராம்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் -100மி.லி.

செய்முறை

கறிகாய்கள், கீரை ஆகியவற்றை நறுக்கி வைக்கவும். வெண்டைக்காயை நறுக்கி வதக்கித் தனியாக வைக்கவும்.

வாணலியில் மிச்சமிருக்கும் எண்ணெயில் முதலில் சின்ன வெங்காயத்தை வதக்கிக் கொள்ளவும்.

அதிலேயே மீதி காய்கறிகளையும் கீரையையும் போட்டு அரை வேக்காடாக வதக்கிக் கொள்ளவும்.

வேறொரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம் பருப்பு, முந்திரிப்பருப்பு தாளித்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதில் அரிசியைப் போடவும்.

கூடவே கொண்டைக்கடலை, பச்சைமிளகாய், மஞ்சள் தூள், உப்பு சேர்த்துக் குக்கரில் வேக விடவும்.

சாதம் வெந்து தயாரானதும் கொத்தமல்லி, கறிவேப்பிலை, வெண்டைக்காய் வறுவல் எல்லாவற்றையும் தூவிப் பரிமாறவும்.

காஞ்சனா

© TamilOnline.com