'தோற்றத்தில் வயதான மூதாட்டி. செயலில் இளமைக்குப் போட்டி' என்ற அடைமொழி மதுரை சின்னப்பிள்ளைக்கு நூறு சதவீதம் பொருத்தமானது கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக உள்ளூர்ப் பத்திரிகைகள் முதல் தேசியப் பத்திரிகைகள் வரையிலான புகைப்படக்காரர்களின் கேமரா மின்னல்கள் சின்னப்பிள்ளையை விடாமல் படம் பிடித்துத் தள்ளின.
இத்தனைக்குப் பிறகும் துளிகூட கர்வம் இன்றி, பிரதமர் வாஜ்பாயிடம் ஸ்ரீசக்தி புரஸ்கார் விருது பெறும் முன் எப்படி இருந்தாரோ அதே சலனமற்ற முகத்தோற்றத்தில் காணப்படுகிறார். சின்னப்பிள்ளையின் வெற்றியின் ரகசியம் இதுதான் போல் தெரிகிறது. மும்பையில் பஜாஜ் நிறுவனத்தின் ஜானகிதேவி புரஸ்கார் விருதினை இவரிடம் அளித்த, மகாத்மா காந்தியின் பேத்தி சுமித்ரா குல்கர்னி இவரிடம் பேசும்போது 'இப்படியே இருங்கள் நவீனமயமாக மாற வேண்டாம்' எனக் கூறியதாகச் சொல்கிறார் சின்னப்பிள்ளை. அவரைச் சந்தித்துப் பேசியதிலிருந்து...
பிரதமர் கையில் விருது, மும்பையில் பஜாஜ் நிறுவன விருது, முதல்வரிடம் பொற்கிழி ஆகியவை பெற்ற பிறகு உங்கள் மனநிலை எப்படி இருக்கிறது?
களை எடுப்பு, நாற்று நடவு போன்ற வயல் வேலைகளுக்குச் செல்வேன். பத்து, பதினைந்து பெண்கள் சேர்ந்து வயல்வேலைக்குச் செல்லும்போது கூலியைக் கேட்டு வாங்கி சரி, சமமாக பிரித்துக் கொடுப்பேன். இதனால் வயல் வேலைக்குச் செல்லும் பெண்களிடையே கொத்து தலைவி ஆனேன். பிறகு 'களஞ்சியம் குழு' ஆரம்பித்தபோது நானே அந்தக் குழுவின் தலைவியாகச் செயல்பட்டேன். என் கணவர் பெருமாள் வீட்டில் உள்ள கால்நடைகளை கவனித்துக் கொள்வார். மகன்கள் சின்னத்தம்பி, கல்லுடையான் இருவரும் கூலி வேலைக்குச் செல்கின்றனர்.
களஞ்சியம் அமைப்புப் பற்றியும், அதில் உங்கள் பொறுப்புப் பற்றியும் விளக்க முடியுமா?
மதுரை நகரில் 'தானம் அறக்கட்டளை' என்ற அமைப்பு செயல்படுகிறது. இந்த அமைப்பு கடந்த 13 வருடங்களாக கிராம மக்களுக்காகப் பல திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அதில் சமுதாய வங்கித் திட்டம் என்றொரு திட்டம். இதன் கீழ்தான் 'களஞ்சியம்' என்ற அமைப்பு செயல்படுகிறது.
1990 ம் ஆண்டில் எங்கள் கிராமமான பில்லுச்சேரி சார்பாக, பில்லுக்களஞ்சியம் என்ற பெயரில் தானம் அறக்கட்டளை மூலம் சுயசேமிப்புக் குழுவை ஆரம்பித்ததுடன், அதில் முதல் உறுப்பினராகவும் சேர்ந்தேன். பிறகு பத்து பெண்கள் ஒரு குழுவாகச் சேர்ந்தோம். ஆளுக்கு ரூ.20 போட்டு சேமித்தோம். முதல் மாதம் ரூ.200 சேமிக்க முடிந்தது. பிறகு ரூ.400 சேர்ந்தது. இப்படி சேமித்த பணத்தை எங்களுக்குள்ளேயே கடன் எடுத்து, திரும்பச் செலுத்தி விடுவோம். இப்படி ஆரம்பித்துப் பல ஊர்களில் உள்ள களஞ்சியம் அமைப்புகளின் மூலம் இன்று ரூ.12.50 லட்சம் வரவு செலவு நடக்கிறது. 60 ஆயிரம் கிராமப் பெண்கள் களஞ்சியம் அமைப்புகளில் உள்ளனர்.
தற்போது நான் இதில் செயற்குழு உறுப்பினராக உள்ளேன். இதற்கு முன்பு டிசம்பர் 1990 முதல் மே '92 வரை பில்லுக்களஞ்சியத்தின் தலைவியாகவும், ஜூன் '92 முதல் ஜூலை '95 வரை மாத்தூர் தொகுதி களஞ்சியத்தில் தலைவியாகவும் ஆகஸ்ட் '95 முதல் நவம்பர் '98 வரை வைகை வட்டாரக் களஞ்சியத்தின் செயலாளராகவும் பொறுப்பு வகித்துள்ளேன். நவம்பர்'98 முதல் தற்போது வரை செயற்குழு உறுப்பினராக உள்ளேன்.
'களஞ்சியம்' என்பது தனியார் அமைப்பாகயிருப்பதால் தவறுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதே? அதையெல்லாம் எப்படிச் சமாளிக்கிறீர்கள்?
தவறுகள் நேர வழியே இல்லை. முதலில் கிராம அளவில் பெண்கள் சேர்ந்து குழு ஆரம்பித்த உடன் எவ்வளவு சேமிக்க வேண்டும் என முடிவு செய்வோம். பிறகு எங்களுக்குள்ளேயே கணக்காளர், பொறுப்பாளர் ஆகியோரைத் தேர்வு செய்தோம். சேமிக்கத் தொடங்கிய உடன் வாரம் ஒரு முறை, மாதம் ஒருமுறையென்று கூட்டம் போடுவோம்.
ஒவ்வொரு கூட்டத்தின் போதும் முதலில் உண்டியலைத் திறந்து கணக்குப் பார்ப்போம். முதலில் கடன் வாங்கியவர்களிடம் பணம் வசூல் செய்து வரவு வைப்போம். பிறகு யாருக்குக் கடன் தேவை எனக் கேட்டு, கடன் கொடுத்து அதற்கான கணக்குகளையும் எழுதி வைப்போம். கிராமக் குழுக்களின் கணக்குகளை வட்டாரக் களஞ்சியத்தின் கணக்காளர் சரி பார்ப்பார்.
மேலும், கிராம அளவில் செயல்படும் களஞ்சியம் குழுக்கள் ஆறு மாதங்களுக்குப் பிறகு அந்தப் பகுதியில் உள்ள வங்கிகள் மூலம் ஒருங்கிணைப்பு செய்யப்படுகிறது. பிறகு வங்கியின் மேலாளர் குழுக்களின் நடவடிக்கைகளை ஆய்வு செய்வார். எனவே, இதில் தவறு எதுவும் ஏற்படுவதற்கான வாய்ப்பில்லை.
உங்கள் ஊரில் 'களஞ்சியம் சேமிப்புக் குழு' ஏற்படுவதற்கு முன் இருந்த நிலை என்ன? தற்போதைய நிலையில் மாறுதல் ஏதும் ஏற்பட்டிருக்கிறதா?
'களஞ்சியம் குழு' ஆரம்பிக்கும் முன்பு நிறைய கஷ்டப்பட்டோம். வயல் வேலைக்குப் போனால் ஐந்து ரூபாய், பத்து ரூபாய் எனக் கூலி கிடைக்கும். அதுவும் ஆறு மாதம்தான் வயலில் வேலை இருக்கும். மீதி ஆறு மாதத்துக்குக் கூலி வேலை இல்லாமல் வட்டிக்குக் கடன் வாங்கிப் பிழைப்பு நடத்துவோம். பிறகு மீண்டும் வேலைக்குப் போனால் கிடைக்கும் பணத்தில் வட்டி மட்டும்தான் கட்ட முடியும். கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலை. கடனை அடைப்பதற்காகக் குடும்பத்திலுள்ள எல்லோருமே கூலி வேலைக்குப் போவோம். பிள்ளைகளைக் கூட படிக்க வைக்க முடியவில்லை.
1990 ல் 'களஞ்சியம் அமைப்பினர்' வந்தபோது யாரும் அதில் சேரவில்லை. தனியார் நிதி நிறுவனம் போல பணத்தை வசூல் செய்து விட்டு, ஓடி விடுவார்கள் என முதலில் நினைத்தோம். பிறகு நான்தான் துணிச்சலாக முதன் முதலில் உறுப்பினராகச் சேர்ந்தேன். இப்போது 'களஞ்சியம் குழுக்கள்' மூலம் கிராமத்துக் குழந்தைகள் படிப்பதற்குக் கடன் தருகின்றோம். என் பேரக்குழந்தைகள் குழுவின் மூலம் பெற்ற கடன் உதவியால்தான் மதுரைக்குப் படிக்கச் செல்கின்றனர்.
ஆடு, மாடு போன்ற கால்நடைகள் வாங்கக் கடன் தருகிறோம். களஞ்சியம் குழுக்கள் மூலம் நிலங்களைக் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்கின்றோம். திருமணங்கள் நடத்தக் கடன் உதவி போன்ற கிராம அளவிலான தேவைகளுக்கு மட்டும் கடன் வழங்குகின்றோம்.
ஒரு புறம் வாழ்க்கைத் தரம், முன்னேற்றம். இந்த நிலையில் இடையூறுகள் ஏற்படுவது இயல்பு. அப்படி ஏதாவது இடையூறுகள் ஏற்பட்டதா?
எங்கள் ஊரில் 'களஞ்சியம் குழு' ஆரம்பித்தபோதே, 'பெண்கள் இவர்கள் என்ன பெரிதாகச் செய்து விடுவார்கள்? களஞ்சியமா? அது என்ன பெரிய இதுவா?' என்றெல்லாம் பலர் ஏளனமாகப் பேசினர். மேலும், 'களஞ்சியம் குழு' மூலம் ஊர்க் குளத்தினை ஏலம் எடுத்தோம். அதுவரை ஆண்டு தோறும் குளம் ஏலம் எடுத்தவர்கள் எங்களுக்கு இடையூறு செய்தனர். பிறகு படிப்படியாகத்தான் நிலமை சீரானது.
தற்போது களஞ்சியம் அமைப்பில் உங்கள் தினசரிப் பணி என்ன?
முதலில் வெளி உலகமே தெரியாமல், விவரம் தெரியாமல்தான் நானும் இருந்தேன். இப்போது தினமும் வட்டாரக் களஞ்சியங்களுக்குச் சென்று கண்காணிப்பு செய்கிறேன். இதற்காகச் சம்பளம் எதுவும் பெற்றுக்கொள்வதில்லை. சேவை அடிப்படையில்தான் செயல்படுகிறேன்.
உங்களுக்குப் படிப்பறிவு இல்லை என கேள்விபட்டது உண்மையா? இனிமேல் படிக்கலாமே? படிக்காமல் கணக்குகளை எப்படிச் சரி பார்க்க முடிகிறது?
முற்றிப்போன பெரிய மரத்தை வளைக்க முயற்சி செய்தால் ஒடிந்துவிடும். இந்த நிலையில்தான் நான் இருக்கிறேன். இந்த வயதில் இனி நான் படிக்க முடியாது. களஞ்சியம் குழுவில் சேர்ந்த பிறகு கையெழுத்துப் போட மட்டும் கற்றுக் கொண்டேன்.
கணக்குகள் அனைத்தும் என் மூளையில் உள்ளது. என்னை யாரும் ஏமாற்ற முடியாது. கணக்குகளைக் கணக்காளரிடம் கேட்டுப் பல முறைகள் சரிபார்த்த பிறகே கையெழுத்துப் போடுவேன்.
மத்திய அரசின் ஸ்ரீ சக்தி புரஸ்கார் ஜீஜாபாய் விருதுக்கு எப்படித் தேர்வு செய்யப்பட்டீர்கள்?
மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் சமூக நல அமைச்சகம் கடந்த ஆண்டு ஜூன், ஜூலை மாதங்களில் பத்திரிகைகளில் ஒரு விளம்பரம் வெளியிடப் பட்டது. அதில் பல்வேறு துறைகளில் சாதனை புரியும் பெண்கள், விருதுகள் பெறுவதற்காக விண்ணப்பம் அனுப்பும்படி கேட்டிருந்தனர். இதனைப் பார்த்து, என் பெயரில் விண்ணப்பம் அனுப்பியதாக 'தானம்' அமைப்பினர் என்னிடம் கூறினர். தமிழ்நாடு முழுவதும் 300 பெண்கள் இதற்காக விண்ணப்பித்ததாகவும் கூறினர்.
பிறகு கடந்த ஆண்டு செப்டம்பரில், மத்திய அரசின் விருதுக் குழுவினர் நான்கு பேர் என் கிராமத்துக்கு வந்து, ஒரு நாள் முழுவதும் என் பணிகளைப் பார்வையிட்டுச் சென்றனர். அப்போதும் கூட எனக்கு விருது கிடைக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை. திடீரென டிசம்பர் மாத இறுதியில் எனக்கு விருது கிடைத்திருப்பதாகப் பத்திரிகைகளில் செய்தி வந்திருப்பதாக என்னிடம் கூறினர்.
கிராமப் பெண்கள் சேமித்து, அவர்கள் அநியாய வட்டி கட்டுவதில் இருந்து விடுபட்டு, அவர்களின் பொருளாதாரம் மேம்பட உதவியதற்காக, சேமிப்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தியமைக்காக நான் விருது பெறத் தேர்வு செய்யப்பட்டதாக மத்திய அரசிடம் இருந்து தகவல் வந்தது.
மும்பையில் 'ஜானகி தேவி புரஸ்கார் விருது' பெற்றீர்களே அது பற்றி சொல்லுங்கள்?
பெரிய தொழில் நிறுவனமான பஜாஜ் நிறுவனம் ஜானகி தேவி புரஸ்கார் விருதினை எனக்கு அளித்தது. ஐந்தாவது ஆண்டாக எனக்கு இந்த விருது வழங்கப்படுவதாகத் தெரிவித்தனர். மகாத்மா காந்தியின் பேத்தி சுமித்ரா குல்கர்னி எனக்கு இந்த விருதை அளித்தபோது என்னிடம் 'நீங்கள் மகாத்மா காந்திக்குச் சமமானவர்கள்' என கூறியதாக மொழிபெயர்ப்பாளர் என்னிடம் கூறினார். எனக்குப் பெருமையாக இருந்தது. இந்த விருது பெற்ற பிறகு பஜாஜ் நிறுவனத்தைச் சேர்ந்த கிரண் பஜாஜ் எனும் பெண் எங்கள் கிராமத்திற்கு வந்து, ஒருநாள் தங்கி இருந்துவிட்டுச் செல்லும்போது 'உண்மையான ஒரு பெண்மணிக்கு விருது கொடுத்துள்ளோம்' எனக் கூறிவிட்டுச் சென்றார்.
பெண்களுக்குப் பாராளுமன்றம், சட்டமன்றம் ஆகியவற்றில் 33% இட ஒதுக்கீடு தரப்படுவதைச் சிலர் எதிர்க்கிறார்களே? இது பற்றி உங்கள் கருத்து என்ன?
புதுடெல்லியில் பிரதமரிடம் விருதுபெற்ற பிறகு மேடையில் பேசவேண்டும், அதில் 33% இடஒதுக்கீடு பற்றியெல்லாம் கூற வேண்டும் எனக் கற்பனை செய்து கொண்டு போயிருந்தேன். ஆனால், எனக்குப் பேசும் வாய்ப்புக் கிடைக்கவில்லை. தமிழ்நாட்டில் பல பெண்கள் மாவட்ட ஆட்சித்தலைவர்களாக உள்ளனர். புதுடெல்லி, மும்பை என நான் விமானத்தில் போனபோது விமான பைலட்டாகப் பெண்கள் பணியாற்றுவதைப் பார்த்தேன். இந்த நிலையில் பெண்கள் தலைமைப் பொறுப்புக்கு வருவதை அனுமதிக்க வேண்டும். ஆண்களைப் போல பெண்களுககும் சரிசமமான பொறுப்பு வழங்கப்பட வேண்டும்.
கிராமங்களில் பெண்களின் நிலை எப்படி இருக்கிறது?
கிராமப் பெண்கள் இன்னும் சமையல் அறையிலேயே இருக்க வேண்டி உள்ளது. மீதி நேரத்தில் துணி துவைக்கும் கல்லாக இருக்கிறாள். பொழுதுபோக்ககாக சினிமாவுக்குப் போவதற்குக் கூட அவர்களுக்கு அனுமதி கிடைப்பதில்லை. இந்த நிலையைக் கொஞ்சம், கொஞ்சமாக மாற்றி வருகிறோம். கிராமப் பெண்கள் உற்சாகமாக இருக்க வேண்டும். அவர்கள் உரிமையை விட்டுக் கொடுக்கக் கூடாது எனக் கூறி வருகிறோம்.
உங்கள் எதிர்கால லட்சியம் என்ன?
மீன் இறந்து கருவாடாக மாறினாலும் உணவாகப் பயன்படுகிறது. நான் இருக்கும் களஞ்சியம் அமைப்புகளின் பெண்களுக்குப் பயன் கிடைக்க வேண்டும் எனப் பாடுபடுவேன். எனக்கு விருதுகள் மூலம் கிடைத்த பணம் அனைத்தையும் களஞ்சியம் அமைப்புக்கே கொடுத்து விடுவேன்.
சந்திப்பு: கே. பாலசுப்பிரமணி படங்கள் : ஜெ. பாஸ்கர் |