மார்ச் 22 - உலகக் குடிதண்ணீர் தினம்
'எண்ணெயையும் மண்ணையும் விட வருங்காலங்களில் தண்ணீருக்காகத்தான் உலகில் போர்கள் அதிகமாக மூளப் போகின்றன' - என்று சுற்றுச்சூழல்வாதிகள் இப்போது எச்சரிக்க ஆரம்பித்துள்ளார்கள். சோமாலியாவிலும், போஸ்னியாவிலும் தண்ணீரைப் பகடையாக வைத்துப் பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டதை எதிர்காலத்தில் நிகழவிருக்கின்ற 'தண்ணீர் யுத்தங்'களுக்கான ஒரு முன்னோட்டமாகவே இவர்கள் கருதுகிறார்கள்.
90 இன் ஆரம்பத்தில் சோமாலியாவின் உள்நாட்டுப் போரில் கிணறுகளைப் பாறைக்கற்களால் நிரப்பியும், தண்ணீர்க் குழாய்களை சேதமாக்கியும், நீரைப் பாய்ச்சும் மோட்டார்களைச் சூறையாடியும் நகரங்களின் குடிநீர் வழங்கு அமைப்பு முழுவதுமே துவம்சம் செய்யப்பட்டது. குடிக்கத் தண்ணீர் இன்றி லட்சக்கணக்கான மக்கள் அவதிக்கு ஆளானார்கள். விளைவு? காலராவும் நீரினால் பரவும் பிற நோய்களும் பல்லாயிரக்கணக்கான சோமாலியர்களைப் பசியாறியது.
போஸ்னியாவிலும் செர்பியர்கள் முஸ்லிம்கள் மீதான தாக்குதலுக்குக் கடைப்பிடித்த தந்திரங்களில் தண்ணீரும் ஒன்றாக இருக்கிறது. சராஜிவோவில் மின் விநியோகத்தைத் துண்டித்துத் தண்ணீர் இறைக்கும் இயந்திரங்களுக்குக் கட்டாய ஓய்வைக் கொடுத்து அவர்களைக் கிணறுகளைத் தேடிக் கூட்டம் கூட்டமாக இடம் பெயர வைத்தார்கள். குளக்கரைகளில் நீர் தேடி வரும் காட்டு விலங்குகளைக் காத்திருந்து வெடி வைத்துப் பிடிப்பது போல் கிணறுகளைச் சூழக் குழுமும் முஸ்லிம்கள் செர்பியர்களால் ஏவுகணைகளால் குறி வைத்துச் சாகடிக்கப்பட்டிருக்கிறார்கள்.
தண்ணீர் வளங்களைச் சீர்குலைப்பதைத் தாக்குதலுக்கான ஒரு யுக்தியாகப் பயன்படுத்திய இந்த நிலை மாறி, இனி தண்ணீருக்காகவே நீர் வளங்கள் மீது படையெடுக்கும் நிலை உருவாகிவிடும் என்று சொல்லப்படுவதை ஒதுக்கி விடுவதற்கில்லை. சுருங்கி வரும் நீர் ஆதாரங்களையும் அதையொட்டி நிகழும் தண்ணீர் அரசியலையும் பார்த்தால் வருங்காலங்களில் தண்ணீருக்கான போர் தவிர்க்க முடியாதது என்றே தோன்றுகிறது.
ஜோர்டானின் முன்னாள் மன்னர் ஹ¤சேன், இஸ்ரேலுக்கும் தங்களுக்கும் இடையில் உருவாக்கி வைத்திருக்கும் சமாதான உறவு சிதறுவதானால் அது இரண்டு நாடுகளும் தண்ணீரைப் பகிர்ந்து கொள்வதில் உருவாகும் பிரச்சனையால் மட்டுமே ஏற்படும் என்று கூறியிருக்கிறார். புட்ரோஸ்-புட்ரோஸ்காலி எகிப்தின் வெளியுறவு அமைச்சராக இருந்தபோது அமெரிக்கக் காங்கிரஸ் முன் பேசும்போது, ''எகிப்தின் தேசியப் பாதுகாப்பு நைல் ஆற்றின் பள்ளத்தாக்குகளில் உள்ள எட்டு ஆப்பிரிக்க நாடுகளின் கரங்களிலேயே உள்ளது'' என்று குறிப்பிட்டிருக்கிறார். இப்படி மத்திய கிழக்கில் உள்ள அனைத்து நாடுகளும் பல நதிகளைப் பங்கு போடுவதால் அவற்றைப் பகிர்ந்து கொள்வது தொடர்பான ஆபத்து அப் பகுதி முழுவதும் எப்போதும் தொங்கிக் கொண்டே இருக்கிறது. நாடுகளுக்கிடையே மட்டுமல்ல, நாடுகளின் உள்ளே கூட நீர்ப்பங்கீடு என்பது பெரும் சவாலாகவே இருக்கப் போகின்றது என்பதை காவிரி நதி நீர் விவகாரத்தில் கர்நாடகாவும் தமிழகமும் நரம்பு புடைக்க முறைத்துக் கொள்வது தெளிவாக்குகிறது.
தண்ணீருக்குத் தட்டுப்பாடா? என்பது நம்ப முடியாத ஒரு கேள்வியாகவே இன்றுவரை பெரும்பாலானோருக்கு இருக்கிறது. குழாயைத் திருப்பினால் தண்ணீர் புதிதாக, குடிக்க வசதியாக, சில நேரங்களில் குளோரின் வாசனையோடு என எப்போதும் கொட்டிக் கொண்டிருக்கும் என்பதே எண்ணமாக இருக்கிறது. உலகப் படத்தில் விரிந்த கடற்பரப்பைப் பார்த்துவிட்டு நீர் வளம் அளவற்றது என்றே இவர்கள் கருதுகிறார்கள். நன்னீர் பற்றாக்குறையின் அளவை உண்மையில் அறிந்தவர்கள் மிகச் சிலரே.
பூமியில் உள்ள நீரில் 97.5 வீதம் கடலில் உவர் நீராகக் கரித்துக் கொண்டிருக்க நன்னீராக எஞ்சியிருப்பது வெறுமனே 2.5 வீதம்தான். இதிலும் பெரும் பகுதி அண்டார்டிகாவிலும் கிரீன்லாந்திலும் பனிப்பாளங்களாக உறைந்து போய்க் கிடக்கிறது. எஞ்சியது மண்ணின் ஈரத்திலோ அல்லது எடுக்க முடியாத ஆழத்தில் தரையடி நீராகவோதான் உள்ளது. மொத்தத்தில் பூமியில் உள்ள நன்னீர் முழுவதிலும் வெறுமனே 0.007 வீதம் மட்டுமே பயன்படக்கூடிய நீராக இருக்கிறது. இதன் பரம்பலிலும் இயற்கை பாரபட்சமாக நடந்து கொண்டிருக்கிறது. அமெரிக்கா போன்ற நாடுகளில் ஒரு குடும்பம் நாளொன்றுக்கு 2000 லிட்டர் நீரைத் தாராளமாக செலவு செய்யக்கூடிய வகையிலும், வளர்முக நாடுகள் பலவற்றில் ஒரு குடும்பம் 20 லிட்டர் நீரைப் பெறுவதற்கே திண்டாடும் வகையிலும் ஓரவஞ்சனையுடன் பகிரப்பட்டிருக்கிறது.
கைக்கெட்டியும் வாய்க்கு எட்டாத கதையாக, உயிர் ஆதாரமான இந்தச் சொற்ப அளவு நீருக்கும் ஆபத்து வந்துள்ளது என்பதுதான் இன்றுள்ள பிரச்சனையே. அதிகரித்து வரும் மக்கள் தொகையும், விரிவாகிக் கொண்டு வரும் வேளாண் நடவடிக்கைகளும், தொழில்மயமாதலும் சேர்ந்து விலை மதிப்பில்லாத இந்த நீர் வள ஆதாரத்தை வற்றச் செய்து வருகின்றன. 50 ஆண்டுகளுக்கு முன்பு ஒருவருக்குக் கிடைத்த நீரின் அளவில் பாதிதான் இன்று நமக்குக் கிடைக்கிறது. 1950 இல் வேளாண்மை, தொழில்துறை, வீடுகள் ஆகியவற்றின் பயன்பாட்டுக்குப் போகத் தலைக்கு ஆண்டொன்றுக்கு 16,800 கன மீட்டர் வீதம் உலகில் நீர் வளம் கையிருப்பில் இருந்தது. இன்று உலக நீர் வள இருப்பு 7,300 கன மீட்டருக்குக் குறைந்துவிட்டது. இன்னும் 25 ஆண்டுகளில் இது 4,800 கன மீட்டராகக் குறைந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
50 ஆண்டுகளுக்கு முன்பு உலகில் எந்த நாடும் நீர் வளத்தில் அபாய அளவை எட்டவில்லை. ஆனால் இன்று மத்திய கிழக்கு நாடுகள், ஆப்பிரிக்க நாடுகள் என்று 46 கோடி மக்கள் குடிநீர்ப்பற்றாக்குறையால் அவதிப்படுகிறார்கள். மேலும் 25 வீதம் பேர் குடிநீர்ப் பஞ்சத்தை எதிர்நோக்கியிருக்கிறார்கள். ஆக்கபூர்வமாக எதுவும் செய்யவில்லையென்றால் இந்த நுற்றாண்டின் முதல் கால்வாசிக் காலத்தினுள்ளேயே உலக மக்களில் மூன்றில் இரு பகுதியினர் தண்ணீரின்றித் தவிக்க நேரிடும் என ஐக்கிய நாடுகள் சபை வேறு தன் பங்குக்குக் கலவரப்படுத்தியிருக்கிறது.
பற்றாக்குறை என்பது இப் பிரச்சனையின் ஒரு பாதிதான். நீரின் அளவு மட்டுமல்ல; இருக்கின்ற நீரின் தரமும் நாளுக்கு நாள் அபாயகரமான அளவுக்குக் குறைந்து வருவது பிரச்சனையின் மறுபாதியாக இருக்கிறது. இதிலும் அதிகம் பாதிப்புக்கு ஆளாகி வருவது வளர்முக நாடுகள்தான். தாராளமயமாக்கலின் பெயரால் வளர்ந்த நாடுகளுக்குத் தேவையான பொருள்கள் யாவும் இன்று வளர்முக நாடுகளிலேயே உற்பத்தி செய்யப்படுவதால் மறைமுகமாக வளர்ந்த நாடுகள் தங்கள் நீர் வளத்தைத் தற்காத்துக் கொள்கின்றன. கடுமையான சட்ட விதிகளினால் அங்கிருந்து விரட்டப்பட்ட தொழிற்சாலைகள் பல வளரும் நாடுகளில் எந்த வித ஆட்சேபமுமின்றிக் காலூன்றியுள்ளன. 'பசுமைப்புரட்சி' நிலத்தடி நீரை வேகமாக இறைத்துத் தள்ள கடல் நீர் நன்னீர் வில்லையினுள் புகுந்து கொள்வதாலும், இறால் வளர்ப்பு 'நீலப்புரட்சி'யில் கடல் நீர் உள் வாங்கப்படுவதாலும் குடிநீர் ஒருபுறம் உப்பேறிக் கொண்டிருக்க, இன்னொருபுறம் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் வேதிப் பொருட்கழிவுகள், விவசாய ரசாயனங்கள், எரிபொருள் போன்றவைகளால் மெல்ல மெல்ல நஞ்சாகிக் கொண்டிருக்கிறது.
உலக மக்கள் தொகையில் முதலிடம் வசிக்கும் சீனாவிலேயே உலக அளவில் எடுத்துக்காட்டத்தக்க நீர்ச்சூழல் சீர்கேடு நிலவி வருகிறது. 79 வீதமான சீன மக்கள் தொற்றுள்ள நீரையே பருகி வருவதாக ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் மதிப்பீட்டில் தெரிய வந்துள்ளது. சீனாவின் யாங்கே ஆற்றில் தினமும் 40 மில்லியன் தொன் கழிவு கலந்து கொண்டிருக்கிறது. இதனால் தேசிய மரண வீதத்திலும் பார்க்க ஆற்றுப்படுகையில் உள்ளவர்களின் மரண வீதம் 30 வீதத்தால் அதிகமாகி இருப்பதும் அறியப்பட்டுள்ளது. சீனாவின் மக்கள் விடுதலை ராணுவத்தில் இப் பகுதிகளில் இருந்து கடந்த காலங்களில் ஒருவரையேனும் சேர்த்துக் கொள்ள முடியாத அளவுக்கு இவர்களின் உடல்நிலை மோசமானதைத் தொடர்ந்து நீருடன் கழிவுகளைக் கலந்து கொண்டிருந்த 1,111 காகித ஆலைகளையும் 413 பிற கைத்தொழிற்சாலைகளையும், சீன அரசு இப்போது இழுத்து மூடி விட்டிருக்கிறது. மூன்றாம் உலக நாடுகளில் நீண்டு செல்லும் நீர்ச்சூழல் சீர்கேட்டின் பட்டியலில் இது ஒரு உதாரணம்தான்.
இருக்கும் நீர்ப்பற்றாக்குறையை மறைப்பதுதான் தற்போதுள்ள நீர் மேம்பாட்டுத் திட்டங்களின் முக்கிய நோக்கமாக இருக்கிறது. நீர் வளத்தை அதிகரிக்கச் செய்வது என்பது இயலாத நிலையில் அணைகள் கட்டுதல், உப்பு நீக்க ஆலைகள் அமைத்தல் போன்ற தொழில்நுட்பத் தீர்வுகள் முன் வைக்கப்படுவதுடன் துருவப் பகுதிகளில் இருந்து பனிப்பாறைகளை இழுத்து வரலாம் என்ற விசித்திரமான ஆலோசனைகளும் இப்போது முன் வைக்கப்படுகின்றன.
ஆனால் நீரியல் அறிஞர்களும், பொறியியலாளர்களும் முன் வைக்கும் இந்தத் தீர்வுத் திட்டங்களுக்கு முன்பு போல வரவேற்பு கிடைப்பதாய் இல்லை. இயற்கைப் பாதுகாப்பாளர்களும், பொருளாதார அறிஞர்களும் இந்த விஷயத்தில் வழக்கத்திற்கு மாறாகக் கைகோர்த்துக் கொண்டு கூட்டணி அமைத்திருக்கிறார்கள். தொழில் நுட்பத் தீர்வுகள் அவற்றின் வரம்புகளை எட்டி விட்டதாகக் கூறும் இவர்கள், இனிமேலும் புதிய அணைகளைக் கட்டுதல், ஆழ்குழாய்க்கிணறுகளை அமைத்தல், ஆறுகளைத் திசை திருப்புதல் போன்ற திட்டங்களுக்கு எதிராகப் பொருளாதார - சமூக - உயிரின மண்டல வாதங்களை முன் வைக்கின்றனர்.
இந்த வாதங்களில் நியாயம் இருக்கிறது. இன்று கடும் விவாதத்துக்குள் மாட்டிக் கொண்டிருக்கும் இந்தியாவின் நர்மதா அணைத் திட்டத்தில் 30 பெரும் அணைகள், 135 நடுத்தர அணைகள், 3,000 சிறு அணைகள் எனக் கட்டுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளன. இதில் மிகப் பெரும் அணையான சர்தார் சரோவர் அணை மட்டும் 37,000 ஹெக்டேர் காடுகளையும் விளை நிலங்களையும் மூழ்கடிக்கும் எனவும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான ஏழை மலையக மக்கள் அவர்களின் வாழ்விடங்களை விட்டு நிரந்தரமாகவே விரட்டப்படுவார்கள் என்றும் அஞ்சப்படுகிறது.
குளிக்கப் போய்ச் சேறு பூசிய கதையாக சோவியத் ரஷ்யா ஆறுகளைத் திசை திருப்பப் போய் ஏரல் கடலைச் சுருங்கச் செய்த உயிரின மண்டலத்தின் பேரழிவும் இவர்களின் வாதங்களுக்குப் பெரும் சாட்சியாக இருக்கிறது. ஏரல் கடலுக்கு நல்ல நீரைச் சேர்த்துக் கொண்டிருந்த ஆறுகளைப் பருத்தியும் மற்றைய பயிர்களும் விளைவிப்பதற்காக 1960 களில் சோவியத் அரசு திசை திருப்பியதால் ஏரல் கடலுக்கு வரும் நன்னீரின் அளவு குறைந்து கடல் சுருங்கத் தொடங்கி விட்டது. இன்று கரையில் இருந்து 100 கிலோ மீட்டர் தள்ளிச் சென்றே மீன் பிடிக்க வேண்டியிருக்கிறது. அதுவும் 30 வகையான மீன்கள் இருந்த கடலில் இன்று இரண்டு வகையான மீன்கள் மட்டுமே எஞ்சியுள்ளன. கடற்படுகையில் படிந்து கிடக்கும் உப்பைக் காற்று வாரிச் சென்று பயிரிடும் வயல்களில் சேர்த்துக் கொண்டிருக்கிறது. இப் பகுதிகளின் குடிநீரில் உப்பு உலக சுகாதார அமைவனம் பரிந்துரைத்ததை விட நான்கு மடங்காக அதிகரித்து விட்டது. குடிநீரின் மோசமான தன்மையால் உலகிலேயே கைக்குழந்தைகளின் மரண வீதம் அதிகமாக உள்ள இடமாக ஏரல் கடலை அண்டிய பகுதிகள் இருப்பதும் சுற்றுச்சூழல்வாதிகளால் சுட்டிக் காட்டப்படுகிறது.
தொழில்நுட்பத் தீர்வுகளை நிராகரிக்கும் பொருளாதார அறிஞர்கள், நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவதற்கு விரயத்தைத் தவிர்த்துத் தரத்தைப் பேணுவதற்கு நுகர்வோரிடம் நீருக்கு விலை வாங்க வேண்டும் என்பதையே தீர்வாக வலியுறுத்துகின்றனர். ஒரு பன்னாட்டு நீர்ச்சந்தையை ஏற்படுத்தி நீர் வளம் மிகுந்த நாடுகளில் இருந்து நீர் வளம் குன்றிய நாடுகள் நீரை வாங்கிக் கொள்ள வழி செய்யலாம் என்றும் ஆலோசனை கூறப்படுகிறது.
தண்ணீரை விலைக்கு வாங்குவது என்பது சென்னையைப் போன்ற மக்கள்தொகை அடர்த்தி நிறைந்த நகரங்களுக்குப் புதிய ஒன்றல்ல. புதுப்பிக்க முடியாத நிலத்தடி நீரை உறிஞ்சியெடுத்த அடுக்குமாடிக் குடியிருப்புகள் இன்று 'டாங்கர்'களில் விற்பனைக்கு வரும் தண்ணீரை நம்பியே தினமும் கண் விழிக்கின்றன.
ஆனால், நாடு கடந்து நீர்ச்சந்தை என்னும்போது இந்தத் தீர்வும் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியே இருக்கிறது. 'நீர் இறைவன் கொடுத்த வரம். அதனை விலை பேச முடியாது' - என்று சில பண்பாடுகள் வலியுறுத்துகின்றன. மனித உரிமைவாதிகள், 'நீர் பெறுவது அடிப்படை உரிமை. அதில் எவரும் கை வைக்க முடியாது' - என்று குரல் எழுப்புகிறார்கள். மனிதநேயர்கள் பணம் கொடுத்துத் தண்ணீர் வாங்க முடியாத ஏழைகளுக்காக வாதாடுகிறார்கள். நிர்வாக மட்டத்தில் முடிவு எடுப்பவர்களோ, 'நீரை யார் விற்பது? அதற்கு உண்மையான விலை என்ன-?' என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
விடை தெரியாத இந்தக் கேள்விகளால் எதிர்காலம் இருண்டிருந்தாலும் நெருக்கடி தவிர்க்க முடியாதது அன்று. அச்சுறுத்தும் இந்த நெருக்கடிகளில் இருந்து மீள, சிந்தும் ஒரு துளி நீரையும் கணக்கு வைத்துக் கொள்ளும் நீர்ச் சிக்கனமே கை கொடுக்கும். நீரைச் சேமிக்கவும், அதைத் திறமையாகப் பயன்படுத்தவும் எடுக்கும் நடவடிக்கைகள்தான் இன்று நம் முன் உள்ள திட்டங்களில் மிகவும் மலிவானதும் சுற்றுச்சூழல் நட்பு மிக்கதும் ஆகும். இதுதான் நம் முன் தெரியும் கடைசிப் 'பாலைவனச் சோலை'.
பொ. ஐங்கரநேசன் |