"மாற்றம் இல்லையேல் மரணம்"
இந்தியாவில் தாராளப் பொருளாதாரம் தொடங்கப்படுவதற்கு முன்பு, எல்லா விதமான உரிமங்கள், எல்லா விதமான தடுப்புகள் மற்றும் அரசாங்கம் தங்கள் மீது பிரயோகிக்கின்ற அனைத்து விதமான சமாச்சாரங்களுக்குப் பின்னாலும் ஒளிந்து கொள்வதைத் தொழில் துறையினர் வாடிக்கையாகக் கொண்டிருந்தனர். அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு மலையாகத் தெரிந்தன. அக் காலகட்டத்தில் இதுபோன்ற ஒரு மலையிலிருந்து மற்றொரு மலைக்குத் தாவுவதற்கும், ஒவ்வொரு மலையாக ஏறிச் செல்வதற்குமே தங்கள் ஆற்றலை அவர்கள் செலவழிக்க வேண்டியிருந்தது.

'மாற்றம் இல்லையேல் மரணம்'ஆனால், கடந்த பத்தாண்டுகளில் அவற்றில் பெரும்பாலான மலைகள் மறைந்துவிட்டன. இப்போது அவர்கள் சமவெளியில் இருக்கின்றனர்.

ஆனால், இந்தச் சமவெளிகூடத் தங்களை அரவணைக்கும் இடமல்ல என்பதை அவர்கள் உணர்ந்துகொண்டிருக்கின்றனர். (தங்களை இன்னல்படுத்திய) மலைகள் அகல வேண்டும் என்று அவர்கள் விரும்பினர், எனவே அவர்கள் சமவெளியில் வாழும் மக்கள் ஆனார்கள். ஆனால், தற்போது சமவெளியில் வாழும்போது, இந்தச் சமவெளி மிகுந்த போட்டி நிறைந்ததாக அவர்கள் கருதுகின்றனர்.

ஏற்கெனவே மலைகளைப் பார்த்துப் பழகிப்போன அவர்கள், சமவெளியில் இருப்பதைவிட மீண்டும் மலைகளுக்கே திரும்பிச் சென்றுவிடலாம் என்று விரும்புகின்றனர். ஆனால் அது சாத்தியமல்ல. சமவெளியில் எப்படிச் சமாளிப்பது என்பதைத்தான் இந்தியத் தொழில் துறையினர் இப்போது அறிந்து அனுசரித்தாக வேண்டும்.

சூழலுக்கு ஏற்ப இந்தியா மாறி வருகின்ற போதிலும், ஓர் எண்ணப்போக்கு தொடர்ந்து நீடிக்கிறது. 'நிகழக் காத்திருக்கும் ஒரு பேரதிசயம் இந்தியா' என்பதே அது. ஆனால், அந்தப் பேரதிசயம் எப்போதுமே நிகழக் காத்திருக்குமே அன்றி, நடைமுறையில் நிகழாது. போட்டியிடும் சூழல் ஏற்படாத தொழில் துறைகளில் இதுபோன்ற எண்ணப்போக்கு உள்ளது. ஆனால், போட்டியிடும் சூழலுக்குத் தள்ளப்படும்போது இப்போது கிடைக்கும் மிகுந்த லாபத்துக்கு சாத்தியமில்லை என்பதை அவர்கள் உணர வேண்டும்.

எனினும் அனைத்துத் தொழில் துறைகளிலும், சூழலுக்கு ஏற்ப மாற வேண்டியது அவசியம் என்ற உணர்வு மேலோங்கி வருகிறது. மூன்று வழிகளில் இந்த மாற்றம் நிகழ்கிறது.

ஒன்று, குறிப்பிட்டத் தொழில் துறைக்கு அல்லது தேசத்துக்கு ஏற்படும் தொழில் போட்டி நிர்பந்தத்தால்- ஒரு நிறுவனம் சிறப்பாகச் செயல்பட வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகிறது. இரண்டாவது, ஒரு நிறுவனம் சரிவை நோக்கிச் செல்லும்போது இந்த ஞானோதயம் ஏற்படுகிறது. புரட்சிகரமாக (மாறுதலாக) ஏதேனும் செய்யாவிடில், சில காலத்துக்குப் பின்பு இல்லாமலே போய்விடுவோம் என்ற நிலையில் மாற்றம் நிகழ்கிறது. மூன்றாவதாக, வெகு அதிசயமான விதத்தில் மாற்றம் நிகழ்கிறது. சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும்போதே, சுயபரிசோதனை செய்துகொண்டு மேலும் சிறப்பாகச் செயல்படுவதற்கான வழிமுறைகளைச் சில நிறுவனங்கள் தேடலாம்.

போட்டியே இல்லாத சூழலில், மிகுந்த லாபத்தில் இயங்கிவரும், நல்ல நிதி நிலைமையில் உள்ள நிறுவனம் இதுபோன்ற சுயபரிசோதனையில் இறங்கி, மேலும் சிறப்பான வழிமுறைகளைத் தேடுவதென்பது மிகவும் அரிது.

நன்கு இயங்கிக்கொண்டிருக்கும் பல நிறுவனங்கள், தங்களுக்கு எதுவும் நிகழாது என்று சொல்கின்றன. ஆனால், தற்போதைய சிறப்பான செயல்பாடு வெறும் கானல்நீர் என்பதே எனது கருத்து. ஏற்கெனவே பல நிறுவனங்களுக்கு நிகழ்ந்ததைப்போல இது மாறிவிடும்.

உலக வர்த்தக அமைப்பின் (WTO) ஒப்பந்தப்படியான சர்வதேச வர்த்தகம் நடைபெற இன்னும் மூன்று மாதங்களே எஞ்சியுள்ளன. இப்போது உள்ள குறுகிய அவகாசத்துக்குள் தம்மைத் தகவமைத்துக்கொள்ளாத நிறுவனங்கள், அப்போது 'உடனடி மரணத்தை'த் தழுவ நேரிடும்.

ஒரு சூ·பி கதை நினைவுக்கு வருகிறது.

ஒரு சூ·பி ஞானி, சாலையில் நடந்து கொண்டிருந்தார். அப்போது ஒரு மரத்தின் கிளை வெட்டப்படுவதைப் பார்த்து, தனது சீடர்களிடம் கேட்டார்: ''இந்த மரக்கிளையில் நீங்கள் என்ன பார்க்கிறீர்கள்?''

சீடர்கள் பார்த்துவிட்டுச் சொன்னார்கள்: ''குருவே, நீங்கள் காணுவதைப்போல நாங்கள் காண முடியாது. சூ·பி ஞானியாகிய நீங்கள் எதுகுறித்து இப்படிக் கேட்கிறீர்கள் என்பது எங்களுக்குத் தெரியாது.''

இப்போது சூ·பி ஞானி இப்படிக் கூறினார்: ''வெட்டி அகற்றப்பட்டுள்ள அக் கிளையைப் பாருங்கள். இன்னும் அது பசுமையாக இருக்கிறது; அதன் இலைகளும் உலர்ந்துவிடாமல் பச்சையாக இருக்கின்றன. ஆனால், இன்னும் மூன்று தினங்கள் கழித்து, இது வெயிலில் வாடிய பின்னர் பாருங்கள். அப்போது இது வாடி மடிந்து போயிருக்கும். எனினும், இப்போது இந்தக் கிளை, தான் இன்னமும் உயிரோடு இருப்பதாக நினைத்துக்கொள்கிறது. இதுவிஷயத்தில் நாம் என்ன சொன்னாலும் அது ஏற்றுக்கொள்ளாது.''

இந்தியத் தொழில் துறை மிகத் துல்லியமாக இந்த சூ·பி கதைபோல்தான் உள்ளது. 1990-களில் தமக்குக் கிடைத்த தொழில் பாதுகாப்புத்தன்மை (protectionism) இப்போது வெட்டப்பட்டுவிட்டது என்பதைப் பல நிறுவனங்கள் உணர்ந்துகொள்ளவில்லை. இப்போது கிடைக்கின்ற லாபத்தை நினைத்து அவை பெருமை கொள்கின்றன. இதுதான் இந்தியத் தொழில் துறைக்கு உள்ள மிகப் பெரிய பிரச்சினை.

உலகமய வர்த்தகம் முழுமூச்சில் நடைமுறைக்கு வரும்போது, குறைவான விலை, உயர்வான தரம் இல்லாவிடில் வாடிக்கையாளரின் வாசல்படியைக் கூட நம்மால் மிதிக்க முடியாது. தரம் என்பது வெறும் பொருளின் தரம் மட்டுமல்ல; பொருள்களை விநியோகிக்கின்ற முறையில் தரம், நிறுவன நிர்வாகத்தின் தரம், வாடிக்கையாளர்களைத் திருப்திப்படுத்தும் தரம் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கியது.

சர்வதேச வர்த்தகத்தில் 'குறையற்றது' (zero defect) என்று கூறினால், அதில் உண்மையாகவே துளி குறைகூட இருக்கக் கூடாது என்று அர்த்தம். 'அமெரிக்காவில் 30 இடங்களில் எங்களுக்கு ஆலைகள் உள்ளன. வாரத்துக்கு இரண்டு நாள், அனைத்து ஆலைகளிலும் காலை 9 மணிக்குள் உங்கள் உற்பத்தி பாகங்களை அளித்துவிடுங்கள்' என்று ஒரு நிறுவனம் கூறினால், அந்தந்த இடங்களில் அந்தந்த நாள்களில் அந்த மணிக்குப் பொருட்களை அளித்தாக வேண்டும்.

ஆனால் இந்தியாவில் அந்த மனப்போக்கு இல்லை. செவ்வாய் என்றால் புதன்கிழமைகூட தரலாம். அதை நாம் மன்னித்துவிடுவோம், பெரிதுபடுத்த மாட்டோம். ஆனால், சர்வதேச வர்த்தகத்தில் இதுபோன்ற 'முட்டாள்தனங்கள்' செல்லுபடியாகா.

சர்வதேச வர்த்தகத்தில் பூஜ்யம் (Zero) உண்மையிலேயே பூஜிக்கப்படுகிறது. ஜீரோ தடங்கல், ஜீரோ குறைபாடு, ஜீரோ விபத்து - இதுதான் அவர்களுடைய பேச்சு, மூச்சு. சர்வதேச வர்த்தகத்தில் போட்டியிட வேண்டுமானால் இந்த 'ஜீரோ'வின் சக்தியை நாம் மதித்தாக வேண்டும்.

இவையெல்லாம் முடியுமா? தடங்கலே இல்லாமல், குறையே இல்லாமல் பொருளைத் தயாரிக்க முடியுமா? விபத்தே இல்லாமல் ஆலையை நடத்த முடியுமா? குறிப்பிட்ட தினத்தில் குறிப்பிட்ட நேரத்தில் உலகின் பல பாகங்களுக்கும் குறிப்பிட்ட பொருள்களை விநியோகிக்க முடியுமா? இவற்றுக்கெல்லாம் ஒரே பதில் - முடியும்.

என்னால் என்ன இயலுமோ அதை விற்கிறேன் என்று கூறுவது, தோல்வியடைந்தவரின் செயல்முறை. எங்கே மக்கள் உங்களை விரும்பவில்லையோ, எங்கே உங்களைத் தகுதியற்றவர் என்று மறுதலிக்கிறார்களோ அங்கே சென்று விற்க வேண்டும். அதற்கு உங்கள் நிறுவனத்தின் போட்டியிடும் திறனை வளர்க்க வேண்டும்.

இதற்காக, அடைய முடியாத இலக்குகளை நிர்ணயித்தால் அவை அடைய முடியாமலேயே போய்விடும். மாறாக, அடையக் கூடிய ஆனால் கஷ்டப்பட்டு அடையக் கூடிய இலக்குகளை நிர்ணயிக்க வேண்டும்.

இறுதியாக ஒரு விஷயம். நிறுவனத்தின் ஊழியர்களை வெற்றிக்குத் தயார் செய்ய வேண்டும். நிறுவனத்தின் வெற்றிக்கு இது மிக முக்கியமானது.

முழு இந்தியாவை உங்களால் மாற்ற முடியாது போகலாம். ஆனாலும் உங்களது நிறுவனத்தை- உங்களைச் சுற்றியுள்ள மனிதர்களை உங்களால் மாற்ற முடியும்.

மெர்சிடீஸ் பென்ஸ் காருக்காக, சோனி டிவி-க்காக உலக மக்கள் காத்திருப்பதைப்போல, இந்தியாவில் தயாராகும் பொருள்களுக்காக அவர்கள் ஏன் காத்திருக்கக் கூடாது? அந்த நிலையை உருவாக்க வேண்டும். அது இயலக்கூடிய காரியம்தான்.

தமிழில்: பத்மன்

© TamilOnline.com