பூகம்பங்களை முன்கூட்டியே அறிய முடியுமா?
இந்தியாவில் ஐம்பது ஆண்டு கால வரலாற்றில் கடந்த வாரம் குஜராத் மாநிலத்தில் நடந்தது போல மிகவும் கோரமான பூகம்பம் ஏற்பட்டது இல்லை. இந்தப் பூகம்பத்தின் அளவு ரிட்ச்டர் அளவு கோலில் 7.9 புள்ளிகளாகப் பதிவாகி இருந்தது.

பூம்பத்தின் அளவை நிர்ணயிப்பதற்காக விஞ்ஞானிகள் ரிட்ச்டர் என்ற அளவு கோலைப் பயன்படுத்துகின்றனர். கடந்த 1935 ஆம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த புவியியல் விஞ்ஞானியான 'சார்லஸ் ரிட்ச்டர்' என்பவர் இந்த அளவு கோலைக் கண்டுபிடித்தார். அவருடைய பெயரைத் தாங்கி ரிட்ச்டர் அளவு என்று வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த 1936 ஆம் ஆண்டு கொலம்பியா, ஈக்வடார் ஆகிய நாடுகளின் எல்லையில்தான் மிகப் பெரிய நில அதிர்வு ஏற்பட்டது என்றும் அதன் அளவு 8.9 ரிட்ச்டர் அளவு பதிவாகியது என்றும் கூறப்படுகிறது. இதே போல ஜப்பான் நாட்டில் 1933 ஆம் ஆண்டு நிகழ்ந்த பூகம்பம் ரிட்ச்டர் அளவு கோலில் 7.0 புள்ளிகள் பதிவாகியுள்ளது. மேலும் 1906 ஆம் ஆண்டில் சான்பிரான்சிஸ்கோ நாட்டில் ஏற்பட்ட பூகம்பம் 8.3 புள்ளிகளாகப் பதிவாகி இருந்தது என்றும் புவியியல் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இதனையடுத்து 1965 ஆம் ஆண்டு மெக்சிகோ நகரில் ஏற்பட்ட மிகப் பெரிய நில நடுக்கத்தின் அளவு 8.1 ரிட்ச்டர் அளவுகோல் பதிவாகியுள்ளது. இப் பூகம்பம் கடைசியாக நடந்த மிகப் பெரிய பூகம்பம் என்றும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

உலகம் முழுவதுமே பொதுவாக நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நில அதிர்வுகள் ஏற்படுகின்றன என்றும், ஆனால் இவற்றின் அளவு 2 புள்ளிகளுக்கும் குறைவாக இருப்பதனால் எந்த விதமான உயிர்ச்சேதமோ கட்டிடங்கள் சேதமோ அடைவது இல்லை என்று புவியியல் ஆய்வு விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

ஏழு புள்ளிகள் மற்றும் அதற்கு மேல் பூகம்பத்தால் அதிர்வு ஏற்படும்பொழுதுதான் மிகப் பெரிய பொருள் சேதமும் பல்லாயிரக்கணக்கில் மனித உயிர்கள் மடிகின்ற கோர நிலைமையும் ஏற்படுகின்றன என்றும் விஞ்ஞானிகள் உறுதிப்படுத்துகின்றனர்.

இவ்வாறு 7 புள்ளிகள் நில நடுக்கம் பதிவாகும்போது ஆறு புள்ளிகளால் ஏற்படும் சேதத்தைப் போல பத்து மடங்கு சேதம் ஏற்படும் என்றும் அந்த விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர்.

மேலும் தற்போது 'மாடிபைடு மெர்க்லலி' என்றும் எம்.எம். என்ற அளவுகோலையும் பயன்படுத்துகின்றனர். அதிலும் 12 வகைகள் உள்ளன எனவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

மெக்சிகோ நகரில் 1985-ஆம் ஆண்டு ஏற்பட்ட நில நடுக்கத்தில் ஐயாயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் என்றும், பத்தாயிரம் பேர் காயமடைந்தனர் என்றும் மேலும் பல ஆயிரக்கணக்கானோர் காணாமல் போய் விட்டனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பூமியின் அடிப்பகுதிகளில் ஏற்படும் அதிர்வுகள், சுழற்சிகள் அல்லது உடனடி அதிர்ச்சி ஆகியவற்றால்தான் நில நடுக்கம் ஏற்படுகிறது என புவியியல் ஆய்வு விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

அதாவது நில நடுக்கங்கள் பூமியின் அடிப்பரப்பில் ஏற்படுகின்றன என்றும் வேறு சில பூமியின் அடியில் 40 கி.மீ ஆழமான பகுதிகளில் ஏற்படுகின்றன என்றும் தெரிவிக்கிறார்கள்.

பூகம்ப வரலாற்றிலேயே துருக்கியில் ஏற்பட்ட மிகப் பெரியதும் மிகக் கொடியதுமான பூகம்பத்தில் மட்டும் இரண்டரை லட்சம் பேர் மடிந்தனர். இதற்கடுத்தாற் போல் தற்போது குஜராத் மாநிலத்தைத் தாக்கிய பூகம்பம்தான் உலக வரலாற்றில் மிகக் கோரமான துயரத்தைத் தந்துள்ளது.

குஜராத் மாநிலத்தில் கடந்த 26- ஆம் தேதி ஏற்பட்ட பூமி அதிர்ச்சியில் லட்சக்கணக்கான மக்கள் பலியாகி விட்டனர். பல நகரங்களும், கிராமங்களும் அடியோடு அழிந்து குஜராத் மாநிலமே சுடுகாடாக மாறிவிட்டதால் ஏற்பட்ட அதிர்ச்சியிலிருந்து அம் மக்கள் இன்னமும் மீளவில்லை.

இந்த நிலையில் மீண்டும் மீண்டும் பூமி அதிர்ச்சி தாக்கி குஜராத்தைச் சோதனையில் ஆழ்த்தி வருகிறது.

நேரு பல்கலைக்கழகச் சுற்றுப்புறச்சூழல் விஞ்ஞானி உதவிப் பேராசிரியர் சவுமித்ரா முகர்ஜி கூறியதாவது, "அந்தமான் தீவு மற்றும் மேற்குக் கடற்கரைப் பகுதியில் உள்ள குஜராத், கேரளா மற்றும் வட கிழக்குப் பகுதிகளில் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை பூமி அதிர்ச்சி ஏற்படப் பெரும் வாய்ப்பு உண்டு.

குஜராத்தில் இப்போது ஏற்பட்ட பூமி அதிர்ச்சியில் குஜராத்தில் வறட்சி நிலவியதற்கும் தொடர்பு உண்டு. எனவே பெரிய அணை கட்டுவது குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும்".

மும்பை பாபா அணு ஆய்வு மைய பூகம்பவியல் துறைத் தலைவர் நாயர் குறிப்பிடுகையில், "குடியரசு தினத்தன்று நிகழ்ந்த பூகம்பம் மணிக்கு 10 ரிக்டர் அளவில் குலுங்கியது. நேற்றைய (28-1-2001) பூகம்பம் மணிக்கு 2 ரிட்ச்டர் என்ற அளவிலேயே இருந்தது. கூடிய விரைவில் பூகம்ப அளவு 5 முறை எனக் குறைந்து விடும்.

பூகம்பத் தாக்குதலுக்குத் தப்பிய வீடுகளில் பூமியின் நிலைப்புத் தன்மை 7 ரிட்ச்டர் அளவுகளைத் தாங்கும் வகையில் இருக்கிறதா என்பதைக் குஜராத் அரசு ஆராய வேண்டும். விரிசல் கண்டுள்ள வீடுகளில் இனி பொது மக்கள் வசிக்கக்கூடாது" என்று குறிப்பிட்டுள்ளார்.

குஜராத்தின் பூஜ் மாவட்டத்தில் கடந்த 26 -ஆம் தேதி பூகம்பப் பேரழிவை அடுத்து இதுவரை சுமார் 257 முறை பூமி குலுங்கியுள்ளது. கணக்கு வழக்கில்லாமல் குஜராத் குதியாட்டம் போட்டுள்ளது. 6 ரிட்ச்டர் அளவைத் தொட்டுள்ளது இப் பூகம்பம். இது தொடர்பாகப் பூமி அதிர்ச்சியை முன்கூட்டியே கணிக்க முடியுமா? என்பது தொடர்பாக விஞ்ஞானிகள் மாறுபட்ட கருத்தைத் தெரிவிக்கின்றனர்.

பூமி அதிர்ச்சியை முன்கூட்டியே கணித்தால் பொருள் சேதத்தைத் தவிர்க்க முடியாவிட்டாலும் உயிர்ச் சேதத்தைத் தவிர்க்கலாம்.

ஒரு சிலர் மட்டும் பூமி அதிர்ச்சியை முன்கூட்டியே கணிக்கலாம் என்று கூறுகிறார்கள். ஆனால் அதற்கான சாத்தியக்கூறு இல்லை என்று பலர் கூறுகின்றனர். ஆனால், பூமி அதிர்ச்சியைக் கணிக்க முடியும் என்பவர்கள் அதற்கான ஆதாரங்களை எடுத்து வைக்கின்றனர்.

1973-ஆம் ஆண்டு நியூயார்க் பகுதியில் பூமி அதிர்ச்சி ஏற்பட்டது. இதை முன்கூட்டியே அகர்வால் என்ற இந்தியர் கணித்தார். 1975-ல் சீனாவில் பூமி அதிர்ச்சி ஏற்படும் என்பதை சீன நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகள் முன்கூட்டியே கணித்தனர். இதனால் 1 லட்சம் பேரின் உயிரை முன்கூட்டியே காக்க முடிந்தது. ஆனால், பலமுறை நேர்ந்த பூமி அதிர்ச்சியை முன்கூட்டியே கணிக்க முடியவில்லை.1976--ல் சீனாவை உலுக்கிய பூமி அதிர்ச்சியை யாராலும் கணிக்க முடியவில்லை. பூமி அதிர்ச்சியை நவீன கருவிகளால் கூட கணிக்க முடியவில்லை.

பூமி அதிர்ச்சி பல்வேறு காரணங்களால் ஏற்படலாம் என்பதால் அதைக் கணிப்பது எளிதானது அல்ல என்று விஞ்ஞானிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

அண்மைக்காலம் வரை இந்தியாவின் தீபகற்பப் பகுதியில் கடுமையான பூமி அதிர்ச்சி எதுவும் ஏற்படாது என்றே கருதப்பட்டது. ஆனால், கடந்த 1993-ஆம் ஆண்டு மராட்டியத்தில் உள்ள லத்தூர் பூமி அதிர்ச்சியால் தரைமட்டமானது.இப்போது குஜராத்தில் ஏற்பட்டுள்ளது. தீபகற்பப் பகுதி தொடர்ந்து வடக்குத் திசை நோக்கி நகர்ந்து வருவதால்தான் இது போன்ற பூமி அதிர்ச்சிகள் அடிக்கடிபேற்படுகின்றன. எனவே, தீபகற்ப இந்தியா (தென் இந்தியா) அடிக்கடி பூமி அதிர்ச்சிக்குள்ளாகும் ஆபத்து உள்ளதென விஞ்ஞானிகள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

பூமி அதிர்ச்சியால் சேதம் அடையாத வகையில் வீடுகளைக் கட்டினால் உயிர், பொருள் சேதத்தைத் தவிர்க்கலாம்.ஈதற்காக பூமி அதிர்ச்சியைத் தாங்கக்கூடிய வீடுகள் கட்டுவதைக் கட்டாயமாக்கும் சட்டம் ஒன்றைக் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

இந்தியத் தீபகற்பத்தில் பூகம்ப அதிர்ச்சி அதனால் ஏற்படக்கூடிய கோர விளைவுகள் எத்தகையது என்பதைக் குஜராத் உணர்த்தி உள்ளது. அனைத்து மக்களும் குஜராத் மாநிலத்தின் மீட்புப் பணியில் பங்கேற்க வேண்டியது ஒவ்வொருவரின் அவசியக் கடமை. அனைவரையும் மனிதாபிமானம் அழைக்கிறது.

துரை.மடன்

© TamilOnline.com