இன்று பெண்களுக்கெதிரான வன்முறைகள் நாட்டுக்கு நாடு வீட்டுக்கு வீடு என விரிந்து சமூக அசைவியக்கத்தின் ஒவ்வொரு தளங்களிலும் அதிகரித்தவண்ணம் உள்ளன.
பெண்கள் மீதான வன்முறையை இல்லாதொழிப்பது தொடர்பான (ஐ.நா. பொதுச் சபைத் தீர்மானம்: 48/104) பிரகடனத்தின் 2-வது ஷரத்து பெண்களுக்கு எதிரான வன்முறையானது பின்வருவன வற்றுக்குள் மட்டுப்படுத்தப் படாததாகவும், ஆனால் அவற்றை மையமாகக் கொண்டதாகவும் புரிந்து கொள்ளப்பட வேண்டும் என்கிறது.
'...சமூகத்தினுள் நடைபெறும் பாலியல் பல்லுறவு உள்பட உடல் ரீதியான, பால் ரீதியான உள ரீதியான வன்முறைகள், பாலியல் முறைகேடு, பாலியல் துன்புறுத்தல்கள், பெண்கள் பணியாற்றும் இடங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பெண்கள் எங்கெல்லாம் இருக்கிறார்களோ அங்கெல்லாம் நடைபெறும் மிரட்டல்கள், கடத்தல், பலவந்த விபச்சாரத்தில் பெண்கள் ஈடுபடுத்தப் படல் போன்றவை' என்று கூறுகிறது.
பெண்களைப் பொறுத்தவரை சமூகத்தின் வாய்ப்புக்களை அனுபவிப்பதற்கான எல்லைக்கோடு ஒன்றை சமூகம் அவர்களுக்கு வழங்குகிறது. அது பெண்களது சமுதாய ஊடாட்டங்களின் தன்மை அவர்களது வாழ்வுக்கு அவசியமான விழுமியங்கள் என்பவற்றைத் தானே நிர்மாணிக்கிறது. சமூகம் என்பது சமூகத்திற்கு வெளியேயும் முற்று முழுதான அரசின் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டதுமான ஒரு சமுதாய வெளியாகும்.
இது தனியார் அமைப்புகளும் கிடைமட்ட அமைப்புகளும் தமது அதிகாரத்தைக் காட்டும் வெறியாகும். இவ் அமைப்புகள் தமது நாளா வட்டங்களில் நடைபெறும் செயல்பாடுகளினூடாக பெண்களின் வாழ்க்கை மீது தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
அயலிலுள்ள அமைப்பு முதல் தனியார் நிறுவனங்கள், மத குருக்கள், தொழிற் சங்கங்கள், தொழில் திறமையாளர்களது அமைப்புகள் வளர அனைத்தினூடாகவும் சமூகமானது இன்றைய சிவில் சமூகத்திற்கான அடிப்படைகளை வழங்குகிறது. கோட்பாட் டளவில் தற்காலிகமானதேயாயினும் கூட, ஒரு பெண்ணின் சமூக அடையாளத்தை அது இன சார்பற்றதாகவோ, ஒரு இனத்தின் சார்பானதாகவோ அல்லது மத ரீதியான தாகவோ எப்படி இருப்பினும் அதைத் தீர்மானிக்கும் களமாக சமூகம் அமைகிறது.
சமூகம் பெண்பால் மீதான கட்டுப்பாடுகள் ஒழுக்க விதிகள் என்பவற்றிற்கான களமாகவும் இருக்கிறது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் பெண்களும், பெண் குழந்தைகளும் அவர்களது பால், பால் சார்ந்த நடைமுறை என்பவற்றின் காரணமாக அவர்களது சமூகத்தினால் வன்முறைக்குள்ளாக்கப்படுகின்றனர்.
ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் எல்லைகளை வரையறை செய்து கொள்வதற்கான அச் சமூகத்தின் அடையாளத்தின் ஒரு முக்கியமான அம்சம் இனத்துவ மதிப்பை தொடர்ந்து பேணுதலாகும். இந்த மதிப்பானது அச் சமூகத்தைச் சேர்ந்தவர்களாலும் சேராதவர்களாலும் அச் சமூகத்தின் பெண்களது பால் சார்ந்த நடத்தையிலேயே தங்கியுள்ளதாக உள்வாங்கப்பட்டிருக்கிறது.
இதனால் சமூகம் தனது பெண்களின் நடத்தைகள் குறித்து ஒரு காவலரின் கடமையைச் செய்கிறது. ஒரு பெண் அந்தச் சமூகத்தின் நியமங்களுக்கு ஒவ்வாத வகையில் பாலியல் ரீதியான நடத்தைகளைக் கொண்டிருப்பாளானால் அவள் தண்டிக்கப்பட வேண்டியவளாகிறாள். இத்தகைய தண்டனைகளை சமூகத்தில் இருந்து வெளியேற்றி விடுவது முதல், உடல் ரீதியான தண்டனை வரைக்கும் போகலாம். உடல் ரீதியான தண்டனை என்பது சவுக்கால் அடித்தல், கல்லாலடித்தல், கொல்லுதல் என்ற மட்டத்திற்கும் போவதுண்டு. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் பெண்களது பாலியல் தொடர்பான, சமூகத்தால் தீர்மானிக்கப்பட்டபடியே அரசின் சட்டங்களாலும் கொள்கைகளாலும் அங்கீகரிக்கப்பட்டு அந்த சமூகத்தின் விழுமியங்களைப் பிரதிபலிப்பனவாகவே உள்ளன.
பெரும்பாலான சமூகத்தில் பாலியல் நடவடிக்கைக்கான பெண்களுக்கான தெரிவு, அதே சமூகத்தைச் சேர்ந்த ஒரு ஆணுடனான திருமணம் மட்டுமே. ஒரு பெண் சமூகத்தால் அங்கீகரிக்கப்படாத ஒரு வழியில் தனது தெரிவை அதாவது திருமணமல்லாத வேறு வழியில் ஒரு ஆணுடன் பாலியல் தொடர்பு கொண்டிருத்தல் அல்லது இன மத வர்க்க சமூகங்களுக்கு வெளியே இவ்வாறான தொடர்புகளைக் கொண்டிருத்தல் அல்லது இருபால் சேர்க்கைகளுக்குப் பதில் வேறு வழியிலான சேர்க்கையைத் தேர்ந்தெடுத்தல் என்பவையெல்லாம் பெண்களை மோசமான வன்முறைக்கும் அவப்பெயருக்கும் உள்ளாக்கும் காரணங்களாகி விடுகின்றன.
கணவனை இழந்து தனியாக வாழும் பெண்கள் அடிக்கடி வன்முறைக்கும் பாலியல் வல்லுறவுக்கும் இலக்காக்கப்படுகிறார்கள். ஆணுடனான திருமணம் ஒன்றின் மூலமாகப் பாதுகாக்கப்படாத ஒரு பெண் எப்போதும் சமூகத்தில் பாதிப்புக்குள்ளாக்கக்கூடிய உறுப்பினராகவே இருப்பாள். பெரும்பாலும் இவர்கள் சமூக நடவடிக்கைகளிலிருந்து ஒதுக்கப்படுபவர்களாகவும் சமூகத்தின் விலக்குக்கும் துஷ்பிரயோகத்துக்கும் உள்ளாகின்றவர்களாகவும் உள்ளனர்.
மேல்நிலைப்படுத்தலும் பொருளாதார சுதந்திரமும் பெரும்பாலும் சமூகங்களால் உணரப்படுவதில்லை. அதேவேளை இச் சமூகங்களில் திருமணங்கள் சமூகத்தால் நிர்மாணிக்கப்படுகின்றன. பெண்ணின் பாலியல் நடவடிக்கைகள் சமூகத்தின் கருத்துகளாலும் கொள்கைகளாலும் இறுக்கமாகக் கட்டுப்படுத்தப்படுகின்றன.
வாழ்க்கை தொடர்பான தெரிவுக்கான வாய்ப்புகள் குறைவாக இருப்பது, பெரும்பாலும் சமூகத்தில் பெண்களுடைய பொருளாதார சுதந்திரத்துக்கான வாய்ப்புகள் இல்லாமை யுடன் தொடர்புடைய ஒன்றாகும். குறிப்பாக சம்பாதிக்கும் சக்தி, வளங்கள் பகிர்ந்து கொள்ளப்படும் முறை என்பன தொடர்பாகப் பெண்களுக்கான தெரிவுகள் சொற்பமே. திருமண வடிவில் சமூகத்தில் பாதுகாப்பற்ற பெண்களும், சந்தைப்படுத்தும் தொழில் திறமைகள் ஏதுமற்ற பெண்களும் தம்மையும் தம்மை நம்பியுள்ளோரையும், கவனிப்பதற்காக விபச்சாரத்தை நோக்கியும் பொருளதார ரீதியில் மோசமான சுரண்டலுக்கு வாய்ப்பான வேலைகளை நோக்கியும் தள்ளப்படலாம்.
தமது பொருளாதார மேல்நிலைப் படுத்தலுக்காக குடும்ப அமைப்பிற்கு வெளியே தொழில் தேடும் பெண்கள், குறைந்த தொழில் தேர்ச்சியை எதிர்பார்க்கும் அதிக அளவில் உடலுழைப்பை அடிப்படையாகக் கொண்ட வேலை தேடும் பெண்கள், அநேகமாக ஆணின் பாலியல் தேவைகளுக்கு வாய்ப்பானவர்களாக இருப்பவர்களாவார்கள்.
எனவே வரம்புமுறையற்ற பாலுறவுக்கு உரியவர்களாகவும் இவர்கள் பாவிக்கப் படுகின்றார்கள். பரவலாக வேலைத் தளங்களுக்குப் போகும்போதும் வரும்போதும் ஏற்படும் பாலியல் தொந்தரவுகள்ளென்பவை இன்று தினமும் எதிர்கொள்ளும் சாதாரண விஷயங்கள் போலாகி விட்டன. குடும்பம் மற்றும் சமூகத்தினது பாதுகாப்பிற்கு வெளியே வேலை செய்வதும் வாழ்வதும் என்பது ஆண்களின் வன்முறை நடத்தைக்குப் பலியாகும் ஆபத்தைக் கொண்டதாக இன்று மாறிவிட்டது.
பெண்களின் மனித உரிமைகளைப் பொறுத்தவரை சமூகம் என்பது ஒரு 'ஜேனஸ்' சமூகக் கோட்பாடாக உள்ளது. (ஜேனஸ் முன்னும் பின்னுமாக முகங்களைக் கொண்ட ஒரு இத்தாலியக் கடவுள்) ஒருபுறத்தில் சமூகம் பெண்களின் உரிமைகளை வெறுப்பதற்கான ஒரு களமாக உள்ளது. இனத்துவ மதச் சமூகங்களின் கட்டுப்பாடுகளின் அடிப்படையிலும் வேலைத் தளங்களிலும் கல்வி நிறுவனங்களிலும் வன்முறை மற்றும் பாரபட்சங்களின் அடிப்படையிலும் அல்லது பாலியல் வன்முறைகளிலும் பாலியல் தொந்தரவு என்பனவற்றின் அடிப்படையிலோ எப்படிப் பார்த்தாலும் சமூகமே கொடுமைக்கான களமாக அமைகிறது. மறுபுறத்தில் சமூகம் பெண்களுக்கு சமுதாய ஆதரவையும் ஆணையும் விட விசேடமாக அவர்கள் அரசிடமிருந்து பரிகாரம் கோரும்போது ஆதரவையும் வழங்கும் ஒரு அமைப்பாகவும் உள்ளது. சமூக அமைப்புகள், அடிக்கடி பெண்கள் மீதான வன்முறைக்கு எதிராக அது அரசின் வன்முறையாகவோ அல்லது சிவில் சமூகத்தின் பிற குழுக்களது வன்முறையாகவோ இருக்கலாம். போராடுவதில் முன்னின்று அவை போராடுகின்றன.
சமூகம்தான் பெண்களுக்கான சட்டப் பூர்வமான உளவியல் ரீதியான ஆலோசனையைக் கூறவும் அவர்கள் பக்க நியாயங்களைக் கூறித் தம்மை நீதிமன்றங்களில் தற்காத்துக் கொள்ளவும், பாதிக்கப்பட்ட பெண்கள் காவல் நிலையத்துக்கும், நீதிமன்றத்துக்கும் செல்ல உதவி செய்ய வேண்டிய நிறுவனங்களை உருவாக்கவும் செய்கிறது.
எனவே சமூகமானது வேறு வேறான பார்வைகளின் வேறுபாடுகளுக்கும் நடைமுறைகளுக்கும் பன்முகப்படுத்தப்பட்ட சமூக மனப்பாங்குகளுக்கும் இடையிலான போராட்டக் களமாகவும் உள்ளது. இங்கேதான் பெண்களின் உரிமைகள் தொடர்பாக அக்கறை உள்ள குழுக்கள் பெண்களுக்குப் பாரபட்சம் காட்டப்படுவதை விரும்பும் மனப்பாங்குக்கும் நடைமுறைக்கும் எதிராகப் போராடுவதும் இவற்றை அம்பலப்படுத்துவதும் அக்கறை உள்ளவர்கள் மத்தியில் இது பற்றிய விழிப்புணர்வை ஊட்டுவதும், அவர்களை அமைப்பு ரீதியாக ஒன்றிணைப்பது என்பதும் நடைபெறுகிறது.
பெரும்பாலான சமூகக் குழுக்கள் மத்தியில் இத்தகைய போராட்டங்கள் தனிப்பட்ட நபர்களாலும், மனித உரிமைகளை வார்த்தெடுக்கவும் பெண்களை மேல்நிலைப் படுத்தவும் விரும்புகின்ற குழுக்களாலும் நடத்தப்படுகின்றன. இவை முரண்பாடுகளும் அழுத்தங்களும் நிறைந்த ஒரு பகுதியில் வீரம் மிக்க சேவைகளை ஆற்றும் பணியில் ஈடுபட்டுள்ளன. அவர்களது நடவடிக்கைகள் சர்வதேச சமூகத்தில் அக்கறையுடனான ஆதரவுக்குரியவையாகும். சர்வதேச மனித உரிமை சட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள அளவுக்கும் நியமத்துக்கும் ஏற்ப அவற்றுக்கு ஆதரவு நல்கப்பட வேண்டும்.
தெ.மதுரம் |