திரைபடமாகிறது 'பெரியார்' வாழ்க்கை வரலாறு!
விதவை திருமணம், தீண்டாமை ஒழிப்பு ஆகிய சமூக சீர்திருத்தங் களுக்கு அடிகோலிய தந்தை பெரியார் அவர்களின் வாழ்க்கை வரலாறு தற்போது திரைப்படமாக உருவாகி வருகிறது.

பெரியார் கொள்கைகளில் அதிக ஈடுபாடு கொண்ட சத்யராஜ், பெரியார் வேடத்தில் நடிக்கிறார். பெரியாரின் வாழ்க்கைத் துணைவியார் நாகம்மையாக முதலில் குஷ்பு நடிப்பதாக இருந்தது. பல்வேறு காரணங்களால் குஷ்புவிற்கு பதில் ஜோதிர்மயி நடிக்கிறார். இத்திரைப்படத்தை 'மோகமுள்' 'முகம்' 'பாரதி' படங்களை இயக்கிய ஞானசேகரன் இயக்குகிறார்.

தமிழக அரசு 'பெரியார்' படத்திற்காக 96 லட்சம் ரூபாயை நிதியாக வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சத்யராஜின் நீண்ட நாள் கனவு 'பெரியார்' வேடம். அவரின் ஆசை கனவு இன்று நனவாகிறது. அதனால் இப்படத்தில் நடிப்பதற்காக எந்தவிதமான ஊதியமும் வாங்காமல் நடிக்கிறார் சத்யராஜ். தமிழகத்தின் காரைக்குடி பகுதியில் இப்படத்திற்கான படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

'பெரியார்' வேடத்தில் நடிக்கும் சத்யராஜ், பெரியாருடன் பழகியவர்களை தேடி கண்டுபிடித்து அவர்களிடம் பெரியாரைப் பற்றியும், அவரது குணங்களைப் பற்றியும் கேட்டு தெரிந்து கொள்வது மட்டுமல்லாமல் அவரைப் பற்றிய செய்திகளையும் சேகரித்து வருகிறார்.

© TamilOnline.com