கிரிக்கெட் ஸ்ரீகாந்த்தின் அதிரடி வணிகம்
அதிரடி ஆட்டத்தால் பெயர் பெற்றவர் கிரிக்கெட் மட்டையாளர் ஸ்ரீகாந்த். தடாலடியாகப் பேசுவதிலும் வல்லவர் என்பதை சின்னத்திரையில் அவர் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிகளில் தெரிந்து கொண்டிருக்கலாம்.

கிரிக்கெட்டில் குறுக்குவழி 'ஓட்டங்களால்' பணம் பார்க்க நினைக்காமல், கௌரவமாக ஓய்வு பெற்றவர்; அதேநேரத்தில் கிரிக்கெட் புகழ் மூலம் வணிகத்தில் 'நிதானமாக ஊன்றி ஆடும்' ஒருசில முன்னாள் கிரிக்கெட் வீரர்களில் ஒருவர். ஆனால் அதிலும் தனது அதிரடி ஆட்டத்தைக் காட்டிவிட்டார், மெதுவாக 'ஸ்கோர்' உயர்வதை எப்போதுமே விரும்பியிராத ஸ்ரீகாந்த்.

அவரது வணிக அதிரடி ஆட்டத்தை அறிய ஆவலாக இருக்கிறதா?

சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீகாந்த் தொடங்கிய 'கிரிஷ் ஸ்ரீகாந்த் ஸ்போர்ட்ஸ் அண்ட் என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட்' பற்றிப் பலருக்கும் தெரிந்திருக்கலாம். அந் நிறுவனத்தின் தொலைக்காட்சித் தொடர் தயாரிப்பான 'கோல்டன் மொமண்ட்ஸ் ஆ·ப் இந்தியன் கிரிக்கெட்'-டை அத்தனைச் சுலபத்தில் விளையாட்டு விரும்பிகள் மறந்துவிடுவார்களா என்ன?

இப்போது கிரிக்கெட் ரசிகர்களின் ஆவலுக்குத் தீனிபோடும் 'கிரிஷ்ஸ்ரீகாந்த்.காம்' இணைய தளமும் அந் நிறுவனத்தினுடையதே. பிரபலக் கிரிக்கெட் வீரர்களின் பேட்டிகள், விளையாட்டுப் புதிர்கள், வினா-விடை, உங்களுக்குத் தெரியுமா எனப் பல்வேறு சிறப்பம்சங்கள், சுமார் இரண்டாண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட இத் தளத்தில் விரிந்துள்ளன.

இவ்வாறு விளையாட்டு சார்ந்த ஊடகத் தொழில் துறையில் வெற்றிநடை போட்டுவரும் தனது நிறுவனத்தை 'பென்டாமீடியா கிரா·பிக்ஸ்' நிறுவனத்திடம் சமீபத்தில் 'கேட்ச்' கொடுத்து வென்றுவிட்டார் ஸ்ரீகாந்த்!

தனது நிறுவனத்தின் 100 சதவிகிதப் பங்குகளை பென்டாமீடியாவுக்குக் கொடுப்பதன் பிரதிபலனாக அந் நிறுவனத்தின் 2.25 சதவிகிதப் பங்குகளைப் பெறவுள்ளார் ஸ்ரீகாந்த். அடடா! என்று வருத்தப்படாதீர்கள். ஸ்ரீகாந்த் புத்திசாலி.

பென்டாமீடியா நிறுவனத்தின் 2.25 சதவிகிதப் பங்குகளின் தற்போதைய சந்தை மதிப்பு என்ன தெரியுமா? சுமார் ரூ. 25 கோடி. ஸ்ரீகாந்த் நிறுவனத்தின் மொத்தப் பங்குகளின் மதிப்பைவிட இது பன்மடங்கு அதிகம்.

பென்டா·போர் குழும நிறுவனங்களில் ஒன்றாகிய பென்டாமீடியா கிரா·பிக்ஸின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் வி. சந்திரசேகரன். தற்போது ரூ. 40.24 கோடியை மூலதனமாகக் கொண்டுள்ள இந் நிறுவனத்தின் நிகரச் சொத்து மதிப்பு ரூ. 1,232.68 கோடி என அயர வைக்கிறது. ரூ. 10 முகமதிப்புள்ள இந் நிறுவனத்தின் பங்கு தற்போது சுமார் ரூ. 280-க்கு விலைபோகிறது.

கிரிஷ் ஸ்ரீகாந்த் ஸ்போர்ட்ஸ் அண்ட் என்டர்டெய்ன்மென்ட் தவிர, மீடியா டிரீம்ஸ் மற்றும் மாயாஜால் ஆகிய நிறுவனங்களையும் பென்டாமீடியா தன்வசத்தின்கீழ் கொண்டுவந்துள்ளது.

'பாரதி' திரைப்படத்தைத் தயாரித்துப் பெருமை பெற்ற மீடியா டிரீம்ஸ் நிறுவனத்தை 3.08 சதவிகிதப் பங்குகளை அளித்துக் கைக்கொள்கிறது பென்டாமீடியா. மூன்றாண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட மீடியா டிரிம்ஸ், தொலைக்காட்சித் தொடர்களையும் தயாரித்து வருகிறது.

இரண்டாண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட மாயாஜால் நிறுவனம், பொழுதுபோக்குக் கருத்துருப் பூங்காக்களை (தீம் பார்க்ஸ்) அமைத்து வருகிறது. மகாபலிபுரம் சாலையில் 6 திரையரங்குகள், விடியோ விளையாட்டுகள், `பௌலிங்' விளையாட்டு அரங்குகள், இணைய அலசு மையங்கள், வர்த்தக வளாகங்கள், உணவகங்கள் ஆகியவற்றை ஒருங்கேகொண்ட தீம் பார்க்கை இந் நிறுவனம் அமைத்து வருகிறது.

மாயாஜால் நிறுவனத்தை, தனது 3.47 சதவிகிதப் பங்குகளைக் கொடுத்து பென்டாமீடியா கைக்கொள்கிறது. மீடியா டிரீம்ஸ் மற்றும் மாயாஜால் ஆகியவை பென்டாமீடியா நிறுவன அமைப்பாளர்களால் தனியாகத் தொடங்கப்பட்டு நடத்தப்பட்டு வந்தவை என்பது குறிப்பிடத் தக்கது.

ஆனால் கிரிஷ் ஸ்ரீகாந்த் நிறுவனம், ஸ்ரீகாந்தின் சுயமுயற்சியால் உருவானது. கிரிக்கெட் விளையாட்டில் மட்டுமின்றி தொழில் வர்த்தகத்திலும் தான் ஓர் 'அதிரடி ஆட்டக்காரர்' என்பதை, சிறப்பாக ஒரு நிறுவனத்தைத் தொடங்கி நடத்தி, அதை மேலும் சிறப்பாக விற்று லாபமீட்டியதன் மூலம் உணர்த்தியுள்ளார் ஸ்ரீகாந்த்.

தொழில்நுட்பத் துறையில் ஒரு நிறுவனத்தை 'வளர்த்து ஆளாக்கிய' பின்னர் விற்றுவிட்டு, புதிய யோசனைகளுடன் அடுத்த இலக்குக்கான நிறுவனத்தைத் தொடங்குவது மேலைநாடுகளில் இப்போது சர்வசாதாரணம். அவ்வகையில் ஸ்ரீகாந்தின் அடுத்த 'விளாசல்' எது? எப்போது? இப்போதே வாழ்த்துகள்.

பத்மன்

© TamilOnline.com