காதல் பித்தர் கதிர் அடுத்து இயக்கும் படம், 'காதல் வைரஸ்'. 'இதயம்', 'காதல் தேசம்', 'காதலர் தினம்' ஆகிய படங்களைத் தொடர்ந்து இது. ''காதலைத் தவிர தன்னால் வேறு எதையுமே யோசிக்க முடியவில்லை'' என்று பெருமிதமாக அறிவிக்கும் இவர், தன்னுடைய காதல் அனுபவம் பற்றிப் பகிர்ந்து கொள்ள மறுக்கிறார். 'காதல் அனுபவிக்க மட்டும்தான்; பகிர்ந்து கொள்ள அல்ல' என்பது இவருடைய தீர்மானம்.
தன் சொந்தத் தயாரிப்பாக உருவாக்கும் இந்தப் படத்தில் அஜீத்துக்குப் போட்டியாக அவருடைய மைத்துனர் (ஷாலினியின் அண்ணன்) ரிச்சர்ட் களமிறங்குகிறார். இவருக்கு ஜோடியாக பூமிகா என்ற புதுமுகம் நடிப்பார் என்று அழைப்பிதழ் தயாரானது. கடைசி நிமிடத்தில் அவர் நீக்கப்பட்டார். கதாநாயகியின் பெயருக்குப் பதில் 'அறிமுகம்- ஒரு தேவதை' என்று அச்சிடப்பட்டிருந்தது.
19-ம் தேதி பூஜையுடன் படப்பிடிப்பும் ஆரம்பமானது. ஆரம்ப விழா மேடையிலேயே படப்பிடிப்பையும் ஆரம்பித்தார் கதிர். பாரதிராஜா, மணிரத்னம், கேயார், விக்ரமன் உள்ளிட்டோர் கதாநாயகன் ரிச்சர்ட்டை வாழ்த்திப் பூச்செண்டு கொடுப்பது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. (கதைப்படி கதாநாயகன் இயக்குநராகவோ, நடிகராகவோ இருக்கலாம்.)
அடுத்து மும்பையில் படப்பிடிப்பு தொடர்கிறது. ரகுவரன், எஸ்.பி. பாலசுப்ரமணியம், விவேக், ஜனகராஜ், மனோரமா, ஸ்ரீ வித்யா, ராகசுதா நடித்து வருகிறார்கள்.
இந்தியாவின் பல நகரங்களில் படப்பிடிப்பை நடத்தத் திட்டமிட்டிருக்கிறார் கதிர். இதுவரை இல்லாத அளவுக்கு அரங்குகள் அமைத்து வருகிறார்கள். அரங்கு அமைப்பு: ராகவன். இவர் 'அலைபாயுதே' படத்துக்கு அரங்கு அமைத்தவர். பி.சி.ஸ்ரீராம், ஜீவா ஆகியோரிடம் உதவியாளராகப் பணியாற்றிய அர்ஜுன் ஜெனா இப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். இசை...? கதிர் படத்துக்கு வேறு யார் இசையமைக்க முடியும்?.... ரஹ்மான்.
இது எல்லோரும் நேசிக்கும் வைரஸாக இருக்கும் என்பது மட்டும் நிச்சயம்.
தமிழ் |