தமிழின் நலமே தமிழர் நலம் என்ற வேட்கையுடன் தமிழ்ப்பணியாற்றிய அறிஞர்கள் பலர். இவர்கள் பல நிலைப்பட்டவர்கள். காலந்தோறும் தமிழுக்கு நேரிட்ட கேடுகளைக் களைந்தெறிய அரும்பாடுபட்டுள்ளனர். தமது சக்திக்கும் தமது அறிவுக்கும் ஏற்ப இவர்கள் மேற்கொண்ட பணிகளால்தான் இன்றும் தமிழ் வளம் பெற்று உயிர் பெற்று, வளர்கிறது வாழ்கிறது.
தமிழுக்கு சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பெருமை உண்டு. இந்த மரபில் நான்காம் தமிழ்ச்சங்கத்தை நிறுவி தமிழ் காத்த பெருமை பாண்டித்துரைத் தேவருக்கு உண்டு. இன்று நாம் முன் வைக்கும் தனித்த தமிழின் சிறப்பை அன்றே உணர்ந்து அதற்கு விதையிட்டவர் பாண்டித்துரைத் தேவர்.
பாண்டித்துரைத் தேவர் இராமநாதபுரத்தை ஆண்ட சேது மன்னர் பரம்பரையில் தோன்றியவர். சடைக்க தேவர் என்ற உடையான் சேதுபதி (1605 - 1621), கூத்தன் சேதிபதி (1622 - 1635) முதலான சேது வழியினர் குறிப்பிடத் தக்க மன்னர்களாக விளங்கி உள்ளனர். இவர் தம் வழியில் 1862 முதல் 1873 வரை ஆட்சி செலுத்தியவர் முத்துராமலிங்க சேதுபதி ஆவார். இவருடைய தமையனார். பொன்னு சாமித்தேவர் இவ்வரசில் அமைச்சராகப் பொறுப்பேற்றிருந்தார். பொன்னுசாமித் தேவருக்கும் முத்துவீராயி நாச்சியாருக்கும் 21.03.1867 இல் பாண்டித்துரைத்தேவர் பிறந்தார்.
பாண்டித்துரை இவ்வுலகில் சுமார் 44 ஆண்டுகளே வாழ்ந்துள்ளார். இக்குறுகிய காலத்தில் இவர் ஆற்றிய செயற்பாடுகள் தமிழர் வரலாற்றில் என்றும் நினைக்கத் தக்கவை. இக்காலத்தில் உருப்பெற்று எழுச்சி அடைந்து வளர்ந்து வந்த தமிழ்ப் பணிகளுடன் இரண்டறக் கலந்தவை. இக்காலத்து தமிழ்ப்பணியில் மூழ்கி வந்த பலரும் பாண்டித்துரைத் தேவருடன் நெருங்கிப் பழகி அவர் தம் உதவிகள் பெற்று, ஆலோசனை பெற்று பணிகளில் பல திறப்பட்டவையாய் விரிந்துள்ளமையை இக்காலம் தெளிவாகவே சுட்டுகிறது.
பாண்டித்துரைத் தேவர் தேசியப் பற்றுடையவராக, தலைசிறந்த நிருவாகியாக, கொடை வள்ளலாக இலக்கியப்படைப்பாளியாக, இசை நுகர் மேதையாக, சொற்பொழிவாளராக, தமிழறிஞர்களை மதிக்கும் பண்புடையவராக மற்றும் ஆங்கிலம் முதலான மொழிகளில் தேர்ச்சி பெற்றவராக விளங்கி வந்தார். எவ்வாறாயினும் நூற்றாண்டுகளுக்கு முன்னர் நிலவிய இந்தியத் தேசிய அரசியல் பின்புலத்திலும் அதன் ஊடாகக் கிளைத்தெழுந்த தமிழ்த் தேசிய அரசியல் பின்புலத்திலும் பாண்டித்துரையாளரை வைத்து மதிப்பிடுவதுதான் மிகப் பொருத்தமாக இருக்கும். அப்பொழுது தான் இவருக்கான முக்கியத்துவம் தெளிவாக உணரப்பட முடியும். இருப்பினும் இங்கு நாம் இவரை புரிந்து கொள்வதற்கான சிறு முயற்சிகளில் மட்டுமே ஈடுபட முடியும்.
தமிழ் மொழி மீது தீவிர பற்றுக் கொண்டவர். இதற்காக தனது வளங்களை சொத்துக்களை தமிழ்ப்பணிக்குச் செலவு செய்யத் தயங்கவில்லை. உ.வே.சா, வ.உ.சி உள்ளிட்ட அக்கால தமிழ்ப் புலமையாளர்களது வாழ்வுடன் பாண்டித்துரையாரது வாழ்வும் ஒன்று கலந்ததாகவே உள்ளது. குறிப்பாக தமிழ் நூற்பதிப்புக்கு உதவி செய்தல் குறிப்பிடத் தக்கது உ.வோ.சா பதிப்பித்த 'புறப்பொருள் வெண்பா மாலை', 'மணிமேகலை' ஆகிய இரண்டும் பாண்டித்துரையாரின் உதவியோடு வெளி வந்தன.
மேலும் மதுரைவாசி இராமசாமிப்பிள்ளை என்ற ஞானசம்பந்தப் பிள்ளையைக் கொண்டு தேவாரத் தலமுறைப் பதிப்பை முதன்முதலாக வெளியிடக்கோரி அதற்கு வேண்டிய உதவியை நல்கியவர் பாண்டித்துரையார். தொடர்ந்து சிவஞான முனிவர் இயற்றிய சிவஞான சுவாமிகள் பிரபஞ்சதிரட்டு என்னும் பெயரில் இராமசாமிப்பிள்ளை வெளியிட்ட நூலும் பாண்டித்துரை தேவரின் பொருளுதவி பெற்று வெளிவந்ததாகும். சபாபதி நாவலர் என்ற புலவரைக் கொண்டு அவ்சிவஞான முனிவரால் இயற்றப்பட்ட சிவசமயவாதவுரை மறுப்பு முதலிய தத்துவ நூல்களும் சுன்னாகம் குமாரசுவாமிப் பிள்ளையவர்கள் பதிப்பித்த நூல்கள் சிலவும் பாண்டித்துரையாரின் உதவியால் வெளிவந்துள்ளன.
தொடர்ந்து அபிதான சிந்தாமணி என்ற 1639 பக்கங்கள் கொண்ட சிறந்த தமிழ்ப் பேரகராதியைப் பதிப்பிக்க பாண்டித்துரையார் பொருளுதவி செய்துள்ளார். இவ்வகராதியைப் பதிப்பித்த பதிப்பாசிரியர் ஆ. சிங்காரவேலு முதலியார் இந்நூலின் முன்னுரையில், 'இந்நூல் இவ்வாறு ஒருவாற முற்றுப் பெற்று பின் இதனைச் சென்னையிலிருந்த பிரபுக்கள் சிலரிடம் காட்டினேன். அவர்கள் இத்தகைய நூல் தமிழிற்கின்றியமையாததே. அதனை வெளியிடுக என்றனரேயன்றி யதனை அச்சிட்டு வெளிப்படுத்த ஒன்றும் கூறிற்றிலர்" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்நூல் வெளிவருவதற்கான அறிகுறிகள் எதனையும் காணாது சோர்வுற்று துயருற்றுக் கிடந்தார். இந்நிலையில்தான் பாண்டித்துரை தேவர் உதவி கிடைக்கப் பெற்று அபிதான சிந்தாமணி வெளிவந்தது.
அதே முன்னுரையில் சிங்காரவேலு முதலியார் மேலும் இவ்வாறு குறிப்பிடுகின்றார். 'மதுரைத் தமிழ்ச் சங்கத்து பிரசிடெண்டும் பாலவனந்தம் ஜமின்தார் அவர்களும் தமிழ் வளர்த்த ஸ்ரீமான் பொன்னுசாமித் தேவரவர்களின் திருக்குமாரரும், என் தளர்ச்சிகளுக்கு ஊன்று கோல் போல்வருமாகிய ஸ்ரீமான் பொ.பாண்டித்துரைச்சாமித் தேவரவர்கள் தாமே சென்னைக்கு வந்து நான் எழுதிய நூலைக் கண்டு கணித்து அதனை மதுரைத் தமிழ்ச் சங்க அச்சியந்திரசாலையில் அச்சிடுவான் எண்ணி என்னிடமிருந்த பிரதிகளைத் தாமே மதுரைக்கு எடுத்துச்சென்று அவ்விடத்தில் நாம் எழுதிய அனைத்தையும் பலரைக் கொண்டு சுத்தமாய் எழுதுவித்து மீண்டுமவற்றைச் சென்னையிலுள்ள அச்சுயந்திர சாலையில் என் முன்னிலையில் அச்சிட உத்தரவு கொடுத்து அப்போதைக்குப்போது பொருளுதவி செய்து வந்தனர். அவர்கள் அருஞ்செயலை இப்புத்தகத்தை நோக்கும் அறிவாளிகள் புகழாமற் போவார்" என்று அபிதான சிந்தாமணியில் குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம் பாண்டித்துரைத் தேவரது தமிழ்பற்றும் கொடைத்தன்மையும் நன்கு புலப்படுகிறது.
தமிழ்ப் பற்றாளரான பாண்டித்துரைத் தேவர் தமிழ்ச் சொற்கள், பாடல்கள் பொருள் ஆகியவைற்றைச் சரியான முறையில் மக்கள் கையாள வேண்டும் என்ற கருத்துடையவர். பிழை மலிந்த நூற்பதிப்புக்களைக் கண்டால் அவற்றைத் தொடவும் கூசுவார் என்ற செய்தி உண்டு. இதனை உறுதிப்படுத்தும் இவர் வாழ்வில் நடந்த நிகழ்ச்சி கவனிப்புக்குரியது. மதுரையில் ஸ்காட்துரை என்ற ஆங்கிலோ இந்தியர் ஒருவர் வக்கீலாக இருந்தார். இவர் தமிழ் மொழியில் அரைகுறையான பயிற்சியுடையவர். நேர்வழியிலன்றி வக்கிர கதியிற் செய்வது இவரியல்பு. வள்ளுவரது திருக்குறட் பாடல்களில் எதுகை மோனை இல்லாத இடங்களையெல்லாம் திருத்திப் புதியதான குறட் புத்தகமொன்றை இவர் நல்ல தாளில் அச்சிட்டு வெளியிட்டிருந்தார். "சுகாத்தியரால் திருத்தியும் புதுக்கியும் பதிப்பிக்கப்பட்ட குறள்" என்றவாறு அப்புத்தகத்தின் தலைப்பு அமைந்திருந்தது. மதுரையில் தேவரவர்களை அவர் ஒருகால் சந்தித்த போது, தாம் செய்த அவ்வரிய வேலையைத் தெரிவித்து அதன் பிரதியொன்றையும் தேவர்க்கு அளித்தனர். அதைப் பெற்ற தேவர் அதன் முதற் பக்கத்தைத் திறந்ததும்
'அகர முதல வெழுத்தெல்லாம் ஆதி உகர முதற்றே உலகு
என்று அமைந்திருந்தது. இவ்வாறே பலகுறட்பாக்களும் நெடுக திருத்தப்பட்டிருந்தன. இவற்றைக் கண்டதும் தேவரவர்கட்குக் கோபம் ஒருபக்கம் பொங்கி எழுந்தது. ஆயினும் அதை அடங்கிய வண்ணமே 'தாங்கள் இதனில் எத்தனை பிரதிகள் அச்சிட்டிருக்கிறீர்கள்?" என்று கேட்டார். ஐந்நூறு பிரதிகள் அச்சிட்டேன். இருநூறு பிரதிகள் வரை வேண்டியவர்களுக்கு கொடுக்கப்பட்டு விட்டன. மற்றவை விலையாகவில்லை, நெடுநாளாக என்னிடமே உள்ளன என்றார் துரை.
'புத்தகப் பிரதியின் விலை என்ன?" என்று தேவர் கேட்டார். 'ரூபா ஒன்று" என்று பதில் வந்தது. தாங்கள் சிரமப்பட வேண்டாம் நானே அவற்றை மொத்தமாக வாங்கிக் கொள்கிறேன். அவற்றை ஒருசேர என்னிடம் அனுப்பிவிடுங்கள்" என்றார் தேவர். துரைக்கு அப்போது செலவு அதிகம் போலும் ரூபாய் முந்நூறு தமக்கு ஒரு சேரக் கிடைப்பதற்கு மகிழ்ந்து உடனே. துரை அவற்றைக் கட்டி இராமநாதபுரத்திற்கு அனுப்பிவிட்டார். தேவரவர்கள் தம்மூர் வந்ததும், ஸ்காட்துரையின் அறியாமையையும் செருக்கையும் பலருக்கும் எடுத்துக் கூறி மதுரையிலிருந்து வந்த குறட் புத்தகக் கட்டை கொண்டுவரும்படிச் செய்தார். அது வந்ததும் அவர் உத்தரவின் படி குழியொன்று பக்கத்தில் தோண்டப்பட்டது. அப்புத்தகப் பிரதிகள் முழுமையும் அதனுள் இடச் செய்து தம் கண்முன் தீ வைத்துக் கொளுத்தும்படி உத்தரவிட்டார், தேவர். அவை யாவும் சில நிமிஷங்களில் சாம்பலாகிவிட்டன.
"இப்பித்துக் கொள்ளியிடம் எஞ்சியிருந்த முந்நூறு பிரதிகளும் அறிஞர்கள் பாற்சென்று மனத்துன்பம் விளைக்காதிருப்பதற்கும், அறியாதார் திருக்குறளை தாறுமாறாக பாடமோதாமல் இருப்பதற்கும் இதுதான் தக்க பரிகாரம்" என்று யாவரும் அறியக்கூடி அகமகிழ்ந்தார் தேவர். ஸ்காட்துரை இச்செய்தியை அறியார். அவரும் சிலகாலத்தில் இறந்து விட்டார். என்னே தேவரின் தமிழ்ப்பற்று (செந்தமிழ் வளர்த்த தேவர்கள், மு.இராவையங்கார், பதி. டி.ஜி. கோபால்பிள்ளை சூள் 1951, பக்98-99).
தேவரது தமிழ்ப் பணிகளை பலவாறு பலநிலைகளில் வைத்து நோக்க முடியும். இவற்றில் சிறந்தது மதுரையில் நான்காம் தமிழ்ச் சங்கம் அமைத்து அதன் மூலம் மேற்கொண்ட பணிகளாகும்.
பாண்டித்துரையார் 1900 ஆம் ஆண்டு சென்னை சென்று முகவைக்குத் திரும்பும் வழியிற் திருப்பாதிலிப்புலியூருக்கு வந்து தவத்திரு ஞானியார் அடிகளைச் சந்தித்தார். அன்று மாலை பாண்டித்துரையார் தலைமையில் ஞானியார் அடிகள் சொற்பொழிவு நிகழ்த்தினார். தமிழின் தற்கால நிலை என்ற பொருளில் ஞானியார் அடிகளின் கடல்மடை திறந்தது போன்ற உணர்ச்சிமிக்க உரையினைக் கேட்க பாண்டித்துரையார் அகமகிழ்ந்தார். அச்சொற்பொழிவில் பாண்டித்துரையாரும் பிற செல்வந்தர்களும் ஒன்று கூடி மீண்டும் ஒரு தமிழ்ச் சங்கத்தை மதுரையில் நிறுவவேண்டுமென்றும், அதைத் தமிழின் தலைமையிடமாகக் கொண்டு தமிழ் வளர்ச்சிக்கு வேண்டுவன செய்ய வேண்டும் என ஞானியர் அடிகள் கேட்டுக்கொண்டார்.
அக்கூட்டத்திற்குத் தலைமை வகித்த பாண்டித்துரைத் தேவர் தமது முடிவுரையில், ஞானியாரடிகள் கூறிய கருத்து போற்றுதற்குரியது, ஆற்றற்குரியது என்றும், தாம் தமது சகோதரரான பாஸ்கரசேதுபதியிடமும் கலந்து பேசித் தக்க முடிவு செய்வதாகவும் உறுதி கூறினார். அதன்படி சகோதரரின் உதவியும் பெற்றுத் தமிழ்ச்சங்கம் உருவாகக் காரணமாக இருந்தார். 1901 செப்டம்பர் 14ஆம் நாளன்று தமிழ்ச்சங்கம் தோற்றுவிக்கும் செய்தி நாடெங்கும் அறிவிக்கப்பட்டது.
பாண்டித்துரைத் தேவரால் உருவாக்கப்பட்ட தமிழ்ச்சங்கத்தின் பணிகளைத் தொகுத்துப் பார்க்கும் பொழுது பின்வரும் கருத்துக்கள் உருப்பெறக்காணலாம். (முனைவர் சிலம்பு நா. செல்வராசு 2005)
1. பண்டைத் தமிழ் இலக்கியங்களை அழிவிலிருந்து காத்தலும் சேகரித்தலும். 2. முதன்மை வாய்ந்த தமிழ் இலக்கியங்கள், தமிழ் இலக்கியங்களை அச்சிட்டுத் தமிழ் சமூகத்திற்கு அறிமுகப்படுத்தல். 3. புதிய தமிழ் இலக்கியங்களைப் படைப்பித்தல், உரை எழுதுதல். 4. தமிழுக்கென புதியக் களஞ்சியங்களை உருவாக்குதல், அகராதிகளை உருவாக்குதல். 5. தமிழ் நாட்டு வரலாற்றை முறையாக உருவாக்கி வெளியாக்குதல். 6. தமிழ் இசை முதலான கலைகளை உயிர்ப்படையச் செய்தல். 7. தமிழ் கல்விக்கு ஊக்கம் தருதல், பரவலாக்கல். 8. தமிழ் மருந்துவமுறை முதலான அறிவியற் துறைக்கு ஊக்கம் தருதல்.
மேலே கூறப்பட்ட அனைத்துத் தேவையான பணிகளையும் தமிழ்ச்சங்கம் 1901-1915க்குள் நிறைவு செய்துள்ளது என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். மேலும் மேற்குறிப்பிட்டவை யாவும் பாண்டித்துரைத் தேவர் வாழ்ந்த தமிழ்ச் சமூகத்திற்கு வேண்டியனவாக இருந்தன. இவை வெறுமனே மொழிப்பற்றின் காரணமாக மட்டும் நிகழவில்லை. மாறாக இப்பணிகளை ஊடறுத்து நின்ற தமிழ்த் தேசியப் பிரக்ஞை மற்றும் தமிழ்த் தேசிய அரசியல் உருவாக்கப் பின்புலமும் காரணமாக இருந்தது. குறிப்பாக மொழிவழித் தேசியம் கருத்து நிலையாகவும், பண்பாட்டு தளமாகவும் மேற் கிளம்பி வளர்ந்து வரும் பின்புலத்திற் தான் நாம் பாண்டித்துரைத் தேவரது பணிகளை புரிந்து கொள்ளவேண்டும்.
பாண்டித்துரைத் தேவர் 1911 டிசம்பர் இரண்டாம் நாளில் இவ்வுலக வாழ்வை நீத்தார். ஆனால், அவர் வழிவந்த சிந்தனைகளும் செயற்பாடுகளும் மற்றும் தமிழக இந்திய அளவில் உருப்பெற்ற சமூக அரசியல் வினைப்பாடுகளும் ஒருங்கிணைந்தும் பிரிந்தும் தத்தமக்கேயுரிய பாதையில் பயணிக்கும் நிகழ்ச்சிகள் பின்னர் உருவாகி விட்டன. ஆனால், தமிழ், தமிழர் பற்றிய தேடல் ஆய்வு யாவும் உணர்ச்சி நிலைகளுக்கப்பால் அறிவு சார்ந்த மரபுகளுக்கூடாக வளர்ந்து வர வேண்டிய அவசியம் இன்று உள்ளது. ஆகவே, பாண்டித்துரைத் தேவர் பற்றிய மதிப்பீடு புரிந்து கொள்ளல் இப் பின்புலத்திலே இருக்க வேண்டும்.
தெ. மதுசூதனன் |