Bay Area Roundup - உஸ்தாத் அம்ஜத் அலிகான் சரோட் இசை
இந்திய முன்னேற்றத்திற்கான சங்கம் (வளைகுடாப் பிரிவு) நிதித்திரட்டும் நோக்கத்துடன் ஏற்பாடு செய்திருந்த கலைநிகழ்ச்சி ஆகஸ்டு மாதம் 18ஆம் நாள் மாலை 6.30 மணிக்கு நடைபெற்றது. அன்று 'பாலோ ஆல்டா'வில் மக்கள் கூட்டம் அலைமோதிய 'ஸ்பான்கென்பர்க் அரங்கு' சென்னையில் மியூசிக் அகாடமியை நினைவுறுத்தியது. 'பத்மவிபூஷன்' உஸ்தாத் அம்ஜத் அலிகான் அவர்களின் சரோட் இசையின் நாதவெள்ளத்தில் அரங்கில் கூடியிருந்த அனைவரும் மெய்மறந்தனர்.

மொகலாயச் சக்ரவர்த்தி அக்பர் பாதுஷாவின் ஆஸ்தான வித்துவான் மியான் தான்ஸேனின் காலத்தைச் சேர்ந்த சேனியா பங்கஷ் இசைப்பள்ளியோடு தொடர்புடைய பரம்பரையைச் சேர்ந்த குடும்பத்தில் பிறந்தவர் அம்ஜத் அலிகான். இவருக்கு இவருடைய தந்தையே குருவாகத் திகழ்ந்தவர்; அது மட்டுமல்ல. சேனியா பங்கஷ் இசைப்பள்ளியின் தொடர்பு அற்றுப் போகாத வண்ணம் ஏழாவது தலைமுறையாக அம்ஜத் அலிகானின் புதல்வர்கள் அமான்அலி பங்கஷ்; அயான் அலிபங்கஷ் இருவரும் சரோட் இசையில் தேர்ச்சி பெற்றிருப்பதும் பாராட்டுக்குரியது. அன்றைய நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தந்தை தனியாகவும், இடைவேளைக்குப்பின் பிள்ளைகள் இருவரும் சேர்ந்தும் முடிவில் வரிசையாக மேடையில் மூவரும் இணைந்தும் நிகழ்த்திய இசைக் கச்சேரி கண்ணுக்கும் செவிக்கும் விருந்தாய் அமைந்தது. ரஷீத் முஸ்தபா அவர்களின் தபேலா இசை கச்சேரிக்குக் களை கட்டியது. இவர் தபேலா பரம்பரைப் புகழ் 'உஸ்தாத் மஹமத் ஜான் கான்' அவர்களின் மகனும் சீடனும் ஆவார்.

உலக அளவில் பல பட்டங்களும் விருதுகளும் பெற்ற இசை மேதைகளை வரவழைத்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து பெரிய தொகை ஒன்றை நிதியாக்கி திரட்டியுள்ள இந்திய முன்னேற்றத்திற்கான சங்கத்தினருக்கு மற்றுமொருமுறை நம் பாரட்டுக்கள். (ஏப்ரலில் பிரசன்னா கிதார் இசை நிகழ்த்தியது நினைவிருக்கலாம்)

நல்ல பல திட்டங்களுக்கு நிதி உதவி, இந்தியாவை முன்னேற்றுவதில் அயராது உழைக்கும் இத்தொண்டர்களைப் பாராட்டுவோம்! உதவிக்கரம் நீட்டுவோம்!

டாக்டர். அலர்மேலுரிஷி

© TamilOnline.com