நுகர்வோர் உரிமைகள் வெட்டும் துண்டும்
மார்ச்15 - சர்வதேச நுகர்வோர் உரிமைகள் தினம்

சர்வதேச நுகர்வோர் உரிமை வழிமுறைகள்

ஒரு சோப் வாங்க கடைக்குப் போகிறோம். விளம்பர மயக்கத்தில் ஒரு ரகத்தை வாங்கி உபயோகித்துப் பார்த்தால் ஒன்றரையணா சோப்பிற்கும் அதற்கும் வித்தியாசமில்லை என்று தெரிகிறது.

பேருந்தில் பத்து பைசா மீதத்தை நடத்துனர் தரவில்லை . 'பத்துபைசா' திரும்பக் கேட்கணுமா? என்று நாம் கேட்பதேயில்லை.இதே போல் குளிர்சாதன வசதியுள்ள திரையரங்குகள், தொடர்வண்டிப் பயணங்கள் போன்றவற்றில் நுகர்வோர் அன்றாடம் சந்திக்கும் இழப்புகள் பல.நம்மில் பலரும் இதைப் பொருட் படுத்துவதில்லை. உண்மை என்னவெனில்,சிறு அலட்சியத்திலிருந்து பெரிய இழப்பு வரை நிறுவனங்கள் தனி நபர்களின் இழப்பிற்கு ஈடு செய்தாக வேண்டும் என்பது சர்வேதச விதி. (தெரிந்த விஷயம்? ஆனால் அதற்கெல்லாம் நேரமில்லையா?)

சர்வதேச நிறுவனங்கள் அதிகார அளவில் விஸ்வரூபமெடுத்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் நுகர்வோர் நலன் பற்றி முதன்முதலாகப் பொது அவையில் குரல் கொடுத்தவர் முன்னாள் அமெரிக்க அதிபர் ஜான் எப். கென்னடி.

''நாம் எல்லோருமே நுகர்வோர்தான். மிகப் பெரிய பொருளாதாரக் குழுவான நுகர்வோர் ஒவ்வொரு தனியார் அல்லது அரசாங்கப் பொருளாதார மாற்றங்களின் பொழுதும் பாதிப்படைகின்றனர். ஆனால் அவர்களது குரல் கேட்கப்படுவதேயில்லை'' என்று கென்னடி 15 மார்ச், 1962 அன்று அமெரிக்கப் பாராளுமன்றத்தில் உரையாற்றினார்.

  • நுகர்வோருக்குப் பாதுகாப்பு உரிமை
  • தகவல் அறிவதற்கான உரிமை
  • ர்ந்தெடுப்பதற்கான உரிமை
  • தங்கள் கருத்தை வெளியிடுவதற்கான உரிமை
என்று கென்னடி வரையறுத்த 4 உரிமைகளோடு

  • அடிப்படைத் தேவைகளின் திருப்தி பற்றிய உரிமை
  • இழப்பை ஈடுசெய்ய கோரும் உரிமை
  • கல்வி கற்பதற்கான உரிமை
  • சுகாதாரமான சுற்றுசூழல்
என்ற நான்கு உரிமைகளும் இணைந்து 'சர்வதேச நுகர்வோர் உரிமையாகப் பின்பற்றப்படுகிறது (அல்லது பின்பற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது).

கென்னடி உரையாற்றிய அதே நாளில் இருபத்தியொரு ஆண்டுகள் கழித்து 15 மார்ச் 1983 அன்று முதல் 'சர்வதேச நுகர்வோர் உரிமை தினம்' கடைப்பிடிக்கப்பட்டது.இரண்டு வருடங்கள் கழித்து ஐக்கிய நாடுகள் சபை ஏப்ரல்- 4, 1985 அன்று நுகர்வோர் பாதுகாப்பிற்கு சர்வதேச வழிமுறைகளை அமல்படுத்தியது.

இந்தியாவில் நுகர்வோர்

இந்திய நுகர்வோர் வழிமுறைகள்

ஒரு தனிப்பட்ட நபரின் கெளரவம் இந்திய அரசியல் சாசன சட்டத்தின் முகவுரையில் தெள்ளத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அவரது அடிப்படை உரிமைகள் மற்றவர்களால் பறிக்கப்படுமேயானால் அவர் நீதிமன்றத்தை அணுகவும் வழிசெய்யப்பட்டிருக்கிறது. நுகர்வோரின் உரிமையும் அ·தே.

இந்திய அரசியல் சாசன வரைவு எண் 21,32, 47 மற்றும் 226 வகைகள் தனிநபரின் அடிப்படை உரிமையைப் பாதுகாக்க வழிசெய்பவை. அதனிலிருந்து சற்றே வேறுபடுத்தி நுகர்வோருக்காகக் குறிப்பிட்ட பாதுகாப்பு கருதி உருவாக்கப்பட்டது 'நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம்-1986'. இச்சட்டத்தின் இரண்டு அம்சங்கள் முக்கியமானவை.மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் நுகர்வோர் நீதிமன்றங்கள் அமைத்தல் ஒன்று. நுகர்வோருக்கு நஷ்டஈடு பெற வழிசெய்தல் மற்றொன்று.

நுகர்வோருக்கான பல தனியார் நல சங்கங்களும் இயங்கிவருகின்றன. CUTS (Consumer unity & Trust Society) இந்தியாவில் குறிப்பிடத்தக்க பெரிய நுகர்வோர் நல அமைப்பாகும்.

தமிழ்நாடு அட்வகேட் ஜெனரலாய்ப் பணியாற்றிய கோவிந்த் சுவாமிநாதன் தொடங்கி வைத்த நுகர்வோர் செயல்பாட்டுக் குழுவும் (Consumer Action Group) நுகர்வோர் நலனுக்காகப் பணி புரிகிறது.

இந்திய நுகர்வோரின் உரிமை மீறப்பட்டால் ,சம்பந்தப்பட்ட நுகர்வோர் நீதிமன்றங்களில் புகார் தாக்கல் செய்யப்பட வேண்டும். நஷ்டஈட்டுத் தொகை 5லட்சம் ரூபாய்க்கு அதிகமாக இருப்பின் மாநில நுகர்வோர் அமைப்பிலும், 20 லட்சத்தைத் தாண்டியிருப்பின் தேசிய நுகர்வோர் அமைப்பிலும் புகார் தாக்கல் செய்யப்பட வேண்டும்.

சர்வதேச நுகர்வோர் உரிமைகள் தினத்தில் நமது உரிமைகளைப் பேண தயக்கம் காட்டாது போரிட முனைவோம்.

நாஸ்தன்கோவ்,
சாய்ராம்

இணைய முகவரிகள்

நுகர்வோர் நலன் குறித்து மேலும் பல விவரங்களை கீழ்க்காணும் இணைய முகவரிகளில் பெறலாம்.

http://un.org/esa/downments/esc/res/1995/eles1995-53.htm

http://consumersinternational.org

http://consumersinternational.org/roap/index.htm

http://consumersinternational.org/campaings/word/whatisword.html

http://consumerindia.com/

© TamilOnline.com