தமிழகத்தில் பன்னிரண்டாம் சட்டப்பேரவைக்கான தேர்தல் அநேகமாக ஏப்ரல் கடைசியில் நடைபெறலாம். தேர்தல் என்பது அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஒரு திருவிழாதான்.
ஆட்டம், பாட்டம், குடி, கும்மாளம், சண்டை, சச்சரவு என ஊர்த் திருவிழாக்களின் அத்தனை அம்சங்களும் தேர்தலில் இருக்கும்.
தமிழகத்தைப் பொறுத்தவரை தேர்தல் திருவிழாவில் மூலவராகவும், உற்சவராகவும் கடந்த 30 ஆண்டுகளாக இருப்பது தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் தான். எம்.ஜி.ஆர். உயிரோடு இருந்தவரை தேர்தல் திருவிழாவில் அவருக்குத்தான் முதல்(வர்) மரியாதை.
அவர் மறைந்த பிறகு 89-ல் தி.மு.க. ஆட்சியைப் பிடித்தது. அப்போது அதிமுக ஜா., ஜெ., நால்வர் அணி என்று பல கூறுகளாக இருந்தது.
அதன் பின்னர் 91-ல் தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்ட பின் நடந்த தேர்தலில் ஜெயலலலிதா தலைமையில் ஒன்றுபட்ட அ.தி.மு.க.வின் ஆட்சி மலர்ந்தது. மிருக பல மெஜாரிட்டியுடன் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தார்.
ஏன் என்று கேட்பதற்கு எவருமே இல்லாத சூழலில் ஆட்சி நடத்திய ஜெயலலிதா மீதும், அவரது அமைச்சரவை சகாக்கள் மீதும் ஏகப்பட்ட ஊழல் புகார்கள் எழுந்த சூழலில் 1996 ஆம் ஆண்டு 11வது தமிழக சட்டபேரவைக்கான தேர்தல் நடைபெற்றது.
அதில் ஜெயலலிதா தோற்றதோடு அ.தி.மு.க. படுதோல்வி அடைந்தது.
அடுத்து வரவிருக்கிற 12-வது சட்டப் பேரவைத் தேர்தலுக்கான அணி சேர்க்கை ஆரம்பமாகிவிட்டது. இதில் அ.தி.மு.க. சுறுசுறுப்பாக இயங்கி வருகிறது.
தி.மு.க., பா.ஜ.க.வோடு கூட்டு சேர்ந்து மத்தியில் ஆட்சியிலும் அங்கம் வகிப்பதால் மதச்சார்பற்ற அணி என்ற பெயரில் அ.தி.மு.க., காங்கிரஸ், த.மா.கா., கம்யூனிஸ்ட் கட்சிகள், லத்தீப் தலைமையிலான தேசிய லீக் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு ஆகியவை ஒன்றாக செயல்பட்டு வந்தன.
இதில் திடீர் திருப்பமாக தி.மு.க., பா.ஜ.க. கூட்டணியில் இருந்த பா.ம.க. திடீரென அக்கூட்டணியில் இருந்து விலகி 'அம்மாவே சரணம்' என்று கூறி அ.தி.மு.க. வோடு ஐக்கியமாகிவிட்டது.
தேர்தலின்போது, குரங்கிலிருந்து மனிதன் பிறந்தான் என்ற டார்வின் தத்துவத்தை உறுதிப்படுத்தும் வகையில் சில கட்சிகள் ஒரு கூட்டணியில் இருந்து மற்றொரு கூட்டணிக்குத் தாவுவது வழக்கமான நடைமுறைதான்.
தேர்தல் கூட்டணியைப் பொறுத்தவரை கொள்கையை பிரதானமாகக் கருதாமல் சீட்டுகளைப் பெறுவதை மட்டுமே உயர்ந்த லட்சியமாக அனைத்துக் கட்சிகளும் கருதுகின்றன.
தற்போது அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. சேர்ந்துள்ளதால், அது விடுதலைப் புலிகளை ஆதரிக்கின்ற கட்சி. விடுதலைப் புலிகள்தான் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியைக் கொன்றவர்கள். அவர்களை அ.தி.மு.க. சேர்த்துக்கொண்டதில் நியாயமில்லை என்று தமிழக காங்கிரஸ் தலைமை வெளிப்படையாகப் பேசி வருகின்றது.
பா.ம.க. விடுதலைப் புலிகளை ஆதரிக்கிறது என்பதால் அதை எதிர்ப்பதாக காங்கிரஸ் கூறுவது கொள்கைப் பிரச்சினை அல்ல. ஏனென்றால் ராஜீவ் காந்தியின் மரணத்தால், நாங்கள் ஜெயிக்கவில்லை என்று ஜெயலலிதா பேசியதோடு அக்கட்சியின் முக்கியப் பேச்சாளர்கள் ராஜீவ் இறந்து கிடந்த கோலத்தையும் கொச்சைப்படுத்திப் பேசினார்கள். அதையெல்லாம் மறந்துவிட்டு காங்கிரஸ், அ.தி.மு.க. வோடு கூட்டணி வைத்துக்கொண்டது.
இதற்கும் மேலாக ராஜீவ் கொலைவழக்கில் தண்டனை வழங்கப்பட்ட நளினியை, சோனியா காந்தியே மன்னித்துவிட்டார்.
இதன்பிறகும் விடுதலைப்புலிகள் பிரச்சினையை வைத்து, அ.தி.மு.க. அணியில் பா.ம.க. சேர்ந்ததை காங்கிரஸ் விமர்சிப்பதற்குக் காரணம் 'சீட்டு பேரம்' தான் என்றே அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.
காங்கிரஸ் மேலிடத் தூதர் பிரணாப் முகர்ஜி தேர்தல் கூட்டணி சம்பந்தமாக (பா.ம.க.-அ.தி.மு.க. கூட்டணியில் சேருவதற்கு முன்) ஜெயலலிதாவுடன் முதல் சுற்றுப் பேச்சு நடத்திவிட்டுப் போனார். மறுபடியும் (பா.ம.க.-அ.தி.மு.க. கூட்டணியில் சேர்ந்த பின்) காங்கிரஸ் பொதுச்செயலர் குலாம் நபி ஆசாத்தும், பிரணாப் முகர்ஜியும் ஜெயலலிதாவுடன் இரண்டாம் கட்ட பேச்சு வார்த்தை நடத்தினர். அப்பேச்சு வார்த்தையின் போது காங்கிரசுக்கு 7 சட்டப்பேரவைத் தொகுதிகளும், த.மா.கா.விற்கு 28 சட்டப்பேரவைத் தொகுதிகளையும் ஆக மொத்தம் 35 தொகுதிகளைத் தருவதாக ஜெயலலிதா கூறியதாக செய்திகள் வெளியானது. காங்கிரசுக்கு போனசாக திருச்சி மக்களவைத் தொகுதியைத் தரவும் சம்மதித்திருக்கிறார் ஜெயலலிதா.
ஆனால், தற்போதுவரை (22.2.2000) அ.தி.மு.க. அணியில் தொடருகிறோமா இல்லையா என்பதை அறிவிக்காமல் காங்கிரஸ் தாமதப்படுத்தி வருகிறது. த.மா.கா. தரப்பில், கூட்டணி குறித்து காங்கிரஸ், அ.தி.மு.க.வுடன் முத்தரப்பு பேச்சு தொடர்வதாகக் கூறப்பட்டுள்ளது.
அ.தி.மு.க. கூட்டணியில் இந்தக் கட்சிகளால்தான் சிறுபிரச்சினை. மற்றக் கட்சிகளால் பிரச்சினையில்லை. இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கட்சிகளைப் பொறுத்தவரை தி.மு.க., பா.ஜ.க.வோடு கூட்டு சேர்ந்தபோதே அ.தி.மு.க. கூட்டணியில் ஐக்கியமாவது என்ற முடிவை எடுத்துவிட்டனர். அதோடு, தமிழர் முன்னேற்றக் கழகம் (ஜான் பாண்டியன்), புரட்சி பாரதம் (பூவை மூர்த்தி), மூவேந்தர் முன்னேற்றக் கழகம் (பிரேம்குமார் வாண்டையார்) ஆகிய கட்சிகள் அ.தி.மு.க. கூட்டணியில் புதிதாக இணைந்துள்ளன.
கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நான்கு சீட்டோ, அல்லது ஐந்து சீட்டோ கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் அவர்கள் மதவாதக் கட்சியான பா.ஜ.க.வை எதிர்த்து மதச்சார்பற்ற கட்சியான அ.தி.மு.க. விற்கு ஆதரவாக சொந்த காசில் 'டீ' குடித்துவிட்டு தேர்தல் வேலை பார்ப்பார்கள்.
இந்த ஒரு விஷயத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி கெட்டிக்காரர். அவருடைய கூட்டணியில் (பா.ஜ.க. இல்லாதபோது) கம்யூனிஸ்ட் கட்சிகள் இருந்தால், தேர்தலில் சீட்டு இல்லாவிட்டால் என்ன? உங்களுக்கு என் இதயத்தில் இடம் உண்டு என்று எளிதில் ஏமாற்றிவிடுவார். அவர்களும் அதை ஏற்றுக்கொண்டு வழக்கம்போல், அமெரிக்க ஏகாதிபத்தியத்தையும், உலக வங்கியையும் மதவாதத்தையும் எதிர்த்துப் பேசியபடி தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்வார்கள்.
தி.மு.க. கூட்டணியை பொறுத்தவரை பா.ம.க. விலகியது அவர்களுக்கு பாதிப்புதான் என்றாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், த.மா.கா. வை தங்கள் கூட்டணிக்கு இழுக்க முயற்சித்தனர். இந்த முயற்சியில் சட்டப்பேரவைத் தலைவர் பழனிவேல்ராஜன், மு.க.ஸ்டாலின், நடிகர் சரத்குமார் ஆகியோர் ஈடுபட்டனர்.
த.மா.கா. தரப்பில் இருந்து அதன் பொதுச்செயலர் அழகிரி தி.மு.க.வோடு கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறினார். அத்துடன் த.மா.கா.வுக்கு 40 தொகுதிகள் தரத் தயாராக இருப்பதாகவும் கூறினார். ஆனால் 'அழகிரி அதிகாரபூர்வமாக பேச்சு நடத்தவில்லை' என்று மூப்பனார் அறிவித்து விடடார்.
இதன் பிறகு 'த.மா.கா.வோடு இனிப் பேசிப் பயனில்லை. நாங்கள், எங்கள் வேலையைப் பார்ப்போம்' என்று கருணாநிதியும் இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார்.
அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து த.மா.கா.வை பிரித்து அதன் பலத்தை குறைப்பது என்ற நோக்கத்தோடுதான் தி.மு.க. இவ்வாறு செயல்பட்டதாக அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.
சாதிகளற்ற சமுதாயம் உருவாக வேண்டும். சாதிய சக்திகளால் சமூகத்திற்கு கேடு என்று கருணாநிதி ஒருபுறம் பேசினாலும் ஜாதிக்கட்சிகளோடு கூட்டு சேரவும் கருணாநிதி தயாராக இருக்கிறார். தற்போது புதிய தமிழகம் கட்சி தி.மு.க. கூட்டணியில் இணைந்துள்ளது. விடுதலை சிறுத்தைகள் அமைப்பு தேசிய ஜனநாயகக் கூட்டணி என்ற பெயரை மாற்றிக் கொண்டால் தி.மு.க.வுடன் கூட்டு சேரத் தயார் என்று அறிவித்துள்ளது. அநேகமாக விடுதலைசிறுத்தைகள் அமைப்பும் தி.மு.க. அணியில் சேர்ந்து விடும் என்றே தெரிகிறது.
அடுத்து மூன்றாவது அணி. புதிதாக முளைத்திருக்கிற ஜாதிக்கட்சிகள் 3வது அணி என்ற விஷயத்தைப் பிரதானப்படுத்தி வருகின்றன. 2 பேர் மட்டுமே இருக்கக்கூடிய ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியசாமி கூட 3வது அணி முயற்சியை கைவிட்டுவிட்டார். ஆனால் இந்த ஜாதிக்கட்சிகள் விடாமல், 3வது அணிக்கு மூப்பனார்தான் தலைமை ஏற்க வேண்டும். 3வது அணி ஜெயித்தால் மூப்பனார்தான் முதல்வர் என்று கூறி வருகின்றன.
ஆனால் இந்த மகுடிக்கெல்லாம் மூப்பனார் மயங்குபவராகத் தெரியவில்லை. அவர் எல்லாவற்றுக்கும் தலையாட்டிவிட்டு சென்று விடுகிறார்.
ஆனால், இந்தக் கூட்டணிக் குழப்பங்கள் எல்லாம் பிப்ரவரி இறுதிக்குள் தீர்ந்துவிடும். யார் யார் எந்த அணியில் இடம் பெற்றிருக்கிறார்கள் என்ற முடிவும் தெரிந்துவிடும்.
வே.பெருமாள் |