பத்திரிக்கை உலகின் துருவ நட்சத்திரம்
"எழுத்தாளர், எழுத்தாளர்களை உருவாக்கிய எழுத்தாளர். வாழ்க்கையின் பன்முகப்பட்ட வலிகளை - மகிழ்ச்சியை - தனது உடம்பிலும் நெஞ்சிலும் தேக்கிவைத்திருக்கும் அனுபவங்களின் கஜானா"
கடந்த ஜனவரி மாதம், என்னுடைய உறவினர், நியூயார்க் ராஜகோபால், ஒரு புத்தக விழாவிலே வெளியிடப்படவிருந்த சாவி-85 புத்தகத்தை, என்னிடம் கொண்டுவந்து கொடுத்தார்.
"ஏதோ பத்திரிக்கை நடத்துகிறாயே அப்பா, ஒரு பத்திரிக்கைக்காரனாக இருப்பதற்கு என்னவெல்லாம் தேவை என்பதற்கு, இந்த புத்தகம் ஒரு 'என்ஸைக்ளோப்பீடியா' போலவாக்கும்" என்று நிரம்பவும் பீடிகையெல்லாம் போட்டுவிட்டு பிறகு தந்தார்.
இந்த புத்தகம், அமரர் சாவியாலேயே, திரு. ராஜகோபாலுக்கு வழங்கப்பட்டது, என்று அறிந்ததும், அந்த புத்தகத்தை ஒரே மூச்சிலேயே படித்துவிட்டேன்.
ஏற்கனவே, என்னுடைய 'ஏகலைவ குருவாக', நான் கொண்டிருந்த, திரு. சாவி என்றழைக்கப்படும் சா.விஸ்வநாதன் அவர்களை, டிசம்பர் மாதம் சந்திக்கக்கூடிய அரிய வாய்ப்பினை தவறவிட்டுவிட்ட ஆதங்கம் வேறு என்னை வாட்டிக்கொண்டிருந்தது. இந்தப் புத்தகத்தைப் படித்து முடித்ததும், என்னுடைய மனவருத்தம் இரட்டிப்பானது.
என்னைப் போன்ற புதுமுகப் பத்திரிக் கையாளர் மட்டுமல்லாது, பல வருடம் பத்திரிகைத் தொழிலில் ஊறியவர்களுக்கே கூட முன்னோடியாகவும், வழிகாட்டியாகவும் வாழ்ந்துகாட்டிய மாமனிதர்தான், அமரர் சாவி அவர்கள்.
அவர்கள் கடந்த பிப்ரவரி 9ம் தேதி அன்று, நீண்ட நாட்கள் சுயநினைவில்லாமல் இருந்து, அந் நிலையிலேயே, சென்னை அரசு பொது மருத்துவமனையிலே காலமான செய்தி கேட்டதும், சக பத்திரிகையாளனாக, மற்றும் குருவை இழந்த மாணாக்கனாக, என்னுள்ளம் மிகுந்த துயருக்குள்ளாகியது.
தமிழும், தமிழ் நாடும், தமிழரும், ஒரு சிறந்த நகைச்சுவையாளரைப், பத்திரிகையாளரை, எல்லாவற்றுக்கும் மேலாக, நல்ல மனிதரை இழந்துவிட்டனர். உண்மையாகவே, நிரப்ப முடியாத இடம்.. ஈடு செய்ய முடியாத இழப்புதான்.
அமரர்கள் கல்கி, வாசன், தேவன் போன்ற எழுத்துலக முன்னோடிகளோடு, சேர்ந்து பணி புரிந்ததுமல்லாமல்,
அவர்களுடைய பெருமதிப்பையும், நட்பையும் பெற்றவர். காந்தியடிகள் முதல், காமராஜர், இந்திராகாந்தி, ராஜாஜி, பெரியார், கலைஞர் கருணாநிதி வரையில், பல்வேறு, அரசியல் தலைவர்களோடு, நெருங்கி பழகியதோடு, அவர்களின், அன்பையும், ஆதரவையும் பெற்ற ஒரே பத்திரிகையாளர் திரு.சாவி அவர்கள்.
இந் நூலின் ஆசிரியர், திரு. ராணிமைந்தன், ஒரு கால் நூற்றாண்டு காலம், அமரர் சாவியோடு, நெருங்கிப் பழகி, பணியாற்றியவர். அவருடைய முன்னுரையில், அவர் கூறுகிறார்:
" அவரோடு (சாவி) உரையாடும் வாய்ப்பு கிடைத்தபோதெல்லாம் - நான் ஒரு பத்திரிகை ஆசிரியரோடு பழகுவது போன்றே உணர்ந்ததில்லை.. ஒரு பல்கலைக் கழக நூலகத்தில் படித்துக் கொண்டிருப்பது போலவேத்தான் உணர்ந்திருக்கிறேன்.
உழைப்பு, நேர்மை, துணிவு - இந்த மூலதனம் ஒருவரை உயர்த்துமா?
உயர்த்தும் என்பதுதான் சாவியின் வாழ்க்கை..."
இந்தப் பகுதியை மேற்கோள் காட்டி, முதல்வர் கலைஞரும் தன்னுடைய முகவுரையில், நூலாசிரியரை வழிமொழிந்திருப்பது, குறிப்பாக கவனிக்கத்தக்கது.
கவிஞர் வைரமுத்து, சாவியைப் 'பெருமைக் குரிய பெரியவர்' என்று போற்றுகிறார்.
சாவியின், 'வேதவித்து', நாவலுக்கு, எழுதிய முன்னுரையில், "இந்த நாவலை நான் வாசித்தேன் என்பது பொய். இந்த நாவலுக்குள் நான் வசித்தேன் என்பதே மெய்" என்று வைரமுத்து கூறுவது மிகைப் படுத்தப்படாத முழு உண்மை.
அவரே, மீண்டும் கூறுகிறார்,
"பேராசிரியர் கல்கியை நான் பார்த்ததில்லை. அக்கிரகாரத்து அதிசய மனிதர் வ.ரா.வை நான் பார்த்ததில்லை. ஆசிரியர் சாவியிடம் இந்த இருவரையும் ஒரு சேரப் பார்க்கிறேன்...
எழுத்தாளர்..
எழுத்தாளர்களை உருவாக்கிய எழுத்தாளர்..
வாழ்க்கையின் பன்முகப்பட்ட வலிகளை - மகிழ்ச்சியை - தனது உடம்பிலும் நெஞ்சிலும் தேக்கி வைத்திருக்கும் அனுபவங்களின் கஜானா.."
எத்துணை பொருத்தமான வரிகள்...?
சாவி-85, வெறும் ஒரு புத்தகமல்ல.. எழுத்தாளராகவிரும்பும், பத்திரிகையாளராக விரும்பும், ஒவ்வொருவரும் படித்தே ஆகவேண்டிய, நோ-சாய்ஸ், கட்டாயப் பாடம்....!
·போர்த் ·பார்முடன், படிப்பை மூட்டைக்கட்டி வைத்துவிட்டு, பத்திரிகை தொழிலின் மேல் காதல் கொண்டு, அது ஒன்றையே, தன் மூச்சாக, இறுதிவரை வாழ்ந்த கர்ம ஞானிதான், சாவி அவர்கள்.
இந்தப் புத்தகம், ஒரு வாழ்க்கை வரலாறு போல் எழுதப்படாமல், சாவியின் அனுபவத் தொடர்போல, நகைச்சுவையுடன் எழுதப் பட்டிருப்பதே சாவி அவர்களுக்கு, சரியான 'டிரிபியூட்', சிறந்த முறையில் செய்யப்பட்டிருக்கும் மரியாதை..
அமரர் சாவியின் நகைச்சுவை, எல்லா தரப்பு வாசகர்களையும் ஈர்க்கக்கூடிய நகைச்சுவை.. எவரையும் புண்படுத்தாத இயல்பான நகைச்சுவை..! 100% கலப்படமில்லாத அக்மார்க் நகைச்சுவை..! அவரது முத்திரைப் படைப்பான, 'வாஷிங்டனில் திருமணம்', சொர்க்கத்தில் நாடகமாக இந்நேரம் அரங்கேறிக் கொண்டிருந்தாலும் ஆச்சரியப் படுவதில்லை..! சொந்த வாழ்கையின் சோகங்களையும், சுகங்களையும் சம நோக்கோடு எடுத்துக் கொண்டு, எல்லோரையும் தரமான நகைச்சுவையினாலே கவர்ந்தவர் திரு. சாவி.
ஆசிரியர், ராணிமைந்தன், திரு சாவியின் பத்திரிக்கை லே-அவுட் அறிவைப் பற்றியும், அவருடைய புதுமையான கண்ணோட்டங் களைப் பற்றியும், விவரிக்கும் போது, ‘அடடா.. இந்த மாதிரி ஒரு மனிதரோடு, சேர்ந்து பத்திரிக்கைத் தொழிலைக் கற்றுக் கொள்ளவில்லையே’ என்னும் ஆதங்கம்தான் தோன்றுகிறது.
அவருடைய ஆரம்பகால விளம்பர போர்டு எழுதும் தொழில் அனுபவமும், அவர் எழுத்தாளராக அவர் பட்ட கஷ்டங்களையும், நகைச்சுவை உணர்வோடு, சாவி அவர்கள் நினைவு கூர்ந்திருப்பதைப் படிக்கும் போது,
மனிதரின், தன்னம்பிக்கையையும், விடாமுயற்சியும், சாதித்துக் காட்டவேண்டும் என்னும் ஆர்வமும், நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன!
எவருக்காகவும் பத்திரிகை தர்மத்தையும், தன்னுடைய கொள்கைகளையும் விட்டுக் கொடுக்காத அவருடைய போக்கு, அவருக்கு சில நேரங்களில் பாதகமாக இருந்தாலும், பல நேரங்களில், பாராட்டுக்களையே பெற்றுத் தந்திருக்கின்றன.
காஞ்சி பரமாசாரியாரிடத்தில் மிகவும் ஈடுபாடும், பக்தியும் கொண்டிருந்தாலும், ஈரோட்டு பெரியாரைப் பாராட்டுவதிலே, அவை குறுக்கிட்டதில்லை..!
ஆனந்த விகடனின் அசகாய சூரப் பத்திரிகை ஆசிரியக் குழுவுடன் உதவி ஆசிரியராகப் பணி புரிந்தது, அவருக்கு, தி.ஜா.ரா., மாலி, துமிலன், தேவன், நாடோடி போன்றவர்களின் அறிமுகமும், நட்பு கிடைக்கச் செய்தது. உரிமையாளர் வாசனுடன் பணிபுரிந்த அனுபங்களையும், அவருடைய குருவாக அவர் போற்றிய கல்கி அவர்களுடனான அனுபவங்களையும், இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை குழுவின், தினமணிக் கதிர் இப்பத்திரிகை நாட்களைப் பற்றியும், அவரது விவரிப்புகள், மிகவும் சுவாரசியமானவை.
மூதறிஞர் ராஜாஜியிடம், அவர் கற்றுக் கொண்டதாகச் சொல்லும் பாடம், 'பிறர் எழுதிய கடிதங்களுக்கு, உடனடி பதில் போடுவது' என்பதுதான்..
நவகாளி யாத்திரையைப் பற்றி எழுதச் சென்று, மகாத்மா காந்தியுடன் ஏற்பட்ட அனுபவம்,
தொழில் மேதை ஜி.டி.நாயுடுவுடன் நட்பு, இவற்றைப் பற்றி படிக்கும் போது, ஆஹா.. இந்த மனிதரின் ஒட்டுமொத்த வாழ்க்கையே, ஒரு பல்கலைக் கழக முதுகலை அல்லது ஆய்வுப் பட்டத்துக்கான பாடமாக இருக்கிறதே என்று வியக்காமல் இருக்கமுடியவில்லை...!
அமரர் சாவியைப் பற்றி கூடவே இருந்து, இப் புத்தகத்தை எழுதியிருக்கிற, திரு. ராணி மைந்தனை விட, மிகவும் அழகாகவும், கோர்வையாகவும் சொல்ல முடியாவிட்டாலும், ஒன்றை நிச்சயமாகச் சொல்லுவேன்..
அமரர் சாவி துருவ நட்சத்திரம் போன்றவர்.. அவரது படைப்புகளால், அவரது புகழும், பெயரும், மிக நீண்ட காலத்துக்கு ஒளி வீசிக்கொண்டிருக்கும். விதுரா |