சங்கரா கண் அறக்கட்டளை நிறுவனத்தார் தங்களது நிறுவனத்தின் கொள்கை பரப்பும் நோக்கத்துடன் வளைகுடாப் பகுதியில் பல நிகழ்ச்சிகள் நடத்தி வருகின்றனர். இந்த வரிசையில், கடந்த மாதம் வளைகுடாப் பகுதியில் இசைப்பிரியர்களிடையே பெரிதும் பேசப்பட்ட நிகழ்ச்சிகளில் ஒன்றாக, அந்த ஜுகல்பந்தி நிகழ்ச்சி அமைந்தது. செப்டம்பர் மாதம் 8-ம் தேதி இராகவன் மணியன் மற்றும் நசிகேத சர்மா இருவரும் பாலோ ஆல்ட்டோவில் இருக்கும் Foothill கல்லூரி அரங்கத்தில், இந்த அருமையான கர்நாடக-ஹிந்துஸ்தானி ஜுகல்பந்தி இசை நிகழ்ச்சியை வழங்கினார்கள். கர்நாடக சங்கீதத்திற்கு பாலாஜி ஸ்ரீனிவாசன் வயலினும், வாதிராஜ பட் ம்ருதங்கமும் பக்கவாத்தியம் வாசித்தனர். ஹிந்துஸ்தானி இசைக்கு ப்ரபஞ்சன் பாடக் வயலினும் அபினய் பாத்யா தப்லாவும் வாசித்தனர்.
கச்சேரியின் முதல் பாடலாக புரந்தரதாஸரின் "சரணு ஸித்தி விநாயகா" க்ருதியைப் பாடினர். ஹமீர்கல்யாணி ராகத்தில் (ஹிந்துஸ்தானியில் இந்த ராகம் கேதார் என்று அறியப்படுகிறது) அமைந்த இந்த பாடலை, ஜுகல்பந்தி கச்சேரிகளின் அமைப்பை அறிமுகப்படுதும் வகையில், கல்பனா ஸ்வர ப்ரஸ்தாரங்கள் மற்றும் "சோட்டே க்யால்" பகுதிகளுடன் பாடினர். இந்த கச்சேரிக்கு ஒரு அருமையான ஆரம்பமாக இருந்தது.
அடுத்தபடியாக வந்தது 'பந்துவராளி' ராகத்தில் ஆலாபனை! இராகவன் அழகாக கர்நாடக பாணியில் கமகங்களுடன் ஆலாபனை செய்ய, நசிகேதா ஹிந்துஸ்தானி பாணியில் ஒவ்வொரு ஸ்வரமாக முன்னேறி ஸ்வரஸ்தானங்களை தெளிவாக எடுத்து காட்டிக்கொண்டே பாடினார். இரு கலைஞர்களின் குரல் வளமும் இந்த ஆலபனையின் போது சிறப்பாக வெளிப்பட்டது. இரண்டு பாணிகளிலும் மாறி மாறி தோன்றியதால் பந்துவராளி ராகத்தின் வெவ்வேறு அம்சங்கள் கேட்பவர்களை வெகுவாகக் கவர்ந்தன. ஆலாபனையின் நடுவே பலமுறை கைதட்டி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். (இருந்தாலும் மேற்கத்திய பாரம்பரிய இசை நிகழ்ச்சிகளில் செய்வது போல, இந்திய இசை நிகழ்ச்சிகளிலும், ஒரு பாடல் முடிந்தவுடன் கைதட்டுவது, இசையை ஆழ்ந்து கேட்பவர்களுக்கு உதவியாக இருக்கும் என்பது எனது கருத்து!). ஆலாபனையின் போது, ப்ரபஞ்சன் மற்றும் பாலாஜி அருமையான பக்கவாத்தியம் வாசித்தனர். பிரபஞ்சனின் வயலின் ஒலியே பலரை வெகுவாகக் கவர்ந்தது. பிறகு, 'பவன் பவன் பவன் போலே' என்ற ஹிந்துஸ்தானி 'பந்தீஷ்' ஒன்றைப் பாடினர். இதற்கும் இசை அமைத்தது இவர்களே. தாளம் சதுஸ்ர நடை ஆதி தாளம். இதை இராகவன் கர்நாடக இசை அகாரஙளுடன் பாட, இந்தப் பகுதியில் ராகத்தின் சந்தோஷ ரஸம் நன்றாக வெளிப்பட்டது.
நசிகேதாவின் திறமை இந்த பாடலில் சிறப்பாக வெளிவந்தது. அதே ராகத்தில், பாரதியாரின் "ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்" கவிதையை இருவரும் பாடினர், இந்த பாடல் திஸ்ர நடையில் அமைந்தது. பராசக்தியின் பெருமையை உரைக்கும் இப்பாடல் இந்த ராகத்தில் மேலும் மிளிர்ந்து வெளிப்பட்டது. 'சொல்லுக்கடங்காத அவள் சூரத்தனங்களெல்லாம்' அந்த இசைக்குள் அடங்கின என்று தான் சொல்ல வேண்டும். பிசிறில்லாத கல்பனா ஸ்வரங்ளுடன் பந்துவராளி ராகப்பாடல் இனிதே முடிந்தது. முடிந்து கரகோஷம் முடிய சில நிமிடங்கள் ஆயின.
அடுத்த பாடல், "அதரம் மதுரம்" - கமாஸ் ராகத்தில் அமைந்த திருமதி.எம்.எஸ்.சுப்புலஷ்மி அவர்கள் அமைத்து பாடிய பாடல். "மதுரம்" என்ற வடமொழி சொல்லுக்கு"இனிமை" என்று பொருள். சின்னஞ்சிறு பாலகனான மாயக்கண்ணனின் ஒவ்வொரு அசைவும் எவ்வளவு இனிமை என்பதைக் கவிதை நடையில் எடுத்துரைக்கும் பாடல் இது. மிக இனிமையான குரலில் இருவரும் பாட, பக்கவாத்தியங்களும் இணையான மென்மையுடன் சேர்ந்து சென்றன. ராகவன் இப்பாடலின் ஆரம்பத்தில் புல்லாங்குழல் வாசித்து, ரசிகர்களை ஒரு இனிமையான இசைவிருந்திற்கு வரவேற்றார். "வேணு மதுரோ" என்ற வரிக்கு அவர் புல்லாங்குழல் வாசித்து அதன் இனிமையை வெளிக்கொணர்ந்தது மிகப் பொருத்தமாக இருந்தது, அதற்கு இணையாக நசிகேதா பாடினார்!
கச்சேரியின் முதல் பாகம் இவ்வாறு ரசிகர்கள் மனங்களில் இனிமையாக நிறைந்தது. அதனாலேயே, இடைவேளையின் போது சங்கரா கண் மையத்தினரின் சிறு திரைப்படம் மூலம் அவர்களது மேன்மையான சேவையை எடுத்துரைத்த போது, அனைவரும் அங்கேயே அமர்ந்திருந்து கேட்டனர்.
இடைவேளைக்குப் பிறகு ஹம்ஸத்வனி ராகத்தில் அமைந்த மிகப் பிரபலமான "வாதாபி கணபதிம்" என்ற முத்துஸ்வாமி தீக்ஷிதர் க்ருதியைப் பாடினர். ஹிந்துஸ்தானி இசைக்குரிய விரைவான 'ப்ருக'ங்களுடனும், அகாரஙளுடனும் பாடினர். மேலும் மிளிரும் கற்பனை ஸ்வரங்களும் இந்த பாடலுக்கு அணி சேர்த்தன. இதே மெட்டில் எண்பது வருடங்கள் பழைய ஹிந்துஸ்தானி இசைப் பாடல் ஒன்று இருப்பது குறிப்பிடத்தக்கது ('லகன்..'). இந்த பாடலின் முடிவில் வாதிராஜ பட் மற்றும் அபிநய் இருவரின் தனியாவர்த்தனம் சுருக்கமாக அழகாக அமைந்தது.
அதன் பின், விரைவாக, ஒரு தில்லானாவையும், அதற்கு இணையான ஹிந்துஸ்தானியின் தரானா பாடல் ஒன்றையும் கலந்து அடுத்த பாடலை வழங்கினார்கள். இது ஹிந்தோள ராகத்தில் (ஹிந்துஸ்தானியில் மல்ளென்ஸ்) அமைந்தது. இந்த புதுமையான இசை முயற்சி ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தது. இந்த தில்லானா, சங்கீத மேதை முனைவர். பாலமுரளி க்ருஷ்ணா அவர்களால் இயற்றப்பட்டது.
அடுத்ததாக, சிறிய அருமையான ஸிந்துபைரவி ராகப்பாடலுடன் கச்சேரி முடிவடைந்தது. அங்கு கூடியிருந்த ஏறக்குறைய எண்ணூறு ரசிகர்களும் இந்த சிறந்த ஜுகல்பந்தியின் புதுமையான வடிவமைப்பையும் அரங்கேற்றத்தையும் கண்டு பிரமித்து, வெகுநேரம் கரவொலி எழுப்பினர். இது போன்ற பல ஜுகல்பந்தி இசை நிகழ்ச்சிகளின் மூலமாக கர்நாடக இசை மற்றும் ஹிந்துஸ்தானி இசை ரசிகர்களுக்கு மற்ற இசை பற்றித் தெரிந்து கொள்ள வகை செய்ய முடியும் என்பதை அங்கு வந்த அனைவரும் நிச்சயம் உணர்ந்திருப்பார்கள்.
நசிகேத சர்மா, பண்டிட் பாசவராஜ் இராஜகுரு அவர்களிடம் இசை பயின்றவர். இராகவன் மணியன் முனைவர்.எம்.பாலமுரளிக்ருஷ்ணா அவர்களின் மாணவர் என்பது, அவரது குரலமைப்பிலேயே தெளிவாய் விளங்கியது. இராகவன் மணியனும், நசிகேத சர்மாவும் இது போன்ற இசை முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு இசை உலகத்தை மகிழ்விக்க வேண்டுமாய் வாழ்த்துகிறேன்.
சங்கரா கண் அறக்கட்டளை மையம் போன்ற நிறுவனங்களுக்கு விரிகுடாப் பகுதி மக்கள் தொடர்ந்து ஆதரவு அளித்து வருவது அவர்கள் செய்யும் சேவைக்குப் பேருதவியாக இருந்து வருகிறது என்பதில் ஐயமில்லை. வளர்க அவர்களின் சேவை !
ஆனந்த் கல்யாண், ·ப்ரீமாண்ட் |