நடிப்பு : விஜய், சூர்யா, தேவயானி, விஜயலட்சுமி, ரமேஷ் கண்ணா, வடிவேலு, ராதாரவி, ஸ்ரீமன், பிரமிட் நட்ராஜன், மதன்பாப், சார்லி, சத்யபிரியா, எஸ்.என். நட்சுமி அபிநயாஸ்ரீ (அறிமுகம்) இசை : இளையராஜா இயக்கம் : சித்திக்
இது நண்பர்கள் சீசன். 'சிநேகிதியே' தோழிகள் எப்படி இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியது. ஆண் நண்பர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான மாதிரி படம் என்ற விளம்பரத்தோடு வெளியாகியிருக்கிற படம். நட்பு முன்பெப்போதும் இல்லாத அளவுக்குப் பேசப்படுவது ஆரோக்கியமாக இருந்தாலும் காதல் காமெடி போல நட்பையும் காமெடியாக்கிவிடுவார்களோ என்று அச்சமாக இருக்கிறது.
விஜய்யும் சூர்யாவும் உயிருக்கு உயிராகப் பழகுகிறார்கள். அதற்குச் சொல்லப்படும் திராபையான காரணம் இது:-
சிறுவயதில் சூர்யாவின் தம்பிக்கு ஒரு பொம்மையைப் பரிசளித்து பத்திரமாக வைத்துக் கொள்ளச் சொல்கிறார் விஜய். சிறுவன் நிலவறையில் போய்ப் பதுங்கிக் கொள்கிறான். அது தெரியாமல் அதைப் பூட்டி வைத்து விடுகிறார்கள். இரண்டு நாள் கழித்துப் பிணமாகத்தான் சூர்யாவின் தம்பியை வெளியே எடுக்க முடிகிறது. சூர்யாவின் தம்பி மறைவுக்கு நாம்தான் காரணம் என்று குற்ற உணர்வில் புழுங்குகிறார் விஜய். அதுதான் அவர்கள் இருவருக்குமான நட்புக்கு ஆதாரம். பொம்மையைப் பத்திரமாக வைத்துக் கொள்ளச் சொன்னது எப்படி கொலைக்குற்றமாகும் என்பது விசாரணைக் கமிஷன் வைத்து விளங்கிக் கொள்ள வேண்டிய விஷயம். அதைவிட காமெடி என்னவென்றால் அந்த விஷயம் தெரிந்து ''உன்னைக் கொல்லாம விடமாட்டேன்டா'' என்று சூர்யா கொதிப்பது. படத்துக்கு ப்ரண்ட்ஸ் என்று பெயரிட்டதுக்குப் பதிலாக எதிரி என்று வைத்திருக்கலாம்.
விஜய், தன் குடும்பத்தில் சூர்யாவுக்குத் தரும் இடம் நெகிழ்ச்சியானது. அம்மா, அப்பா, தங்கை, மனைவி எல்லோரையும்விட உயர்ந்த இடத்தில் நண்பனை உட்காரவைத்து ரசிப்பது நட்பை உயர்த்திக் காட்டும் காட்சிகள். விஜய்யின் மனைவியாக வரும் தேவயானிக்கும் சூர்யாவுக்கும் புகைச்சல் ஏற்படும் போதெல்லாம் விஜய்யின் தர்மசங்கடமான நிலைமை கதைக்கு விறுவிறுப்பு தருகிறது. ஆனாலும் வடிவேலு, சார்லி, கிரேன் மனோகர், ரமேஷ் கண்ணா சகிதம் கதாநாயகர்கள் அடிக்கும் லூட்டிதான் படத்தைத் தாங்குகிறது.
சூர்யா ஆக்ரோஷமாக நடித்திருக்கிறார். நடிப்பை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பு. பிரமாதமாக பயன்படுத்தியிருக்கிறார். ராணுவவீரன் வேஷமெல்லாம் கொடுத்தும் அவரை அடிவாங்க வைத்து கதையைச் சிக்கலாக்கியிருக்கிறார்கள். மலை உச்சியில் இருந்து விழுந்தும் விஜய் நண்பன் குரல் கேட்டு புஜங்கள் துடிப்பது தமாஷ்.
தேவயானி சற்றே நீலாம்பரியாகி பின் திருந்தி விடுகிறார். புதுமுகம் விஜயலட்சுமிக்கு நிரூபிக்கிறமாதிரியான வாய்ப்பு இல்லை.
இளையராஜாவின் இசையில் ''தென்றல் வரும் வழியில்'' பாடல் அசத்தல். கேரளத்தில் இருந்து வந்து அணுகுகிறவர்களுக்காக பிரத்யேகமாக இசையமைக்கிறார் இளையராஜா.
முதல் பாதி: முதல் இன்னிங்ஸில் முன்னூறு ரன்னுக்கு நோ விக்கெட்.
இரண்டாவது பாதி: இரண்டாவது இன்னிங்ஸில் பத்து ரன்னுக்கு ஆல் அவுட்.
தமிழ்மகன் |